கடற்கரை ஒழுங்காற்று அறிவிக்கை

மீனவர்களை அச்சுறுத்தும் கடற்கரை ஒழுங்காற்று மண்டல அறிவிக்கை மற்றும் EIA 2020

1991-ம் ஆண்டு முதல் 2007, 2017 மற்றும் 2018 என்று பல கட்டங்களாக கடற்கரை ஒழுங்காற்று மண்டல அறிவிக்கை (Coastal Regulation Zone Notification) வெளியிடப்பட்டு வந்திருக்கிறது. ஒவ்வொரு கட்டத்திலும் கொடுத்திருந்த வாக்குறுதிகள் மீறப்பட்டே, அரசு பல திட்டங்களைக் கொண்டுவந்திருக்கிறது.

2019-ம் ஆண்டு  வெளியிடப்பட்ட அறிக்கை தற்பொழுது பெரும் விவாதத்தை கடற்கரைப் பகுதிகளிலும், சூழலியலாளர்களிடமும் ஏற்படுத்தியுள்ளது. 

1991-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கை தற்பொழுது அடைந்திருக்கும் நிலை என்பது கடற்கரையில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

2019-ல் கொண்டுவரப்பட்டுள்ள கடற்கரை ஒழுங்காற்று அறிக்கையானது, கடலை மூன்றாகப் பிரிக்கிறது. 

  • கடற்கரையை ஒட்டிய 12 நாட்டிகல் மைல் வரை Territorial sea என்ற பெயரில் மாநில அரசுக்கு உட்பட்ட பகுதியாகவும், மீனவர்கள் மீன் பிடிக்கக் கூடிய பகுதியாகவும் அறிவிக்கப்பட உள்ளது. 
  • 12 நாட்டிகள் மைல் முதல் கரையில் இருந்து 200 நாட்டிகள் மைல் வரையான பகுதியை Exclusive economic zone என்ற பகுதியாக அறிவிக்கிறது. 
  • அதற்கு மேற்பட்ட கடல் பரப்பு என்பது high sea என்ற பெயரில் சர்வதேச கடலாகிறது.

தமிழக மீனவர்களைப் பொறுத்தவரை 12 நாட்டிகல் மைல் என்பது கட்டுமரங்கள் மீன்பிடிப்பதற்கான பகுதி கூட கிடையாது. ஒரே இரவில் தொழில் முடித்து கரை திரும்பும் மீனவர்களே 200 நாட்டிகல் மைல் தாண்டி சென்றால்தான் அவர்களின் தேவைக்கான மீன்களைப் பிடிக்க முடியும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் இந்தியாவில் EEZ(Exclusive Economic Zone) என்று அடையாளம் காட்டப்படும் பகுதியில் 9.4% சதவீத தமிழக மீனவர்கள் தொழில் செய்து வருகின்றனர்.

2019 அறிக்கையின்படி 12 நாட்டிகல் மைல் தூரத்தைத் தாண்டி கடலில் மீன் பிடிக்கச் செல்ல, இந்திய கடல் பாதுகாப்புப் படையிடம் தனி உரிமம் பெறவேண்டும். அதனைப் பெற மீனவர்கள் தனிக் கட்டணம் செலுத்த வேண்டும்.

200 நாட்டிகல் மைலுக்கு அப்பால் உள்ள High Sea என்கிற ஆழ்கடல் பகுதியை 1995-ல் இந்தியா ஏற்றுக்கொண்ட ஐ.நா ஒப்பந்தப்படி (United Nations Convention on the Law of the Sea) முழுமையாக சர்வதேச கடல் என அறிவிக்கிறார்கள். 1995-ல் போடப்பட்ட ஒப்பந்தம் இப்பொழுது சட்டமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த சட்டத்தின்படி மீன்பிடிக்க தனி ஒப்பந்தங்கள் போடப்படும். பெரும் நிறுவனங்களுக்கான இந்த ஒப்பந்தங்களில் தமிழக மீனவர்கள் நுழைவதற்கான வாய்ப்பு இல்லை என்பது சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.  

தமிழகத்தில் இருந்து ஏற்றுமதியாகும் மீன்களில் அதிக அளவு மீன்கள், ஆழ்கடல் மீன்பிடிப்பின் மூலம் கிடைப்பவையே ஆகும். வங்காள விரிகுடாவிற்கும், அரபிக் கடலிற்கும் தமிழகத்தில் இருந்து மீனவர்கள் ஆழ்கடல் மீன் பிடிப்பிற்கு செல்கிறார்கள். தமிழகத்தில் ஆழ்கடலில் மீன் பிடிப்பவர்கள் 45 நாட்களுக்கு மேலாக கடலில் இருப்பவர்கள். மேலும் அவர்கள் 1000 நாட்டிகல் மைல்களைத் தாண்டி செல்பவர்கள். அவர்களின் மொத்த கடல் பரப்பும் இனி பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்க்கப்படும் நிலை இருக்கிறது.  

படகுகளுக்கு கொடுக்கப்படும் டீசல் மானியம் உள்ளிட்டவற்றை 2020-க்குள் நிறுத்தவும் இந்த மசோதா பரிந்துரைக்கிறது. 

பழவேற்காடு முதல் நீரோடி வரை மொத்தம் 1076 கி.மீ  நீளமுள்ள கடற்கரையைக் கொண்ட தமிழ்நாட்டில் பல லட்சம் மீனவர்கள் கடல்தொழில் செய்கிறார்கள். இவர்கள் வருடத்திற்கு சராசரியாக 4.97 லட்சம் டன் மீன்களைப் பிடிக்கிறார்கள். இது நமது உள்ளூர் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதுடன், ஏற்றுமதியின் மூலம் அந்நியச் செலாவணியையும் உருவாக்கிக் கொடுக்கிறது.

தமிழ்நாடு மீன்வளத் துறையின் சார்பில் தேசிய கடல் மீன்வள (ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை) வரைவு மசோதா- 2019 தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம் நாகர்கோவிலில் உள்ள ஒரு மண்டபத்தில் 2020 பிப்ரவரி 26-ம் தேதி நடந்தது. இந்த கூட்டத்தில் மீனவர்களும், மீனவ சங்கப் பிரதிநிதிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பி பின்னர் வெளியேறினர். 

மேலும் தற்பொழுது வெளியிடப்பட்டிருக்கும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையானது (EIA 2020), கடலில் 12 நாட்டிகல் மைல் தொலைவில் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்தவோ, அவர்களிடம் கருத்து கேட்கவோ தேவையில்லை என்று சொல்கிறது. ஏற்கனவே கடற்கரை ஒழுங்காற்று அறிக்கைக்கு எதிராகப் போராடி வரும் மீனவர்களிடம் இந்த EIA 2020 வரைவு மேலும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *