திருச்சி பொன்மலை ரயில்வே

தமிழ்நாட்டில் மத்திய அரசுப் பணிகளில் தமிழருக்கு இடமில்லை

கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டம் செல்வதற்குக் கூட பல கட்டுப்பாடுகள் இருக்கும்போது, திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனைக்கு இன்று 150-க்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வந்தது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டு வேலை வாய்ப்புகள் தமிழருக்கே வழங்கப்பட வேண்டும் என்ற போராட்டத்தினை இன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் தி.வேல்முருகன் முன்னெடுத்துள்ளார். இணையதளத்தின் வழியாகவும் இந்த கோரிக்கைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதேபோல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் அன்பில் மகேஷ் தலைமையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மேலும் நாம் தமிழர் கட்சி, தமிழ்த்தேசியப் பேரியக்கம் போன்ற அமைப்புகளும் திருச்சி பொன்மலையில் வட மாநிலத்தவரை பணியமர்த்துவதை எதிர்த்து போராட்டத்தினை நடத்தியுள்ளனர்.

புறக்கணிப்புக்கு உள்ளாகும் தமிழர்கள்

கடந்த சில வருடங்களாகவே தமிழகத்தில் உள்ள மத்திய அரசுப் பணிகளில்  வட இந்தியர்கள் அதிக அளவில் பணியமர்த்தப்படுகிறார்கள். 

தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்தில் எலக்ட்ரீசியன், ஃபிட்டர், மெக்கானிக், வெல்டர் உள்ளிட்ட தொழில் பழகுநர் இடங்களுக்கு 1,765 பேர் தேர்வு செய்யப்பட்டதில் 1,600 பேர் வட இந்தியர்கள். 

நாடு முழுவதும் 2011-ம் ஆண்டிலிருந்து இதுவரை ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் பணியமர்த்தப்பட்டவர்களில் 99 சதவீதத்தினர் வட இந்தியர்கள்தான். வெறும் 0.5 சதவீதம்தான் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் எனப் புள்ளிவிவரம் கூறுகிறது.

டெல்லி, உத்திரப் பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் அதிகளவில் தேர்வில் வெற்றிபெற்று இந்தியா முழுவதும் மத்திய அரசுப் பணிகளில் அமர்வது எப்படிச் சாத்தியம்? என்ற கேள்வியும் எழுகிறது..

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவன வேலைவாய்ப்பில் அந்தந்த மாநிலங்களைச்சேர்ந்த இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று குஜராத், மத்தியப் பிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் தனிச் சட்டமே இயற்றியுள்ளன.   

ரயில்வே துறையில் தமிழ்நாட்டில் 2013-2014-ல் 83% வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பணியமர்த்தப்பட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் உள்ள வருமானவரித் துறை அலுவலகங்களில் 2014-ம் ஆண்டில் பணியில் சேர்ந்த 78 பேரில், 3 பேர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். 

பல்வேறு விதிமுறைகள் துறைவாரியாக இயற்றப்பட்டு வட இந்தியர்களுக்கு சாதகமாக்கப்படுகிறது. 

கல்பாக்கம் அணு ஆராய்ச்சி நிலையம்

கல்பாக்கம் அணு ஆராய்ச்சி நிலையத்தில்  2015-ம் ஆண்டு ஆய்வுக்கூடத்தின் உதவியாளர் பணிக்கு அறிவிப்பு கொடுக்கப்பட்டது. அப்பொழுது 12-ம் வகுப்பு தேர்வில் 60% மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெறவேண்டும் என்று இருந்தது. 2016-ம் ஆண்டு 34 பணியிடங்களுக்கான அறிவிப்பின்போது வேதியியல் தொழிற்பயிற்சி பட்டயப் படிப்பு கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் என்ன சதி என்றால் குறிப்பிட்ட வேதியியல் தொழிற்பயிற்சி பட்டயப் படிப்பு தமிழகத்தில் எந்த கல்வி நிலையத்திலும் கற்பிக்கப்படவில்லை என்றும், அந்த படிப்பு அந்த பணிக்குத் தேவை இல்லை என்றும், ஆராய்ச்சி நிலையம் பணியாளர்களை தேர்வு செய்து சம்பளத்துடன் 2 ஆண்டு பயிற்சி கொடுப்பது தான் வழக்கம் என்றும் அங்கு பணியில் இருக்கும் தமிழர்கள் தெரிவித்துள்ளனர். 

எஸ்.எஸ்.சி தேர்வுகள்

முன்பெல்லாம், எஸ்எஸ்சி எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகள்  மண்டல வாரியாகத்தான் நடத்தப்பட்டது. இதனால் அந்தந்தப் பகுதி மாணவர்களே அத்தேர்வுகளில் பங்கேற்றனர். ஆனால் இப்பொழுது நாடு முழுவதும் ஒரே தேர்வாக நடைபெறுகிறது. இதனால் அனைத்து மாணவர்களும் தேர்வில் பங்கேற்று எந்த பகுதியில் வேண்டுமானாலும் பணியில் அமரலாம் என்ற சூழல் உள்ளது. 

குரூப் டி தேர்வுகள்

மேலும் குரூப்  டி பணியில் தேர்வு செய்யப்படுபவருக்கு, பணியில் சேரும் மாநிலத்தின் மொழி தெரிவது கட்டாயமாக இருந்தது. ஆனால் அது தற்போது மாநிலத்தின் மொழி அல்லது இந்தி தெரிந்தால் போதும் என்று மாற்றப்பட்டுள்ளது. இதுவும் வட இந்தியர்களுக்காகத்தான் மாற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது. 

IBPS தேர்வு

அதேபோல் IBPS எனப்படும் அரசுடமையாக்கபட்ட வங்கிகளுக்கு பணியாளர்களை தேர்வு செய்யும் நிறுவனம், ஒவ்வொரு மாநிலத்திலும் பணியமர்த்தப்படும் பணியாளர்கள் அந்த மாநிலத்தின் மொழியினை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று இருந்தது. அதனை 20.04.2016 அன்று ஒரு அறிக்கை வெளியிட்டு மாநில மொழி அல்லது ஆங்கிலம் என்று மாற்றினார்கள். இதன்மூலம் தமிழகத்தில் உள்ள வங்கிகளுக்கு தமிழர் அல்லாதோர் அதிக அளவில் வரத்துவங்கினர். இந்த திருத்தத்தினை தமிழ்நாடு, ஜம்மு மற்றும் சண்டிகர் ஆகிய மாநிலங்களுக்கு மட்டுமே கொண்டுவந்தனர். 

தமிழில் எழுத அனுமதி இல்லை

அரசுப் பணியாளர் தேர்வுகளை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும்தான் எழுத முடியும். இது இந்தியை தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு சாதகமாகவும், தமிழர் உள்ளிட்ட தென்னிந்தியர்களுக்கு பாதகமாகவும். ஆகிவிடுகிறது.

யூ.பி.எஸ்.சி தேர்வுகள் தமிழில் நடத்தப்படுவது போல மத்திய அரசுப் பணியாளர் தேர்வுகளையும் தமிழிலேயே நடத்த வேண்டும். மேலும் முன்னர் இருந்தது போலவே மண்டல வாரியாக அல்லது மாநில வாரியாக தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்   

வட மாநிலங்களில் தேர்வு முறைகேடுகள்

மேலும், தேர்வுகளில் முறைகேடுகள் மற்றும் தில்லுமுல்லுகள் செய்தும் பிற மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் மத்திய அரசுப் பணியில் நியமனம் பெறுகிறார்கள் என்ற நிலையும் உள்ளது. குறிப்பாக பீகார், மேற்கு உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான் மாநில மாணவர்கள் தேர்வுகளில் காப்பி அடிப்பது, வினாத்தாள் முன்கூட்டியே வெளியாவது, வட மாநில அதிகாரிகள் தங்கள் மாநில மாணவர்களுக்கு ஆதரவாக செயல்படுவது போன்ற மோசடிகளும் நடைபெறுவதாக தமிழுணர்வாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *