மார்ச் மாதம் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு அறிவித்த நாள் முதல் இன்று வரை நீதிமன்றங்கள் முடப்பட்டுள்ளது. இதனால் வழக்கறிஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதோடு பொதுமக்களும் பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள்.
ஊரடங்கு துவங்கியது முதல் முக்கியமான வழக்குகள் மட்டும் ஆன்லைனில் காணொளிக் காட்சி மூலம் நடக்கும் என்று தெரிவித்தார்கள்.
இதில் வழக்கறிஞர்கள் தொழில்நுட்ப வசதி இல்லாததாலும், தொழில்நுட்பக் காரணங்களாலும் முழுமையாக ஆஜராக முடியவில்லை. இதனால் வழக்கின் போக்கில் மாற்றம் ஏற்படுவதால் பொதுமக்களும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
அடுத்தபடியாக நீதிமன்றங்கள் இல்லாததால், பிணை எடுப்பது போன்ற சின்னச்சின்ன வழக்குகள் கிடைக்கப்பெறும் இளம் வழக்கறிஞர்களின் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு, அவர்களின் வாழ்வாதாரமும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
மேலும் சிவில் வழக்குகள் முற்றிலுமாக முடக்கப்பட்டிருப்பதால் சிவில் வழக்குகளுக்கு மட்டும் ஆஜராகும் வழக்கறிஞர்கள் முற்றிலும் வருமானம் இல்லாமல் இருக்கிறார்கள். கல்லூரி முடித்து ஜூனியர்களாக இருக்கும் இளம் வழக்கறிஞர்கள் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். மேலும் தமிழ்நாடு முழுவதும் சிவில் வழக்குகளின் தேக்கமும் அதிகரித்துள்ளது. நீதிமன்றங்கள் இல்லாத நிலையில் பல வழக்குகள் கட்டப் பஞ்சாயத்தையும் சாதிப் பஞ்சாயத்துகளையும் நோக்கி பின்னோக்கி நகரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து இளம் வழக்கறிஞர்களிடம் பேசிய பொழுது, நீதிமன்ற நடவடிக்கை தெரியாத அப்பாவிகள் ஏதேனும் வழக்குகளில் சிக்கி சிறைக்கு சென்றால், அவர்களின் குடும்பத்தினர் நீதிமன்ற வளாகத்திற்கு வந்து வழக்கறிஞர்களை சந்திப்பார்கள். அதன்மூலம் அந்த வழக்குகளில் வழக்கறிஞர்கள் ஆஜராவார்கள். இப்போது முதல்முறையாக வழக்குகளை சந்திக்கும் மக்களுக்கு சட்ட உதவிகள் கிடைப்பதும் தடைபட்டுள்ளது என்று தெரிவிக்கின்றனர்.
மேலும் குடும்பநல நீதிமன்ற வழக்குகள், விபத்து இழப்பீடு வழக்குகள் என பல்வேறு வழக்குகளில் பொதுமக்கள் நீதி கிடைக்கப்பெறாமல் அதற்கான சட்டப் போராட்டம் நடத்த முடியாமலும் முடக்கப்படுகிறார்கள்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 262 வழக்கறிஞர்கள் சங்கங்களில் பதிவு செய்துள்ள லட்சக்கணக்கான வழக்கறிஞர்களின் கோரிக்கையானது உடனடியாக நீதிமன்றங்களை திறக்க வேண்டும் என்பதாக இருக்கிறது.