ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் 8653 ஜூனியர் அசோசியேட் பணியிடங்களை நிரப்புதலுக்கான முதல்நிலைத் தேர்வில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கான (EWS) கட் ஆஃப் மதிப்பெண், ஓ.பி.சி மற்றும் எஸ்.சி பட்டியல் பிரிவினரை விட இந்த ஆண்டும் குறைவாக வந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
எஸ்.பி.ஐ முதல்நிலை தேர்வின் முடிவு நேற்று வெளியானது. அதில் இந்த ஆண்டுக்கான கட் ஆஃப் மதிப்பெண் SC பிரிவினருக்கு 62 ஆகவும், ST பிரிவினருக்கு 59.5 ஆகவும், OBC பிரிவினருக்கு 62 ஆகவும் வந்திருக்கிறது. ஆனால் முன்னேறிய வகுப்பினருக்கான EWS பிரிவினரின் கட் ஆஃப் மதிப்பெண்ணோ வெறும் 57.75 ஆக இருக்கிறது.
பழங்குடி, பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைக் காட்டிலும் உயர்சாதி EWS பிரிவினருக்கு குறைவான கட் ஆஃப் மதிப்பெண் அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை அனைவர் மத்தியிலும் உருவாக்கியிருக்கிறது. EWS இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்ட போது, அது சமூக நீதிக்கு எதிரானது என்று எதிர்ப்பு தெரிவித்தவர்களின் கருத்துகள் உண்மையானவை என்று நிறுவும் வகையிலேயே இந்த கட் ஆஃப் மதிப்பெண்கள் அமைந்துள்ளன.
கடந்த ஆண்டின் நிலை
கடந்த ஆண்டுதான் முதல் முறையாக EWS அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் காரணமாக கடந்த ஆண்டும் இதே போன்ற நிலைமைதான் இருந்தது. பல மாநிலங்களில் கடந்த ஆண்டும் ஓ.பி.சி மற்றும் எஸ்.சி வகுப்பினரைக் காட்டிலும் உயர்சாதி EWS பிரிவினருக்கு குறைவான கட் ஆஃப் மதிப்பெண்ணே வந்திருந்தது.
மத்தியப் பிரதேசத்தில் OBC பிரிவினருக்கு 73.5 மதிப்பெண்ணும், SC பிரிவினருக்கு 63.25 மதிப்பெண்ணும், ஆனால் EWS பிரிவினருக்கு 61.5 மதிப்பெண்ணும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் பிற்படுத்தப்பட்ட OBC-பிரிவினரைக் காட்டிலும், முன்னேறிய பிரிவினரான EWS பிரிவினருக்கு குறைவான கட் ஆஃப் மதிப்பெண்ணே நிர்ணயிக்கப்பட்டிருந்தது. சட்டீஸ்கரில் ஓ.பி.சி பிரிவினருக்கு 57.5 மதிப்பெண்ணும், எஸ்.சி பிரிவினருக்கு 53.25 மதிப்பெண்ணும் நிர்ணயிக்கப்பட்டு EWS பிரிவினருக்கோ வெறும் 35.5 மதிப்பெண்ணே நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
மாநிலம் | பொது | EWS | OBC | SC |
மத்தியப் பிரதேசம் | 73.5 | 61.5 | 73.5 | 63.25 |
ராஜஸ்தான் | 71 | 65.75 | 71 | 54 |
சட்டீஸ்கர் | 57.5 | 35.5 | 57.5 | 53.25 |
மகாராஷ்டிரா | 62.25 | 54.75 | 62.25 | 62.25 |
முன்னேறிய வகுப்பினருக்கான EWS இடஒதுக்கீட்டின் பின்னணி
பிற்படுத்தப்பட்ட (OBC) மற்றும் பட்டியலின (SC/ST) மக்கள் பிரிவில் வராத உயர்சாதியினரில் ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய்க்கு குறைவாக வருமானம் உள்ளோருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று கடந்த ஆண்டு பாஜக அரசு ஒரு சட்டத்தினைக் கொண்டுவந்தது. இதற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த கட்சிகள் அனைத்தும் கடும் எதிர்ப்பை தெரிவித்தன.
சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கியவர்களுக்குத் தான் சிறப்பு சலுகைகள் அளிக்கலாம் என்று அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்டதை மீறி, அதனை பொருளாதார அடிப்படையில் என்று மாற்றியது பாஜக அரசு. அரசியலமைப்பு சாசனத்தின் பிரிவுகள் 15 மற்றும் 16-ல் திருத்தங்களைக் கொண்டுவந்தது ஒன்றிய அரசு. இந்த சட்டம் அரசியலமைப்பு சாசனத்திற்கு எதிரானது என்று ஒரு வழக்கு அரசியல் சாசன அமர்வில் நிலுவையில் இருக்கிறது.
வழக்கு நிலுவையில் இருக்கும்போதே EWS இட ஒதுக்கீடு முறையினை அமல்படுத்துவதாக பாஜக அரசு அறிவித்தது. EWS இடஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, முன்னேறிய வகுப்பினருக்கான கட் ஆஃப் மதிப்பெண்ணானது ஓ.பி.சி மற்றும் பட்டியல் பிரிவினரை குறைவாகவே அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. வங்கிப் பணிகளுக்கு மட்டுமல்லாமல் பல்வேறு மத்திய அரசுப் பணிகளிலும், கல்வி நிலையங்களின் மாணவர் சேர்கையிலும் இதே போன்ற நிலைதான் ஏற்பட்டுள்ளது.