ஸ்டார் விஜய் டிவியில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமலஹாசன் தொகுத்து வழங்கும் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நடைபெற்று வரும் அரக்கர்கள் – தேவர்கள் விளையாட்டு என்பது அப்பட்டமான நிறவெறி இனவெறியைத் தூண்டும் நிகழ்ச்சியாகும்.
குறிப்பிட்ட விளையாட்டில் அரக்கர்களின் பண்பை அவர்கள் இப்படி வரையறுக்கிறார்கள். அரக்கர்கள் கறுப்பானவர்கள், அழுக்கானவர்கள், கெட்டவர்கள், பிறரை துன்புறுத்துபவர்கள், நாகரீகம் இல்லாதவர்கள். கொச்சையான மொழி பேசுபவர்கள்.
ஆனால் தேவர்களோ இதற்கு அப்படியே நேர் எதிரானவர்கள், நல்லவர்கள், வெள்ளையானவர்கள், அழகானவர்கள். அமைதியே உருவானவர்கள்.

இந்திய சூழலில் நிறவெறி என்பது மேற்குலக நாடுகளில் ஆப்பிரிக்கர்கள் மீது நிகழ்த்தப்படும் நிறவெறியைப் போன்றதல்ல. இங்கு நிறவெறி என்பது வேத பாரம்பரியதோடு தொடர்புடையதாக இருக்கிறது.
ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்த பிறகு இந்தியா முழுதும் வாழ்ந்த பூர்வகுடிகளை குறிப்பிடவும், வேறுபடுத்தவும் சித்தரித்த பண்புகளாக இருக்கிறது. ராமாயணம், மகாபாரதம் என்று ஆரிய மேலாதிக்கத்தை சொல்லும் ஒவ்வொரு புராணங்களிலும் இதனைக் காணலாம்.
அரக்கர்கள், தேவர்கள் யுத்தம் என்பதே திராவிடர்கள் ஆரியர்கள் யுத்தம்தான் என்பதை எண்ணற்ற வரலாற்று அறிஞர்கள் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். எனவே இந்த மண்ணின் மக்களின் நிறத்தை, மொழியை, பண்பாட்டை கொச்சைப்படுத்துவது என்பது ஆயிரக்கணக்கான வருடங்களாக ஆரியப் பண்பாட்டின் மேலாதிக்கத்தின் கீழ் தொடர்ந்தே வந்திருக்கிறது.
சில வருடங்களுக்கு முன்பு பாஜக-வைச் சேர்ந்த தருண் விஜய் கூட தென்னிந்தியர்களை கறுப்பானவர்கள் என்று ஒரு சர்வதேச ஊடகத்தின் நேர்காணலில் கிண்டல் செய்கிறார்.
திரைப்பட இயக்குநர் ஷங்கர் தன்னுடைய படத்தில் தூய தமிழ் பெயரைக் கொண்ட பெண்களை கருப்பு மைபூசி கிண்டல் செய்து மகிழ்கிறார்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் வர்ணனையாளராக உட்காரும் ஆர்.ஜே.பாலாஜி மேற்கிந்தியத் தீவின் வீரர்களை நிறவெறியோடு கிண்டல் செய்கிறார்.
நாகரீக உலகத்தில் சமத்துவமாக வாழ்வதாக நாம் நம்பிக்கொண்டிருக்கும் இந்த காலத்தில் கூட தங்கள் நிறவெறியை ஊடகங்களின் வழியாக வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
எத்தனை குழந்தைகள் பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்க்கிறார்கள். அவர்களின் மனங்களில் எல்லாம் எவ்வளவு மோசமான எண்ணத்தை விதைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை பிக்பாஸ் நிகழ்ச்சியை தயாரிக்கும் குழுவினர் உணர வேண்டும்.