கோவையில் ’டிரான்ஸ் கிச்சன்’ என்ற பெயரில் திருநங்கைகளால் நடத்தப்படும் உணவகத்தை நடத்தி வந்த திருநங்கை ஆர்வலர் சங்கீதா கொலை செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் முழுவதுமாக திருநங்கைகளாலேயே நடத்தப்படும் முதல் உணவமாக டிரான்ஸ் கிச்சன் இருக்கிறது. 15 ஆண்டுகளாக கேட்டரிங் தொழிலில் இருந்தார் சங்கீதா. சமூகத் தொண்டு செய்வதில் ஆர்வம் கொண்ட திருநங்கையான அவர், கொரோனா ஊரடங்கு காலத்தில் திருநங்கைகள் படும் துன்பத்தினைப் பார்த்து அதனைப் போக்குவதற்காக, திருநங்கைகளின் வாழ்வாதாரத்தினைப் பாதுகாக்க டிரான்ஸ் கிச்சன் உணவகத்தினை தொடங்கினார். 12 திருநங்கைகள் இந்த உணவகத்தில் பணிபுரிந்தனர். இந்த உணவகத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. பல்வேறு ஊடகங்களிலும் டிரான்ஸ் கிச்சன் குறித்த செய்திகள் வெளியாகி நல்ல பிரபலமடைந்தது.
இவர் கோவை சாய்பாபா காலனியில் வசித்து வந்தார். பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் இணைந்து சமூகத் தொண்டுகளும் செய்து வந்தார். கோவை மாவட்ட திருநங்கைகள் சங்கத்தின் தலைவராகவும் இருந்தார்.
கடந்த இரண்டு நாட்களாக சங்கீதா உணவகத்திற்கு செல்லவில்லை. இதனால் சக திருநங்கைகள் சந்தேகத்தில் அவருடைய வீட்டிற்கு சென்றனர். சங்கீதா கொலை செய்யப்பட்டு, தண்ணீர் நிரப்பும் பிளாஸ்டிக் பாரலில் துணியால் மூடப்பட்டு அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது. அந்த பாரல் உப்பு கொண்டு நிரப்பப்பட்டிருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்த கொடூரமான நிகழ்வு திருநங்கைகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் திருநங்கைகள் மத்தியில் மிகச் சிறந்த மனிதநேயவாதியாக சங்கீதா அறியப்பட்டிருந்த காரணத்தினால் இந்த சம்பவம் அனைத்து திருநங்கைகளையும் கவலையிலும், கோபத்திலும் ஆழ்த்தியுள்ளது.
திருநங்கைகள் மீது சமூகம் திணிக்கும் மோசமான பாகுபாட்டின் காரணமாக பல திருநங்கைகள் பிச்சை எடுத்து வாழ்வதற்கும், பாலியல் தொழில் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளப்படுகிறார்கள். கோவை உட்பட தமிழ்நாடு முழுவதும் இந்த நிலையே பரவலாக இருக்கிறது. தினந்தோறும் பல்வேறு வழிகளில் உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் மனிதத் தன்மையற்ற தாக்குதல்களை திருநங்கைகள் சமூகம் அனுபவித்து வருகிறது. இந்த வன்கொடுமைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கு அரசும் நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
இந்த நிலையில் தான் சங்கீதா போன்ற ஆர்வலர்கள் தானாகவே முன்வந்து திருநங்கைகளின் வாழ்வைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார்கள். மோசமான பொருளாதார சூழலில் இருந்தபோதும், சக திருநங்கைகளின் நலனுக்காகவே சங்கீதா உழைத்து வந்தார். திருநங்கைகளின் படிப்பிற்கு, குடும்ப செலவுகளுக்கு என பலவழிகளில் நிதிதிரட்டி அவர்களுக்கு உதவி வந்தார். இரண்டு நாட்களுக்கு முன்புகூட, 120 திருநங்கைகளுக்கு அரசி, பருப்பு, எண்ணெய் போன்றவற்றை வழங்குவதற்கு சங்கீதா திட்டமிட்டிருந்ததாக அவரது நெருங்கிய தோழி சுபிக்ஷா ஆங்கில இணையதளம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில்தான் சங்கீதா இப்படி கொலை செய்யப்பட்டிருக்கிறார். சாய்பாபா காலனியில் கோவை முழுதுமிருந்தும் ஏராளனமான திருநங்கைகள் கூடிவிட்டனர். சங்கீதாவின் உடலுக்கு பிரதேசப் பரிசோதனை மேற்கொள்ளப்பட இருக்கிறது. கொலை செய்தவர்கள் யார்? அவர்களின் நோக்கம் என்ன? என்பது குறித்த விசாரணையினை கோவை சாய்பாபா காலனி காவல்துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள்.
இதேபோன்று தூத்துக்குடி மாணிக்கபுரத்தில் கோயில் பூசாரியாய் இருந்த ராஜாத்தி என்ற திருநங்கை தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் இப்போது வரை எவரும் கைது செய்யப்படவில்லை. தொடர்ச்சியாக மனிதநேயவாதிகளாக அறியப்பட்ட திருநங்கைகள் குறிவைக்கப்படுகிறார்கள் என்று HuffingtonPost இணையத்திற்கு அளித்த பேட்டியில் திருநங்கை ஆர்வலர் கிரேஸ் பானு தெரிவித்துள்ளார். சங்கீதா வழக்கில் உடனடியாக குற்றவாளிகளை கைது செய்வதற்கான நடவடிக்கையில் காவல்துறை துரிதமாக செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையினை திருநங்கைகள் முன்வைத்து வருகிறார்கள்.
திருநங்கைகள் சமூகத்தில் கைவிடப்பட்டவர்களாகவே தொடர்ந்து இருக்கிறார்கள். அவர்களின் பாதுகாப்பிற்கும், வாழ்விற்கும், வாழ்வாதாரத்திற்கும் அரசு முழுமையான பொறுப்பேற்க வேண்டும். திருநங்கைகள் குறித்தான இந்த சமூகத்தின் பார்வையினை மாற்றுவதற்கு விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதும் சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.