பஞ்சாப் விவசாயிகள் போராட்ட அறிவிப்பு

விவசாய மசோதாக்களை எதிர்த்து 3 நாட்கள் தொடர் ரயில் மறியல் – பஞ்சாப் விவசாயிகள் அறிவிப்பு

இந்திய ஒன்றிய அரசு பாராளுமன்றத்தில் கொண்டுவந்துள்ள விவசாய மசோதாக்களை எதிர்த்து பஞ்சாப் மாநில விவசாயிகள் 3 நாட்கள் தொடர் ரயில் மறியலுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். செப்டம்பர் 24-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 26-ம் தேதி வரை தொடர்ச்சியாக ரயில்களை மறித்துப் போராடுவோம் என்று கிசான் மஸ்தூர் சங்கார்ஷ் விவசாயப் போராட்டக் குழுவின் பொதுச் செயலாளர் சர்வான் சிங் பந்தேர் தெரிவித்துள்ளார். 

இதர விவசாய சங்கங்கள் இணைந்து வரும் செப்டம்பர் 25-ம் தேதி பஞ்சாபில் முழு அடைப்பினையும் அறிவித்துள்ளன. மோடி அரசு கொண்டு வந்துள்ள விவசாய சட்டங்கள் விவசாயிகளை அழிக்கக் கூடியது என குற்றம் சாட்டி கடந்த ஒரு வார காலமாக பஞ்சாப் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. இந்நிலையில் இந்த மசோதாக்களை எதிர்த்து பாஜகவின் கூட்டணியில் இருந்த ஒன்றிய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் செப்டம்பர் 17 அன்று தனது அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்தார். 

ஹர்சிம்ரத் கவுர் பாதல் அவர்களின் ராஜினாமா குறித்து கருத்து தெரிவித்த சர்வான் சிங் பந்தேர், ”அவர் மிகவும் காலம் தாமதித்து முடிவெடுத்திருக்கிறார். மக்களிடையே எழுந்திருக்கும் கோபத்தினை அமைதிப்படுத்தவே அவர் இதனை செய்திருக்கிறார். இன்றும் கூட அக்கட்சியின் தலைவரான சுக்பீர் பாதல் அவர்கள் இப்பிரச்சினையின் தீவிரவத்தை உணர்ந்து கொண்டதாக இருந்தால், லட்சக்கணக்கான தொண்டர்களை திரட்டி பாராளுமன்றத்தினை முற்றுகையிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

சர்வான் சிங் பந்தேர் – படம் : ANI

மேலும் ஹரியானா, தெலுங்கானா, உத்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. தமிழ்நாட்டிலும் பல்வேறு விவசாய அமைப்புகள் இந்த அவசர சட்டங்களுக்கு எதிரான எதிர்ப்புக் குரலை பதிவு செய்து வருகின்றன. 

ஹரியானாவில் செப்டம்பர் 10-ம் தேதி விவசாயிகள் சாலையை மறித்து போராடிய போது, அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதால் அம்மாநிலம் முழுதும் பரபரப்பு ஏற்பட்டது. 

இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டால் விவசாயிகளின் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை (Minimum Support Price) என்பது இல்லாமல் ஆக்கப்பட்டு, விவசாயம் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளுக்குள் சென்றுவிடும் என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டாக இருக்கிறது. 

ஒன்றிய அரசு நிறைவேற்றி விவசாயிகளின் கடும் எதிர்ப்புக்கு உள்ளாகியுள்ள அந்த மசோதாக்கள் பின்வருமாறு.

1.அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதாEssential Commodities (Amendment) Ordinance, 2020)

2.ஒப்பந்த விவசாய சேவை மற்றும் விலை உத்தரவாதத்தில் விவசாயிகளுக்கான (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) மசோதா The Farmers (Empowerment and Protection) Agreement on Price Assurance and Farm Services Ordinance

3.விவசாய விளைபொருள் உற்பத்தி, வர்த்தகம் மற்றும் வணிக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) மசோதா The Farming Produce Trade and Commerce (Promotion and Facilitation) Ordinance, 2020

இந்த அவசர சட்டங்கள் என்ன சொல்கின்றன என விரிவாக தெரிந்து கொள்ள கீழே உள்ள இரண்டு இணைப்புகளை படிக்கலாம்.

  1. WTO+மோடி அரசு; அவசர சட்டங்களால் ஆபத்தில் விவசாயிகள்
  2. விவசாயிகள் வாழ்வை கேள்விக்குறியாக்கும் பாஜக-வின் மூன்று அவரசர சட்டங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *