கே.பி.சுந்தராம்பாள் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Radicals
இன்றைய தமிழர்களுக்கு ஔவையார் உருவம் என்றால் நினைவில் இருப்பது கே.பி.சுந்தராம்பாள் அவர்களின் உருவம் தான். கரூர் அருகில் உள்ள கொடுமுடியில் 1908-ம் ஆண்டு அக்டோபர் 11 அன்று பிறந்த சுந்தராம்பாள் ‘கொடுமுடி லண்டன் மிஷன் பள்ளி’யில் கல்வி கற்றார். இளம் வயதில் தந்தையை இழந்ததால் கல்வியும் தடைபட்டது. ஐந்து வயதில் கோவில்களில் பாடியதில் துவங்கியது இவரது இசைப் பயணம்.
நாடகங்களில் புகழ் பெற்றார்
அன்று நாடகத்தில் புகழ் பெற்றிருந்த, வேலுநாயர் ராஜாமணி அம்மாள் நாடகக் குழுவினர் ’நல்லதங்காள்’ நாடகம் நடத்த கரூர் வந்திருந்தனர். அந்த நாடகத்தில் நல்லதங்காளின் மூத்த பிள்ளையான ஞானசேகரன் வேடத்திற்கு சுந்தராம்பாள் ஆண் வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் ”பசிக்குதே! வயிறு பசிக்குதே” என்ற பாட்டை மிக அருமையாக பாடியதால் நாடகக் குழுவுடன் சேர்ந்து தொடர்ந்து நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். மேலும் சொந்த குரலிலேயே பாடி நடித்தார்.
1917-ல் இலங்கைக்கு நடிக்கச் சென்றார். அங்கு பல ஊர்களில் இவரின் நாடகங்கள் நடைபெற்றன. 1929-களில் நாடு திரும்பினார்.
வள்ளி திருமணம், நல்லதங்காள், கோவலன், ஞானசெளந்தரி, பவளக்கொடி போன்ற அக்காலத்தில் புகழ்பெற்ற நாடகங்களில் நடித்தார்.
அதே காலக்கட்டத்தில் நாடக உலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்த எஸ்.ஜி.கிட்டப்பா உடன் இணைந்து நடிக்கத் துவங்கினார். 1926-ம் ஆண்டு சுந்தராம்பாள் – கிட்டப்பா நடித்த வள்ளி திருமணம் அரங்கேறியது. இருவரும் பின்னர் திருமணம் புரிந்து கொண்டனர்.
பல்வேறு இசைத் தட்டுகளில் கே.பி.சுந்தரம்பாள் பாடல்கள் பதிவு செய்யப்பட்டு எங்கும் ஒலிக்கத் தொடங்கின. அந்த காலகட்டத்தில் அதிகம் சம்பளம் வங்குகிற கலைஞர் சுந்தராம்பாள் தான்.
பம்மல் சம்மந்த முதலியார் அவர்கள் கே.பி.சுந்தராம்பாளைப் பற்றி
நான் கண்ட நாடக கலைஞர்கள் என்ற புத்தகத்தில் பம்மல் சம்பந்த முதலியார் அவர்கள்,
“நடிப்பதில் மிகவும் திறமை யுடையவர். ஆயினும் இவருடைய பெயரினை தமிழ் நாடெங்கும் பரவச் செய்தது இவருடைய அபாரமான சங்கீதக் கலையே. நல்ல ராக, தாள ஞானமுடையவர். நான் கண்ட அளவில் இவர்களுடைய சங்கீதத்தில் ஈடு ஜோடு இல்லாத பெருமை என்னவென்றால், இவர்கள் பக்க வாத்தியங்கள் இல்லாமலே மிகவும் இனிமையாகப் பாடும் திறமே யாம். அநேக சங்கீத வித்வான்கள் பக்க வாத்தியத்தோடு பாடுவது ஒரு மாதிரியாக இருக்கும். பக்க வாத்தியம் இல்லாமல் பாடுவது வேறு ஒரு மாதிரியாய் இருக்கும். இவரது பாட்டில் அப்படியில்லை. பக்க வாத்தியங்கள் இல்லாமல் பாடினாலும் மிகவும் காதுக்கு இனிமையாயிருக்கும். இது ஒரு அரிய குணம்” என்று சுந்தராம்பாள் பற்றி குறிப்பிட்டிருப்பார்.
வெள்ளை புடவையுடன் வாழ்ந்த சுந்தராம்பாள்
1933-ம் ஆண்டு டிசம்பர் 2 அன்று நிகழ்ந்த கிட்டப்பாவின் மரணம், 25 வயது சுந்தராம்பாளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அன்றிலிருந்து அவர் வெள்ளை சேலை கட்டத் தொடங்கினார். எந்தவொரு ஆண் நடிகருடனும் ஜோடி சேர்ந்து நடிப்பதில்லை என்று முடிவெடுத்து அதை கடைசி வரை அப்படியே இருந்தார்.
நீண்ட காலமாக கலை வாழ்க்கையில் இருந்து ஒதுங்கி இருந்த சுந்தராம்பாள் 1934−ல் நந்தனார் நாடகத்தில் மீண்டும் நடித்தார். அதிலிருந்து தொடர்ந்து பல நாடகங்களை நடத்தி வந்தார். அவைகளில் பெரும்பாலும் அவர் ஆண் வேடம் தரித்து பெண் வேடத்துக்கு வேறு பெண் நடிகர்களை அமர்த்தியிருந்தார்.
திரைப்படங்களில் கே.பி.சுந்தராம்பாள்
1935-ல் வெளிவந்த ’பக்த நந்தனார்’ திரைபடத்தில் நந்தனார் வேடத்தில் நடித்தார். அந்த படத்தில் மொத்தம் 41 பாடல்களில் சுந்தராம்பாள் பாடியவை 19 பாடல்கள். அதே போல மணிமேகலையில் நடித்தார். இப்படத்தில் 11 பாடல்களை பாடினார். 1944-ம் ஆண்டு நடைபெற்ற தமிழிசை முதல் மாநாட்டின் இசையரங்கில் கலந்து கொண்டார்.
தொடர்ந்து ஔவையார் என்ற படத்தில் ஔவையார் வேடமேற்று நடித்தார். இப்படம் 1953−ல் வெளிவந்தது. ஒளவையார் படத்தில் 48 பாடல்கள். இவற்றில் சுந்தராம்பாள் பாடியவை 30.
முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் வசனத்தில் 1964-ம் ஆண்டு ’பூம்புகார்’ திரைபடத்தில் கவுந்தி அடிகள் பாத்திரத்தை சுந்தராம்பாள் ஏற்று நடித்திருந்தார்.
மகாகவி காளிதாஸ், திருவிளையாடல், கந்தன் கருணை, உயிர் மேல் ஆசை, துணைவன், சக்தி லீலை, காரைக்கால் அம்மையார், திருமலை தெய்வம், மணிமேகலை உள்ளிட்ட 12 படங்களில் சுந்தராம்பாள் பாடி நடித்துள்ளார்.
விடுதலைப் போராட்டம் மற்றும் காங்கிரஸ்
இந்திய விடுதலைப் போராட்டத்தில் தீவிர ஆர்வம் கொண்ட சுந்தராம்பாள் காந்தி மற்றும் சத்தியமூர்த்தி மீது மிகுந்த பற்று கொண்டவர்.
கதர் இயக்கம், தீண்டாமை ஒழிப்பு, வெள்ளையர் எதிர்ப்பு பாடல்களை பாடிவந்தார்.
சத்தியமூர்த்தி சென்னையில் தேர்தலில் நின்று வெற்றிபெற சுந்தராம்பாள் பாடல்கள் முக்கியப் பங்காற்றியது. நீதிக் கட்சி வலுவாக இருந்தபோது அதனை எதிர்த்து சத்தியமூர்த்தியை ஆதரித்து ’ஓட்டுடையோரே கேளிர்’ என்று அவர் பாடிய பாடல் மிக முக்கியப் பாத்திரம் வகித்தது.
கணவர் இறந்த பிறகு பாடுவதை நிறுத்தியிருந்த கே.பி.சுந்தராம்பாளை அவருடைய வீடு தேடிச் சென்று மகாத்மா காந்தி, அவரது இசைப் பணியைத் தொடரச் சொல்லி கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
”சிறைச்சாலை என்ன செய்யும்?” எனும் இவரது பாடலும், “காந்தியோ பரம ஏழை சந்நியாசி” எனும் பாடலும் அன்றைய காலக்கட்டத்தில் மிகப்பெரிய அதிர்வை தேச பக்தர்கள் மத்தியில் ஏற்படுத்தியது.
“கொடுமுடி கோகிலம்” என்று இவரை தனது திராவிட நாடு பத்திரிகையில் புகழ்ந்து எழுதினார் அறிஞர் அண்ணா.
காமராசர் ஆட்சியின் போது 1958-ம் ஆண்டில் தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
”கலையைக் காப்பாற்றுவதாக பல கலைஞர்கள் கூறிக் கொள்ளும் வேளையில், என்னைப் பொறுத்தவரையில் கலைதான் என்னைக் காப்பாற்றுகிறது” என்றவர் கே.பி.சுந்தராம்பாள்
கர்நாடக இசை, தெலுங்கு பாடல்கள் ஆதிக்கம் செலுத்திய காலக்கட்டத்தில் தனது இசைத் திறனால் தமிழ் உச்சரிப்பால் அனைத்து மக்களும் ரசிக்கும் வண்ணம் தமிழிசையில் கோலோச்சியவர் கே.பி.சுந்தராம்பாள்.
தமிழிசை இயக்கத்திற்காக சாதாரண பொதுமக்களிடம் சென்று தனது முழு தமிழிசை நிகழ்ச்சியை வழங்கி வந்தார்.
தமிழிசை, நாடகம், அரசியல், திரைப்படம், ஆன்மிகம் எனப் பலதுறைகளிலும் பணியாற்றிய கே.பி சுந்தாராபம்பாள் 19 செப்டம்பர் 1980 அன்று உயிர் நீத்தார். அவரின் நினைவு நாள் இன்று.
Central Institute of Indian Languages வெளியிட்ட கே.பி.சுந்தரம்பாள் குறித்த ஆவணப்படத்தினைக் காண:
part 1: A Film on the life of K.B.Sundarambal the legendary Tamil singer-Part 1