தொழிலாளர் மசோதா

இந்திய அரசின் புதிய தொழிலாளர் மசோதாக்கள் சொல்வது என்ன? – பாகம் 2

இந்த கட்டுரை ஏற்கனவே தொழிலாளர் மசோதா குறித்து Madras Radicals-ல் வெளியாகியிருந்த முதல் பாகத்தின் தொடர்ச்சியாகும். முதல் பாகத்தினை இங்கே தரப்பட்டுள்ள இணைப்பில் படிக்கலாம்.

படிக்க: இந்திய அரசின் புதிய தொழிலாளர் மசோதாக்கள் சொல்வது என்ன? – பாகம் 1

தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் குறியீடு, 2020

 தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகளை ஒழுங்குபடுத்தும் அனைத்து சட்டங்களையும் ஒருங்கிணைத்து மொத்தமாக திருத்த முயற்சிக்கிறது இச்சட்டம்.  இந்தியாவில் 50% தொழிலாளர்கள் விவசாயத்தை அடிப்படையாக கொண்டவர்கள். அவர்களுடைய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்து இச்சட்டத்தில் எந்த அக்கறையும் செலுத்தப்படவில்லை. மேலும் சிறிய சுரங்கங்கள், ஹோட்டல்கள் மற்றும் உணவு உண்ணும் இடங்கள், இயந்திரங்கள் பழுதுபார்ப்பு, கட்டுமானம், செங்கல் சூளைகள், மின் தறிகள், தீயணைப்புப் பணிகள், தரைவிரிப்பு உற்பத்தி, வளர்ந்து வரும் துறைகளான ஐ.டி, ஐ.டி.இ.எஸ், டிஜிட்டல் இயங்குதளங்கள், ஈ-காமர்ஸ் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட துறைகளில் முறைசாரா தொழிலாளர்களாகப் பணியாற்றும், பிற அமைப்புசாரா துறைகளில் பணியாற்றும் ஊழியர்களையும் இச்சட்டம் பொருட்படுத்தவில்லை.

அனைத்து பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள், வீட்டுத் தொழிலாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்ட தொழிலாளர்களுக்கு எந்தவித வேறுபாடும் இன்றி பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

மாநிலங்களுக்கு இடையிலான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்சனையைப் பொருத்தவரையில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பெரும் சிக்கல்களை சந்திக்கின்றனர். இந்த ஒப்பந்த முறையில்  பெரிய தொழில்துறை முதலாளிகளால் ஒப்பந்தக்காரர்கள் பலியிடப்படுகின்றனர். அதேபோல் முதலாளிகள் எந்த பொறுப்பும் இல்லாமல் தப்பித்துக் கொள்கிறார்கள். 

உள்-மாநில புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான பாதுகாப்புகள் குறித்து எந்தவொரு விடயத்தையும் இச்சட்டம் குறிப்பிடவில்லை என்பதும் வருத்தமளிக்கிறது. தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பாக முதலாளிகள் மீது எந்தவொரு பொறுப்பையும் நிர்ணயிக்காமல் இச்சட்டம் விலகிவிட்டது. இது மிகப்பெரிய ஆபத்தான போக்கை உருவாக்கும். 

குறைந்தபட்ச பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்தான தரநிலை  குறியீடுகளை பரிந்துறைத்திருக்க வேண்டும். ஆனால் அதையும் செய்யவில்லை. தினசரி மற்றும் வாராந்திர வேலை நேரங்களைப் பற்றிய குறைந்தபட்ச அளவீடு கூட குறிப்பிடப்படவில்லை. மேலும் இதுகுறித்து மத்திய அரசு அறிவிப்பின் மூலம் நிர்ணயிக்கப்படும் என்று கூறுகிறது. 

’facilitators’ மற்றும் third-party certification போன்ற வழிமுறைகளை அறிமுகப்டுத்துவதினூடாக Enforcement Mechanism என்ற நடைமுறை வழிமுறைகள் அகற்றப்பட்டுள்ளன. அதேபோல் ஒரு நிறுவனத்தில் நிரந்தர தொழிலாளர்களைப் போலவே ஒத்த இயல்புடைய வேலையைச் செய்யும் ஒப்பந்தத் தொழிலாளர்களையும் சமமாக நடத்த எந்தவொரு விதிமுறைகளும் இச்சட்டத்தில் இல்லை.

அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்கள், சுயதொழில் செய்பவர்ககளைத் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. பணியிடத்தில் பாதுகாப்புக் குழு அமைக்கப்படும் என்ற ஏற்பாடு நடைமுறையில்  தொழிலாளர்களின் பாதுகாப்பை நகைப்பிற்கு உள்ளாக்கியுள்ளது.  ஆண்டுக்கு 40,000 பணியிட மரணங்களை சந்திக்கும் இந்தியா போன்ற  நாட்டிற்கு இதுபோன்ற பரிந்துரை பலனளிக்காது. இந்த சட்டம் இந்திய தொழிலாளர்களில் 90%-க்கும் அதிகமானவர்களின் பணியிட பாதுகாப்பை உறுதி செய்ய தவறிவிட்டது.

பணியிடத்தில் நடக்கும் விபத்திற்கு உள்ளாகும் தொழிலாளர்களுக்கு ESI/PF நன்மைகளுடன் சேர்த்து 1 லட்சம் ரூபாய் நிர்ணயித்துள்ளது. பணியிடத்தில் பாதுகாப்பு கட்டமைப்பை உறுதி செய்யாத நிறுவனத்தின் முதலாளிகள் மீது குற்றவியல் நடைமுறைகள் எடுக்க உறுதிப்படுத்தப்பட வேண்டும். 

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா துறை ஊழியர்களுக்கான சமூகப் பாதுகாப்பு நிதி குறித்தான வழிகாட்டுதல்கள் வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். ஆனால் இதற்கான நிதி ஆதாரங்கள் முதலாளிகளிடம் இருந்து பெறப்பட வேண்டும். விபத்து ஏற்பட்டால் வணிகத்தை மூடுவது அல்லது ஒரு பெருந்தொற்று காலத்தில் பூட்டுதல் தொடர்பான அவசரநிலைகள் ஏற்பட்டால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அரசாங்கத்திடமிருந்து எந்தவிதமான சிறப்பு பாதுகாப்பும் இல்லாமல் விடப்படுகிறார்கள். இதை முற்றிலும் கவனத்தில் கொண்டு அரசும் குறிப்பிட்ட நிறுவனமும் பொறுப்பெடுத்துக் கொள்ள வழிவகை செய்திருக்க வேண்டும்.

கொரானா காலகட்டங்களில் புலம் பெயர்ந்த தொழிலாளார்களுக்கு அடிப்படையான உரிமைகளை வழங்க அரசு தவறிவிட்டது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தொழிலாளர்களின் விலை மதிப்பற்ற பங்கை அரசு புறந்தள்ளிவிட்டது.

தொழில்துறை உறவுகள் சட்டம் 2020

அரசியலமைப்பின் வழிநடத்துதல் கோட்பாடுகளை மீறும் வகையில், தொழிலாளர்களை விட்டுக்கொடுத்து தொழில்துறையை பாதுகாக்கக்கும் வகையில் தொழில்துறை உறவுகள் சட்டம் 2020 வடிவமைக்கப்பட்டுள்ளது. அமைதியான மற்றும் சட்ட ரீதியான அனைத்து கருத்து வேறுபாடுகளின் மீதும் ஒடுக்கமுறையை புகுத்தியுள்ளது. நேரடியாகவும் மறைமுகமாகவும் கோடிக்கணக்கான முறைசாரா தொழிலாளர்கள் தங்களுடைய நியாயமான உரிமைகளைக் கோருவதை தடுத்துள்ளது மத்திய அரசு. சட்டத்தின் முக்கிய வரையறைகளில் செய்துள்ள மாற்றங்கள் மற்றும் அத்துடன் கீழே குறிப்பிடப்பட்டுள்ளபடி, சட்டத்தின் முந்தைய பதிப்பில் வரையறுக்கப்பட்ட சொற்களைத் தவிர்ப்பதன் மூலம் தொழிலாளர் பாதுகாப்பிற்கு மிக முக்கியமான சேதம் ஏற்பட்டுள்ளது.

புதிய வடிவிலான பணிகள் மற்றும் முதலாளி-பணியாளர் உறவுகள் தோன்றியதன் மூலம், அரசாங்கத்திற்கு ‘தொழிலாளி’ என்ற வரையறையை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஆனால்  அரசு அதைக் கட்டுப்படுத்தத்தவே செய்துள்ளது. இதன் விளைவாக, கைவண்டி இழுப்பவர்கள், பிளாட்ஃபார்ம் தொழிலாளர்கள், பயிற்சியாளர்கள், தகவல் தொழில்நுட்பத் தொழிலாளர்கள், Startup மற்றும் MSMEகளில் பணிபுரிபவர்கள், சுயதொழில் செய்பவர்கள், வீட்டுத் தொழிலாளர்கள் உள்ளிட்டவர்களின் சட்டரீதியான தொழில்துறை பாதுகாப்பில் இருந்து விலக்கியுள்ளது. 

ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு பணிப் பாதுகாப்பின்மை

அமைப்புசாரா மற்றும் முறைசாரா துறை தொழிலாளர்கள், தோட்டத் தொழிலாளர்கள், NREGA தொழிலாளர்கள் போன்றவர்களும் விலக்கப்பட்டுள்ளனர். முன்னர் வெளிப்படையாக சேர்க்கப்பட்டிருந்த Apprentice பயிற்சியாளர்கள் இப்போது விலக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பயிற்சியின் போது சுரண்டலுக்கு ஆளாக்கப்படுவது நடைமுறை. இவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். 

“முதலாளி”, “பணியாளர்” மற்றும் “தொழிலாளி” என்ற வரையறையின் மாற்றங்கள் குழப்பமானவை. சுய முரண்பாட்டுடனும்  ஏற்றுக்கொள்ள முடியாமலும் இருக்கிறது. “முதலாளி” என்ற வரையறைக்குள்  “ஒப்பந்தக்காரரும் உள்ளடக்கம், இருந்தும் ஒப்பந்தகாரர் குறித்து  குறிப்பாக தெளிவாக வரையறுக்கப்படவில்லை. “ஒப்பந்தக்காரர்” என்ற பதம் சமூகப் பாதுகாப்பு சட்டத்தில் (Social security) வரையறுக்கப்பட்ட முறையில் இங்கும் எடுத்துக்கொண்டால் அதன் விளைவுகள் இன்னும் ஆபத்தானவை. 

1920-களில் ‘தொழிலாளர் மீதான ராயல் கமிஷன்’ நிரந்தரத் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் சலுகைகளிலிருந்து தொழிலாளர்களை சுரண்டுவதற்கு  “ஒப்பந்தத் தொழிலாளர் முறை“ பயன்படுத்தப்பட்டது என்று கூறியிருந்தது. 100 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போதைய அரசியல் கட்சி இந்த கடுமையான காலனித்துவ விதிகளைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கிறது. உச்சநீதிமன்றம் இந்த முறையை அடிக்கடி விமர்சித்துள்ளது. போலி ஒப்பந்தங்கள் மற்றும் போலி ஒப்பந்தக்காரர்கள் குறித்து புதிய வரையறைகளை பொருட்படுத்தாமல் அனைவரையும் சட்டப்பூர்வமாக்க முயல்கின்றது.

’முதலாளி’ குறித்த தெளிவற்ற வரையறை

முதன்மை முதலாளி குறித்தான வரையறை தெளிவற்றதாக இருக்கிறது. ஒப்பந்தக்காரரையும் முதலாளி வகையில் சேர்க்கலாம். முதலாளிகள் மட்டுமே  நேரடியாக தொழிலாளர்களை கையாள்வதில்லை. ஒப்பந்தகாரர்களும் அந்த பாத்திரத்தை வகிக்கலாம். எனவே ‘முதலாளியின்’ பொறுப்பில் தொழிலாளர்கள் ஒரு குறிப்பிட்ட நபரை சுட்டிக்காட்டுவது சாத்தியமில்லாமல் ஆகிறது.

(The definition of principal employer is ambiguous and could include the contractor as well. The ‘employer’ may be the one directly employing the person or the individual who has ultimate control of the affairs — these may not be the same. As a result, it might not be possible for workers to pinpoint the responsibility of ‘employer’ on any one person)

வேலை நிறுத்த உரிமைகளில் ஏற்படுத்தும் தடைகள்

வேலை நிறுத்தத்தின் வரையறையில் ‘ஒரு குறிப்பிட்ட நாளில் ஐம்பது சதவிகிதம் அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் ஒருங்கிணைந்த சாதாரண விடுப்பு எடுத்தால்‘ என்ற பதத்தை விரிவாக்கியுள்ளது. இது கூட்டு பேரம் பேசும் செயல்முறைகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்கும் தொழிலாளர்களின் திறனைக் கட்டுப்படுத்துகிறது. இது தவிர, வேலைநிறுத்த உரிமைக்கு பல கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. அமைதியான வேலைநிறுத்தத்தை ஏற்பாடு செய்பவர்கள் அல்லது பங்கேற்பவர்கள் தடைக்கும் தண்டனைக்கும் உட்படுத்தப்படுவார்கள் என்று கூறுகிறது.  வேலைநிறுத்தங்கள் மீது இத்தகைய தடைகளை விதிப்பது கூட்டுறவு சுதந்திரத்தின் கொள்கைகளை கடுமையாக மீறுவதாகும். 

தனிப்பட்ட சச்சரவுகள் மற்றும் தீர்வுகளை நிறுவனத்தின் ‘‘சர்ச்சை ’அல்லது தீர்வு’ என்பதன் வரையறையைக்குள் திணிக்கும் வண்ணம்  மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது இது ILO விதிகளுக்கு புறம்பானது. 

தொழிற்சங்க அங்கீகாரம் குறித்த மாற்றங்கள்

மேலும் தொழிலாளர் பிரதிநிதி அல்லது தொழிற்சங்கங்களை அங்கீகரிப்பது குறித்தான வழிகாட்டு நெறிமுறைகள் எதுவும் சரியாக பரிந்துரைக்கப்பட்வில்லை. இத்தகைய விதிகள் முதலாளிகளால் உருவாக்கப்பட்ட போலி தொழிற்சங்கங்களுக்கு சட்டப்பூர்வமான தன்மையை வழங்க வழிவகுக்கும். மேலும் தொழிலாளர்களின் நியாயமான குரல்களுக்கு மதிப்பு அளிக்கப்படாது.

தொழில்துறை தகராறுக்கு (Industrial Disputes) மூன்று ஆண்டுகள் தான் காலம் கொடுக்கப்படும் என்ற வரம்பு தவறானது. இது தொழிலாளர்கள் தங்கள் நியாயமான உரிமைகளை போராடிப் பெறுவதற்குள் அவர்களை தோற்கடிப்பதற்கான ஒரு யுக்தி. 

தொழிற்சங்கத்தை பதிவு செய்வதற்கான அளவுகோல்கள், குறைந்தபட்ச உறுப்பினர் தேவையை பத்து சதவீதம் அல்லது நூறு தொழிலாளர்கள் என்று நிர்ணயிப்பது பல தொழிற்சங்கங்களை செயல் இழக்கச் செய்யும். அதேபோல் குறைந்த எண்ணிக்கை கொண்ட முறைசாரா துறையில் இருக்கும் தொழிலாளர்களுக்கு தொழிற்சங்க உரிமை மறுக்கப்படும். தொழிலாளர்களின் ஒரே பேச்சுவார்த்தை முகவராக (Sole negotiating agent) செயல்படுவதற்கு 75% தொழிலாளர்களின் ஆதரவு தேவை என்று வரையறுத்திருப்பது ILO சட்டத்திற்கு எதிரானது.

தொழிற்சாலை வரையறை

‘தொழிற்சாலை’(industry) என்பதன் வரையறையில் “தொண்டு”, “கொடைப் பண்புள்ள”,“சமூக” போன்ற சொற்கள் சேர்க்கப்பட்டு உள்ளன, அவை தெளிவாக வரையறுக்கப்படாதவை. எனவே தவறாக பயன்படுத்தப்படலாம். உதாரணமாக, சானிட்டரி நாப்கின் அல்லது டாய்லெட் பேப்பர் தயாரிப்பாளர் ஒரு சமூக செயல்பாடு என்று கூறலாம். எனவே இது ஒரு தொழில் அல்ல என்று வரையறுக்கப்படும்.

ஊதியம் வரையறை

“ஊதியம்” என்ற வரையறையின் மாற்றம் குழப்பமாக உள்ளது. குறிப்பாக தொழிலாளர்களுக்கு தீங்கிழைக்கும் நோக்கத்துடன் செய்யப்பட்ட மாற்றமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. retrenchment compensation, subsistence allowance போன்றவற்றை குறைப்பதும், conveyance allowance, house rent allowance and commission போன்றவைகளை நீக்ககுவதும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை நேரடியாக பாதிக்கும்.

செய்யப்பட்ட மிக ஆபத்தான மாற்றங்களில் ஒன்று, “நிலையான கால ஒப்பந்தங்களை” வேலைவாய்ப்பாக மாற்றுவது. (institutionalisation of “fixed term contracts” as a tenure of employment). ஒரு நிலையான கால அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களை எந்த விதமான முன்னறிவுப்பும் செய்யப்படாமல் நீக்குவது. சட்டபாதுகாப்பு இருந்த காலகட்டத்தில் கூட இதுபோன்ற நிகழ்வுகள் நடைமுறையில் பின்பற்றப்பட்டது.

மாவட்ட அளவிலான தொழிலாளர் நீதிமன்றங்களை ஒழிக்கும் முயற்சி

இந்த சட்டம் மாவட்ட அளவிலான தொழிலாளர் நீதிமன்றங்களை ஒழிக்க முயற்சிக்கிறது, மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒன்று அல்லது இரண்டு தொழில்துறை தீர்ப்பாயங்கள் மட்டுமே செயல்படும் என்று முன்மொழிகிறது. இதன்மூலம் தொழிலாளர்களுக்கு நீதி மறுக்கப்படும்.

நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் மற்றும் அவற்றின் செயல்திறனை மேம்படுத்த வேண்டிய தேவை இருக்கும் காலகட்டத்தில் அதை சுருக்குவது  ஆபத்தானது.

இதுபோன்று பல்வேறு மாற்றங்களை இச்சட்டம் செய்கிறது. அதேபோல் பொருந்தாத பல புதிய விடயங்களை சேர்க்கிறது. இவ்வனைத்தும் தொழிலாளர்களின் நலனை மையப்படுத்தாமல் முதலாளிகளின் நலனைச் சுற்றியே அமைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் மீது அக்கறையும் பாதுகாப்பும் இல்லாத இதுபோன்ற சட்டங்கள் பாட்டாளி வர்க்கத்தை சிதைக்கும். ஒரு நிரந்தரமான அமைதியின்மைக்கு வழிவகுக்கும். கோடிக்கணக்கான தொழிலாளர்களின் அடிப்படை உரிமை மறுக்கப்படுவது அவர்களின் வாழ்வை கேள்விக்குள்ளாக்குவது மட்டுமல்ல பொருளாதார வளர்ச்சியின் நிலைதன்மையையும் சீர்குலைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *