காந்தி அரசியல் என்பது அறம் சார்ந்து இருக்க வேண்டும். அறநெறியை அடிப்படையாகக் கொண்டு இருக்க வேண்டும் எனக் கருதினார். அந்த அறத்திற்கான வழியாக மதத்தைப் பார்த்தார். அரசியலில் இருந்து மதத்தைப் பிரித்துவிட முடியாது என உறுதியாக நம்பி இருந்தவர் காந்தி. அப்படி இருந்தும் இந்துத்துவ மதவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார்.
மதம் பற்றி காந்தி கொண்டிருந்த கருத்து
மதத்திற்கும், அரசியலுக்குமான தொடர்பைப் பற்றி காந்தி கூறுகையில், “மதத்திலிருந்து துண்டிக்கப்பட்டதாக அரசியலை என்னால் பார்க்க முடியாது என்ற கருத்து இப்போதும் எனக்குண்டு. சொல்லப்போனால் நமது ஒவ்வொரு செயலிலும் மதம் ஊடுருவியிருக்க வேண்டும். இங்கே மதம் என்பது குறுகியவாதமாகாது. முறைப்படுத்தப்பட்ட அறவழிப்பட்ட பிரபஞ்ச நிர்வாகம் என்பதில் ஒரு நம்பிக்கை என்பதே இதன் பொருள். இந்த மதம் இந்து, இஸ்லாம், கிறிஸ்துவம் முதலியவற்றுக்கு அப்பாற்பட்டது”
என்று கூறினார்

ஆனால் காலமும் சூழலும் அவரது நம்பிக்கைகளை பொய்த்துப் போக செய்தது. அதனால் தான் பின்னாட்களில் காந்தி, “நான் ஒரு சர்வாதிகாரியாக இருந்தால், மதமும் அரசியலும் தனித்தனியாகவே இருக்கும். என் மதத்தின் மேல் உறுதியாகக் கூறுகிறேன். அதற்காக என் உயிரையும் தருவேன்” என்று கூறினார். அதேபோல் ’கடவுள்தான் உண்மை’ என்று சொல்லிக்கொண்டு இருந்த காந்தியடிகள் பின்னர் ’உண்மையே கடவுள்’ என்று தனது கருத்தை மாற்றிக்கொண்டார்.
இந்த மாற்றங்களுக்கு முக்கியக் காரணமாக இருந்தது இந்திய விடுதலைப் போராட்டத்தின் கடைசி காலகட்டத்தின்போது மதவெறியானது அரசியலில் கலக்க துவங்கியதுதான். 400 ஆண்டு காலத்திற்கும் மேலாக நீடித்த விடுதலைப் போராட்டத்தில் கடைசி 30 வருடங்களில் இந்த நச்சு விதைகள் விதைத்து செழிப்பாக வளர்க்கப்பட்டது.
விடுதலைப் போராட்டத்தின் கடைசி 30 ஆண்டுகளில் துளிர்விட்ட இந்துத்துவ அமைப்புகள்
முதல் இந்திய சுதந்திரப் போர் என்று சொல்லப்படும் 1857-ல் எந்த வேறுபாடுமின்றி ஒன்றுபட்டிருந்த இந்துக்களும் முஸ்லீம்களும் மெல்ல மெல்ல ஒருவர் மீது ஒருவர் வெறுப்பைக் கொள்ளத்தக்க பிரச்சாரம் உருவாக்கப்பட்டது.
இந்து ராஷ்டிரம் என்ற பெயரில் பல பிரச்சாரங்கள் துவங்கப்பட்டன. 1400 ஆண்டுகளாக நமது மேன்மைகளை அந்நியப் படையெடுப்புகளால் இழந்துவிட்டோம் என்று பல கருத்தாக்கங்கள் பரப்பப்பட்டன.
விடுதலைப் போராட்டத்தில் திலகரின் மறைவுக்குப் பிறகு காந்தியின் தலைமையில் செயல்பட்டது காங்கிரஸ். ரௌலட் சட்டம், ஜாலியன் வாலாபாக் படுகொலை, பகத்சிங்கின் வீரத்தியாகம், வட்ட மேசை மகாநாடுகள், ஒத்துழையாமை இயக்கம், இரண்டாம் உலகப் போர், வெள்ளையனே வெளியேறு இயக்கம் என்று மாபெரும் மக்கள் எழுச்சியோடு போராட்டம் விரிவடைந்த காலம் அது. மிதவாத இயக்கங்களும், தீவிரவாத இயக்கங்களும், தொழிலாளர் இயக்கங்களும் தோன்றி போராட்டத்த்தை முன்னெடுத்த காலகட்டம்.
இதே காலகட்டத்தில் இன்னொரு குழுவும் இயங்கியது. அது இந்து இந்தியா என்றும், அகண்ட பாரதம் என்றும், ‘பாரத் மாதாகீ ஜெய்’ என்றும், இந்து ராஷ்டிரம் என்றும் தனது விஷக் கனவுகளை மக்களிடம் பரப்பிக் கொண்டிருந்தது. இவர்கள் விடுதலைப் போராட்டத்தில் எந்த பங்களிப்பும் இல்லாமல் வேடிக்கை பார்த்தவர்கள்.
ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்காத ஆர்.எஸ்.எஸ்
ஒத்துழையாமை இயக்கத்தில் முஸ்லீம் மக்கள் அதிகமாக பங்கு பெற்றபோது “யவனப் பாம்புகள் ஒத்துழையாமை இயக்கத்தின் மூலம் பாலருந்தி, விஷம் கக்கும் சத்தங்கள் எழுப்பி தேசத்தில் கலகங்களை உருவாக்குகின்றன” என்று ஹெட்கேவர் வன்மத்தைக் கக்கினார்.
1929 ஜனவரி 26 அன்று சுதந்திர தின உறுதி எடுத்துக் கொண்டு காந்தியோடு 90,000 பேர் நாடு முழுவதும் கைதாகினர். அந்த மாபெரும் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் கலந்து கொள்ளவில்லை.
1940-ல் ஹெட்கேவருக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ்-ன் பொதுச்செயலாளரான கோல்வாக்கர் நாடு முழுவதும் ஒரு லட்சம் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் இருப்பதாக பெருமையோடு சொன்னார். ஆனால் 1940-ல் நடந்த சட்ட மறுப்பு இயக்கத்தில் 20,000 பேர் கைதாகினர். அதில் ஆர் எஸ் எஸ் காரர்கள் யாரும் இல்லை என்பதுதான் உண்மை.
அதன் பின்னர் 1942-ல் நடந்த சட்ட மறுப்பு இயக்கத்தில் பங்கெடுத்த 1060 பேர் நாடு முழுவதும் ஆங்கிலேய காவல் துறையின் கொடுமைக்கும், சித்திரவதைக்கும் ஆளாகி இறந்தனர். அவர்களில் ஒரு ஆர்.எஸ்.எஸ் ஊழியரும் இல்லாதது இவர்களின் தேச பக்திக்கு இன்னொரு சாட்சியாகும்.
ஆங்கிலேயருக்கு ஒத்துழைப்போம்; முஸ்லீம்களே எதிரி என சொன்ன இந்துத்துவ அமைப்புகள்
ஆர்.எஸ்.எஸ்-சின் குருவாகிய சாவர்க்கர், அரசு அதிகாரத்தில் இருக்கும் இந்துக்கள் பிரிட்டிஷ் அரசோடு ஒத்துழைக்க வேண்டும் என வெளிப்படையாகவே தன் சகாக்களுக்கு கட்டளையிட்டார்.
இந்து மகா சபையும், ஆர்.எஸ்.எஸ்-சும் இந்திய விடுதலை குறித்து அக்கறை ஏதுமின்றி ஆங்கிலேய அரசுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டு, பிரிவினை முழக்கத்தினை உரக்க எழுப்பிக் கொண்டிருந்தன.
1929-ல் இந்து மகா சபையைச் சார்ந்த பாய் பரமானந்த், “இந்துக்களும், முஸ்லீம்களும் சேர்ந்து வாக்களித்தால் அவர்களது அரசியல் வேறுபாடுகள் மதம் சார்ந்ததாக இருக்கும். இது இரண்டு சமுகத்திற்கும் நல்லதல்ல; இன்னும் சொல்லப்போனால் இந்துக்களுக்கே அதிக பாதிப்பு உண்டாகும்” என்று சொன்னார் (Hindu national movement, lahore, 1929).
இரண்டு தேசம் என்பதை முதலில் சொன்ன இந்துத்துவவாதிகள்
1938-ல் கோல்வாக்கர் எழுதி வெளியிட்ட WE or OUR NATIONHOOD DEFINED எனும் புத்தகத்தில் இரண்டு தேசங்கள் வேண்டும் என்கிற விஷயம் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து 1940-ல் லாகூரில் நடந்த முஸ்லீம் லீக் மாநாட்டில் “இரண்டு தேசங்கள் வேண்டும்” என்று முஸ்லீம் லீக் முதல்முறையாக தீர்மானம் நிறைவேற்றியது.
இதே நாட்களில்தான் இந்து மகாசபையின் தலைவராயிருந்த சாவர்க்கரோடு நெருங்கிய தொடர்பு கொண்டவனாகிறான் கோட்சே. அதன்பிறகு ‘இந்து ராஷ்டிரா’ எனும் ஒரு பத்திரிக்கை கோட்சேவினை ஆசிரியராகக் கொண்டு பூனாவில் இருந்து ஆரம்பிக்கப்படுகிறது. அப்போது அதற்கு 15,000 ரூபாய் நிதியை அளித்து உருவாக்கியவரே சாவர்க்கர் தான்.

“முஸ்லீம்களை எப்படி இந்தியர்கள் என ஏற்றுக் கொள்ள முடியும்?” “முஸ்லீம்கள் இந்த நாட்டில் இந்துக்களுக்கு அடங்கிப் போக வேண்டும். அவர்களுக்கென்று எந்த சலுகையும் அளிக்கக் கூடாது. பிரஜா உரிமை கூட அளிக்கக் கூடாது” என்று இந்து மகாசபை மற்றும் ஆர் எஸ் எஸ் கூட்டத்தினர் ஆதிக்க வெறியை பிரச்சாரமாக செய்தனர்.
இன்னொரு புறம் முஸ்லீம் லீக், “சுதந்திர இந்தியாவில் மூஸ்லீம்களாகிய நமக்கு வேலைவாய்ப்பு, அதிகாரத்தில் இடம் இருக்காது” “அவர்கள் நம்மையும் தீண்டத்தகாதவர்களாகவே நடத்துகிறார்கள்” என அச்ச உணர்வை விதைத்தது.
நவகாளியில் ஆரம்பித்த கலவரங்கள் வெடித்து, பீகார், பம்பாய், பஞ்சாப் என்று பரவ ஆரம்பித்தது. காந்தி வேறு வழியில்லாமல் தார்மீகத் தோல்வியோடு பாகிஸ்தான் எனும் நாடு பிரிவினைக்கு ஒப்புக் கொண்டார். இடைக்கால அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டது.
பிரிவினையின் போது வெடித்த மதக் கலவரங்கள்
பாகிஸ்தானுக்குச் சென்ற முஸ்லீம்கள் போகும் வழியில் கடுமையாக தாக்கப்பட்டனர். அங்கிருந்து இந்தியாவுக்கு வந்த இந்துக்கள் அதுபோலவே ஈவிரக்கமில்லாமல் தாக்கப்பட்டனர். மதவெறி இரண்டு பக்கமும் உயிர் சேதத்தையும், பொருள் சேதத்தையும் ஏற்படுத்தியிருந்தது. பாகிஸ்தானுக்கு செல்ல முடியாத முஸ்லீம்களும் இங்கு சித்திரவதை செய்யப்பட்டனர். சொந்த நாட்டிலே அகதிகள் முகாம்களில் முஸ்லீம்கள் வைக்கப்பட்டிருந்தனர்.

இதையும் படிக்க: இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது நடந்தது என்ன?: அதிர்ச்சியூட்டும் 25 புகைப்படங்கள்
கலவரங்களை தடுக்க முயன்ற காந்தி
நடக்கின்ற படுகொலைகளைத் தடுக்க காந்தி 1948 ஜனவரி 13 அன்று உன்ணாவிரதம் இருப்பதாக அறிவித்தார். அது சுதந்திர இந்தியாவில் அவர் மேற்கொண்ட முதல் உண்ணாவிரதம். காந்தியின் உண்ணாவிரதம் கலவரங்கள் நடந்த இடங்களை அமைதியை நோக்கி திருப்பியது.
ஏற்கனவே தங்களுடைய இந்து ராஷ்டிரம் எனும் திட்டத்திற்கு இடையூறாக இருந்த காந்தியை கொல்ல திட்டமிட்டவர்கள் இப்பொழுது அதனை தீவிரமாக்கினர்.
நாடு பிரிக்கப்படும் போது ரிசர்வ் வங்கியின் இருப்பில் இருந்த 375 கோடியில் இந்தியாவுக்கு 300 கோடி எனவும், பாகிஸ்தானுக்கு 75 கோடி எனவும் பேசி முடிவு செய்யப்பட்டிருந்தது.
பாகிஸ்தானுக்கு விடுதலைக்கு முன்பே 20 கோடி கொடுக்கப்பட்டிருந்தது. மீதித்தொகையான 55 கோடி கொடுக்கப்படவில்லை. அந்த தொகையைக் கேட்டு பாகிஸ்தான் ஜனவரி முதல் வாரத்தில் இந்தியாவுக்கு கடிதம் எழுதியது. காந்தி அந்த தொகையைக் கொடுக்க வேண்டியது இந்தியாவின் தார்மீகக் கடமை எனக் கருதினார்.
காந்தி தனது உண்ணாவிரதத்தின் போது அதனை வலியுறுத்தினார். அமைச்சரவையும் ஏற்றுக்கொண்டு அனைத்து தலைவர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என காந்தி கோரிக்கை வைத்தார்.
இந்து மகாசபை, ஆர்.எஸ்.எஸ் போன்றவை அந்த 55 கோடியை கொடுக்கக் கூடாது என ஆர்ப்பாட்டங்கள் நடத்தின. இந்திய அரசு 55 கோடி ருபாயை கொடுக்க வேண்டியதாயிற்று. காந்தியைக் கொல்ல இப்போது அவர்களுக்கு கூடுதலாக ஒரு காரணம் கிடைத்து விட்டது.

காந்தியை ஜின்னா பாகிஸ்தானுக்கு அழைத்திருந்தார். அவர் பிப்ரவரி 3-ம் தேதி கலவரங்கள் நடந்த பகுதிகள் வழியாக பாகிஸ்தானுக்கு செல்வதாக இருந்தார். ஒருவேளை காந்தி கொல்லப்படாமல் இருந்திருந்தால்,அவரின் அந்த பயணம் வரலாற்றை வேறானதாக மாற்றியிருக்கக் கூடும்.
காந்தியைக் கொல்ல நடந்த முயற்சிகள்

- முதல் முயற்சி 1934-ம் ஆண்டு நடைபெற்றது. பூனா நகராட்சியின் விழாவில் காந்தி கலந்து கொள்ளச் சென்றபோது, அவர் மீது வெடிகுண்டு வீசி கொல்ல முன்றார்கள். இந்த குண்டு வீச்சில் தலைமை நகராட்சி அதிகாரி, இரண்டு காவல்துறை அதிகாரிகள் உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர்.
- 1944-ம் ஆண்டு ‘பஞ்சக்கனி’ என்ற இடத்தில் நாதுராம் கோட்சே கையில் கத்தியுடன் காந்தியைக் குத்திக் கொல்ல முயன்றபோது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.டி.பிசாரே என்பவர் பாய்ந்து சென்று கோட்சேயின் கையிலிருந்த கத்தியைப் பிடுங்கி காந்தியின் உயிரைக் காப்பாற்றினார்.
- மீண்டும் அதே 1944-ம் ஆண்டு பம்பாயில் ஜின்னாவை சந்திக்கச் செல்ல இருந்தபோது, காந்தி-ஜின்னாவின் சந்திப்பு நடக்கவே கூடாது என்று நினைத்தவர்கள் மீண்டும் அவரை கொலை செய்ய திட்டமிட்டனர். அக்குழுவினை காவல்துறை பிடித்துவிட்டது. விசாரணையில் காந்தியின் பயணத்தைத் தடுக்கும் நோக்கத்துடனேயே வந்ததாக ஒப்புக் கொண்டார்கள்.
- அடுத்த முயற்சியை 1946-ல் மேற்கொண்டனர். அந்த ஆண்டு ஜூன் மாதத்தில் காந்தியடிகள் சிறப்பு இரயில் மூலம் பூனாவுக்கு சென்றுக் கொண்டிருந்தார். அந்த சிறப்பு இரயில் ‘நேரல்’ என்ற ஊருக்கும் ‘கர்ஜத்’ என்ற ஊருக்கும் இடையே வந்து கொண்டிருந்தபோது, தண்டவாளத்தின் மீது பாறாங்கற்களைப் போட்டு இரயிலைக் கவிழ்க்கும் சதியினை மேற்கொண்டார்கள்.
இதுவரை கொலை முயற்சிகளில் இருந்து எனது உயிர் 7 முறை காப்பாற்றப்பட்டிருக்கிறது. நான் அவ்வளவு சீக்கிரம் இறந்துவிட மாட்டேன். நூற்று இருபத்தைந்து ஆண்டுகள் வரை நான் உயிர் வாழ்வேன்” என்றார் காந்தி.
- அடுத்த முயற்சியை 1948 ஜனவரி 20 அன்று திட்டமிட்டனர். பிரார்த்தனை நடந்து கொண்டிருக்கும்போது பின்பக்கம் உள்ள செங்கற்சுவரில் குண்டு வெடிக்க ஏற்பாடு செய்வது என்றும், பிரார்த்தனைக் கூட்டத்தினர் அங்குமிங்குமாய் சிதறும்போது திகம்பர பாட்கே காந்திக்கு மிக அருகே சென்று சுடுவது என்றும் திட்டம் தீட்டியிருந்தனர்.
மதன்லால் பாவா என்பவன் குண்டை வெடிக்கவும் செய்து விட்டான். ஆனால் நினைத்த மாதிரி கூட்டம் சிதறவில்லை. என்னவோ ஏதோ என்று பதற்றம் தொற்ற மகாத்மா கூட்டத்தை அமைதிப்படுத்தினார். “இராணுவத்தினர் எதாவது பயிற்சி செய்து கொண்டிருப்பார்கள், நாம் பிரார்த்தனையை தொடருவோம்” என்றார். அதனால் அந்த திட்டமும் தோல்வியில் முடிந்தது.
ஜனவரி 20-ம் தேதி காந்தியின் மீது கொலைமுயற்சி நடந்தபோது “காந்தியின் நடவடிக்கைகளால் ஆத்திரமுற்ற இந்து இளைஞர்களின பதில் என்று எழுதினான் கோட்சே. ஜனவரி 30-ம் தேதி காந்தி கொலை செய்யப்பட்டதையும் மறுநாள் செய்தி வெளியிட்டிருந்தது கொலைகாரனை ஆசிரியராகக் கொண்ட பத்திரிக்கை.
காந்தி இந்து ராஷ்டிரத்திற்கு பெரும் தடையாய் இருப்பார் என்று தெரிந்தே காந்தி இந்திய சுதந்திரத்திற்கு போராடிக் கொண்டிருந்தபோது அவரை கொலை செய்ய சதி செய்து கொண்டிருந்தார்கள் இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தோர்.
உதவிய நூல்கள்
சாவர்க்கரும் இந்துத்துவமும் – ஏ.ஜி.நுரானி
காந்தி புன்னகைக்கிறார் – மாதவ்ராஜ்