ஜியோ கண்ணாடி

ஜியோ கண்ணாடியும், கேள்விக்குறியாகும் தனிநபர் பாதுகாப்பும்

இப்படி கற்பனை செய்து கொள்வோம். எதிர்காலத்தில் ஒருவன் ஜியோ டிவி சேவை மூலமாக தனக்கு பிடித்த படத்தை, ஜியோ-ஆண்ட்ராய்ட் சாதனத்தில் ஜியோ தொலைத்தொடர்பு சேவையைப் பயன்படுத்தி பார்த்துக் கொண்டிருக்கிறான். அதே வேளையில் அவன் வீட்டு வாசலில் ஜியோ-வாட்ஸ்அப் சேவையின் மூலம் அவன் ஆர்டர் செய்த மளிகை உள்ளிட்ட பொருட்கள் வந்து சேருகிறது. இந்த செயல்பாடுகள் அனைத்தும் ஜியோ கிளவுட் சேவையில் பதிவாகிக் கொண்டிருக்கிறது. அவனுடைய மாதத் தேவை என்ன, அவன் எதை விரும்புகிறான் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் ஒரே நிறுவனத்தின் கைகளுக்கு சென்று சேருகிறது.

இது கேட்பதற்கு வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் 2015-ம் ஆண்டு மோடி அரசு அறிமுகப்படுத்திய டிஜிட்டல் இந்தியா திட்டத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஜியோ நிறுவனம் இன்று அடைந்திருக்கும் வளர்ச்சி இதுபோன்ற கற்பனைகளுக்கு அல்ல நிஜத்திற்கே இட்டுச் செல்ல உள்ளது.

தொழில்நுட்ப ஆதிக்க சக்தியாய் ஜியோ

கடந்த ஜூலை மாதம் ரிலையன்ஸ் குழுமத்தின் ஆண்டுதோறும் நடைபெறும் கூட்டம் நடைபெற்றது. ரிலையன்ஸ் குழுமத்தின் இந்த 43-வது வருடாந்திர கூட்டமானது கொரோனா தொற்றுப் பரவலைத் தொடர்ந்து ஆன்லைன் மூலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய முகேஷ் அம்பானி பேஸ்புக்,கூகிள், இன்டெல், குவால்கம் போன்ற பன்னாட்டு நிறுவனங்களில் இருந்து கிட்டத்தட்ட 1.52 லட்சம் கோடி முதலீடுகளை பெற்றதன் மூலம் பங்குதாரர்களுக்கு நம்பிக்கையும் வலிமையும் ரிலையன்ஸ் குழுமம் அளிப்பதாகக் கூறினார். மேலும் தன் நிறுவனத்தை முற்றிலும் கடன்களே இல்லாத நிறுவனமாகவும் அறிவித்துக் கொண்டார்.

அதனைத்தொடர்ந்து அந்நிகழ்வில் ஜியோ இயங்குதளத்தின் புதிய சேவைகளாக ஜியோ கிளாஸ்(Jio Glass), ஜியோ மீட்(Jio Meet), ஜியோ ஹெல்த்(Jio Health), ஜியோ 5ஜி சேவை மற்றும் ஜியோ மார்ட்(Jio Mart) ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டது.

ஜியோ குவிக்கும் வெளிநாட்டு முதலீடு

திருபாய் அம்பானியால் தொடங்கப்பட்ட ரிலையன்ஸ் நிறுவனம் காலச்சூழலுக்கு ஏற்ப பணம் குவியும் துறைகளில் தங்கள் முதலீடுகளை செய்து வருகிறது. ஜவுளி வர்த்தகத்தில் தொடங்கி, பின்பு பெட்ரோலிய சுத்திகரிப்புகளில் தங்கள் முதலீடுகளை குவித்ததைத் தொடர்ந்து தொலைத்தொடர்பு சேவையில் ஜியோவின் ஆதிக்கத்தை அடுத்து ஆன்லைன் சில்லரை மளிகை வர்த்தகத்தில் காலடி எடுத்து வைத்துள்ளது. மேலும் தங்கள் எதிர்கால தேவைகளைக் கருத்தில் கொண்டு 2016-ம் ஆண்டு முதல் 16 டிஜிட்டல் கார்ப்பரேட்டுகள், புதிதாக தொடங்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு(Artificial Intelligence) மற்றும் Virtual Reality நிறுவனங்களில் முதலீடு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஜியோ கண்ணாடி (Jio Glass)

ஜியோ புதியதாக அறிமுகப்படுத்தியதில் குறிப்பிடத்தக்க முக்கிய சாதனம் ஜியோ கிளாஸ் (Jio Glass). 75 கிராம் எடை கொண்ட இச்சாதனம் டெஸ்சராக்ட் (Tesseract) என்ற நிறுவனம் உருவாக்கியது. அந்த நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை வாங்கி அந்த நிறுவனத்தை சொந்தமாக்கிக் கொண்டுள்ளது ரிலையன்ஸ் நிறுவனம். பார்ப்பதற்கு கண்களில் அணியும் சாதாரண கண்ணாடி போலவே காட்சி தரும் இச்சாதனம் கைபேசியுடன் இணைக்கப்பட்டு இணையதளம் மூலமாக செயல்படும். இச்சாதனத்தின் மூலம் முப்பரிமாண வடிவத்தில் காணொளி காட்சியாக இணையதளம் மூலம் தொடர்பு கொண்டு உரையாட முடியும். இந்நிறுவனம் ஏற்கனவே கடந்த ஆண்டு ஜியோ ஹாலோபோர்டு(Holoboard) எனும் சாதனத்தை அறிமுகப்படுத்தியது.

ஜியோ கண்ணாடியின் முக்கிய அம்சமாக சொல்லப்படும் Virtual Meet

ஸ்மார்ட் கண்ணாடிகளின் வரலாறு

ஜியோ கிளாஸ் சாதனம் ஸ்மார்ட் கண்ணாடிகளின் வரலாற்றில் புதிய கண்டுபிடிப்பில்லை. 2014-ம் ஆண்டு  “கூகுள் கிளாஸ்” எனும் ஸ்மார்ட் கண்ணாடியை  கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. கேமராவை உள்ளடக்கிய அந்த சாதனத்தை சாதாரண கண் கண்ணாடி போல் அணிந்து கொண்டு, யாருக்கும் தெரியாமல், சுற்றி இருக்கும் நபர்களின் ஒப்புதல் இல்லாமல் அவர்களை கேமரா மூலம் படம் எடுக்க முடியும். இது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது. முகங்களை அடையாளம் காணும்
(Face Recognition) தொழில்நுட்பத்துடன் களம் இறங்க தயாரான கூகுள் கிளாஸ் நீண்ட சச்சரவுகளுக்கு பின் அத்தொழில் நுட்பத்தை நீக்கியது குறிப்பிடத்தக்கது. எதிரில் இருப்பவரின் முகத்தினை அடையாளம் கண்டு அவரின் விவரங்களைக் காட்டக் கூடிய அளவுக்கு மிகவும் ஆபத்தான அம்சத்தினை இந்த Face recognition Glass கொண்டிருக்கிறது. 

தொடர் சர்ச்சைகளை சந்தித்த “கூகுள் கிளாஸ்” மக்களிடத்தில் போதிய வரவேற்பை பெறவில்லை.

அதனைத் தொடர்ந்து களமிறக்கப்பட்ட நார்த் போக்கல்ஸ் (North Focals) நிறுவனத்தின் ஸ்மார்ட் கிளாசில் கேமரா அம்சம் இல்லாததால் தனி உரிமை தொடர்பான விமர்சனங்கள் இல்லாமல் போனாலும் தோல்வியையே சந்தித்தது. காரணம் அதன் Privacy Policy விவரங்கள் தெளிவாக இல்லாததே.

மேலும் இன்டல் வாண்ட் (intel vaunt) மற்றும் ஸ்நாப் ஸ்பெக்டேக்கில்ஸ் (Snap Spectacles) போன்ற நிறுவனங்கள் அடுத்தடுத்து ஸ்மார்ட் கிளாஸ்-களை சந்தைப்படுத்த முயன்றும் போதிய வரவேற்பைப் பெறவில்லை.

மக்களை அரசின் கண்காணிப்பிற்கு உட்படுத்தும் ஸ்மார்ட் கிளாஸ்

உசிக்ஸ் (Vuzix) நிறுவனம் தன் ஸ்மார்ட் கிளாஸ் தொழில்நுட்பத்தை ஐக்கிய அரபு அமீரக அரசுடன் (UAE) கைகோர்த்து அந்நாட்டுக் காவலர்களுக்கு தயாரித்து அளித்தது. முகங்களை அடையாளம் காண உதவும் ஸ்மார்ட் கிளாஸ்களை அந்நிறுவனம் உற்பத்தி செய்து அரசுக்கு அளிக்கிறது. எந்தவொரு அரசும் தன் நாட்டின் குடிமக்களை அவர்களின் அனுமதியின்றி கண்காணிப்பதற்கு இந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்திக் கொள்ளும்.

இந்தியாவைப் பொறுத்தவரை, ஏற்கனவே கொரோனா சூழலை பயன்படுத்திக் கொண்டு அரசியல் சாசன விதிமுறைகளுக்கு மாறாக ஒவ்வொரு தனிநபரையும் கண்காணிப்புக்கு உட்படுத்துவது, தொலைபேசி அழைப்புகளின் பட்டியலை எடுப்பது என பல விதிமீறல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அரசின் கொள்கைகளுக்கு எதிராக குடிமக்கள் குரல் கொடுப்பதை தடுப்பதற்கே இந்த தொழில்நுட்பங்கள் அளிக்கும் கண்காணிப்பு நடவடிக்கைகள் உதவும். 

இந்தியாவின் தரவுகள் பாதுகாப்பு மசோதா 2019 (Data Protection Bill 2019) நாட்டில் குடிமக்களின் தரவுகளை பாதுகாக்க உறுதி அளிப்பதாக சொல்லப்பட்டாலும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் அரசின் நலன் என்ற பெயரில், அரசு அல்லது அரசு சார்ந்த எந்த நிறுவனமும் தனி நபர்களின் தரவுகளை பயன்படுத்தி கொள்ள அனுமதியினை அளிக்கிறது. அதற்கு ஒரு குறிப்பிட்ட அதிகாரம் படைத்த அதிகாரியின் எழுத்து மூல உத்தரவு இருந்தாலே போதும். இது தனிநபர் பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தின் எதிர்காலத்தினை கேள்விக்குறியாக்குவதாக இருக்கிறது.

கார்ப்பரேட் நிறுவனத்தின் கையில் குவியும் நம் தனிநபர் தரவுகள்

இப்போது கார்ப்பரேட் நிறுவனங்களின் கையிலும் தரவுகள் குவியத் தொடங்கியுள்ளன. இவ்வளவு காலமாக GPS மற்றும் ஆன்லைன் சேவைகளின் மூலமாக நாம் எங்கு இருக்கிறோம், எதை விரும்புகிறோம் என்பதையெல்லாம் தெரிந்து கொண்டிருந்த கார்ப்பரேட் கம்பெனிகள், இனி நாம் எதைப் பார்க்கிறோம் என்பதையும் இந்த ஸ்மார்ட் கண்ணாடி தொழில்நுட்பத்தின் மூலமாக பார்க்கப் போகிறார்கள்.

பெண்களுக்கு பாலியல் ரீதியான  ஒடுக்குமுறைகளும், சிறுபான்மையினர் ஒடுக்குமுறைகளும் எளிமையாக நடந்து வரும் இக்காலகட்டத்தில் ரிலையன்ஸ் போன்ற தனியார் நிறுவனங்களின் கைகளில் அளவின்றி தனிநபர் தரவுகள் குவிவது மிக மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. இது தனிநபர் பாதுகாப்போடு சேர்த்து நாட்டின் பாதுகாப்பையும் உள்ளடக்கியது. 

கண்காணிப்பு சாதனங்களின் வளர்ச்சியை எப்படி பார்ப்பது?

ஒருவரின் ஒப்புதல் இல்லாமலே அவர் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படுவது ஒரு இறையாண்மை கொண்ட ஒரு நாட்டின் குடிமகனின் தனியுரிமையை கேள்விக்குள்ளாக்குகிறது. இதுபோன்ற தனிநபர் பாதுகாப்பினை கேள்விக்குள்ளாக்குகிற, வரைமுறையற்ற கண்காணிப்பிற்குள் மக்களைக் கொண்டு வருகிற தொழில்நுட்பங்களை நாம் மிக கவனத்துடன் பார்க்க வேண்டியிருக்கிறது. 

அவற்றை வெறுமனே பொழுதுபோக்கு சாதனங்கள் என்றோ, நமது வேலைகளை எளிமையாக்குகிற சாதனங்கள் என்றோ, தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டம் என்றோ பார்த்துவிட முடியாது. தனிநபரின் வாழ்க்கைக்குள்ளும், சுதந்திரத்திற்குள்ளும், பாதுகாப்பிற்குள்ளும் தலையிடாமல் இருக்கும் வரையில் மட்டுமே ஒரு தொழில்நுட்பம் ஆரோக்கியமானதாக இருக்க முடியும். 

ஸ்மார்ட் கிளாஸ் எனும் இந்த கண்காணிப்பு தொழில்நுட்பமானது அரசுகளுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் மக்களை ஒடுக்குவதற்கான புதிய வாயில்களை திறந்து விடத் தயாராக இருக்கிறது என்பதே நிதர்சனமாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *