நரேந்திர அக்யூட் தபோல்கர் 1945-வது ஆண்டு நவம்பர் மாதம் முதல் நாள் அச்யூட் – தாராபாய் தம்பதியருக்கு மகனாக பிறந்தார். இவரின் மூத்த அண்ணன் கல்வியாளரும், காந்தியவாதியுமான தேவதத்த தபோல்கர் ஆவார். மிராஜ் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்ற மருத்துவர்.
1980-களில் இவர் சமூக நீதி தொடர்பாக இயக்கங்களில் பங்கெடுத்தார். பாபா ஆதவாவின் குடி தண்ணீர் தேவைக்கு ஒரு கிராமத்திற்கு ஒரே கிணறு (One Village – One Well Agitation) எனும் போராட்டத்தில் பங்கேற்றார். படிப்படியாக விரிவடைந்து மூட நம்பிக்கைகள் எதிர்க்கும் பணிகளில் செயல்படத் தொடங்கினார். மூடநம்பிக்கை எதிர்ப்புக்கு மராட்டிய அந்தா ஷ்ரத்தா நிர்மூலன் சமிதி என்ற இயக்கத்தை 1989-ல் உருவாக்கி இயங்கினார்.
அடிப்படையில் ஒரு மருத்துவர் என்பதால் சமூகத்தை அறிவியல் மனப்பான்மையுடன் உருவாக்கி அவரது நிர்மூலன் சமிதி பிரச்சார இயக்கமாக துவங்கியது. மராட்டிய இந்துத்துவ அடிப்படையிலான சிவசேனா, பிஜேபி போன்ற கட்சிகள் தீவிரமாக வளர்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில் இந்து மத மூடநம்பிக்கைகளுக்கு எதிராக தபோல்கர் தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்தார்.
மக்கள் மன்றத்தில் சாமியார்களையும், அவர்களின் மோசடிகளையும் தொடர்ந்து அம்பலப்படுத்தி இயங்கினார். அதேபோல கிறிஸ்தவ அடிப்படைவாதிகளால் அச்சுறுத்தலுக்குள்ளாகி வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ள இந்திய பகுத்தறிவாளர் சங்கத்தின் தலைவர் சணல் இடமருகுவின் நெருங்கிய நண்பர் தபோலக்கர்.
மகாராஷ்டிராவின் பல பகுதிகளில் இயங்கிவ்ந்த ஆதிக்க சாதி கட்டபஞ்சாயத்துக்களையும், ஆணவக் கொலைகளையும் எதிர்த்து தொடர்ந்து போராடினார். பரிவர்த்தன் எனும் பெயரில் போதை அடிமைகளை மீட்டெடுக்கும் மையம் ஒன்றை தனது சொந்த ஊரான சதாராவில் நடத்தி வந்தார். மராத்வாடா பல்கலைக்கழகத்திற்கு பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் பெயரினை சூட்டுவதற்கான போராட்டத்திலும் தன்னை இணைத்துக் கொண்டார்.
மூட நம்பிக்கை ஒழிப்பு பற்றிய பல புத்தகங்களை எழுதியுள்ளார். ஏறக்குறைய 3000-க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களில் மூடநம்பிக்கை ஒழிப்பு பற்றி உரையாற்றி பிரச்சாரம் மேற்கொண்டார்.
சமூகநீதி, சாதி-மத துவேசத்திற்கு எதிராக கருத்துப் பரப்புரையும், களப் போராட்டமும் செய்துவந்த தபோல்கர் 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் 20-ம் தேதி, காலை நடைப் பயிற்சிக்காக வெளியே சென்று இருந்தார். அப்பொழுது அடையாளப்படுத்தப்படாத இருவரால் ஓம்காரேஸவர் கோயில் அருகே சுட்டுக் கொல்லப்பட்டார். ’இந்து ஜனாஜகிருட்டி சமிதி’ எனும் அமைப்பைச் சேர்ந்த விரேந்திர டவாதே என்பவரை 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 10ம் தேதி கைது செய்தது. 2017-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி கர்நாடகாவைச் சேர்ந்த கவுரி லங்கேஷும், தபோல்கரும் ஒரே துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதாக 2018-ம் ஆண்டு புனே சிறப்பு நீதிமன்றத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது.