கொரோனா ஊரடங்கு காலத்தில் பொருளாதாரத்தில் ஏற்பட்ட சரிவுகள், வேலை இழப்புகள் போன்ற பல்வேறு விவரங்களை இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE) வெளியிட்டு வருகிறது. தற்போது குறிப்பாக வேலை இழந்தவர்களில் சம்பள ஊழியர்கள், தினக்கூலிகள், தெருக்களில் விற்கும் வணிகர்கள், தொழில்முனைவோர் போன்றோர் எத்தனை பேர் என்ற அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
சம்பள ஊழியர்கள்
ஜூலை மாதத்தில் மட்டும் 50 லட்சம் சம்பள ஊழியர்கள் வேலை இழந்திருப்பதாக CMIE அறிக்கை தெரிவித்துள்ளது.
ஏப்ரல் மாதத்தின் போது 1.77 கோடி சம்பள ஊழியர்கள் இந்தியாவில் முழு ஊரடங்கின் காரணமாக வேலை இழந்திருந்தனர். மொத்தமாக இந்த 4 மாத கால ஊரடங்கு நேரத்தில் 1.89 கோடி சம்பள ஊழியர்களின் வேலை பறிபோயிருப்பதாக CMIE தெரிவித்துள்ளது.
யார் சம்பள ஊழியர்?
சம்பள ஊழியர் என்பதனை ’செய்கிற வேலை நேரத்திற்கு ஏற்ப சம்பளம் (hourly salary)’ என்று இல்லாமல், ஒரு நிர்ணயிக்கப்பட்ட மாதாந்திர அல்லது ஆண்டு சம்பளத்தினைப் பெறுபவர் என்று வரையறுக்கலாம்.
அவருக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறைகள், வருங்கால வைப்பு நிதி(PF) போன்றவை உண்டு. எனவே சம்பள ஊழியர்களின் வேலை இழப்பு என்பதனை சாதாரண விடயமாக பார்க்க முடியாது. ஏனென்றால் அந்த வேலை பறிபோனால் மீண்டும் கிடைப்பது கடினமான விடயமாகும்.
இந்தியாவின் மொத்த வேலை வாய்ப்பில் 21% சதவீதம் சம்பள ஊழியர்கள் இருக்கிறார்கள். ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட மொத்த வேலை இழப்பில் 15% பேர் சம்பள ஊழியர்கள் ஆவர்.
மொத்த வேலை இழப்பு எவ்வளவு?
ஏப்ரல் மாதத்தின் போது, சம்பள ஊழியர்கள் மட்டுமல்லாமல், தினசரிக் கூலிகள், முறைசாரா தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் என அனைவரையும் சேர்த்தால் மொத்தமாக வேலைவாய்ப்பை இழந்தவர்கள் 12.15 கோடி பேர்.
இந்த 12.15 கோடியில் 9.12 கோடி பேர் தினக்கூலிகள் மற்றும் தெருக்களில் கூவி விற்கும் இதர வேலைகள் செய்வோர் ஆவர். நாட்டின் மொத்த வேலை வாய்ப்பில் கூவி விற்பவர்களும், தினக் கூலிகளும் 32% பேர் ஆவர். ஆனால் மொத்த வேலை இழப்பு விகிதத்தில் இவர்களின் எண்ணிக்கை 75% சதவீதமாக இருக்கிறது.
ஏப்ரல் மாதத்தில் 12.15 கோடியாக இருந்த மொத்த வேலை இழப்பின் எண்ணிக்கை, மே மாதத்தில் 10.03 கோடியாக குறைந்தது.
ஜூன் மாதத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதால், வேலை இழப்பின் எண்ணிக்கை குறைந்து 2.99 கோடியாக இருந்தது.
ஜூலை மாதத்தில் மேலும் ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் தற்போது வேலை இழப்பின் எண்ணிக்கை 1.1 கோடியாக இருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
மாதம் | வேலையற்றோர் எண்ணிக்கை |
ஏப்ரல் | 12.15 கோடி |
மே | 10.03 கோடி |
ஜூன் | 2.99 கோடி |
ஜூலை | 1.1 கோடி |
முறைசார தொழில்களில் வேலை இழப்பு ஓரளவுக்கு குறைந்து தொழிலாளர்களின் நிலையில் சிறிது முன்னேற்றம் இருந்தாலும், சம்பள ஊழியர்கள், தெருக்களில் கூவி விற்பவர்கள், தினசரி கூலிகள் போன்றோர் இன்னும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொழில் முனைவோர்
மேலும் மேற்குறிப்பிட்ட வேலைப் பிரிவினர் தவிர்த்து, இந்த 4 மாத காலத்தில் 7.8 கோடி தொழில் முனைவோர் ஊரடங்கு காலத்தில் தங்களை வேலையற்றவர்களாக அறிவித்துள்ளனர்.
தொழில் முனைவோர் என்பது சொந்தமாக நிறுவனங்கள் நடத்துவோர், உதாரணத்திற்கு வணிகம் செய்வோர், மருத்துவ கிளினிக் நடத்துபவர்கள், வழக்கறிஞர்கள், கணக்கர்கள், ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் என சொந்தமாக தொழில் நடத்தும் பிரிவைச் சேர்ந்த அனைவரையும் உள்ளடக்கிய பிரிவாகும்.
நாட்டின் மொத்த வேலைவாய்ப்பில் இப்பிரிவு 19% சதவீதத்தினை நிறைவு செய்கிறது.
விவசாய வேலைவாய்ப்பு
ஊரடங்கு காலத்தில் விவசாய வேலைவாய்ப்பில் மட்டும் வேலை இழப்பு ஏற்படாமல், வேலைவாய்ப்பு விகிதம் அதிகரித்திருப்பதாக CMIE அறிக்கை தெரிவித்துள்ளது.
விவசாயம் 11.7 கோடி பேருக்கு ஏப்ரல் மாதத்தின் போது வேலைவாய்ப்பினை அளித்ததாகவும், அது ஜூன் மாதத்தில் 13 கோடியாக உயர்ந்ததாக அறிக்கை தெரிவித்துள்ளது.