மரபணு மாற்றமடைந்த வைரஸ்

புதிய மரபணு மாற்றமடைந்த கொரோனா வைரஸ் – தாக்குதலும், பாதுகாப்பும்

கடந்த வாரம் முதல் மேற்குலக நாடுகள் பரவிக் கொண்டிருக்கும் புதிய கொரோனா வைரஸ் பரவலை எண்ணி நிலைகுலைந்து போயிருக்கின்றன. வரவிருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை நினைத்து மகிழ்ந்து கொண்டிருந்த நேரத்தில் இந்த புதிய வகை வைரஸ் பரவல் அனைவரிடமும் சொல்லொண்ணா அச்சத்தை விதைத்து கொண்டிருக்கிறது. இங்கு அதைப் பற்றிய சிறிய விளக்கத்தை பார்ப்போம்.

கொரோனா வைரஸ் – மரபணு மாற்றம் சிறு விளக்கம்

நீங்கள் பார்த்திருக்கும் உருவப்படத்தில் கொரோனா நுண்கிருமியின் பந்து போன்ற உடலெங்கும்  கூர்முனைகள் நீண்டிருக்கும். இந்த கூர்முனைகள் புரதங்களால் (Spike Protein) ஆனவை. கொரோனா நுண்கிருமி உடலில் சென்றவுடன் மனித செல்களை பற்றிக்கொள்வதற்கு இந்த கூர்முனைகள் உதவுகின்றன. மனித செல்லில் காணப்படும் ACE2 என்ற புரத ஏற்பியில் (ACE2- Human Cell Receptor) இந்த கூர்முனைகள் பற்றிக்கொண்டு செல்லினுள் விரிசலை உண்டாகி கிருமி செல்லினுள் செல்ல வழியமைத்து கொடுக்கின்றன.

இந்த புரத கூர்முனைகளில்தான் தற்போது மரபணு மாற்றமடைந்திருக்கிறது. இந்த மாற்றமடைந்த புரத கூர்முனைகள் மூலம் மிக எளிதாக மனித செல்லை வைரஸ்சால் பற்றிக்கொள்ள முடியும். இந்த மாற்றத்தை N501Y என்று குறிப்பிடுகிறார்கள்.

தற்போது மாற்றமடைந்த மரபணுவை கொண்டதாக இருக்கக்கூடிய கொரோனா வைரஸை  B.1.1.7 வகை கொரோனா வைரஸ் என்று அடையாளப்படுத்தி பெயரிட்டிருக்கிறார்கள்.

மரபணு மாற்றமடைந்த கொரோனா வைரஸ்

எந்தெந்த நாடுகளில் இந்த வைரஸ் கண்டறியபட்டிருக்கிறது?

இங்கிலாந்தில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் தற்போதுவரை கொரோனா வைரஸ் மிகவேகமாக பரவி வரும் மூன்றில் இரண்டு பங்கு பகுதிகளில் இந்த புதியவகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கண்டறியப்பட்ட நோயாளிகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இந்த B.1.1.7 வகை வைரசால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதேவேளையில் இந்த எண்ணிக்கை ஒரு முழுமையான ஆய்வக அடிப்படையிலானதல்ல என சொல்கிறார் இங்கிலாந்தின் சுகாதார துறை அமைச்சர் ஹான்காக்.

தென்னாபிரிக்காவில் கடந்த மாதம் (நவம்பர் 2020) மத்தியில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகள் இந்த வகை வைரஸினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இங்கிலாந்தில் புதிய மாற்றமடைந்த வகை வைரஸ் பரவியுள்ள இடங்கள்

இதற்கு முன்பு இப்படி மரபணு மாற்றமடைந்திருக்கிறதா கொரோனா வைரஸ்?

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் SARS-CoV-2 வகையை சார்ந்ததாகும். இந்த வைரஸ் மனிதர்களிடம் பரவ தொடங்கியதிலிருந்து இதுவரை கிட்டத்தட்ட 4000 முறைகளுக்கு மேல் மரபணு மாற்றமடைந்திருக்கலாம் என ஆதாரப்பூர்வமாக அறியப்படுகிறது. இந்த மாற்றங்களில் பெரும்பாலானவை வைரஸ் பண்புகளில் பெரியளவிலான மாற்றங்களை வெளிப்படையாக வெளிப்படுத்தவில்லை. எனவே அந்த  மாற்றங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. ஆனால் தற்போது மாற்றமடைந்த மரபணுவைக் கொண்டதாக இருக்கக்கூடிய  B.1.1.7 வகை கொரோனா வைரஸ் வெளிப்படையாக புதிய அறிகுறிகளைக் கொண்டிருப்பதால் இந்த வகை வைரஸ் முக்கியத்துவம் பெறுகிறது.

இதற்கு முன்பு 2020 பிப்ரவரியில் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் மரபணு மாற்றமடைந்த கொரோனா  வைரஸ் பரவியது அதற்கு D614G என்றும், ஸ்பெயின் நாட்டில் ஏப்ரல், மே மாதங்களில் பரவிய மரபணு மாற்றமடைந்த கொரோனா வைரஸ் A222V என்றும் அடையாளமிடப்பட்டிருக்கிறது. டென்மார்க் நாட்டில் மனிதர்களிடமிருந்து மிங்க் எனப்படும் விலங்குகளுக்கு மரபணு மாற்றமடைந்து பரவியிருக்கிறது. இதனால் ஆயிரக்கணக்கான மிங்க் விலங்குகள் கொல்லப்பட்டன.

B.1.1.7 வகை கொரோனா வைரஸ் ஏன் ஆபத்தானது?

ஆரம்பகட்ட ஆய்வுகளில் ஆபத்தானதாக தோன்றுகிறது. இங்கிலாந்தின் தெற்கு பகுதியில் மிக வேகமாக இந்த வகை கொரோனா வைரஸ் பரவுகிறது. அங்கு ஏற்கனவே பல மாதங்களாக பரவியிருந்த கொரோனா வைரசின் (முன்னோடி வகைகள்) பகுதிகளை இது எளிதாக பற்றிக்கொண்டிருக்கிறது. ஒரு வைரஸ் குடும்பத்தில் இப்படிப்பட்ட மாறுதல்கள் இயல்பானது. அதனாலேயே அவை மிகவேகமாக பரவுகின்றது என்ற கருத்துக்களும் தவறானதாகவே இருக்கலாம்.

ஏனெனில் இவை முதன்முதலில் மரபணு மாற்றமடைந்த பகுதியானது மக்கள்தொகை நெருக்கமான பகுதியாக இருந்தால், இவை மிக எளிதில் மற்றவர்களுக்கு பரவக்கூடும். அதேநேரத்தில் தன்னைப் போன்றே பல நகல்களையும் உருவாக்கக் கூடும்.

தொற்றுநோயியல் துறை சான்றுகளின் படி இங்கிலாந்தில் இதுவரை கண்டறியப்பட்ட பல்வேறு வகைகளில் எளிதாக மக்களுக்கு தொற்றுவது இந்த B.1.1.7 வகை கொரோனா வைரஸ் ஆகும். மிகவேகமாக பரவிக்கொண்டிருக்கும் இடங்களில் காணப்படும் பொதுவான வகையாக இந்த வகை வைரஸ் இருப்பது இன்னும் மேலான கவனத்தை ஈர்த்திருக்கிறது. லண்டனில் அமைந்திருக்கும் இம்பீரியல் கல்லூரியின் நோயியல் துறை வல்லுனரான நீல் பெர்குசான் (Neil Ferguson), B.1.1.7 வகை வைரஸ் பரவும் விகிதமானது மற்ற வகை கொரோனா வைரஸ்களை விட 50% சதவிகிதத்திலிருந்து 70% சதவிகிதம் அதிகமாகவே இருப்பதாக கூறியிருக்கிறார். இது மக்களிடையே அச்சத்தை மேலும் கூட்டியிருக்கிறது.

குழந்தைகள், பதின்ம வயதுடைய சிறுவர் ,சிறுமிகளையும் இந்த வகை வைரஸ் அதிகமாக தாக்கக்கூடிய சாத்தியங்கள் இருப்பதாக நுண்ணுயிரி துறை ஆய்வாளர்கள் மேலும் அச்சத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இதுவரை பரவிய கொரோனா வைரஸ் சிறுவர், சிறுமியர்களை அதிகம் பாதிக்காதது குறிப்பிடத்தக்கது. இதை பற்றிய முழுமையான கட்டுரை ஏற்கனவே நமது தளத்தில் வெளிவந்திருக்கிறது .

படிக்க: கொரோனா நுண்கிருமியின் சேமிப்புகலனாக மாறுகிறதா நம் குழந்தைகளின் உடல்? பள்ளிகள் திறப்பில் அவசரம் வேண்டாம்

இது மேலும் தீவிர நோயாக பரவக்கூடுமா?

அதற்கான வலுவான ஆதாரங்கள் இப்போது வரை இல்லை. ஆனால் ஏன் இந்த வகை பரவலை மிகவும் கவனத்துடன் அணுகவேண்டும் என்பதற்கான காரணங்கள் வலுவானவை. ஏற்கனவே தென்னாப்பிரிக்காவில் பரவிய கொரோனா வைரஸில் அதன் புரத கூர்முனைகளில் ஏற்பட்ட ஒரு சிறிய மரபணு மாற்றம் இந்த B.1.1.7.வகையிலும்  கண்டறியப்பட்டிருக்கிறது. தென்னாப்பிரிக்காவில் அதன் கடற்கரையோர பகுதிகளில் மிக விரைவாகவும், வேகமாகவும் பரவியது. அங்கு மற்ற வைரஸ் தாக்குதலில் ஏற்படும் வைரஸ் கிருமியின் செறிவை விட மிக அதிகமான வைரஸ் கிருமிகளின் செறிவை நோயாளிகளின் மேல் சுவாசப் பாதையில் கண்டறிந்தனர். இது மற்ற எந்தவகை நோய் கிருமிகளின் செறிவைவிட அதிகமாக இருப்பதே இதைப் பற்றிய அச்சத்திற்குக் காரணம். இந்த வகையிலான பாதிப்பென்பது மிகப்பெரிய சேதத்தை உண்டாக்கக்கூடும்.

எங்கிருந்து இந்த வகை வைரஸ் பரவியிருக்கக்கூடும்?

பொதுவாக கொரோனா வைரஸ் பாதிக்கப்படுவோர், வைரஸ் கிருமி உடலில் நுழைந்த சில நாட்களுக்கு பின் அதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்துவர். நோயெதிர்ப்பு ஆற்றல் வலுவாக இருந்தால் அது கவசமாக செயல்படும். அதனால் கொரோனா வைரசின் தீவிரம் மட்டுப்படும். பலவீனமான நோயெதிர்ப்பு ஆற்றல் கொண்டவர்கள் மிக தீவிரமான விளைவுகளை எதிர்கொண்டு மருத்துவமனை சென்று சிகிச்சைக்குப் பின் மீள்வர். இதில் முதலாக சொல்லப்பட்டிற்குக்கும் வகையினரில் உடம்பினுள் நுழைந்த கொரோனா கிருமி அதன் தீவிரத்தை மட்டுபடுத்தியிருந்தாலும் அவர்கள் உடலினுள் சில காலங்கள் உயிர்ப்புடனே இருக்கக்கூடும். அந்த வேளையில் இதைப்போன்ற மரபணு மாற்றங்கள் அடைந்திருக்ககூடும்.

சில ஆராய்ச்சியாளர்கள் இந்த மரபணு மாற்றம் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும்போது நிகழ்ந்திருக்கலாம் என்றும் குறிப்பிடுகின்றனர். இதற்கு அடிப்படையாக தற்போது விலங்குகளிலும் கொரோனா தாக்கம் நீண்டகாலமாக நிகழ்ந்திருப்பதை உறுதிசெய்து ஆய்வு முடிவுகள் வெளிவந்ததை குறிப்பிடுகின்றனர்.

தற்போது கண்டறியப்பட்டு செயல்பாட்டிற்கு வந்திருக்கும் தடுப்பூசிகள் பயனற்றதாக மாறுமா ?

இல்லை. இந்த புதிய வகை வைரஸ் தடுப்பூசிகளில் எந்தவொரு மிகப்பெரிய விளைவுகளையும் ஏற்படுத்த வாய்ப்பு இல்லை. அதே சமயம் சில தாக்கங்களை நோயின் வீரியம் பொறுத்து ஏற்படுத்தும் சாத்தியக்கூறுகளும் உள்ளன. இப்போது வரை அவற்றுக்கான வாய்ப்பு குறுகிய அளவில் உள்ளது.

உதாரணமாக அமெரிக்க மருந்து கட்டுப்பாடு நிறுவனம் இதுவரை இரண்டு தடுப்பு மருந்துகளை அங்கீகரித்திருக்கிறது. ஒன்று மாடர்னா நிறுவனத்தினுடையது. இன்னொன்று பைசர் நிறுவனத்தினுடையது. இரண்டு தடுப்பு மருந்துகளுமே கொரோனா வைரசுக்கு எதிரான நோயெதிர்ப்பு ஆற்றலை உடலினுள் தூண்டும் விதமாகவே செயல்படுகிறது. அதாவது கொரோனா வைரஸ் உடலினுள் நுழைந்தவுடன் தன்னுடைய புரத கூர்முனைகளால் மனித செல்களை பற்றிக்கொள்கிறது. புரத கூர்முனைகள் செலினுள் விரிசலை ஏற்படுத்தி அதன்வழியாக வைரஸ் நுண்கிருமி செலினுள் நுழைகிறது. 

இந்த இரண்டு தடுப்பு மருந்துகளுமே புரத கூர்முனைகள் செல்லின் மேற்பரப்பில் பற்றிக்கொள்ளாதவாறு நோயெதிர்ப்பு காரணிகளை உற்பத்தி செய்து அந்த வைரஸ் புரதகூர்முனைகள் மற்றும் மனிதசெல் இணைப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறது. எனவே வைரஸ் மனித செல்வழியே உள்நுழைய முடியாது.

(இதை பற்றிய கட்டுரை ஏற்கனவே நமது இணையதளத்தில் வெளிவந்துள்ளது .மேலும் விவரங்களுக்கு )

படிக்க: கொரோனா வைரசுக்கு எதிரான போரில் முன்னேறிக் கொண்டிருக்கிறது அறிவியல்! புதிய ஆய்வுகளின் முடிவுகள்

தற்போது ஏற்பட்டுள்ள மரபணு மாற்றம் அதன் புரத கூர்முனைகளில் எந்தவொரு பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்த வாய்ப்பில்லை. ஏனெனில்  B.1.1.7 வகை வைரஸின் மரபணு மாற்றமானது, அதன் புரத கூர்முனைகளில் இருக்கக்கூடிய எட்டு விதமான புரதங்களிலும் ஏற்பட்ட மாற்றங்களை உள்ளடக்கியதே. ஆனால் நமது உடலில் நோயெதிர்ப்பு ஆற்றலானது இந்த ஒவ்வொரு புரதங்களுக்கு எதிராகவும் பல்வேறு விதமான, ஏராளமான நோயெதிர்ப்பு காரணிகளை (Antibodies) தாக்குதலுக்காக உருவாக்கக்கூடிய ஆற்றல் பெற்றது. உடலின் நோயெதிர்ப்பு ஆற்றல் குறைந்தால் மட்டுமே வைரஸ் நுண்கிருமியால் இந்த தாக்குதலில் இருந்து தப்பிச்செல்ல முடியும். எனவே தடுப்பு மருந்து நோயெதிர்ப்பு காரணிகளை உருவாக்குவதால்  முக்கியத்துவம் வாய்ந்தது. இப்போது வரை தடுப்பு மருந்துகள் வைரசுக்கு எதிராக குறிப்பிடத்தக்க அளவில் செயலாற்றிக்கொண்டிருப்பத்தை ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

அறிவிக்கப்பட்ட புதிய வைரசின் மாறுபாடு ஒரு தடுப்பூசியின் செயல்திறனை பாதிக்க வாய்ப்பில்லை என்று கூறியிருக்கிறார். மேலும் ஒரு கட்டத்தில் – சில நேரத்தில், எங்கேயோ சில இடங்களில் – வைரஸின் மாறுபாடு தற்போதைய தடுப்பூசியை பயனற்றதாக மாற்றக்கூடும் என்றும், ஆனால் இந்த தடுப்பூசியுடன் அது நிகழும் வாய்ப்பு மிகக் குறைவு. “நாங்கள் முற்றிலும் விழிப்புடன் இருக்க வேண்டும்” என்று அவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்க்ரிப்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் நுண்ணுயிரியல் ஆய்வாளர் கிறிஸ்டியன் ஆண்டர்சன் (Kristian Andersen, a virologist at Scripps Research Institute), இந்த மாறுபாடு நோய் தொற்று ஏற்பட்டவரின் நோயெதிர்ப்பு ஆற்றலை குறைக்குமெனில் தடுப்பூசிகள் பயனற்றதாக மாறாது, ஆனால் அவை குறைவான செயல்திறன் மிக்கதாக மாறக்கூடிய வாய்ப்புண்டு. மேலும், அதற்கான சாத்தியத்தை சோதிக்கவும்  சோதனைகள் நடந்து வருகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

“வைரஸ் அதன் தாக்குதல் முறையை மாற்றும்போது, நாம் நமது பாதுகாப்பு முறையை மாற்ற வேண்டும் ,எங்களுக்குத் தெரியாது, ஆனால் விரைவில் எங்களுக்குத் தெரியும்” என்று டாக்டர் ஆண்டர்சன் கூறியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *