கொரோனா நோயின் பேரச்சம் உலகெங்கும் வியாபித்திருக்கிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் நினைவெங்கும் பந்து போன்ற அதன் உடலும் அதன்மேல் நீண்டுகொண்டிருக்கும் கூர்முனைகளும் பதிந்து போயிருக்கின்றன. தற்சமயம் வரை உலகெங்கும் 175-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிகள் கொரோனா நுண்கிருமிக்கு எதிரான சிகிச்சைக்கான மருந்தை கண்டறிய நடந்து கொண்டிருக்கின்றன. சில ஆராய்ச்சிகள் புதிய புதிய சாத்தியங்களையும் வாய்ப்புகளையும் கண்டறிந்துள்ளன.
மிக சமீபத்தில் ஆய்வுகளில் ஏற்பட்டிருக்கிற குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் நாம் தடுப்பூசிக்கான வாய்ப்புகளுக்கு மிக அருகாமையில் இருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்தியிருக்கின்றன. அதன்படி சமீபத்திய முன்னேற்றத்தை பார்க்கலாம்.
கொரோனா வைரஸ் நம் செல்களுக்குள் பரவுவதை தடுப்பது எப்படி?
கொரோனா நுண்கிருமியின் பந்து போன்ற உடலெங்கும் நாலாப்புறமும் கூர்முனைகள் நீண்டிருக்கின்றன. இந்த கூர்முனைகள் புரதங்களால் (Spike Protein) ஆனவை. கொரோனா நுண்கிருமி உடலில் சென்றவுடன் மனித செல்களை பற்றிக்கொள்வதற்கு இந்த கூர்முனைகள் உதவுகின்றன. மனித செல்லில் காணப்படும் ACE2 என்ற புரத ஏற்பியில் (ACE2- Human Cell Receptor) இந்த கூர்முனைகள் பற்றிக்கொண்டு செல்லினுள் விரிசலை உண்டாக்கி, கிருமி செல்லினுள் செல்ல வழியமைத்து கொடுக்கின்றன.

மனித உடலில் உள்நுழைந்த நுண்கிருமியின் இந்த புரத கூர்முனைகள் சேதமடைந்தாலோ, திறன் குறைந்திருந்தாலோ அல்லது நுண்கிருமி திறனற்ற கூர்முனைகளை கொண்டிருந்தாலோ இந்த கிருமிகள் தீவிர தாக்குதலை ஏற்படுத்துவதற்கு முன்பே நம்மால் தடுத்து நிறுத்தக்கூடிய வாய்ப்புகள் இருப்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள்.
உடலினுள் நுழைந்த கொரோனா நுண்கிருமியின் தாக்குதலை எதிர்த்து போராடுவதை விட, நுண்கிருமியின் புரத கூர்முனைகளும், மனித செல்லின் புரத ஏற்பியுடனான இந்த பிணைப்பை தடுப்பது, அதன்மூலம் நுண்கிருமியின் ஆற்றலை செயலிழக்க வைப்பது என்பது ஒரு சிறந்த வழிமுறையாக இருக்கக்கூடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
ஏனெனில் வைரஸ் நுண்கிருமி செல்களினுள் நுழைந்தபின்தான் அது நோயை மற்ற பாகங்களுக்கு கடத்துகிறது. அதன்பின் மிக சிக்கலான தொற்றிற்குள் மனித உடல் செல்கிறது.
ஆய்வாளர் கோல்ட்ஸ்டெய்ன் சொல்லும் வழிமுறை
“இது ஒரு மிக எளிமையான கோட்பாடுதான், சொல்லப்போனால் தலைகீழான வழிமுறை. இந்த முறையில் நுண்கிருமியானது மனித செல்லினுள் நுழைவதையும், ஒட்டிக்கொள்வதையும் தடுக்க முடியும்” என்கிறார் யூடா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த (Utah University) நுண்கிருமிகளைப் பற்றிய ஆராய்ச்சியாளர் ஸ்டீபன் கோல்ட்ஸ்டெய்ன் (Stephen Goldstein). மேலும் ” புரத கூர்முனைகளை குறிவைப்பதென்பது, மிகுந்த நம்பிக்கை அளிக்கக்கூடிய, எளிதான முதல் தடுப்பு நடவடிக்கையாக இருக்கக்கூடும் . ஏனெனில் நுண்கிருமி உடலினுள் சென்று மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதை ஆரம்பத்திலேயே தடுக்கும் வழிமுறையாக இது இருக்கக்கூடும்” என்று விவரிக்கிறார்.
கோல்ட்ஸ்டெய்ன் இந்த வழிமுறையை மிக எளிதாக விளக்குகிறார். “நாம் வெளியூர் செல்வதற்கு முன் வீட்டை நன்கு பூட்டிவிட்டு அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்திவிட்டுதான் செல்கிறோம். ஒருவேளை வீடு திறந்திருந்தால் திருடர்கள் யாராவது உள்ளே நுழைந்திருந்தால் அவர்களை தேடிப் பிடித்து அவர்கள் செய்யக்கூடிய செயலை தடுத்து நிறுத்தவேண்டிய வேண்டிய சூழ்நிலை வரக்கூடும். அதே உதாரணத்தை இங்கும் பொருத்தி பார்க்கலாம் . நாம் செய்யவேண்டியது கதவினை மூடி யாரும் வராமல் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதை போல நம் உடலின் செல்களை இந்த வழிமுறையில் பாதுகாப்பாக மூடி வைக்கிறோம். அதனால் வெளியிலிருந்து வரும் தாக்குதல்களை தடுத்து நிறுத்துகிறோம்” என்கிறார்.
இப்பொழுது விஞ்ஞானிகள் இந்த வழிமுறையை செயல்படுத்த வேண்டிய ஆய்வுகளை வலுப்படுத்தி வருகின்றனர். அதன்படி சமீப காலங்களில் ஒற்றைநகல் நுண்கிருமி எதிர்ப்பிகள் (Monoclonal Antibodies), இரத்த பிளாஸ்மா சிகிச்சை (Convalescent Plasma), செல்களில் காணப்படும் பல்வேறு அடிப்படை பிளவுகளை (Polybasic Cleavage Site) பற்றிய ஆராய்ச்சிகள் அவற்றின் முடிவுகளால் இந்த புரத கூர்முனை பற்றிய ஆய்வுகள் முன்னோக்கி செல்கின்றன.
கொரோனா நுண்கிருமியின் புரத கூர்முனை என்பது என்ன ?
மிக நீண்டகாலமாகவே கொரோனா வைரஸ் போன்ற ஏதாவதொரு தொற்று நோய்க்கான வாய்ப்புகளை இந்த பூவுலகு எதிர்நோக்கக்கூடும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் அறிந்து வைத்திருந்தனர். ஆனால் கொரோனா வைரஸ் எதிர்பாராத விதமாக பரவி பேரழிவு நோயாக வடிவமெடுக்கும் வரையில் இந்த கிருமியின் குறிப்பிடத்தக்க குணநலன், உடலமைப்பு அதன் செயல்பாடுகள் பற்றிய தெளிவான பார்வையை யாரும் கொண்டிருக்கவில்லை.
இதற்க்கு முன் எப்போதெல்லாம் பல்வேறு நோய்கள் மின்னல் வேகத்தில் உலகெங்கும் பரவுகிறதோ, அப்போதெல்லாம் அந்த கிருமியின் வடிவமைப்பை ( Viral Structure) அறிந்துகொள்ள அதனை பின்தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருந்தனர் ஆராய்ச்சியாளர்கள். ஆனால் கொரோனா வைரஸ் பரவிய வேகத்தில் அதனை ஒத்திருந்த அதே கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சார்ந்ததும், ஏற்கனவே போதுமான ஆய்வு முடிவுகளைக் கொண்ட சார்ஸ் வைரஸ் (SARS-CoV) கிருமியைப் பற்றிய கடந்த கால ஆய்வுகள் உடனடியாக உதவியது. சார்ஸ் வைரஸ் பற்றிய ஆய்வுகளிலும் அந்த கிருமியின் புரத கூர்முனைகளையே ஆய்வாளர்கள் தங்களுக்குரிய ஆய்வின் இலக்காக கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
கடந்த காலங்களில் நடைபெற்ற சார்ஸ் கிருமியைப் பற்றிய ஆய்வுகளால் கொரோனா நுண்கிருமி எவ்வாறு மனித உடலில் நுழைகிறது, எங்கு தாக்குகிறது என்பது பற்றியான முடிவுகளை உடனடியாக அறிய முடிந்தது. கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சார்ந்ததாக சார்ஸ் வைரஸ் கிருமி இருந்தாலும், அது கொரோனா பற்றிய அடிப்படையான புரிதல்களுக்கு உதவியது என்றாலும் இன்னும் கொரோனா நுண்கிருமியை பற்றி மேலதிக தகவல்களை ஆராய்ந்து கொண்டே இருக்கிறோம். நாம் கண்டறியாத பல செயல்பாடுகளை கொரோனா வைரஸ் கொண்டிருக்கலாம் எனவும் அஞ்சுகின்றனர் ஆய்வாளர்கள்.
சார்ஸ் கிருமியின் புரத கூர்முனையும், கோவிட் 19 கிருமியின் புரத கூர்முனையும்
சார்ஸ் கிருமி பற்றிய ஆய்வுகள் எந்த விதத்தில் உதவியதென்றால் நாம் கொரோனா வைரஸ் பற்றிய அடிப்படை ஆய்வுகளில் நேரத்தை செலவிடாமல் மிக தீவிரமாக அடுத்தடுத்த கட்டங்களுக்கு ஆய்வுகளை எடுத்துச்செல்ல உதவியிருக்கிறது.
“மிக உறுதியாக, மிக விரைவாக நாம் முதன்மையான சார்ஸ் வைரசின் புரத கூர்முனைகளுக்கும், கொரோனா வைரசின் புரத கூர்முனைகளுக்கும் உண்டான மரபணு வரிசையையும், ஒத்திசைவையும் கண்டறிந்தோம். கொரோனா வைரசானது செல்லினுள் நுழைவதற்கு தேர்ந்தெடுக்கும் ACE2 புரத ஏற்பி தான் அது” என விவரிக்கிறார் கோல்ட்ஸ்டெய்ன்.
கொரோனா வைரசின் புரத கூர்முனைகள் மற்றும் ACE2 புரத ஏற்பி இவற்றிற்கு இடையேயான பிணைப்பில்தான் கொரோனா வைரஸ் மனித செல்லினுள் நுழைகிறது. இந்த இணைப்பு செல்லினுள் செல்வதற்கு அதன்சுவரில் பிளவினை ஏற்படுத்துகிறது. கொரோனா வைரஸ் மனித செல்லினுள் ஒருமுறை சென்றால் போதும், அதன்பின் நுண்கிருமிகள் தங்களை நகலெடுத்து பல்கிப் பெருகுகின்றன. அதேசமயம் மனித உடலினுள் இயற்கையாகவே இருக்கக்கூடிய நோயெதிர்ப்பு ஆற்றலானது உடனடியாக நோயெதிர்ப்பு எதிர்ப்பிகளை உற்பத்திசெய்து நோயின் தாக்குதலுக்கு எதிராக செயலாற்றுகிறது. இந்த செயலை குறிப்பிடும் ஆராய்ச்சியாளர்கள் நுண்கிருமி உடலினுள் நுழைவதற்கு முன் செல்லின் சுவரை நன்கு பலப்படுத்திவிட்டால் போதும் கிருமியின் தாக்குதலை தடுத்துநிறுத்த முடியும் என்கின்றனர்.
கொரோனா நோய் தாக்குதலிலிருந்து எவ்வாறு முன்கூட்டியே தற்காத்துக்கொள்வது ?
தற்போது வெளிவந்திருக்கும் புதிய ஆய்வுகள் கொரோனா சிகிச்சையை ஒருபடி மேலே முன்னேற்றியிருக்கின்றன. மருத்துவ ஆய்வு இதழான ஏசிஎஸ் நானோ-வில் (ACS Nano) ஆகஸ்ட் மாதம் வெளிவந்திருக்கும் ஆய்வு முடிவுகள் இதை உறுதி செய்திருக்கின்றன.
கொரோனா நுண்கிருமியின் செல் மூலக்கூறுகளையும், அதன் பரிமாணங்களையும் நன்கு ஆராய்ந்ததில் அதனுடைய உடலில் பலவீனமான ஒரு இடத்தை கண்டறிந்திருக்கிறார்கள். கொரோனா வைரசின் புரத கூர்முனையில் 10 நானோ மீட்டருக்கு அருகிலிருக்கும் மிகச்சிறிய நுண்புள்ளி போன்ற இடம் நேர்மறை மின்னேற்றத்தை கொண்டிருக்கிறது (Positively charged). அதனாலேதான் எதிர்மறை மின்னேற்றம் கொண்டிருக்கும் மனித செல்லின் புரத ஏற்பியுடன் மிக உறுதியான பிணைப்பைக் கொள்கிறது.
இந்த ஆராய்ச்சியில் “செயற்கையான எதிர்மறை மின்னேற்றம்” செய்யப்பட்ட மூலக்கூறுகளை உருவாக்கி அதனை மனித உடலில் செலுத்தி நேர்மறை மின்னேற்றம்கொண்ட கொரோனா வைரஸ் கிருமியின் புரத கூர்முனைகளில் இருக்கக்கூடிய நுண்புள்ளியான இடத்தில் செயற்கையானதொரு பிணைப்பை உருவாக்கலாம். இதன் மூலம் கொரோனா வைரசானது ஆய்வாளர்கள் உருவாக்கக்கூடிய மூலக்கூறுகளுடன் பிணைப்பை மேற்கொள்வதால் மனித செல்லில் ஏற்படக்கூடிய பிணைப்பை தடுக்ககூடியும் என்கின்றனர்.

இந்த ஆய்வின் இணை ஆராய்ச்சியாளரான நார்த்வெஸ்டர்ன் மெக்கார்மிக் பொறியியல் கல்லூரியைச் (Northwestern McCormick’s school of engineering) சார்ந்த ஒலிவேரா ( Olvera de la Cruz) குறிப்பிடுகையில் “இப்படி தலைகீழாக நாம் செய்யக்கூடிய, செல்லின் பிளவுகள் ஏற்படக்கூடிய சாத்தியமுள்ள இடங்களில் நுண்கிருமியின் நுழைவை தடைசெய்வதன் மூலம் நுண்கிருமியின் பாதிப்பை முற்றிலுமாக தடுத்து நிறுத்த இயலும். ஏனெனில் இது மிக எளிது. மேலும் தேவைப்படும் நேரத்தில் பயன்படுத்தும் வகையில் சிறந்ததாகவும் இருக்கக்கூடும்” என்கிறார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், ”இப்போது வரை மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆய்வுகள் கொரோனா வைரசுக்கான சிகிச்சையைக் கண்டறியக்கூடும். ஆனால் இந்த வழிமுறையானது எளிதான மாற்று சிகிச்சை முறையாக இருக்கக்கூடும்.” என்கிறார். மேலும் ”எந்த வழிமுறை சிறந்ததாக இருக்கிறதோ, அதை தேர்ந்தெடுக்க வேண்டிய நேரம் இது. இல்லையென்றால் நாம் நீண்ட நாட்களுக்கு தடுப்பு மருந்திற்காக காத்திருக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாவோம்” என்கிறார்.
கொரோனா வைரசின் புரத கூர்முனைகள் மரபணு மாற்றமடைந்திருக்கிறதா ?
கொரோனா வைரசின் ஒரு பிரதியான D614G என்ற நுண்கிருமியே தற்போது உலகெங்கும் பரவிவருகிறது. ஒலிவேராஇதைப்பற்றி குறிப்பிடுகையில்,”ஆராய்ச்சி முடிவுகள் சார்ஸ் நுண்கிருமியின் (SARS-CoV-2) புரத கூர்முனைகளில் மரபணு மாற்றம் ஏற்பட்டு அவை இந்த D614G கிருமிகளில் பரிமாற்றம் அடைத்திருக்கலாம்” என்கிறார்.
கோல்ட்ஸ்டெய்ன் இந்த கூற்றை ஆமோதித்து, “இந்த கொரோனா வைரஸ் குடும்பத்தினுள் ஏற்பட்டிருக்கும் புதியவகை வேறுபாடு ’சில ஆதாரங்களைக்’ கொடுத்திருக்கிறது. வைரஸ் நுண்கிருமியின் ஆற்றல் மற்றும் அது மனித உடலில் ஏற்படுத்தும் மாற்றங்கள் ஆகிவற்றை தொடர்ந்து கண்காணிக்கவேண்டும். இப்பொழுதே அதை அறுதியிட்டு சொல்வதென்பது மிகவும் சீக்கிரமாக சொல்லப்பட்ட ஒன்றாகிவிடக்கூடும்” என்கிறார்.
உலகெங்கும் ஆய்வு கூடங்களில் பல்வேறு விதமாக ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் கொரோனா வைரசின் புரத கூர்முனைகளை செயலிழக்க வைப்பது. இன்னும் இந்த பரிசோதனைகளை மேம்படுத்த வேண்டியிருக்கிறது. அப்பொழுதுதான் இந்த சிகிச்சை பாதுகாப்பானதாக மாறக்கூடும். புரத கூர்முனைகளை பற்றிய ஆய்வுகள் மேம்பட மேம்பட நாம் கொரோனாவிற்கு எதிரான போரில் முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என்பதை உறுதி செய்யலாம்.
அழிவுகளிலிருந்தும், பேரச்சத்திலிருந்தும் மக்களை விடுவிப்பதே உண்மையான கல்வியும் அதன் பயனுமாகும். மேம்படட்டும் ஆய்வுகளும், மனிதகுலமும்.