பஞ்சாப் விவசாயிகள் விவசாய சட்டங்களை எதிர்ப்பதில் முன்னணியில் நிற்பதன் காரணம் என்ன?

பஞ்சாபின் விவசாயிகளில் 90% விவசாயப் பொருட்கள் அரசாங்கத்தின் மண்டிகள் வழியாகத்தான் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் பீகாரில் மண்டி முறை (APMC) என்பது 2016-ம் ஆண்டிலேயே மாற்றப்பட்டு, நேரடியாக தனியார் கொள்முதலுக்கு அனுமதி வழங்கப்பட்டுவிட்டது. ஒடிசாவில் ஒரு பகுதி அளவு தனியார் வியாபாரிகள் நேரடியாகவும், மற்றவர்கள் மண்டிகள் வழியாகவும் விற்பனை செய்கின்றனர்.


முழுவதுமாக குறைந்தபட்ச ஆதார விலை அடிப்படையில் மண்டிகள் மூலம் இயங்குகின்ற பஞ்சாப், முழுவதுமாக மண்டி முறை ஒழிக்கப்பட்ட பீகார், பகுதியளவு மண்டிமுறை மட்டுமே நடைமுறையில் உள்ள ஒடிசா ஆகிய மூன்று மாநிலங்களை எடுத்துக் கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


பீகார் மற்றும் ஒடிசா-வில் நிலவும் தனியார் சந்தைகளை விட மண்டிகள் மூலமாக விற்பனை செய்த பஞ்சாப் விவசாயிகள் 30% அதிக வருவாயைப் பெற்றுள்ளதாக ஆராய்ச்சி தரவுகள் தெரிவிக்கின்றன.


பென்சில்வேனியா பல்கலைக்கழக மேம்பாட்டு ஆய்வு நிறுவனம் (UPIASI-University of Pennsylvania Institute for the Advanced Study of India) மேற்பார்வையில் 3 மாநிலங்களில்  சுமார் ஏழு மாவட்டங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.மேலும் பென்சில்வேனியா பல்கலைக்கழக ஆய்வு நிறுவனம் பீகார், ஒடிசா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் உள்ள மாநில ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.


ஆய்வு முடிவு

  • இந்த ஆய்வின் முடிவில், மண்டிக்கு வெளியே வியாபாரிகள் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் விலையை விட, வியாபாரிகள் அப்பொருட்களை நுகர்வோருக்கு விற்பனை செய்யும் விலை பீகார் மற்றும் ஒடிசா மாநிலங்களில் மிக அதிகமாக இருப்பதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது.

  • இது மட்டுமின்றி பீகார் மாநிலத்தில் கொள்முதலில் ஈடுபடும் தனியார் நிறுவனங்கள் சந்தையின் உள்கட்டமைப்புகளை தரம் உயர்த்துவதற்காக எந்த ஒரு முதலீடும் செய்வதில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

  • பீகாரில் 5% விவசாயிகள் மற்றும் ஒடிசாவில் 11% விவசாயிகள் மட்டுமே தங்கள் விளைபொருட்களை அரசு நிறுவனங்களில் விற்பனை செய்வதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. 

  • விவசாய அமைச்சகத்தின் தரவுகளின்படி, பீகார் மற்றும் ஒடிசாவில் வாழும் விவசாயிகளில் சுமார் 80% சிறு மற்றும் குறு நில விவசாயிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

  • பஞ்சாப் மாநிலத்தைப் போலல்லாமல் பீகார் மற்றும் ஒடிசாவில் உழவர் மற்றும் வர்த்தகர்களுக்கு இடையிலான உறவு மோசமாக இருப்பதை ஆய்வு கண்டறிந்துள்ளது.

  • இதுமட்டுமின்றி பஞ்சாபில் விவசாயிகளுக்கு பணம் செலுத்துவதில் வெளிப்படைத்தன்மை இருப்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

ஆய்வு செய்த ஆசியரின் கருத்து

“கொள்முதல் விலை மற்றும் சந்தைகளில் விற்பனை விலை ஆகியவற்றுக்கான இடைவெளி என்பது 30 சதவீதமாக இருக்கிறது என்றும், சந்தைகளை ஒழுங்குபடுத்தாததன் விளைவு விவசாயிகளை விட வர்த்தகர்களுக்கே சாதமாக அமைந்தது” என இந்த ஆய்வின் இணை ஆசிரியர் செள மிட்ரோ சாட்டர்ஜி டுவிட்டரில் தெரிவித்தார். 

மேலும் செள மிட்ரோ சாட்டர்ஜி பீகாரில் விவசாய உள்கட்டமைப்புக்களுக்காக தனியார் துறை எந்த ஒரு முதலீடு செய்யவில்லை என்று தெரிவித்தார். 

“பீகாரில் தற்போது கட்டுப்பாடற்ற மற்றும் பாழடைந்த உள்கட்டமைப்புடன் விவசாய பொருட்கள் வாணிபக் கழக சந்தைகள் இன்று வரை முக்கிய உற்பத்தி விற்பனை சந்தைகளாக இருக்கின்றன. அதேசமயம்  பஞ்சாப் சந்தைகள் சிறப்பாக உள்ளன” என்று தெரிவித்தார். 

பயனில்லாத பயிர் காப்பீடு

“பயிர் காப்பீட்டுத் திட்டமானது போதுமான அளவில் ஏற்புடையதாக இல்லாத காரணத்தால் விவசாயிகளை காக்கும் ஒரே கருவி குறைந்தபட்ச ஆதார விலை (MSP) மட்டுமே என்று ஆய்வு சுட்டிக் காட்டுதாக”அவர் ட்வீட் செய்துள்ளார்

சிக்கலான நடைமுறை மற்றும் குறைந்த காப்பீட்டு மதிப்பு  காரணமாக பீகார் மற்றும் ஒடிசாவில் 7 சதவீதத்திற்கும் குறைவாகவும், பஞ்சாபில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே பயிர் காப்பீடு திட்டத்தைப் பயன்படுத்துவதாகவும் தெரியவந்துள்ளது.

கட்டுப்பாடற்ற தனியார் கொள்முதல் நிலையங்களின் நிலை

பஞ்சாபில் விவசாயிகளுக்கு மண்டி மூலமாக பணம் செலுத்துவதில் வெளிப்படைத்தன்மை இருப்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

கமிஷன் மண்டிகள் ரூபாய் 10,000 வரை மட்டுமே பணமாக வழங்க அதிகாரம் பெற்றுள்ளனர். மீதமுள்ள தொகை விவசாயிக்கு வங்கி கணக்குகள் மூலமாக மட்டுமே பரிவர்த்தனை செய்யப்பட வேண்டும் எனும் நடைமுறை பஞ்சாப் மாநிலத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 

ஆனால் பீகார் மற்றும் ஒடிசா மாநிலங்களில் விவசாயிகளை வஞ்சிக்க கட்டுப்பாடற்ற சிறு வணிகர்கள் அத்தகைய வெளிப்படைத்தன்மை எதுவும் இல்லாமல் செயல்பட்டு வருகிறார்கள்.

“ஒழுங்குபடுத்தப்பட்ட பஞ்சாப் மாநில சந்தைகளை விட அதிகாரப்பூர்வமற்ற பீகார் மற்றும் ஒடிசா மாநிலங்களில் செயல்படும் சந்தைகளில் இடைத்தரகர்கள் வசூலிக்கும் கமிஷன் மிக அதிகமாக இருப்பதாகவும் மேலும் பீகாரில் விவசாயிகள் சந்தைப்படுத்துவதற்கான சவால்கள் அதிகம் என ஆய்வு தெளிவாக கோடிட்டுக் காட்டுகிறது.” என்று முன்னாள் ஒன்றிய விவசாயத் துறை செயலாளர் சிராஜ் உசேன் கூறினார்.

கொள்முதல் நிலையங்களை அதிகரிக்க வேண்டும்

பஞ்சாப் மாநிலத்தின் உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத் துறையின் அமைச்சர் பாரத் பூஷண் ஆஷு விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்க உறுதியான சந்தைகள் தேவையென என சுட்டிக்காட்டினார். “தற்போது வரை 23 பயிர்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலையை அரசாங்கம் வைத்து இருந்தாலும், பெரும்பாலான விவசாயிகளின் உற்பத்தி பொருட்களை கொள்முதல் செய்வதற்கான போதிய வசதிகள் இல்லை” என தெரிவித்தார். 

அதே சமயம் பீகாரில் ஆய்விற்கு சென்ற இடத்தில் முதன்மை பயிரான மக்காச்சோளத்தை அரசாங்கத்தின் குறைந்தபட்ச ஆதரவிலையிலே விற்கவே விவசாயிகள் விரும்புவதாகவும், ஆனால் போதுமான கொள்முதல் மையங்கள் இல்லாததால் அவர்களால் விற்க முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

குறைந்தபட்ச ஆதார விலை மட்டுமே விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் என்பதை நேரடியாக பஞ்சாப் விவசாயிகள் உணர்ந்திருப்பதால்தான் போராட்டத்தில் முன்னணியில் நிற்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *