அரசியல் அறிக்கைகள்

அரசியல் அறிக்கைகள் இன்று: மினி கிளினிக்குகளில் அவுட்சோர்சிங் முறை என்பது தனியார் நிறுவனங்கள் லாபம் ஈட்டவே உள்ளிட்ட 6 அறிக்கைகள்

1. அ.தி.மு.க. ஆட்சியில் குப்பை கொட்டவும் கட்டணமா? – மு.க.ஸ்டாலின் கேள்வி

அ.தி.மு.க. ஆட்சியில் குப்பை கொட்டவும் கட்டணமா? கொரோனா கொள்ளையில் அடுத்த கொள்ளை! மக்களையும் வணிக நிறுவனங்களையும் பேரிடரில் தள்ளும் முயற்சி இது.

‘குப்பை கொட்டுவதற்குக் கட்டணம்’ என்ற அறிவிப்பைத் திரும்பப் பெற முதலமைச்சர் திரு. பழனிசாமி உத்தரவிட வேண்டும்; அவருக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கட்டுப்படாவிட்டால் தி.மு.க. ஆட்சியில் இக்கட்டணம் ரத்து செய்யப்பட்டு, மாநகராட்சியின் நிதி முறைகேடுகளில் ஈடுபடுவோர் அனைவரும் தண்டிக்கப்படுவர்!

2. மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்துவோம் – ஜி.ராமகிருஷ்ணன்

“உண்மையான இந்தியா அதன் கிராமங்களில் வசிக்கிறது” சொன்னவர் சௌவுதிரி சரன் சிங். நாட்டின் ஐந்தாவது பிரதம மந்திரி. ஒரு விவசாயி. விவசாய தலைவர். நாட்டின் வளர்ச்சி விவசாயிகளின் வளர்ச்சியில் உள்ளது என பெரிதும் நம்பியவர். விவசாயிகளுக்காக பல நலத்திட்டங்களை  உருவாக்கியவர். இவர் பிறந்த நாளை தான் நாட்டின் விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. 

“உணவே மருந்து” அதனை விளைவித்துக் கொடுக்கும் விவசாயிகளின் நிலை இன்றும் பரிதாபத்திற்குறியதாகவே உள்ளது. நியாய விலையை கேட்டுத்தான் விவசாயிகள் போராடுகிறார்களே ஒழிய செல்வலாபம் கொழிக்க அல்ல. நடப்பு மைய அரசோ சுய சார்பு என்ற பேரில் விவசாயிகளை கார்ப்பரேட்க்கு கொத்தடிமைகளாக மாற்ற துடிக்கிறது. 

காலநிலை மாற்றம், புயல், வெள்ளத்தை விட மோசமாக நடத்துக்கொள்கிறது ஆளும் அரசு  என்று தங்கள் வேதனையை பதிவு செய்கிறார்கள் விவசாயிகள். இன்றும், அரசு கோரிக்கையை ஏற்க மறுக்கிறார்கள், போராடுகிறார்கள் என்றுதான் கூறுகிறது காட்சி ஊடகமூம்,சில செய்திதாள்களும். முகநூலோ அவர்களின் நேரடி உரையை பொய் பிரச்சார உரை என்று ஒலிபரப்பை முடக்குகிறது. 

ஆயினும் விவசாயிகளின் தன்னிச்சையான  எழுச்சியை யாராலும் தடுக்க முடியாது என்பதையே வரலாறு திரும்ப திரும்ப நினைவுப்படுத்துகிறது. விவசாய தினத்தில் விவசாயிகளின் மெய்யான கோரிக்கைக்கு துணை நிற்போம், அந்த மூன்று புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்துவோம்.

– ஜி.ராமகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

3. மினிகிளினிக்குகளில் அவுட்சோர்சிங் முறை என்பது முழுக்க முழுக்க தனியார் நிறுவனங்கள் இலாபம் ஈட்டவே – தி.வேல்முருகன் 

மினி கிளினிக்குகளில், அவுட் சோர்சிங் முறை என்பது முழுக்க முழுக்க தனியார் நிறுவனங்கள் இலாபம் ஈட்டவே கொண்டு வரப்பட்டுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது!

கொரோனா பேரிடர், புயல், மழை, வெள்ளக் காலங்களில், ராணுவ வீரர்கள் போன்று நின்று, மக்களை பாதுகாத்த செவிலியர்களை அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும்! 

தமிழகத்தில் புதியதாக தொடங்கப்பட உள்ள 2000 மினி கிளினிக்கிற்கு, அவுட் சோர்சிங் முறையில் செவிலியர்களை நியமனம் செய்ய அதிமுக அரசு முடிவெடுத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழக அரசின் இந்த முடிவை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. 

தமிழகத்தில் கொரோனா நாளுக்கு நாள் குறைந்து வந்தாலும், அதனை முழுமையாக கட்டுப்படுத்தும் வகையில் மாநகாரட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் இரண்டாயிரம் மினி கிளினிக் தொடங்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு வரவேற்கதக்கது. அதே நேரத்தில், 2000 மினி கிளினிக்கிற்கு, அவுட் சோர்சிங் முறையில் செவிலியர்களை நியமனம் செய்ய அதிமுக அரசு முடிவெடுத்திருப்பது கண்டனத்துக்குரியது. 

அதாவது, 2000 மினி கிளினிக்குகளில் செவிலியர்களுக்கான  பணியிடங்கள்,  தனியார் நிறுவனத்தின் மூலம் நியமிக்கப்பட உள்ளது.  இதன் காரணமாக,  காத்திருப்போர் பட்டியலில் உள்ள ஆயிரக்கணக்கான செவிலியர்கள் பாதிக்கப்படுவார்கள். 

மருத்துவ பணிகள் தேர்வாணையத்தின் மூலம் பணியமர்த்தப்பட்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் 6 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் நிலையில், அவர்கள் இதுவரை பணி நிரந்தரம் செய்யவில்லை. அவர்களை பணி நியமனம் செய்யும் போதே, 2 ஆண்டுகளில் பணி நிரந்தரம் செய்யப்படும் என்று அரசாணையில் குறிப்பிட்டிருந்தது.

ஆனால், அந்த அரசாணை இன்று வரை நிறைவேற்றப்படாமல், செவிலியர்கள் ஒப்பந்த முறையிலேயே வைக்கப்பட்டுள்ளனர்.  அந்த செவிலியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால், அவர்களின் கோரிக்கைக்கு அதிமுக அரசு கொஞ்சம் கூட செவி சாய்விக்கவில்லை. 

குறிப்பாக, பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த 2017ஆம் ஆண்டு செவிலியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த போராட்டத்தை கலைக்க அதிமுக அரசும், காவல்துறையும்  என்னவெல்லாம் சதித்திட்டம் தீட்டினர் என்பதை நாம் அறிந்ததே. 

தற்போது, மினி கிளினிக்கிற்கு தனியார் நிறுவனத்தின் மூலம் செவிலியர்கள் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியிடங்களுக்கு, ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை விலை பேசி அந்த பணியிடங்களை விற்பதாக புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக, தகுதியற்றவர்கள் நியமிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. 

அதுமட்டுமின்றி, இந்த அவுட் சோர்சிங் முறை என்பது முழுக்க முழுக்க தனியார் நிறுவனங்கள் இலாபம் ஈட்டவே கொண்டு வரப்பட்டுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. 

இந்த பணியிடங்கள் மார்ச் 2021 வரை என்று அரசாணை மூலமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மினி கிளினிக் என்பது தேர்தலுக்காக, வாக்கு அரசியலுக்காக கொண்டு வரப்பட்டது என்பதை நமக்கு உணர்த்துகிறது. 

அரசு மருத்துவமனைகளில், அவுட் சோர்சிங் முறையில் மருத்துவர்கள் நியமனம் மேற்கொள்ளக்கூடாது என்ற உயர்நீதிமன்ற மதுரைகிளையின் உத்தரவை அதிமுக அரசுக்கு இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 

எனவே, மினி கிளினிக்குகளில் தனியார் நிறுவனத்தின் மூலம் செவிலியர்களை நியமிக்கும் நடவடிக்கையை, அதிமுக அரசு கைவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். 

அதுமட்டுமின்றி, அதிமுக அரசு அறிவித்தபடி 2,000 மினி கிளினிக்குகளில், புதிய மருத்துவர்களையும், செவிலியர்களையும், மருத்துவமனைப் பணியாளர்களையும், மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் மூலம் உடனடியாக நியமிக்க வேண்டும்.  2018 மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருப்போர் பட்டியலில் உள்ள மருத்துவர்களை, மினி கிளினிக்குகளில் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

கொரோனா பேரிடர், புயல், மழை, வெள்ளக் காலங்களில், ராணுவ வீரர்கள் போன்று நின்று, மக்களை பாதுகாத்த செவிலியர்களை அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.

4. தமிழக முதல்வர் உழவன் என்று சொல்லிக் கொள்வது விவசாயிகளுக்கு அவமானம்! – பெ.சண்முகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

உலகத்திற்கே படியளக்கும் உழவர்களை கார்ப்பரேட்களிடம் கையேந்தி நிற்கச் செய்யும் வேளாண் விரோத சட்டங்களுக்கு ஆதரவளித்து உழவர் சமூகத்திற்கு பச்சை துரோகம் செய்த நீங்கள் உழவன் என்று சொல்லிக் கொள்வதை விவசாயிகளாகிய நாங்கள் அவமானமாக கருதுகிறோம்.

5. நிலம் கையகப்படுத்தலை உடனடியாக நிறுத்த வேண்டும் – ஈ.ஆர்.ஈஸ்வரன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி

அவினாசி வட்டம் தத்தனூர் ஊராட்சி பகுதியில் சிப்காட் அமைக்க கூடாது. நிலம் கையகப்படுத்தலை உடனடியாக நிறுத்த வேண்டும். அவினாசி அத்திக்கடவு திட்டம் விவசாயத்திற்காகவா ? சிப்காட் தொழிற்சாலைகளுக்காகவா ?

6. திசம்பர் 29 தஞ்சையில் மாபெரும் உழவர் பேரணி! அனைத்து உழவர்களும் திரள்வோம் – அரங்க குணசேகரன் 

உழவர் இயக்கங்களும் கூட்டமைப்புக்களும் மாணவர்கள் இளைஞர்கள் பெண்களும் ஓரணியில் திரளுவோம்! 

உழுவாரே உலகத்தார்க்கு அச்சாணி என்பதை அம்பாணி அதானியின்அரசியல் புரவலர் மோடிக்கு உணர்த்துவோம்

– அரங்க குணசேகரன் தமிழக மக்கள் புரட்சிக் கழகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *