கமல்ஹாசன்

கமல்ஹாசனால் ஏன் ஊழலை ஒழிக்க முடியாது?

நீண்ட காலமாக அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த ரஜினியை முந்திக்கொண்டு திடீரென அரசியலுக்கு வந்தவர் கமல். 2018 பிப்ரவரி மாதம் மக்கள் நீதி மய்யம் என்று தன்னுடைய கட்சியைத் தொடங்கி  2019 நாடாளுமன்றத் தேர்தலையும் சந்தித்தவர் கமல்.

ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஒரு அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது போலவும், மக்கள் 50 ஆண்டுகால திராவிட ஆட்சிக்கு விடிவு தேடுவது போலவும், வாரிசு அரசியலற்ற, ஊழலற்ற ஒருவரை மக்கள் எதிர்நோக்கி காத்திருப்பது போலவும் பிம்பம் ஒன்று பெரிய அளவில் கட்டமைக்கப்பட்டது. ரஜினிகாந்த்தை மனதில் வைத்து பாஜக ஆதரவு வலதுசாரிகள் உருவாக்கிய இந்த கருத்தியல் தளத்திற்குள் திடீரென முதலில் குதித்தவர் கமல்ஹாசன்.

தூய்மையான கரங்களுக்கு சொந்தக்காரனாக முக்கியமாக  ஊழலுக்கு எதிரானவனாக தன்னை மிகுந்த பொருட்செலவில் விளம்பரப்படுத்தி வருகிறார் கமல்ஹாசன். படித்த மிக மேலோட்டமான அரசியல் பார்வை உள்ள, ஊழலை முக்கியமான அரசியல் கருவாக எண்ணும் ஒரு பிரிவு மக்களின் நம்பிக்கையையும் கமல் பெற்றிருக்கிறார் என்பதை கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர் பெற்ற வாக்குகள் தெளிவுபடுத்துகின்றன.

3 சதவீதம் ஊழல் எதிர்ப்பாளர்களின் நம்பிக்கையைப் பெற்ற கமல் உண்மையிலேயே ஊழலுக்கு எதிரானவரா?

பொதுவாக ஊழலுக்கு எதிரானவர்கள் தேர்தல் காலங்களில் மட்டும் திடீரென முளைப்பதும், அவர்களின் ஊழல் ஒழிப்பு அரசியல் பாரதிய ஜனதாவிற்கே அதிகம் பலன் தருவதும் அண்மைக்காலங்களில் இந்தியா முழுமைக்கும் நடக்கும் நிகழ்வுகளாக உள்ளன. காங்கிரஸ் அரசு காலத்தில் ஊழலுக்கு எதிரான போர் என்று தொடங்கிய அண்ணா ஹசாரே, ராம்தேவ், கிரண் பேடி போன்றவர்களின் அரசியல் என்பது எவ்வளவு தூரம் பாரதிய ஜனதாவுக்கு பலனைத் தந்தது என்பதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். கமலின் ஊழல் ஒழிப்பு அரசியலும் பாஜகவிற்கு பலன்தரக் கூடியதா என்பதையும் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.

காங்கிரஸ் ஆட்சியின் போதும் சரி, இன்றைய பாஜக ஆட்சியின் போதும் சரி பல்வேறு ஊழல் புகார்களை அரசியல் கட்சிகள் எழுப்பி வந்திருக்கின்றன. கமல்ஹாசன் அப்படி ஒரு ஊழலைக் கூட எதிர்த்துப் பேசியதில்லை.

நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் 5 ஆண்டு ஆட்சியில் நடந்த மிகப்பெரிய  ரஃபேல் ஊழல் குறித்தான விவாதத்தில் கமல் வாய் திறக்கவில்லை. 2G போன்று 4G அலைக்கற்றை  ஏலத்தில் கார்ப்பரேட்டுகள் லாபத்திற்காக அரசின் BSNL  நிறுவனமே பங்கெடுக்காமல் செய்த ஊழல் குறித்து கமல் இதுவரை வாய் திறக்கவில்லை. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றஞ்சாட்டிய அரசின் Organised ஊழலான பணமதிப்பிழப்பினை எதிர்த்து கமல் வாய் திறந்ததில்லை. 

மும்பை திரைப்பட விழாவில் அம்பானியுடன் கமல்ஹாசன்

தமிழ்நாட்டில் நடைபெற்ற ஊழல்களில் கமல்ஹாசனின் நிலைப்பாடு என்னவாய் இருந்திருக்கிறது?

ஜெயலலிதா உயிரோடு இருந்தவரைக்கும் சரி, இறந்த பிறகும் சரி ஊழல் வழக்கில் பெற்ற தண்டனை குறித்து இதுவரை அவர் நேரடியாகப் பேசியதே இல்லை.

ஜெயலாலிதா இறந்த பிறகான குழப்பமான சூழலில் குருமூர்த்தி பின்னணியில் OPS தர்மயுத்தம் தொடங்கியபோது கமல்காசன் OPS ஐ நேரடியாக ஆதரித்தார். இத்தனைக்கும் அதற்கு சில வாரங்கள் முன்புதான் OPS சேகர் ரெட்டியின் மிகப்பெரிய ஊழல்கள் வெளிவந்திருந்தன.

நேற்றைக்கு திடீரென அதிமுக கூட்டணியில் இருந்து விலகி கமல்ஹாசனின் கூட்டணியில் சேர்ந்திருக்கிறார் சரத்குமார். நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது திரைத்துறையினரால் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு குற்றம்சாட்டப்பட்டவர் சரத்குமார். நடிகர்சங்க தேர்தலில் அவர் தோல்வி அடைந்ததற்கு கூட அவர்
மீதான ஊழல் புகார்கள் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. ஆனால் ஒரு மூத்த நடிகராக இருக்கும்போதும் சரி இப்போதும் சரி சரத்குமாரின் மீதான இந்த குற்றச்சாட்டுகள் குறித்து ஒருபோதும் பேசாதவர் கமல். அதைவிட ஒரு ஊழல்வாதியை தன்னுடைய கூட்டணியில் சேர்த்துக்கொள்ளவும் தயங்காதவராக இருக்கிறார் கமல்.

சரத்குமாரோடு சேர்ந்து கமலின் மக்கள் நீதி மையத்தோடு கூட்டணி பேச வந்தவர் SRM பச்சமுத்து. கல்வியை வியாபாரமாக்கி பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதியாகி, அதைக் காப்பாற்றுவதற்காகவே அரசியல் கட்சி தொடங்கியவர். மாணவர்களின் கல்வியில் மாபெரும் ஊழலை செய்பவரை தன்னுடைய ஊழல் எதிர்ப்பு கூட்டணியில் சேர்ப்பது பற்றி கமல்ஹாசனுக்கு எந்த கூச்சமும் இல்லை.

அதைவிட முக்கியமான விடயம் அனைவரையும் ஆச்சரியப்படுத்திய விடயம் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தங்கள் கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம் என்று கமல்ஹாசன் சொன்னதுதான். ஜெயலலிதா உயிரோடு இருந்த காலத்தில் மொத்த அதிமுக-வையும் கட்டுப்படுத்தி ஒரு மாபியாவைப் போல செயல்பட்ட மன்னார்குடி குடும்பத்தின் முக்கியமான நபர் தினகரன். தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் தர முனைந்தார் என்பது தினகரன் மீது அண்மையில் நடந்த ஊழல் வழக்கு, RK நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு அவர் பணம் கொடுத்த விதத்தையும் தமிழ்நாட்டு மக்கள் அறிந்தே இருக்கிறார்கள். இப்படி லஞ்ச ஊழல்களில் மூழ்கி திளைத்தவர்களோடு எந்த கூச்சமும் இல்லாமல் கமல்ஹாசனால் கூட்டணி பேச முடிகிறது என்றால் இவர்தான் இங்கே ஊழலை ஒழிக்க போகிறவர் என்று நம்புவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்?.

சரி ஊழல்தான் மக்களின் பிரதான பிரச்சினையா?

இன்றைக்கு கமல் முதல் சகாயம் வரைக்கும் ஊழல் மட்டுமே மக்களின் பிரதான பிரச்சினையாகக் காட்ட முயல்கிறார்கள். இது உண்மையா?

ஊழல் என்பது நிச்சயமான அரசின் ஒரு நிர்வாகப் பிரச்சினை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அதுமட்டுமே மக்களின் பிரதான முரணாக இருக்கமுடியாது. அப்படி இருந்திருந்தால் மிகப்பெரிய ஊழல் மாநிலமாக இவர்கள் உருவகப்படுத்தும் தமிழ்நாடு அரசு அனைத்து சமூகநலக் குறியீடுகளிலும் இந்தியாவில் சிறந்த மாநிலமாக வந்திருக்க முடியுமா?

மாநிலத்தின் ஒரு முனையில் சென்னையில் இருந்து இரவு கிளம்பும் ஒருவர் காலையில் மறுமுனையான கன்னியாகுமரியை அடைந்துவிடக்கூடிய போக்குவரத்து வசதியை இந்தியாவின் பெரும்பாலாக மாநிலங்கள் இன்னும் பெறவில்லை என்பதுதான் நிதர்சனம்.

இடஒதுக்கீட்டுக்கு எதிரான பாரதிய ஜனதா போன்ற சனாதன கட்சியின் பிடியில் இருந்துகொண்டு கூட, இடஒதுக்கீட்டை மக்கள் பிரச்சினைக்கு தீர்வாக செயல்படுத்த முனைகிறது அதிமுக அரசு. அதுபோல ஏதாவது பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்காக இடஒதுக்கீடு உரிமை குறித்து கமல் குரல் கொடுத்திருக்கிறாரா?

முக்கியமாக ஊழல் குறித்து பேசுபவர்கள் அரசியல்வாதிகளின் ஊழலை மட்டும் பேசிவிட்டு அரசு அதிகாரிகள் மட்டத்தில் நிகழும் ஊழலை  குறித்து பேச மறுப்பது ஏன்? அவர்களை தண்டிப்பதில் இந்த அமைப்பில் இருக்கும் குறைபாடுகள் பற்றி பேசுவதில்லையே ஏன்?

கார்ப்பரேட்டுகள் செய்யும் பல்லாயிரம் கோடி ஊழல் குறித்து எந்த அரசியல்வாதியும் பேசுவதில்லையே ஏன்? இதையெல்லாம் பேசாமல் ஊழலை ஒழிக்கவே முடியாது என்ற உண்மை தெரிந்தும் இவர்கள் பேசாமல் இருக்கிறார்கள் என்றால் இவர்களின் நோக்கம் ஊழல் ஒழிப்பாக நிச்சயம் இருக்க முடியாது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *