கடந்த டிசம்பர் 2, 2020 அன்று உச்சநீதிமன்றம் நாடு முழுவதும் அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் உள்ள புலனாய்வு நிறுவனங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும் என மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் ஆணையிட்டிருந்தது. அந்த வழக்கு விசாரணை இன்று நீதிபதி நரிமன் முன்பு விசாரணைக்கு வரவிருந்த நிலையில் மேலும் கால அவகாசம் கேட்டு ஒன்றிய அரசு கடிதம் ஒன்றை சமர்ப்பித்தது.
அந்த கடிதத்தில், இப்படி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதால் ஏற்படும் ’பக்க விளைவுகளைப்’ பற்றி ஆராய நேரம் வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
பக்கவிளைவுகளைப் பற்றி கவலையில்லை என கோபமடைந்த நீதிபதிகள்
இந்த காரணத்தால் கோபம் அடைந்த நீதிபதிகள்,” பின்விளைவுகளை பற்றி எங்களுக்கு கவலையில்லை. இது நாட்டு மக்களின் உரிமை சம்பந்தப்பட்டது. இது நாட்டு மக்களுக்கு அரசியலமைப்பு வழங்கும் வழங்கும் அடிப்படை உரிமை தொடர்புடையது” ( சரத்து 21- இந்திய குடிமக்கள் உயிருக்கும் தனிபட்ட சுதந்திரத்திற்குமான பாதுகாப்பு இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.) என கடுகடுத்தார்கள்.
இதை எதிர்பாராத ஒன்றிய அரசின் வழக்கறிஞர் தன் கடிதத்தை புறம்தள்ளுமாறு கூறினார். பின்னர் அவரே, கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்த மாநில அரசுகள்தான் நிதி ஒதுக்க வேண்டும் என தெரிவித்தார். அவர்கள் ஒதுக்கிய பின்பு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.
இந்த வாதத்தையும் ஏற்க மறுத்த நீதிபதிகள், இன்னும் ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகளின் கட்டிடங்களுக்கு கேமரா பொருத்தப்படாததைப் பற்றி என்ன சொல்கிறீர்கள் என மறுபடியும் கேள்வி எழுப்பினார். இறுதியாக இந்த விவகாரத்தில் மேற்கொண்டு பதிலளிக்க இன்னும் பத்து நாட்கள் அவகாசம் தருமாறு கேட்டார்.
ஐந்து மாதங்களுக்குள் கேமரா பொருத்த வேண்டும்
இதனையடுத்து, ஒன்றிய அரசு உச்சநீதிமன்றம் பிறப்பித்த ஆணையை பின்பற்றவில்லை எனவும், மூன்று வார கால அவகாசத்திற்குள் இந்த உத்தரவை நடைமுறைபடுத்த எவ்வளவு நிதி மற்றும் காலம் தேவைபடும் என்பதையும் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க உத்தரவிட்டனர். அதேபோல், மாநில அரசுகளும் இன்றைய தேதியில் இருந்து தங்கள் கட்டுபாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் ஐந்து மாதங்களுக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்தியிருக்க வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்தனர்.
தற்போது தேர்தல் அறிவித்துள்ள காரணத்தால் தமிழ்நாடு உட்பட ஐந்து மாநிலங்களுக்கு மட்டும் டிசம்பர் 31,2021 வரை கால அவகாசம் நீட்டிகலாம் என தெரிவித்தனர்.
எந்தெந்த அலுவலகங்களில் கண்டிப்பாக பொருத்தப்பட வேண்டும்
முன்னதாக டிசம்பர் 2 அன்று, கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தும் நடைமுறை பற்றி நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெளிவாக விளக்கியிருந்தார்கள். அதாவது, நாடு முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்கள், ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் வரும் மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ), தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ), அமலாக்கத் துறை(இடி), தேசிய போதைப்பொருள் தடுப்புத்துறை( என்சிபி), நிதி புலனாய்வுத் துறை(டிஆர்ஐ), தீவிர மோசடிகளை விசாரிக்கும் புலனாய்வுக் குழு (எஸ்எப்ஐஓ) ஆகிய அமைப்புகளின் அலுவலகங்களில் சிசிடிவி கேமராக்களை கண்டிப்பாக பொருத்த வேண்டும்.
கேமரா பொருத்துவது தொடர்பான விதிமுறைகள்
- இரவிலும் காட்சிகள் தெளிவாக பதிவாகும் சிசிடிவி கேமராக்களையே பொருத்த வேண்டும்.
- ஆடியோ பதிவும் தெளிவாக இருக்க வேண்டும்.
- குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் வரையிலான பதிவுகளை சேமிக்கும் வசதி இருக்க வேண்டும்.
- அலுவலகத்தின் நுழைவு, வெளியேறும் வாயில்கள், பிரதான வாயில், அலுவலகத்தின் வெளிப்புறம், பின்புறம், லாக்-அப் அறைகள், வரவேற்பறை, இன்ஸ்பெக்டர் அறை, சப்-இன்ஸ்பெக்டர் அறை, கழிவறையின் வெளிப்பகுதி (உட்பக்கம் கூடாது) உள்ளிட்ட பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.
- இந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ய சுதந்திரமாக செயல்படும் குழுவை நியமிக்க வேண்டும்.
- மேலும், காவல் நிலையத்திலோ மத்திய விசாரணை அமைப்புகளின் கட்டுபாட்டிலோ ஒரு நபர் துன்புறுத்தப்பட்டால் அவர் தேசிய/மாநில மனித உரிமை ஆணையங்களிடமோ நீதிமன்றங்களிடமோ உயர் அதிகாரிகளிடமோ புகார் அளிக்க அவருக்கு உரிமை உள்ளது. அப்படி புகார் அளிக்கும் பட்சத்தில் அந்த காணொளி பதிவுகளை முறைபடி சமர்பிக்க வேண்டும்.
எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது.
சுதந்திர இந்தியாவில் காவல் நிலைய மரணங்கள், மத்திய விசாரணை அதிகாரிகளின் சட்டத்திற்கு புறம்பான வன்முறை பிரயோகம், குற்றம் சாட்டப்பட்டவர்களின் அடிப்படை மனித உரிமைகள் நசுக்கப்படும் போக்கு ஆகியவை இந்த உத்தரவின் மூலம் கட்டுக்குள் வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.