தமிழ்நாடு முழுவதும் நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதை தடுப்பதற்கு பதினைந்து நாட்களுக்குள் அனைத்து நீர்நிலைகள் மற்றும் பொது நிலங்களை செயற்கைக்கோள் படமாக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அனைத்து தாலுகாக்களின் செயற்கைக்கோள் படங்களையும் உறுதி செய்வதற்கு ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
மார்ச் 17-ம் தேதிக்குள் அனைத்து மாவட்ட இணையதளங்களில் நீர் நிலைகள் மற்றும் பொது இடங்களின் செயற்கைகோள் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ஆகியோரின் முதல் அமர்வு அனைத்து தாலுகாக்களின் செயற்கைக்கோள் படங்களும் மார்ச் 15-க்குள் தயாரிக்கப்பட வேண்டியது அவசியம் என்றும், நீர்நிலைகள் மனித வாழ்விடத்தின் நுரையீரல்களாகும், அவை சுற்றுச்சூழலில் எஞ்சியிருப்பதை ஆக்கிரமிக்கவோ அல்லது தொடவோ கூட அனுமதிக்க முடியாது” என்று கூறியுள்ளது.
ஈரோட்டைச் சேர்ந்த நீர்நிலை பாதுகாப்பு இயக்கத்தின் சண்முகசுந்தரம் உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் இந்த உத்தரவை வழங்கியுள்ளனர்.
உயர்நீதிமன்றம் நீர்நிலைகளைப் பாதுகாக்க அக்கறையுடன் இதனை தெரிவித்திருக்கிற அதேவேளையில், நகராட்சி மற்றும் மாநகராட்சிகள் குப்பைக் கழிவுகளை நீர்நிலைகளில் கொட்டி அதனை மூடும் வேலையைப் பார்க்கிறார்கள்.
படம்: நகராட்சி குப்பைகளால் ஆக்கிரமிக்கபட்ட பல்லாவரம் ஏரி