கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிகள்

தேர்தல் களம் 2021: எந்த தொகுதியில் யாருக்கு வெற்றி? தமிழக சட்டமன்றத் தொகுதிகள் ஓர் அலசல் – பாகம் 2

தமிழ்நாட்டின் சட்டமன்ற தொகுதிகள் ஓர் அலசல். கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து துவங்குவோம்.

குமரி மாவட்டம் தமிழகத்தின் பிற மாவட்டங்களை விட சற்று வித்தியாசமானது. இங்கு திராவிடக் கட்சிகளை விட தேசிய கட்சிகள் செல்வாக்கு மிக்கதாக இருக்கிறது. அதனால் தான் திமுக தலைவர் கருணாநிதி நெல்லை என் எல்லை குமரி எனக்கு தொல்லை என்றார். 

தமிழ்நாட்டின் நீண்ட கடற்கரையையும் மலை வளத்தையும் கொண்ட மாவட்டம் இது. கேரளாவின் எல்லை என்பதால் இங்கு நடக்கும் வட்டாரக் கூட்டங்களுக்கே கேரளாவின் மாநிலத் தலைவர்கள் வந்து பங்கெடுப்பார்கள்.

ஆறு சட்டமன்றத் தொகுதிகள்

  • கன்னியாகுமரி
  • நாகர்கோவில் 
  • பத்மனாபபுரம் 
  • கிள்ளியூர் 
  • விளவங்கோடு 
  • குளச்சல் 

என்று மொத்தம் ஆறு சட்டமன்றத் தொகுதிகள் இங்கு இருக்கின்றன. ஆறுமே தற்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ் 3, திமுக 3 என்று வெற்றி பெற்று ஆளுங்கட்சிக்கு ஒரு மக்கள் பிரதிநிதி கூட இல்லாமல் இருக்கிறது. எனவே மாவட்டத்தில் ஒரு மக்கள் பிரதிநிதியாவது தங்கள் கட்சிக்கு வேண்டுமென்று தேர்தல் முடிந்த உடனே வழக்கறிஞர் விஜயகுமாரை மாநிலங்களவைக்கு அனுப்பி வைத்தார் ஜெயலலிதா.

மாவட்டத்தின் சிறப்பம்சமும், மக்களின் பிரச்சினைகளும்

நீண்ட கடற்கரையும், விவசாயமும், சுற்றுலா தளமும் இந்த மாவட்டத்தின் முக்கியத் தொழிலாகும். தமிழகத்தில் அதிக எழுத்தறிவு கொண்ட மாவட்டம்  என்பதும், சிறுபான்மை மக்கள் அதிகம் இருப்பதும் இந்த மாவட்டத்தின் சிறப்பம்சமாகும். 

ஒகி புயலின் போது மீனவர்களைத் தேடாதது, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்காதது உள்ளிட்டவை இந்த மாவட்ட மக்களின் நெஞ்சில் ஆறாத வடுவாகவே இருக்கிறது. கேரளாவின் தாக்கம் அதிகம் என்பதால் இங்கிருந்து வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் அதிகம். 

கொரானா பெருந்தொற்று காரணமாக அவர்கள் நாடு திரும்புவதில் எற்பட்ட சிக்கல்களும், வேலை இழந்து அந்நிய தேசத்தில் இருந்து வர முடியாமல் தவித்ததும் அவர்களுக்கு சரியான உதவியை செய்யவில்லை என்ற கோபமும் மக்களிடம் இன்றும் இருக்கிறது.

இயற்கை வளம் மிக்க கனியாகுமரி மாவட்டத்தின் பெரிய மலைகளை M Sand-ற்கும், கற்களுக்கும் உடைத்து எடுக்கப்படுவது பெரும் கொந்தளிப்பை மாவட்ட மக்களிடம் ஏற்படுத்தியது. அதன் பின்னர் நடந்த போராட்டங்கள் சில இடங்களில் மலைகளைப் பாதுகாத்திருக்கிறது. இந்த மாவட்டத்தில் தொகுதி வாரியாக கள நிலவரத்தைப் பார்ப்போம்.  

விளவங்கோடு தொகுதி யார் பக்கம்?

தமிழக எல்லைத் தொகுதியான விளவங்கோடு தமிழகத்தில் மற்ற எல்லா தொகுதிகளையும் விட வித்தியாசமானது. இங்கு இதுவரை ஒருமுறை கூட மாநில கட்சிகள் வெற்றி பெற்றது இல்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும்,காங்கிரசுமே மாறி மாறி வெற்றி பெற்றுள்ளது.

மக்களின் கோரிக்கைகள்

மலை கிராமங்களையும், பழங்குடிகளையும் கொண்டு முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பியுள்ள தொகுதியாகும். இந்த தொகுதி 21 மலை கிராமங்களைக் கொண்டுள்ளது. இவர்களின் முக்கியத் தொழில் முந்திரி தான். புதிய முந்திரி தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். 

அதேபோல ரப்பர் பால் வெட்டினை நம்பி பலரின் வாழ்வாதாரம் இருக்கிறது. இந்த தொழிலில் இருப்பவர்களுக்கு மார்ச், ஏப்ரல் மாதங்களில் வருமானம் இருக்காது. அதனால் இங்கு உற்பத்தியாகும் தேன், முந்திரி இவற்றை அடிப்படையாகக் கொண்ட வேலை வாய்ப்பினை உருவாக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

தொகுதி பிரச்சினைகள் 

2011 தேர்தலில் நெய்யாறு இடதுகரை கால்வாய் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவேன் என்று வாக்குறுதி கொடுத்து வெற்றி பெற்ற விஜயதாரணி இன்று அவரை அதனை செய்து முடிக்கவில்லை என்ற குற்றசாட்டு மக்களிடம் உள்ளது.  

விளவங்கோடு தொகுதியின் முக்கிய நகரமாக மார்த்தாண்டம் இருக்கிறது. மலைப்பகுதியில் இருந்துவரும் தேன் முதல் கடற்கரையில் இருந்து வரும் மீன், கருவாடு என்று அனைத்து பகுதி மக்களையும் இணைக்கும் ஒரு புள்ளியாக இருக்கும் மார்த்தாண்டத்தின் போக்குவரத்து நேரிசல் இன்னும் சரியாகவில்லை. 

சிற்றாறு அணை, சிதாரல் மலைக் கோயில் ஆகிய இடங்களை சுற்றுலா தளங்களாக மாற்றும் கோரிக்கையும் பல ஆண்டுகளாக அப்படியே இருக்கிறது. சிதாரல் பகுதியில் அரசு கலைக் கல்லூரி கட்ட வேண்டும் என்ற கோரிக்கையும் எப்பொது நிறைவேறும் என்று மக்கள் காத்திருக்கிறார்கள்.

எந்த கூட்டணி வெற்றியைப் பெறும் நிலையில் உள்ளது?

2011-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம்  இருந்து வெற்றியைப் பறித்த காங்கிரசின் விஜயதாரணி எம்.எல்.ஏவை தொகுதி மக்களே தொலைகாட்சியில் தான் பார்க்கிறோம் என்று கூறுகிற நிலைதான் இருந்தது. அவரைக் காணவில்லை என்ற சுவரொட்டி எல்லாம் ஒட்டப்பட்ட பின்னும் 2016-ம் ஆண்டு திமுக கூட்டணியில் போட்டியிட்ட போது பேரூராட்சி, ஊராட்சி அளவில் காங்கிரஸ் கட்சி கொண்டிருந்த கட்டமைப்பு கை கொடுத்ததால் வெற்றி பெற்றார்.

இவரை எதிர்த்து போட்டியிட்டு 33,143 வாக்கு பின்தங்கியிருந்த பாரதிய ஜனதா இந்த முறை அதிமுக கூட்டணியில் வெற்றி பெற முயற்சிக்கிறது. ஆனால் அதிமுக கடந்த முறை இந்த தொகுதியில் நான்காவது இடத்தைத் தான் பெற்றது. அப்போது போட்டியிட்ட நாஞ்சில் டொமினுக்-கிற்கும், மாவட்டச் செயலாளர் ஜான் தங்கத்திற்குமான பனிப்போரில் இங்கு கட்சி காணமல் போய்விட்டது என்பதும், அமமுக பிரிக்கும் ஓட்டுகள் எனவும் எப்படிப் பார்த்தாலும் கடந்த முறை விட்ட 33,143 வாக்குகளைப் பெற அதிமுக கூட்டணிக்கு வாய்பில்லை. அதே நேரத்தில் இந்த முறை மக்கள் நலக் கூட்டணியில் நின்று 25 ஆயிரம் வாக்குகளை வாங்கிய இடதுசாரிகள் திமுக கூட்டணியில் சேர்ந்திருப்பதும், மத்திய மாநில அரசுகளின் மீது மக்களுக்கு இருக்கும் கோபமும் திமுக கூட்டணி வேட்பாளரை வெற்றி பெற வைக்கும் என்பதே விளவங்கோடு நிலவரமாக இருக்கிறது.

குமரி மாவட்டத்தின் மற்ற ஐந்து தொகுதிகளை நாளை பார்க்கலாம். இணைந்திருங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *