நமது கழிவுகளில் மூச்சுத்திணறும் உயிரினங்கள் – புகைப்படத் தொகுப்பு

இந்தியாவில் குப்பை மற்றும் கழிவுகள் மேலாண்மை முறையாக நடக்காத காரணத்தினால் பிற உயிரினங்களும், வன விலங்குகளும் மோசமான நிலையில் வாழ்வைத் தொலைப்பதற்கு தள்ளப்பட்டிருக்கின்றன. நமது அக்கறையின்மையையும், அரசாங்கத்தின் திட்டமிடல் முறையாக இல்லாததாலும் வன உயிரினங்கள் யானைகளும், குரங்குகளும், குள்ளநரிகளும், பறவைகளும் இதர வன உயிரிகளும் பிளாஸ்டிக்கை உண்டு மூச்சுத்திணறும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதை இந்த புகைப்படத் தொகுப்பு நம் கண் முன்னே கொண்டுவந்து, நம் குற்றத்தினை முகத்தில் அறைந்து சொல்கிறது. 

Sanctuary Nature Foundation என்ற நிறுவனம் இவற்றை ஆவணப்படுத்தி வெளிக்கொண்டுவர இந்தியா முழுதுமிருந்து புகைப்படவியலாளர்களுக்கு இன்ஸ்டாகிராம் வழியே அழைப்பு விடுத்தது. இந்த பிராஜக்டிற்கு #InOurFilth என்று பெயரிடப்பட்டது. நமது குப்பைகள் நாட்டின் வன உயிரினங்களின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தினை விளக்கும் படங்களை அனுப்புமாறு கேட்கப்பட்டது. 

வந்து சேர்ந்த படங்கள் மிகவும் அதிர்ச்சிக்குரியதாக இருந்தன. Use and Throw என்ற பெயரில் நாம் வாங்கிக் குவித்து தூக்கி எரியும் பொருட்களும், குப்பைகளும் எத்தனை உயிர்களை அழிவின் விளிம்பிற்கு தள்ளிக் கொண்டிருக்கின்றன என்பதை இந்த படங்கள் பேசுகின்றன. 

மகாராஷ்டிரா மாநிலத்தின் டடோபா-அந்தாரி புலிகள் சரணாலயத்தில் புலிக்குட்டி ஒன்று பிளாஸ்டிக் பை ஒன்றை வாயில் கவ்விக் கொண்டு செல்கிறது. புலிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து கொண்டிருக்கும் சூழலில் புலிக்குட்டிகளின் மீது ஒரு அசாதாரண சூழலை திணித்திருக்கிறோம் நாம்.
புகைப்படவியலாளர் – Bapat Daksha
மேற்குவங்கத்தின் அஜய் நதிப்படுகையில் சிதறிக் கிடக்கும் பாட்டில் ஒன்றின் அருகில் சிறிய குருவி ஒன்று தவழ்ந்து வருகிறது. உலகம் ஒவ்வொரு நிமிடத்திற்கு 1 மில்லியன் தண்ணீர் பாட்டில்கள் விற்கப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை மறுசுழற்சி செய்யப்படுவதில்லை.
புகைப்படவியலாளர் – அக்னிஸ்வர் கோஷல்
தமிழ்நாட்டின் வால்பாறையில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள சிங்கவால் குரங்கு ஒன்று பார்சல் சாப்பாட்டுடன் வரும் தூக்கி எறியப்பட்ட குழம்பு பாக்கெட்டினை கடித்துக் கொண்டிருக்கிறது.
புகைப்படவியலாளர் – Mohan G
லடாக் பகுதியில் இமாலயன் அணில் ஒன்று கூடு கட்டுவதற்காக பொருட்களை சேகரித்து வரும்போது பிளாஸ்டிக் பைகளை எடுத்துவந்து மாட்டி இழுத்துக் கொண்டிருக்கிறது. ஒழுங்குப்படுத்தப்படாத சுற்றுலாவின் காரணமாக இப்பகுதியானது தொடர்ந்து மாசுபடுத்தலுக்கு உள்ளாகிறது.
புகைப்படவியலாளர் – Prajwal KM
மேற்கு வங்கத்தின் சிலிகுரி பகுதியில் யானை ஒன்று உணவுக்காக குப்பைகளைத் தேடி, குப்பைகளில் உள்ள காய்கறிகளுக்காக பிளாஸ்டிக் பைகளுடன் சேர்த்து உண்ணுகிறது. இது யானைகளின் உடல்நலத்தைக் கேடாக்கி இறப்புக்கே இட்டுச் செல்லும்.
புகைப்படவியலாளர் – Arijit Mahata
கோவாவின் காவ்ரெம் பகுதியில் மரத்து எலி ஒன்று தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் பையிற்குள் புகுந்துள்ளது.
புகைப்படவியலாளர் – Omkar Dharwadkar
தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் இருட்டில் மட்டுமே வெளிவரக் கூடிய பழுப்பு பனை சிவெட் ஒன்று பகலில் பிளாஸ்டிக் குப்பைகளுக்கு நடுவே உழன்று கொண்டிருக்கிறது.
புகைப்படவியலாளர் – Tharini JE
மகாராஷ்டிராவின் அகமத் நகர் பகுதியின் புல்வெளியில் ஓநாய் ஒன்று பிளாஸ்டிக் பைகளை கிழித்து குதறிக் கொண்டிருக்கிறது.
புகைப்படவியலாளர் – Rishikesh Lande
குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உவர் நிலப் பகுதியில் யூரேசியன் பருந்து ஒன்று வீசப்பட்டுக் கிடக்கும் செருப்பு ஒன்றின் மீது நின்று கொண்டிருக்கிறது.
புகைப்படவியலாளர் – SuketuKumar Purohit
மகாராஷ்டிராவின் திபேஷ்வர் வனவிலங்குகள் சரணாலயத்தில் புலிக் குட்டி ஒன்று பிளாஸ்டிக் பாட்டில் வாயால் கடித்து எடுத்துச் செல்கிறது.
புகைப்படவியலாளர் – Santosh Nimbalkar
புதுதில்லியின் குருகிராம் மாவட்டத்தில் இரண்டு மஞ்சள் நிற பறவைகள் குப்பைகளுக்கு நடுவே வாழத் தள்ளப்பட்டிருக்கின்றன.
புகைப்படவியலாளர் – Anirban Roy Chowdhury
பிளாஸ்டிக் குப்பை கழிவுகளுக்கு நடுவே காட்சியளிக்கும் சிறிய வகை அணில் ஒன்று.
புகைப்படவியலாளர் – Tirth Vaishnav
கர்நாடகாவின் தார்வாட் பகுதியில் தண்ணீர் பாம்பு ஒன்று பிளாஸ்டிக் கழிவுகளுக்கு நடுவே தனது உணவை தேடிப் பிடித்துக் கொண்டிருக்கிறது.
புகைப்படவியலாளர் – Vaidehi Gunjal
மேற்குவங்கத்தின் மால்டா மாவட்டத்தில் கங்கை நதியின் சிறு தீவு ஒன்றில் சுற்றுலா பயணிகளால் தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் உணவுத் தட்டுகளை நரி ஒன்று தன் நாக்குகளால் எடுத்துக் கொண்டிருக்கிறது.
புகைப்படவியலாளர் – Soumen Bakshi

நன்றி – Scroll.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *