தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்-க்கோ, அதன் கிளை அமைப்புகளுக்கோ ஒரு பத்து பேர் ஒரு பகுயில் இருந்து விட்டால் அவர்கள் உடனடியாக அந்த பகுயில் மாராத்திய மன்னன் சிவாஜியின் படம் தாக்கிய பாதாகைகளை வைத்து விடுவார்கள். சிவாஜி என்ற மன்னன் இருந்தான், அவன் சாதாரண மன்னன் அல்ல, அவர் ஒரு இந்து பேரரசர், முஸ்லீம்களுக்கு எதிரானவர், இந்து மதத்தை பாதுகாத்தவர், பசுக்களையும், பிராமணர்களையும் போற்றி வணங்கியவர், அதனால்தான் அவரை சத்ரபதி சிவாஜி என்று அனைவரும் அழைத்தனர்” என்று சிவாஜியை காவித் தலைவனாக கதை எழுதி விடுவார்கள்.
ஆனால் சிவாஜியின் உண்மை வரலாறு அவ்வாறு இல்லை என்பதும், அந்த மாவீரன் சூத்திரன் என்பதாலேயே பார்ப்பனர்கள் அவனை பதவி ஏற்க விடாமல் தடுத்து அதற்கு பரிகாரம் என்ற பெயரில் பணம் பறித்ததும் தான் வரலாறு என்பதை அவர்கள் மறைத்து விடுகிறார்கள்.
ஒளரங்கசீப்பிற்கும், சிவாஜிக்கும் நடந்த போர் இந்து-முஸ்லீம் மோதலா?
1664 முதல் 1670-ம் ஆண்டுவரை ஆட்சிக்கட்டிலில் இருந்தவர் சிவாஜி. அப்போது முகலாய அரசின் பேரரசராய் வீற்றிருந்தவர் ஒளரங்கசீப். அதனால் அவர்கள் இருவருக்குள்ளேயும், பூசல்களும், போர்களும் எழுந்தன என்பது வரலாற்று உண்மைதான்.
ஒப்பீட்டளவில் ஒளரங்கசீப்பின் ஆட்சிப்பரப்பு மிகப்பெரியது. ஏறத்தாழ தமிழ்நாடு நீங்கலான அன்றைய இந்தியா முழுவதும் அவருடைய ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. அதனால் அடங்கமறுத்த சிவாஜியின் மீது ஒளரங்கசீப் போர் தொடுத்ததும், சிவாஜியை சிறையில் அடைத்ததும் வரலாற்று நிகழ்வுகள். ஒளரங்கசீப்பிற்கு பதிலாக ஒரு இந்துப் பேரரசரே கூட ஆட்சியில் இருந்திருந்தாலும், அந்த போர் நடந்தே இருக்கும்.
அதேபோல சிவாஜிக்கு பதிலாக ஓர் இசுலாமியச் சிற்றரசன் அடங்க மறுத்தாலும் ஒளரங்கசீப் போர் தொடுத்தே இருப்பார். எனவே அது அரசர்களுக்கு இடைப்பட்ட போர் மட்டுமே. அதனை ஆர்.எஸ்.எஸ்., பாஜக, போன்ற மதவாத அமைப்புகள் இன்றும் மதங்களுக்கு இடையிலான யுத்தம் என்றே காட்டுகின்றன, ஒரு போதும் மதங்களுக்கு இடையிலான மோதல் என்று அதனை திசைதிருப்ப முடியாது.
முஸ்லீம்கள் மீது மரியாதை கொண்டிருந்த சிவாஜி
சிவாஜி இந்து மதத்தின் மீது நம்பிக்கை கொண்டவர். ஆனால் இஸ்லாமியர்களிடமும் உண்மையான புனிதத்தை அவரால் அடையாளம் காண முடிந்தது. அதனால்தான் அவர் பாபா யாகுத் என்ற இசுலாமிய புனிதத் துறவிக்கு கெலேசி என்னும் இடத்தில் தர்காவை நிறுவினார். அவரது அரசின் கீழ் அனைத்து மதங்களுக்கும் சமமாக கருதபட்டது. சிவாஜி குவாசி ஹைதர் என்ற முஸ்லீம் செயலாளரை நியமித்தார்.
சிவாஜியின் படையில் தௌலத் கான் உள்ளிட்ட பல்வேறு முஸ்லிம் தலைவர்கள் இருந்தனர். அவரது படைத்தலைவராக இருந்த சித்தி மிஸ்ரி ஒரு அபிசீனியன். சிவாஜியின் மிக நம்பகமான வெளியுறவு செயலர் முல்லா ஹைதர். ஆக்ரா சிறையிலிருந்து சிவாஜி தப்ப உதவியவர் அவரது மிக நம்பகமான வேலைக்காரரான மதானி மஹ்தர் என்பதெல்லாம் வரலாற்றில் வலதுசாரிகள் மறைக்க முயலும் உண்மை.
எந்த ஒரு பெண்ணைத் தொடவோ அல்லது முஸ்லிம் பள்ளிவாசலையோ, ஆசிரமத்தையோ கொள்ளையடிக்கவோ கூடாதென தனது படைவீரர்களுக்கு கண்டிப்பான கட்டளையிட்டிருந்தார். படையெடுப்பின் போது கைப்பற்றப்படும் முஸ்லிம்களின் புனித நூலான குரானை மரியாதையுடன் முஸ்லிகளிடம் ஒப்படைக்க கட்டளையிட்டிருந்த அவரைத்தான் காவித் தலைவனாக கட்டமைக்க முயல்கிறார்கள்.
சூத்திரர்களின் மாமன்னராக திகழ்ந்தார்
சிவாஜி ஒன்றும் பார்ப்பனியக் கூட்டத்தை மட்டுமே தன்னை சுற்றிலும் வைத்துக்கொண்டு ஆட்சி செய்யவில்லை. அவனது ஆட்சியில் சூத்திரர்கள் முக்கியப் பதவிகளை வகித்தனர். அன்று தீண்டத்தகாதவர்களாக நடத்தப்பட்ட மக்களையும், மஹர்களையும் தனது கோட்டைகளின் தளபதியாக்கினார். விவசாயிகளை கனிவோடு நடத்தினார். விவசாயிகளுக்கு நிலவுடமையாளர்களால் ஏற்பட்ட அனைத்து பிரச்சினைகளையும் நேரடியாக தலையிட்டு முடிவுக்குக் கொண்டுவந்தார். அதனால் தான் மகாத்மா ஜோதிராவ் பூலே சிவாஜியை மண்ணின் மைந்தனாய்ப் புகழ்ந்தார்.
சிவாஜி முடிசூட்டிக் கொள்வதைத் தடுத்த பார்ப்பனர்கள்
மண்ணின் மைந்தனாக சிவாஜி எழுந்து போராடினார் என்பதும் உண்மை. முகலாயப் பேரரசர் ஒளரங்கசீப்பை எதிர்த்து களம்கண்ட அந்த மாவீரனை பார்பனியம் சமமாக நடத்தியதா என்றால் இல்லை. எதிரியோடு போராடி வெற்றி பெற்று தன் சொந்த மண்ணை அவர் மீட்டெடுத்தார் என்றாலும், அம்மண்ணிற்கு அரசனாக அவர் முடிசூடிக் கொள்வதற்கு ஆயிரம் தடைகள் இருந்தன. அவர் பிறந்த சமூகம் ஆளப்பிறந்த சமுகம் அல்ல என்று சொல்லி, ஒருநாளும் அவர் மன்னராக முடியாது என்று வைதீகப் பார்ப்பனர்கள் வாதிட்டனர். இது குறித்து “மராட்டியர்களின் புதிய வரலாறு” என்ற புத்தகத்தில் கோவிந்த் சகாரம் சர்தேசாய் விரிவாக எழுதியுள்ளார்.
ஒரு சூத்திரன் எப்படி நாடாளலாம் என்று கேள்வி எழுப்பினர். போரிலே புலியாக இருந்தாலும், வைதீகச் சதியில் சிவாஜி எலியாக சிக்கிக் கொண்டார். மராட்டியம் பெற்றெடுத்த மாவீரன், களத்திலே சூரன் சிவாஜி, மாராத்திய பார்பனர்களுக்கு சூத்திரனாகவே இருந்தார் என்பதும் உண்மை. பூணூல் அணியவும், சடங்குகளில் வேத உபநிடதங்களை உச்சரிக்கத் தகுதியுள்ள ஒரு சத்திரியனாகவும் அங்கீகரிக்கப்படாதவரை, வெற்றி கொண்ட நிலப்பரப்புகளிலும், சிவாஜியை நிம்மதியாக வாழவும் ஆளவும் விடவில்லை என்பதே உண்மை என்பதை ”சிவாஜியும் அவரது காலமும்” என்கிற நூலில் ஜாதுநாத் சர்கார் குறிப்பிடுகிறார்.
மராத்திய மண்ணை பார்ப்பனர்கள் கமண்டல நீர் தெளித்து மீட்கவில்லை. மராத்தியர்கள் ரத்தம் சிந்திய பிறகே அந்த மண் மீட்கப்பட்டது. ஆனால் அதுவரை காத்திருந்த பார்ப்பனர்கள், சிவாஜி ஆட்சிப் பீடம் ஏறும் தருவாயில் தங்கள் சூழ்ச்சி வலைகளை விரித்தனர். வேறு வழியின்றி சிவாஜியும் அதற்கு ஆட்பட்டார்.
சிவாஜியை காவித் தலைவனாகக் காட்டி தன்வயப்படுத்த முயலும் இந்துத்துவ அரசியல்
தன் மண்ணை மீட்கப் போராடிய ஒரு மாவீரனை சாதியை காரணமாக்கி இழிவுபடுதியவர்கள் இன்று அரசியல் செய்வதற்கு மதசார்பின்மையின் சிகரமான அவரை காவிக் கூட்டத்தின் முன்னோடியாகக் காட்ட சதி செய்கிறார்கள். இந்த பொய் புரட்டுகளை அம்பலபடுத்தி ”சிவாஜி கோன் ஹோட்டா” தமிழில் ”மாவீரன் சீவாஜி காவித் தலைவன் அல்ல காவியத் தலைவன்” என்ற புத்தகம் எழுதிய கோவிந்த் பன்சாரேவை கொலை செய்தார்கள். வரலாற்றில் நடந்த சில உண்மை சம்பவங்களைத் தொகுத்து தனது மதவாத அரசியலுக்கு பயன்படுத்தும் போக்கை கற்றறிந்த சமூகம் உண்மைகளை உரக்கக் கூறி மறுக்கவில்லை என்றால் எதிர்காலம் மிகவும் ஆபத்தானதாகிவிடும்
சிவாஜி குறித்து முழுமையாகத் தெரிந்துகொள்ள வாசிக்க வேண்டிய புத்தகங்கள்
- சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம் அறிஞர் அண்ணா
- சிவாஜி முடி சூட்டலும் பார்ப்பன சதியும் அறிஞர் அண்ணா, சர்.ஏ.ராமசாமி முதலியார்
- மாவீரன் சிவாஜி காவித் தலைவன் அல்ல காவியத் தலைவன் கோவிந்த் பன்சாரே