ராகுல் காந்தி

கடலில் குதிக்கும் ராகுலிடம் தமிழக மீனவர்கள் எதிர்பார்ப்பது என்ன?

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி-யுமான ராகுல் காந்தி கடலில் குதித்து மீனவர்களுடன் நீச்சல் அடிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாடு மற்றும் கேரளாவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, கொல்லம் வாடி கடற்கரைக்குச் சென்று அங்குள்ள மீனவர்களுடன் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றார். கடலினுள் சிறிது தூரம் சென்ற ராகுல்காந்தி மீனவர்களுடன் இணைந்து வலைகளை விரித்தார். அதனை சரிசெய்ய மீனவர்களில் சிலர் கடலில் குதிக்க சற்றும் யாரும் எதிர்பாராத வகையில் ராகுலும் கடலில் குதித்தார். இதனால் உடன் சென்றவர்கள் பதறிப்போயினர். ஆனால் ராகுலின் தனிப்பாதுகாவலரான அலங்காய், ராகுல் நீச்சலில் கைதேர்ந்தவர் என தெரிவித்துள்ளார்.

ராகுல் கடலுக்குள் செல்வதும் மீனவர்களுடன் வலை பிடிப்பதும், இதன் மூலம் இந்திய மீனவர்களின் வாழ்க்கைப் போராட்டத்தை தெரிந்து கொண்டால் வரவேற்கத்தக்கது தான்.

இது மிகச் சாதாரணமாக சாகச மனநிலை கொண்ட இளஞர்கள் மேற்கொள்ளும் சாகசம் தான். இந்த சாகசங்கள் மட்டுமே மீனவர்களின் வாழ்வை மீட்டு விடாது.

இந்தியத் துணைக்கண்டத்தின் மீனவர்கள் மீது நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் சட்டங்களின் தாக்குதல்களும், கடற்கரைகளை அதானி உள்ளிட்ட பெரு முதலாளிகள் கைப்பற்றுவதும் மீனவர்கள் வாழ்வில் எற்படுத்தும் தாக்கம் சாதாரணமானது அல்ல.

இந்தியத் துணைக்கண்டம் முழுவதுமுள்ள பாரம்பரியமாக மீன்பிடி தொழிலை நம்பியிருக்கும் மீனவர்களை கடலில் இருந்து அப்புறபடுத்தும் வகையில் கடற்கரை மேலாண்மை மண்டலங்களும், தேசிய மீன்பிடி மசோதாவும், சாகர்மாலா என்ற பெயரில் வணிகத் துறைமுகங்களும் காத்திருக்கின்றன. 

1076 கி.மீ நீளமுள்ள தமிழக கடற்கரை

பழவேற்காடு முதல் நீரோடி வரை மொத்தம் 1076 கி.மீ நீளமுள்ள கடற்கரையைக் கொண்ட தமிழகத்தில் பல லட்சம் மீனவர்கள் கடலை நம்பி இருக்கிறார்கள். இவர்கள் வருடத்திற்கு சராசரியாக 4.97 லட்சம் டன் மீன்களைப் பிடிக்கிறார்கள். இது நமது உள்ளூர் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதுடன், ஏற்றுமதியின் மூலம் அந்நியச் செலாவணியையும் உருவாக்கிக் கொடுக்கிறது.

கடற்கரை மேலாண்மை மண்டலம்

கடற்கரை மேலாண்மை மண்டலம் என்பது கடலை மூன்றாகப் பிரிக்கிறது. கடற்கரையை ஒட்டிய 12 நாட்டிகல் மைல் வரை Territorial sea என்ற பெயரில் மாநில அரசுக்கு உட்பட்ட பகுதியாகவும், மீனவர்கள் மீன் பிடிக்கக் கூடிய பகுதியாகவும் அறிவிக்கப்பட உள்ளது. 12 நாட்டிகள் மைல் முதல் கரையில் இருந்து 200 நாட்டிகள் மைல் வரையான பகுதியை Exclusive economic zone என்ற பகுதியாக அறிவிக்கிறது. அதற்கு மேற்பட்ட கடல் பரப்பு என்பது high sea என்ற பெயரில் சர்வதேச கடலாகிறது.

தமிழக மீனவர்களைப் பொறுத்தவரை 12 நாட்டிகல் மைல் என்பது கட்டுமரங்கள் மீன்பிடிப்பதற்கான பகுதி கூட கிடையாது. மாலையில் சென்று காலையில் திரும்பும் மீனவர்களே மிகச் சாதாரணமாக 200 நாட்டிகல் மைல் தாண்டி சென்றால்தான் அவர்கள் தேவைக்கான மீன்களைப் பிடிக்க முடியும். தமிழகத்தைப் பொறுத்தவரை இந்தியாவில் EEZ என்ற பகுதியில் 9.4 சதவீதம் தமிழக மீனவர்கள் தொழில் செய்து வருகின்றனர்.

இனி 12 நாட்டிகல் மைலைத் தாண்டி கடலில் மீன் பிடிக்கச் செல்ல வேண்டும் என்றால் அதற்கு தனி உரிமம் பெற வேண்டும். மேலும் தனி சுங்கவரியும் கட்ட வேண்டும். இதனை வசூல் செய்யும் உரிமை இந்திய கடல் பாதுகாப்புப் படையைச் சாரும். 

இந்த அனைத்து ஏற்பாடுகளும் நாட்டுப் படகுகள் முதல் விசைப் படகுகள் வரை பல்வேறு வகையான படகுகளை பயன்படுத்தும் அத்தனை மீனவர்களையும் முற்றிலுமாக கடல் தொழிலில் இருந்து அப்புறப்படுத்தும் வழிகளே ஆகும்.

200 நாட்டிகல் மைலுக்கு அப்பால் உள்ள High Sea என்கிற பகுதியை முழுமையாக சர்வதேச கடல் என அறிவிக்கிறார்கள். United Nations Convention on the Law of the Sea என்ற ஐநா விதியை 1995-ல் இந்தியா ஏற்றுக்கொண்டது. அதுவே இப்பொழுது சட்டமாகிறது. அச்சட்டத்தில் மீன் பிடிக்க தனி ஒப்பந்தகள் போடப்படும். இதில் நம் மீனவர்கள் நுழைவதற்கான வாய்ப்பே இல்லாமல் போகும். 

வங்காள விரிகுடாவிற்கும், அரபிக் கடலிற்கும் தமிழகத்தில் இருந்து மீனவர்கள் ஆழ்கடல் மீன் பிடிப்பிற்குச் செல்கிறார்கள். தமிழகத்தில் இருந்து ஏற்றுமதியாகும் மீன்களில் அதிக அளவு ஆழ்கடல் மீன்பிடிப்பின் மூலம் கிடைப்பவையே ஆகும். தமிழகத்தில் ஆழ்கடலில் மீன்பிடிப்பவர்கள் 45 நாட்களுக்கு மேலாக கடலில் இருப்பவர்கள். மேலும் அவர்கள் 1000 நாட்டிகல் மைல்களைத் தாண்டிச் செல்பவர்கள்.

அவர்களின் மொத்த கடல் பரப்பும் இனி பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்க்கப்படும். நமக்கு கடலுணவு இல்லாமல் போகும் அபாயம் ஏற்படும்.

மீனவ மானியங்களை நிறுத்தக் கோரும் WTO

உலக பொது வர்த்தகக் கழகத்தின் பரிந்துரையின் அடிப்படையில் படகுகளுக்கு கொடுக்கப்படும் டீசல் மானியம் உள்ளிட்டவற்றை 2020-க்குள் நிறுத்தவும் இந்த மசோதா பரிந்துரைக்கிறது. சாகர்மாலா என்ற பெயரில் வணிகத் துறைமுகங்கள் கடற்கரை முழுவதுமே துவங்க போகிறார்கள்.

இது கடலின் கரையையும், கடலை ஒட்டிய நிலங்களையும், ஒட்டுமொத்தமாக மீனவர்கள் மட்டுமல்லாமல் கடற்கரையை ஒட்டிய எல்லா தரப்பு மக்களையும் அப்புறப்படுத்தும்.

பெருநிறுவனங்களின் கூலிகளாக்கப்படும் மீனவர்கள்

மீன் என்பது புரதம் நிறைந்த உணவு, ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கும் சத்துணவு. மீன் பிடிக்கச் செல்கிறவர்கள் சுங்கம் கட்டிட வேண்டும் என்றால் அது மீன் விலை ஏற்றத்தில் தானே முடியும். வரிகட்டி மீன் பிடிக்கச் செல்ல முடியாத நாட்டுப் படகு மீனவர்கள் பெரு நிறுவனங்களின் தொழிலாளிகளாகப் போவார்கள். இதன் மூலம் உற்பத்தி குறைந்து சந்தையில் தட்டுப்பாட்டினால் விலை ஏற்றத்தில் முடியும். 

பெரு நிறுவனங்களின் ஏற்றுமதி விலைக்கு எல்லாம் நம்மால் மீன் வாங்க முடியாது. பாரம்பரியமாக கடலோடு தொழில் செய்யும் இந்தியாவின் 13 கோடி மக்களும் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இருக்கும் பல லட்சம் மக்களும் உள்நாட்டு அகதிகளாக ஆக்கப்படும் ஆபத்தும், நம் கடலுணவு நமக்கு இல்லாமல் போகும் ஆபத்தும் நம் கண் முன்னே விரிந்து கிடக்கிறது.

அதானி குழுமத்தின் துறைமுகங்கள்

இத்திட்டத்திற்குத் தேவையான 6110 ஏக்கர் நிலப்பரப்பில், 2291 மக்கள் பயன்பாட்டில் உள்ள புறம்போக்கு நிலங்கள், 1515 ஏக்கர் TIDCO மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான தனியார் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன.

அதுமட்டுமின்றி ஏற்கனவே துறைமுகம் அமைந்துள்ள 337 ஏக்கர் போக, சுமார் 6 கி.மீ வரையிலான கடல் பகுதிகளில் மணலைக் கொட்டி சுமார் 1967 ஏக்கர் கடல் பரப்பையும் ஆக்கிரமிக்கத் திட்டமிட்டுள்ளது அதானி குழுமம்.

இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் மீன்வளம் வெகுவாகக் குறைந்து ஆப்பிரஹாம்புரம், களஞ்சி, கருங்காளி, காட்டூர், வயலூர், காட்டுப்பள்ளிகுப்பம் உள்ளிட்ட 80 தமிழக – ஆந்திர மீனவ கிராமங்களைச் சேர்ந்த 1,00,000-க்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்.

இதேபோல கன்னியாகுமரி மாவட்டத்தில் கீழமணகுடி முதல் கோவளம் வரையிலான பகுதியில் சரக்கு பெட்டகத் துறைமுகம் அமைக்கத் திட்டமிட்டு மக்கள் எதிர்ப்பால் வேலை துவங்காமல் இருக்கிறது. கேரளாவில் விழிஞியத்தில் அமைக்கப்பட்டுள்ள துறைமுகத்திற்குப் பின் கன்னியாகுமரி மாவட்ட கடற்கறையில் கடல் அரிப்பு அதிகமாகியிருக்கிறது.

ராகுல் செய்ய வேண்டியது என்ன? 

மீனவர்களின் நண்பனாக அவர்களோடு கடலுக்குச் சென்று அவர்களுடன் கடலில் குதித்து அவர்களின் வாழ்க்கைப்பாடுகளை தெரிந்து கொள்ளும் ராகுல், தங்கள் காங்கிரஸ் கட்சி மீனவர்களின் கோரிக்கையை ஏற்று இந்த பேரழிவுத் திட்டங்களை, மசோதாக்களை தீவிரமாக எதிர்க்கும் என்று அறிவித்து அதனை மக்கள் மன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் எதிர்க்க வேண்டும். தங்கள் ஆட்சி அமைகிறபோது ரத்து செய்ய வேண்டும்.

இவற்றை செய்தால் அவர் உண்மையிலேயே மீனவ நண்பனாக ஏற்கப்படுவார். இல்லை என்றால் அவரது செயல்கள் எல்லாம் வேறும் தேர்தல் நேர கூத்துகளாகவே கருதப்படும். இப்போதுவரை காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைகள் கூட இம்மசோதாக்களை எதிர்ப்பதாக அமையவில்லை. எனவே திரு.ராகுல் அவர்களே மக்கள் எதிர்பார்ப்பது செயல்களைத் தானே தவிர, உங்கள் வைரல் வீடியோ ஸ்டண்ட்-களை அல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *