மோனலிசா

தாழப்பறந்திடும் மேகம்-1: மோனாலிசா ஓவியம், புன்னகை மட்டும்தான் மர்மமா?

‘தாழப்பறந்திடும் மேகம்” இது நமது ‘மெட்ராஸ் ரீவியூ’வின் கட்டுரைத் தொடர். இந்த பூவுலகு பல்வேறு அற்புதங்களின் பிறப்பிடம். ஒவ்வொரு நாளும் புதிதான செய்திகள் நம்மை அடைகின்றன. உலகெங்கிலும் பல்வேறு வியத்தகு செய்திகள், நடைமுறைகள் ஆகியவற்றை இந்த மனித இனம் பேணுகின்றது. நம் கண்ணுக்கு எட்டுபவையே செய்தியாக விரிகின்றன. அவையே நமக்கும் பரிமாறப்படுகின்றன. பல செய்திகள் நமக்கு வருவதில்லை நம் கவனத்திற்கும் தெரிவதில்லை. அப்படிப்பட்ட வியத்தகு அறிவியல் பூர்வமான செய்திகளை தேடித்தருவதே இந்த ‘தாழப்பறந்திடும் மேகம்’. எந்தவித வரையறைக்குள்ளும் அடங்காத இந்த கார்மேகம் உங்களது வாசிப்பின் வேட்கைக்காக அடைமழையைப் பொழிவிக்க தாழப்பறந்து வருகிறது.

தினந்தோறும் நாம் சில விஷயங்களை திரும்பத் திரும்ப பார்க்க நேர்கிறது. அவை மிகவும் வெளிப்படையானவையாக இருந்தபோதும், அவற்றை நாம் ஒருபோதும் உற்று கவனித்திருக்க மாட்டோம். அவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட அல்லது பல்வேறு செய்திகளை நமக்கு உணர்த்துவதற்காக ஆழமான சிந்தனையிலிருந்து உதித்தவையாக இருக்கக்கூடும். உதாரணமாக இன்று இணைய வணிகத்தில் உலகளவில் பெரும் பெயர் பெற்ற “அமேசான்” (Amazon) நிறுவனத்தின் பெயர் குறியீடுகளை (Logo) எடுத்துக்கொள்வோமானால் Amazon என்ற பெயரில், அது ஆரம்பிக்கும் ‘A’ என்ற எழுத்திற்கும் கீழே ஒரு அம்புக்குறி இருக்கும். அந்த அம்புக்குறி ‘A’ என்ற எழுத்தில் இருந்து ஆரம்பித்து பின்னோக்கி சென்று  ‘Z’ என்ற எழுத்தின் கீழ் முடியும். இதன் உள்ளார்ந்த அர்த்தமானது ஆங்கில எழுத்துக்கள் ‘A’ ல் ஆரம்பித்து ‘Z’ முடிவதை போல ‘A’ ல் ஆரம்பித்து ‘Z’ வரைக்குமான அனைத்து பொருட்களும், சேவைகளும் அவர்களின் இணையத்தில் கிடைக்கும் என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டுகிறது. இதை நம்மில் பெரும்பாலானவர்கள் கவனித்திருக்கமாட்டோம். 

அதுபோலவே உலகின் மிகப்பிரபலமான ஓவியங்களுள் தலையாயதான ‘மோனாலிசா’ ஓவியத்தை நாம் கண்டிருப்போம். ஓவியத்தில் மோனாலிசாவின் புன்னகை ஒன்றே மர்மமாக இருப்பதாக நாம் படித்திருக்கக்கூடும். மேலோட்டமாக பார்க்கும்போது அவளின் புன்னகை மட்டுமே நம் கவனத்தை ஈர்த்திருக்கக்கூடும். உண்மையில் என்னென்ன குறியீடுகளை ஓவியர் மோனலிசா ஓவியத்தில் வைத்திருக்கிறார்? ஓவியத்தில் நாம் கவனிக்க மறந்திருக்கும் உள்ளடக்கங்களை இப்போது பார்க்கலாம். அதற்குமுன் மோனலிசா ஓவியத்தை இன்னும் ஒருமுறை உற்றுநோக்கிவிட்டு வாருங்கள், முன்நகர்வோம்.  

மோனலிசா ஓவியம்

ஓவியர் லியொனார்டோ டா வின்சி (Leonardo da Vinci)யால் வரையப்பட்ட ஓவியமான மோனலிசா(Mona lisa) பொப்லார் எனப்படும் பலகை சட்டகத்தை கொண்டு வரையப்பட்ட 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வண்ண ஓவியம் (Oil Painting) ஆகும். இப்போது பிரான்ஸ் அரசுக்குச் சொந்தமான இந்த ஓவியம் பாரிஸ் நகரத்தில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில் (Louvre Museum) வைக்கப்பட்டுள்ளது. தலைசிறந்த ஓவியரான ‘லியோனார்டோ டா வின்சி’யின் இந்த மோனலிசா கலைப்படைப்பு இன்றுவரை பல்வேறு விதமான மர்மங்களை, விவரிக்க முடியாத உணர்ச்சிகளை தாங்கி நிற்கிறது. 

இந்த உருவப்படத்தில் இருப்பவர் 24 வயதான ‘லிசா டெல் ஜியோகோண்டோ’ (Lisa del Giocondo) ஆவார். லிசா டெல்,1503-ம் ஆண்டில் இத்தாலியில் நிலவிய கலை மறுமலர்ச்சி காலத்தில் (Italian Renaissance) அங்கு புகழ்பெற்று விளங்கிய ஒரு பணக்கார புளோரண்டைன் பட்டு வணிகரின் மனைவியும் ஐந்து குழந்தைகளின் தாயும் ஆவார். இன்றுவரை ‘மோனலிசா’ ஓவியமானது உலகின் மிகப் பிரபலமான கலைப்படைப்பு என்பதில் சந்தேகமில்லை. அதேவேளையில் அதில் மறைமுகமாக சில உள்ளடக்கங்களை டாவின்சி வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

மர்மமான பெண் அமர்ந்திருக்கும் நாற்காலி?

லியோனார்டோவின் இந்த ஓவியத்தில் நாம் உற்றுநோக்கினால் உட்கார்ந்திருக்கும் பெண் தன் கையை வைத்திருப்பது ஒரு நாற்காலியின் கைப்பிடியில் என்பதைக் காணலாம். (அவள் தன் கையை நாற்காலியில் வைத்திருப்பதை தனது ஒவ்வொரு விரலிலும் சுட்டிக் காட்டுகிறாள்). இந்த நாற்காலியானது உறுதியாக நாம் கவனிக்க மறந்த, அதிகமாக பார்க்கும் ஓவியத்தில் மிகவும் புறக்கணிக்கப்பட்ட அம்சமாகவே இருக்கிறது. இந்த நாற்காலி வெற்றுப் பார்வையில் மறைந்திருப்பது போல வரையப்பட்டிருப்பதானது ஓவியத்தின் சில  ஆழமான அர்த்தங்களுக்கு வழிவகுக்கக்கூடிய சுட்டியாகவும் இருக்கலாம். இதை இப்போது கவனித்துக் கொள்ளுங்கள். அதன் அர்த்தத்தை பின்பு பார்க்கலாம்.

டாவின்சியால் முடிக்கப்படாத ஓவியம்

பல நூற்றாண்டுகளாக அனைவரின் கவனமும் இந்த சிறிய (77 x 53cm / 30 x 21in) ஆயில்-ஆன்-பாப்லர் பேனல் எனப்படும் இதன் சட்டகங்களில் அமைந்திருக்கும் ஓவியத்தின் உள்ளடங்கங்களைத் தவிர வேறு ஒரு குறிப்பிட்ட இடத்தில்தான் நம் அனைவரின்  கவனமும் சென்றிருக்கிறது. அது மோனாலிசாவின் மர்ம புன்னகை. இந்த ஓவியத்தைப் பற்றி மேலும் சொல்லவேண்டிய இன்னும் பல அம்சங்கள் இருக்கிறது. அதில் ஒன்று டாவின்சியால் முழுவதும் முடிக்கப்படாத ஒரு ஓவியமாகவே இது இருந்திருக்கிறது. டாவின்சி  மோனலிசா ஓவியத்தை 1519-ல் தான் இறக்கும்வரை தொடர்ந்து தீவிரமாக இதன் உள்ளடக்கத்தை மேம்படுத்தும் வேலையை செய்து கொண்டிருந்ததாகத் தெரிகிறது. அவரின் இந்த தீவிரத்தன்மையே இந்த ஓவியத்தை விவரிக்க இயலாத ஒரு முடிவற்ற தோற்றமாக மாற்றியதாக எண்ண வேண்டியிருக்கிறது.

ஓவியத்தைப் போலவே பழமையான விவரிக்க முடியாத புன்னகை

முக்கியமாக மோனாலிசாவின் விவரிக்க முடியாத புன்னகையானது இந்த ஓவியத்தைப் போலவே பழமையானது. புகழ்பெற்ற மறுமலர்ச்சி எழுத்தாளரும் வரலாற்றாசிரியருமான ஜியோர்ஜியோ வசாரி (Giorgio Vasari), இந்த ஓவியத்தைப் பற்றி சொல்லும்போது “ஓவியத்தில் மோனாலிசாவின் வாய், அவரின் உதடுகளின் திறப்பிலிருந்து தொடங்கி அதன் மற்றொரு முனையான உதடுகளின் மேல்பகுதியான விளிம்புகள் முகத்தின் சிவப்பு வண்ணத்துடன் இரண்டறக் கலந்து, உதட்டின் விளிம்புப் பகுதி தெளிவாக தெரியாதவாறு முகத்துடனே ஒன்றிணைந்துள்ளது” என்று கூறுகிறார். 

உண்மைதான்,புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியரான வசாரி தனது வாழ்வின் பெரும் பகுதியை மிகச் சிறந்த ஓவியர்கள், சிற்பிகள் மற்றும் கட்டிடக் கலைஞர்களுடனே கழித்திருக்கிறார். மேலும் அவர் மோனலிசா ஓவியத்தைப் பற்றி கூறுகையில், “ஓவியத்தில் பயன்படுத்தியிருப்பது உண்மையாகவே வண்ணங்கள் அல்ல என்றுதான் அது மாயத்தோற்றம் காட்டுகிறது. மோனாலிசாவின் முகத்தசை மற்றும் தொண்டைக் குழியை ஒருவர் உற்றுநோக்கினால் அங்கு அவளின் நாடி துடிதுடிப்பைக் காணலாம்” என்கிறார். 

மேலும் “லியோனார்டோவின் இந்த ஓவியத்தில், மோனாலிசாவின் புன்னகையானது மிகவும் அற்புதமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. மேலும் இந்த புன்னைகையை எதனுடன் ஒப்பிட்டாலும் அதைவிட புனிதமானதாகவே காட்சியளிக்கிறது. அற்புதமான ஒன்று என்று கருதும் வேளையில் இது வெறும் ஓவியம்தான் என்பதை ஒருகணத்தில் மறக்க நேர்கிறது. அப்போது அவள் உயிருடன் இருப்பவளைத் தவிர வேறு ஒன்றும் இல்லை” என்று அதன் மற்றொரு மர்மத்தை விடுவித்திருக்கிறார்.

விவரிக்க முடியாத மர்மங்களை சுமந்து நிற்கும் மோனலிசாவின் புன்னகையானது “மனிதர்களின் புன்னகையைக் காட்டிலும் புனிதமானது” போலவும், “எப்போது நோக்கினாலும் உயிருடன்” இருப்பதாகவே தோற்றம் காட்டுவதையும் எப்படி டாவின்சியால் உருவாக்கியிருக்க முடியும்? இந்த மர்மத்தை அறிவதற்காகவே தன்னுடைய வாழ்நாளில் பெரும்பகுதி செலவிட்டவர்கள் எண்ணற்றவர்கள் என்பது நமக்கு மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

விளக்க இயலாத முரண்நிலைகளைக் கொண்ட ஓவியம்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரெஞ்சு நாட்டின் ஓவியர் ஆல்ஃபிரட் டுமெஸ்னில் (Alfred Dumesnil) மோனலிசாவின் ஓவியமானது “‘விளக்கவியலாத முரண்நிலைகளைக்’ கொண்டிருக்கிறது என்றும் அதைப்பற்றி மேலும் ஆராய்கையில் அந்த ஆய்வே நம்மை முற்றிலும் முடக்குகிறது” என்றும் ஓவியத்தைப் பற்றிய தனது ஒப்புதலை கொடுத்திருக்கிறார். மேலும் “புன்னகை நம்மை முழுவதும் கவர்கிறது, நம் மனதை ஆக்கிரமிக்கிறது. வெளிப்பார்வைக்கு அற்புதமானதாக காட்சியளிக்கும் அவளின் புன்னகை உள்ளே மேலும் உற்றுநோக்குபவர்களை மென்மேலும் தீவிரமாக ஆக்கிரமித்து மனநோயாளிபோல் அந்த புன்னகையையே சுற்றிவர வைக்கிறது. மிக மிக மென்மையான புன்னகைபோல காட்சியளிக்கும் அவளின் புன்னகை, அதைப்பற்றி மேலும் ஆராயச் செல்பவர்களை ஒரு கடலைப்போல விழுங்குகிறது” என்கிறார்.

ஜன்னலில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட ஓவியர்

ஆல்ஃபிரட் டுமெஸ்னில் கூறியது உண்மைதான் என்பது போலவே சில நிகழ்வுகளும் நடந்திருக்கின்றன. மோனலிசாவின் புகழ்பெற்ற “முரண்பாடுகள்” நிறைந்த புன்னைகை பற்றி ஆய்வுசெய்த லூக் மஸ்பெரோ (Luc Maspero) என்ற ஓவியர் பாரிஸ் நகரத்தில் தான் தங்கியிருந்த விடுதியின் ஜன்னலிலிருந்து கிழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இவர் மோனலிசாவின் பரபரப்பான, பளபளப்பான உதடுகள் கூறும் ஊமையான கிசுகிசுக்களால் கவரப்பட்டு தன் அழிவை நோக்கி திசைதிருப்பட்டதாக பகிர்ந்திருக்கிறார். இறப்பதற்கு முன்பான நாட்களில் அவர் “பல ஆண்டுகளாக நான் அவளது புன்னகையுடன் தீவிரமாக சுற்றிக்கொண்டிருக்கிறேன்” என்று நண்பர்களிடம் கூறியிருக்கிறார். அவர் விட்டுச் சென்ற இறுதிக் குறிப்பில் அவர் எழுதியது “நான் இறக்க விரும்புகிறேன்” என்பதுதான்.

சுற்றியிருக்கும் புன்னகை வட்டம்

எவ்வாறாயினும் இதுவரை மோனலிசாவின் காந்தமான புன்னகையின் மர்மத்தின் மையத்தை அவரது புதிரான சிரிப்பிலிருந்து கண்டுபிடிப்பதில் யாரும் திருப்தியடையவில்லை. புகழ்பெற்ற விக்டோரியன் கால எழுத்தாளர் வால்டர் பாட்டர் (Walter Pater) அவளின் புன்னைகையானது  “மென்மையானது” என்று குறிப்பிட்டிருக்கிறார். “மோனாலிசாவின் கைகளும், கண் இமைகளும் நம்மை மனோவசியபடுத்துகின்றன. அவை அதற்குமேலும் இயற்கையை மீறிய உணர்வை பார்ப்பவர்களுக்கு தருகின்றன” என கூறுகிறார். இவர் 1869-ம் ஆண்டில் டாவின்சி பற்றி எழுதிய கட்டுரையில் ” நாம் எல்லோரும் மோனாலிசாவின் முகம் மற்றும் கைகளை மட்டுமே அந்த ஓவியத்தில் கண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் அவளை சுற்றியிருக்கும் புன்னகையின் வட்டமானது பாறைகள் நிறைந்த கடலின் அடியில் ஒரு சிறு ஒளி தோன்றினால் எப்படியிருக்குமோ அப்படியான ஒரு மாயநிலையாக இருக்கின்றது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ரத்தம் குடிக்கும் காட்டேரியைப் போல பலமுறை இறந்து பிறந்திருக்கிறாள்

பாட்டர் மோனாலிசாவின் புன்னகையைப் பற்றியே பெரும்பாலான நேரங்களில் அர்ப்பணிக்கப்பட்டதொரு  தியானத்தை மேற்கொண்டிருந்திருக்கிறார். அப்போது பாட்டரின் மோனலிசா பற்றிய வர்ணனைகளை மற்றொரு புகழ்பெற்ற ஐரிஷ் கவிஞர் “வில்லியம் பட்லர் ஈட்ஸ்” (William Butler Yeats) கவிதைநயம் மிகுந்த வரிகளாக தொகுத்திருக்கிறார். ஈட்ஸ் அப்பொழுது ஆக்ஸ்போர்ட் நிறுவனம் சார்பாக “ஆக்ஸ்போர்ட் நவீன வசனங்களின் புத்தகம்” (Oxford Book of Modern Verse) என்ற ஒரு புத்தகத்தை தொகுத்துக் கொண்டிருந்தார். அந்த புத்தகத்தில் பாட்டரின் வர்ணனைகளைக் கொண்டு “பாறைகளின் இடையே அமர்ந்திருக்கும் அவளின் வயது அந்த பாறைகளைவிட நிலையானது, உயர்வானது. ஒரு ரத்தம் குடிக்கும் காட்டேரியைப் போல அவள் பலமுறை இறந்து பிறந்திருக்கிறாள். ஒவ்வொரு முறை மரிக்கும் போதும் மீண்டெழக்கூடிய கல்லறைகளின் ரகசியங்களையும் அறிந்திருக்கிறாள். ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுப்பவர்களும் அவள் எப்போதெல்லாம்  கடலின் அடியாழத்தில் மூழ்கி நீந்தித் திளைக்கிறாள் என்பதை அறிந்தே வைத்திருக்கிறார்கள். 

கிழக்குலக நாடுகளின் வியாபாரிகளின் மர்மமான, விசித்திரமான மற்றும் அபாயகரமான வலைப்பின்னலில் சிக்கி கடத்தப்பட்டிருக்கிறாள். ஒரு பிறவியில் பலநாட்டு மன்னர்களும் கிரேக்க  ட்ராய் போரில் இறப்பதற்கு காரணமான பேரழகி ஹெலனை பெற்றெடுத்த தாயான கிரேக்க ஸ்பார்டன் மன்னனின் மனைவியான லேடாவாகவும் இருந்திருக்கிறாள் (Leda, was the mother of Helen of Troy). மற்றொரு பிறவியிலோ சிசுபாலனைப் பெற்றெடுத்த மேரியின் தாயான புனித ஆனி- யாகவும் பிறப்பெடுத்திருக்கிறாள் (Saint Anne, the mother of Mary). இவை எல்லாமே யாழ் மற்றும் புல்லாங்குழலின் இன்னிசை போல ஊற்றெடுக்கும் அவளுக்காகவே நிகழ்ந்திருக்கிறது”  என்று வர்ணித்து  “ஓவியம் என்றென்றும் உயிர்ப்புடனே இருக்கிறது” என்று ஈட்ஸ் முடித்திருந்தார். 

இந்த வர்ணனைகளை அறிந்த பாட்டர் முடிவாக “உண்மையில் அவளின் மென்மையானது ஓவியத்தில் அலைகளைப் போல மாறிமாறி வரும் ஓவியத்தின் வண்ணக் கோடுகளில் உறைந்திருக்கிறது, அது இமைக்கும் அவளின் கண்களிலிருந்து ,மூடியிருக்கும் கைகள் வரை அலையலையாக பாய்ந்திருக்கிறது” என்று ஓவியத்தின் மற்றொரு பரிமாணத்தின் ரகசியத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

மனித புலன் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட நிலைத்து நிற்கும் குறியீடு

எப்படியாயினும் பாட்டரின் விளக்கங்கள் அவருக்கு முன் மோனலிசாவின் ஓவியத்தைப் பற்றி ஆராய்ந்த ஆல்ஃபிரட் டுமெஸ்னில் மற்றும் அவளின் புன்னகையினாலேயே இறந்த லூக் மஸ்பெரோவின் விவரணைகளை விட திகைப்பூட்டுகின்றன. காண்பவர்கள் அனைவரையும் கவர்ந்திழுக்கும் மோனலிசாவின் புன்னகையை விட மிகப்பெரிய உயிர்ப்புநிலை அவளின் புன்சிரிப்பின் படிமத்தின் அடியாழத்தில் கசிந்துகொண்டே இருப்பதாக பாட்டர் குறிப்பிட்டிருக்கிறார். “காலங்களில் நாம் காணும் “இங்கே – இப்பொழுது” என்ற நிலையிலேயே என்றென்றும் முடிவின்றி காலகாலத்திற்கும்  நிலைநிறுத்தப்பட்டிருக்கும் விவரிக்கயியலாத பூவுலகைத் தாண்டிய வெளிமண்டலத்தையும்  வியாபித்திருக்கும் பின்னணி அவளுக்கே உண்டானது” என்று விவரிக்கிறார். மேலும் ஓவியத்தின் சட்டத்தின் உள்ளிருப்பது மனித புலன் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட, காலகாலத்திற்கும் நிலைத்துநிற்கக்கூடிய ஒரு குறியீடு அதை ஆராய்வதென்பது விசித்திரமான உணர்வுகள் ஒன்றோடொன்று கலந்திருக்குமாறு தொடக்கமும் முடிவுமற்ற, மீண்டும் மீண்டும் ஆழ்மன உணர்வுகளுக்குள் பாய்வது போன்ற நிகழ்வு என்று கூறுகிறார்.

வசாரியை போலவே பாட்டரும் மோனாலிசாவின் ஓவியத்தில் நிலைத்திருக்கும் சுவாசத்திற்கும், நாடி துடிப்பிற்கும் சாட்சியாக இருக்கிறார். மேலும் அதற்கு காரணம் ஓவியத்தில் காணப்படும்  “இயல்பைக் காட்டிலும் மாற்றி வரையப்பட்டிற்கும் வரைகோடுகள்” ஆக இருக்கலாம் என்கிறார். இயல்பைக் கடந்து முற்றிலும் புதிய முறையில் அமைக்கப்பட்டிற்கும் வரைகோடுகள் அதன் வழக்கமான பண்பின் எல்லைகளைக் கடந்து எதனாலும் பாதிக்காத நிலையை அந்த ஓவியத்திற்கு அளித்திருக்கின்றன என்கிறார். அமர்ந்திருக்கும் மோனலிசாவின் பின்னணியில் காணப்படும் நீர்நிலையின் கற்பனையையே தனது விவரணைகளில் ஓவியத்தின் ஆற்றலாக பாட்டர் வெளிப்படுத்துகிறார். (“கடலின் அடியில் பரவும் ஒளி”, “ஆழ்கடலில் முத்து குளிப்பவர்கள்”, “கிழக்குலகின் வணிகர்கள்” போன்றவற்றைக் குறிப்பிடலாம்). பாட்டரின் கூற்றுப்படியே மோனலிசா என்றென்றும் வற்றாமல் பாயக்கூடிய சிற்றோடை. அவளின் அந்த புன்னகையானது அந்த சிற்றோடையில் இடைவிடாமல் தோன்றுகின்ற நீர்சுழலின் சிற்றலையாக காலகாலத்திற்கும் நீடித்திருப்பாள்.

நீரில் படர்ந்திருக்கும் பாசியின் அடர்பச்சையை நினைவூட்டும் ஆடையின் நிறம்

ஓவியத்தில் பாயும் சிற்றோடையை மோனாலிசாவின் இருபுறமும் வரைந்திருப்பதன் மூலம் அமர்ந்திருக்கும் மோனாலிசாவும் அதேபோன்ற நீரின் தன்மையையே கொண்டிருப்பதாக வலியுறுத்தப்படுகிறது. மேலும்

மோனலிசாவிற்கு டாவின்சி தந்திருக்கக்கூடிய ஆடையின் நிறமும் நீரில் படர்ந்திருக்கக்கூடிய பாசியின் அடர்பச்சையை நினைவூட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது நீரில் அடியாழத்தில் படரக்கூடிய பாசியின் அடர்பச்சையை அணிந்திருக்கும் மோனலிசாவிற்கும் நீருக்கும் இருக்கும் உணர்வுப்பூர்வமான தொடர்பைக் குறிக்கிறது. இதன் மூலம் அவள் நீரில் வாழும் உயிரினங்களின் தன்மையைப் பெற்றவளாக  குறிக்கப் பெறுகிறாள். 

அவளின் ஆடையானது ஓவியத்தில் கீழே செல்ல செல்ல அது நீரில் வாழும் உயிரினங்களின் தோல் போன்று இருண்டதாகவே மாறியிருப்பதாக தோன்றுகிறது. மேலும் அமர்ந்திருக்கும்  மோனலிசாவைக் காண்பவர்களுக்கு அவள் ஒவ்வொரு கணத்திலும் புதியதொரு வசந்தத்தை புலரச் செய்யும் வசந்தத்தின் மலர்ச்சியாகவே இருக்கிறாள். இது நிச்சயமாக டாவின்சியின் உள்மன ஆவலிலிருந்து எழுந்திருக்கிறது.

மரப்பலகையில் அமர்ந்திருப்பதைப் போன்ற தோற்றம்

மோனாலிசாவின் ஓவியத்தை இடதுபுறத்திலிருந்து உற்று நோக்கினால் அவள் பழைய மரப்பலகை அல்லது சிறிய மரஸ்டூல் மீது அமர்ந்திருப்பதாகத் தோன்றும். ஆனால் அது உண்மையில் இத்தாலியின் பிரபலமான “போஸெட்டோ” நாற்காலியாகும்( Pozzetto chair). இத்தாலியில் போஸெட்டோ என்ற வார்த்தைக்கு  “சிறிய கிணறு” என்ற மற்றொரு அர்த்தமும் உண்டு. இதன் மூலம் போஸெட்டோ நாற்காலி  ஒரு நுட்பமான குறியீட்டை பார்ப்பவர்களின் விவரிப்புக்கு அறிமுகப்படுத்துகிறது மேலும் அது ஓவியத்தில் எதிர்பாராதது போலவே வெளிப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னால் காணும் நீர்நிலை

ஓவியத்தில் மோனாலிசாவின் பின்னால் ஒரு அழகான உயிர்ப்புடன் நாம் காணும் நீர்நிலை (இது இத்தாலிய நதியான “ஆர்னோ” -‘Arno’ பாயக்கூடிய பள்ளத்தாக்கின் உண்மையான நிலப்பரப்பைச் சேர்ந்தது என்றும், மற்றும் சில வரலாற்றாசிரியர்கள் அந்த நீர்நிலை அமைப்பு முற்றிலும் கற்பனையானது என்றும் குறிப்பிடுகிறார்கள்). இந்த நீர்நிலை ஓவியத்தில் தொலைவில் இல்லை. ஆனால் அது உட்கார்ந்தவரிடமிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையிலேயே வரையப்பட்டிருக்கிறது. இது அவளுடைய இருப்பைத் தக்கவைக்கும் ஒரு முக்கிய ஆதாரமாகும். உண்மையில் அந்த சிற்றோடைகள் அவளுக்குள்ளே பாய்கின்றன என்ற அர்த்தத்திலேயே அவை காட்சியளிக்கின்றன. 

மோனாலிசாவை ஒரு “சிறிய கிணறு” போன்ற உருவாக்கத்தில் நிலைநிறுத்துவதன் மூலம் டாவின்சி, அவளை ஆக்கிரமித்துள்ள ஓவியத்தின் பரிமாணங்களுக்கு தொடர்புள்ள ஒரு இயங்கிக்கொண்டிருக்கும் பிரபஞ்சமாக அவளை மாற்றியிருக்கிறார்.

கற்பனை நிலப்பரப்பல்ல

கலை வரலாற்றாசிரியரும், டாவின்சி ஓவியங்களைப் பற்றிய  முன்னணி நிபுணருமான மார்ட்டின் கெம்ப் (Martin Kemp) மோனலிசாவின் சித்தரிப்புக்கும் அவள் வசித்த நிலப்பரப்பின் புவியியலுக்கும் இடையேயான ஒரு அடிப்படை தொடர்பைக் கண்டறிந்துள்ளார். டாவின்சி ஒருபோதும் ஆர்னோவின் முந்தைய நிலப்பரப்பையோ அல்லது எதிர்கால கற்பனையின் நிலப்பரப்பையோ வரையவில்லை என்று கெம்ப் தனது “100 மைல்ஸ்டோன்ஸ்” (100 Milestones -2019)  என்ற ஆய்வில் குறிப்பிடுகிறார்.

கெம்ப், மோனாலிசாவின் பின்னணியில் இருக்கக்கூடிய நிலப்பரப்பின் காட்சியானது டாவின்சி அறிந்திருக்கக்கூடிய “புவியின் உள்ளடக்கமாக” மாற்றமடைந்திருக்கிறது என்கிறார். மேலும் இந்த

உருவகத்தில் பெண்ணின் உடலானது “சிறிய உலகம்” அல்லது இந்த பெரிய பூவுலகின் “நுண்ணிய மாதிரி”யாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது என்கிறார். மோனலிசா ஒருபோதும் அங்கு காணக்கூடிய நிலப்பரப்பின் முன்பு அமரவில்லை. அதற்கு மாறாக அவளே அந்த ஓவியத்தில் நிலமாக மாறியிருக்கிறாள் என்கிறார் கெம்ப். 

ஆன்மீக ரீதியில் மிகவும் சிக்கலானது

ஓவியத்தில் லியோனார்டோ பயன்படுத்திய அனைத்து காட்சி சின்னங்களையும் போலவே, போஸெட்டோ நாற்காலியும் பன்முகத்தன்மை வாய்ந்தது. அதுவே பூமியை இயக்கும் நீர்ஆற்றல் மீதான ஓவியரின் நன்கு அறியப்பட்ட மோகத்துடன் மோனாலிசாவை இணைப்பதற்கு அதிகம் உதவுகிறது. மோனலிசா ஓவியத்தில் நுட்பமாக, சிக்கலான குறியீடாக வெளிப்படும். “சிறிய கிணற்றின்” நுட்பமான அறிவுறுத்தல் ஓவியத்தை நீண்ட கலாச்சார விவாதத்தில் ஈடுபட வைத்திருக்கிறது. இந்த ஓவியம் மேலாக பார்க்கும்போது எந்தவித மதகுறியீடுகளும் அற்ற மதச்சார்பற்ற ஓவியம் போல தோன்றுகிறது. ஆனால் உள்ளே உற்றுநோக்கினால் ஆன்மீக ரீதியில் மிகவும் சிக்கலான ஒன்று என்கிறார் கெம்ப்.

கிணற்றடி உருவகம்

“கிணற்றடியில் பெண்கள்” போன்ற சித்தரிப்புகளானவை மேற்கத்திய கலை மற்றும் வரலாறு முழுவதும் பிரதானமானதாகவே இருந்திருக்கின்றன. கிறித்துவ புனித நூலான பைபிளில் (பழைய ஏற்பாடு) ‘எலிசார்’   (Rebecca and Eliezer) கிணற்றடியில்தான் ‘ரெபெக்கா’வை சந்தித்தாகக் குறிப்பிடப்படுகிறது. அதே பழைய ஏற்பாட்டில் ‘ஜேக்கப்’ தனது காதலியான ‘ரேச்சலை’ (Jacob and Rachel) சந்தித்ததும் கிணற்றடியில்தான் என்பதும் முக்கியமானது. இத்தகைய கலை உருவகப் போக்கு குறிப்பாக 17, 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் பிரபலமடைந்தன.

பிரபல கலைஞர்களான ‘பார்டோலோமி எஸ்டேபன் முரில்லோ” (Bartolomé Esteban Murillo) முதல் “ஜியோவானி அன்டோனியோ பெல்லெக்ரினி” (Giovanni Antonio Pellegrini) வரையும், “ஜியோவானி பாட்டிஸ்டா டைபோலோ” (Giovanni Battista Tiepolo) முதல் “வில்லியம் ஹோல்மன் ஹன்ட்” (William Holman Hunt) வரை ஒன்று அல்லது பல்வேறு படைப்புகளில் கதைகளில் இத்தகைய “கிணற்றடி” உருவகத்தை மேற்கொண்டிருக்கின்றனர்.

வரலாற்றின் அதிர்வுகளை கிரகிக்கும் திறன் கொண்டவள்

மேலும் புதிய ஏற்பாட்டின் உறுதிப்படுத்தப்படாத சித்தரிப்புகளின்படி, இறைத்தூதர் கேப்ரியல், கன்னி மரியாள் கிறிஸ்துவைப் பெற்றெடுப்பதாக அறிவிக்கும் தருணமானது ஒரு சிற்றோடைக்கு அருகில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு ஆதாரமாக ரோமானிய பேரரசுவின் காலத்திற்கும் மறுமலர்ச்சி காலத்திற்கும் இடையிலான இடைக்காலப்பகுதியின் கையெழுத்துப் பிரதி ஒன்று விளக்கப் படங்களுடன் கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது. மோனலிசா ஓவியத்திற்கு, மேரியைக் குறிப்பிடும் இந்த பழமைவாய்ந்த சித்தரிப்புகளும் ஒரு படைப்பூக்கத்தை கொடுத்திருக்கலாம். இதுகுறித்து வால்டர் பார்ட்டர்”மோனாலிசா ஓவியம் காலத்தின் முடிவில்லாத மீள்சின்னம், இதுபோன்ற வரலாற்றில் பிரதிபலித்த அதிர்வுகளை கிரகிக்கும் திறன் கொண்டவள் என்பதில் சந்தேகமில்லை. அவள் இல்லாத யாரும் இல்லை” என்கிறார்.

முன்பு குறிப்பிட்டது போல பைபிள் காட்சிகளின் சித்தரிப்புகளுக்கும் மோனலிசா ஓவியத்திற்கும் பல்வேறு ஓப்புமைகள் இருக்கிறது. குறிப்பாக பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு இரண்டிலும்  குறிப்பிடப்படும் ஒரு முக்கிய நிகழ்வான இயேசு, சமேரியாவைச் சார்ந்த பெண்ணுடன் மேற்கொள்ளும் மறைபொருளைக் குறித்தான உரையாடலைக் குறிப்பிடலாம். இந்த உரையாடலின் போது தான் பரமபிதா தன்னை தானே உணருகிறார். 

இந்த உரையாடல் ஒரு கிணற்றடியில்தான் நிகழ்கிறது. மேலும் யோவானின் நற்செய்தியில் இயற்கையான நீரூற்றில் இருந்து எடுக்கக்கூடிய நீர், தவிர்க்க முடியாமல் ஒரு “தாகத்தை” நீட்டிக்கும் நீர் ஆகியவற்றுக்கும் அவர் வழங்கக்கூடிய “ஜீவ நீர்” -க்கும் இடையே இயேசு வேறுபாடு காட்டுகிறார். இந்த வேறுபாட்டில் கிணற்றில் இருந்து கிடைக்கும் நீர் அழிந்துபோகக்கூடிய உடலை மட்டுமே தக்க வைத்துக் கொள்ளும் என்றும், ‘ஜீவ நீர்’ மட்டுமே நித்திய ஆவியைத் தணிக்கும் திறன் கொண்டது என்று குறிப்பிடுகிறார். இடைக்காலத்தின் இத்தாலிய ஓவியர் (Medieval Italian painter) ‘டியூசியோ டி புவினிசெக்னா’ (Duccio di Buoninsegna) மற்றும் ஜெர்மானிய  மறுமலர்ச்சிகால ஓவியர் ‘மாஸ்டர் லூகாஸ் கிரானச் தி எல்டர்’ (Master Lucas Cranach the Elder) ஆகியோரால் இந்த காட்சியின் குறிப்பிடத்தக்க சித்தரிப்புகளில் இயேசு கிணற்றின் சுவரில் நேரடியாக அமர்ந்திருக்கிறார். இந்த சித்தரிப்பு உலகின் விரைவான கூறுகளின் மீது அவரின் ஆதிக்கத்தை சுட்டிக்காட்டுகின்றது.

உயிருள்ள நீராக உருமாறிய அவள்

டாவின்சியோ தனது மோனாலிசாவை “கிணற்றுக்குள்” வைப்பதன் மூலம் இதுவரை தொடர்ந்த  பாரம்பரியத்தை குழப்புகிறார். அதற்கு பதிலாக பொருள் மற்றும் ஆன்மீக மண்டலங்களை ஒன்றிணைக்க மறைமுகமாக அறிவுறுத்துகிறார். இதுவரை தெளிவற்ற விளக்கங்களால் அறியப்படும் ஆதியந்தம் இல்லாத தோற்றங்களுக்கு நம்மை ஓவியத்தின் மூலம் இட்டுச்செல்கிறார். இறுதியாக டாவின்சியின் வசியப்படுத்தும் இந்த ஓவியத்தின் மூலம் மோனலிசா என்றென்றும் வற்றாத, எழுச்சியான “உயிருள்ள நீராக” உருமாறியிருக்கிறாள். அவளின் எல்லையற்ற கொந்தளிப்புகளின் அமைதியான உள்ளடக்கமே அவளின் ஓவியமாக உருமாறியிருக்கிறது எனலாம்.

மோனலிசா என்றென்றும் அந்தந்த கணத்திலேயே பிறப்பெடுப்பவள். டாவின்சியின் உன்னத படைப்பு.

மீண்டும் சந்திப்போம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *