நாட்டாமை

நாட்டாமை சரத்குமாரும், உச்சநீதிமன்ற நீதிபதியும்

தமிழ்நாட்டில் பட்டிதொட்டியெல்லாம் சிறப்பாக ஓடிய படம் நாட்டாமை. பதினெட்டு பட்டிக்கும் தலைவராக இருக்கும் நாட்டாமை விஜயகுமாரின் தங்கை மகன் பொன்னம்பலம் ஒரு ஏழை பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கி விடுவார். அதற்கு நீதி கேட்க வரும் பெண்ணிற்கு ஊர்மக்கள் முன் பஞ்சாயத்து பண்ணும் நாட்டாமை விஜயகுமார், பாதிக்கப்பட்ட பெண்ணை பொன்னம்பலத்தையே திருமணம் செய்துகொள்ளச் சொல்வார்.

வெகுவாக மாறியுள்ள தமிழ் சினிமா

1994 கிட்டத்தட்ட 26 வருடங்களுக்கு முன்பு வந்த படம் அது. கிட்டத்தட்ட இதே திரைக்கதை கொண்ட ஏராளமான படங்களை அன்றைய தமிழ் சினிமாவில் பார்க்கலாம். ஆனால் இன்றைக்கு அப்படி திரைக்கதை கொண்ட ஒரு படம் கூட வருவதில்லை.

ஏன்? பாலியல் வன்புணர்வுக்கு அன்றைக்கு வழங்கப்பட்ட கொடுக்கப்பட்ட நீதியை நீதியாக நம்பும் மனநிலையில் யாரும் இல்லை. பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கியவனே தன்னை திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று இந்த காலத்தில் ஒரு பெண் வந்து நின்றால் மக்கள் சிரிப்பார்கள். பாதிக்கப்பட்ட பெண் தனக்கான நீதியாகக் கருதுவது, கோருவது இந்த 25 வருடங்களில் வெகுவாக மாறியிருக்கிறது. 

இந்த மாற்றம் எப்படி வந்தது?

இன்றைக்கு வலுக்கட்டாயமாக கட்டப்பட்ட தாலியைக் கழட்டி வீசிவிட்டு விரும்பியவனோடு வாழ விரும்பும் பெண் பாத்திரங்களையும், தன்னை பாலியல் வன்புணர்வு செய்தவன் முகத்தில் ஆசிட் வீசி பழிவாங்கும் பெண் பாத்திரங்களையும் திரையில் ரசிக்க ஆரம்பித்திருக்கிறோம். மக்களின் பொதுவான உளவியல் இப்படித்தான் இருக்கின்றது என்பதை இயக்குனர்களும் அறிந்ததால்தான் இதுபோன்ற படங்களும் நிறைந்திருக்கின்றன.

இன்றைக்கு ’கற்பழிப்பு’ என்ற வார்த்தையைக் கூட பத்திரிக்கை செய்திகளில் பயன்படுத்துவது இல்லை. பாலியல் வன்புணர்வு என்றே பயன்படுத்தப்படுகிறது. ஏனென்றால் பெண்ணின் சம்மதம் இல்லாத வன்முறையில் பெண்ணை அவமானப்படுத்தும், பலகீனமாக்கும் வார்த்தைகளையே பயன்படுத்துவது அநாகரீகம் என்ற பொது உளவியல்தான் காரணம்.

உச்சநீதிமன்றம் இப்படி கேட்கலாமா?

கற்பழிப்பு என்ற வார்த்தையானது பெண் விடுதலை, பெண் சுயமரியாதை சார்ந்து இப்படியாக மாற்றமடைந்த ஒரு சமூகத்தில் ஒரு பெண்ணை வன்புணர்வு செய்தவனையே திருமணம் செய்துகொள்ளச் சொல்லி இந்த நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதி நேற்று கேட்டிருக்கிறார். அதுவும் இந்தியாவின் உச்சநீதிமன்றத்தில் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

மோஹித் சவான் என்பவர் 16 வயது பள்ளிச் சிறுமியை மிரட்டி பலமுறை வல்லுறவுக்கு உட்படுத்துகிறார். இந்த வழக்கு குழந்தைகள் மீதான பாலியல் வன்புணர்வுகளுக்கு எதிரான போஸ்கோ சட்டப்படி விசாரணைக்கு வந்தது. இதன் மீதான விசாரணையின் போதுதான் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியவனிடம் “பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடியுமா” என்று  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே கேட்டிருக்கிறார். இந்த விவகாரம் இப்போது பெரிய விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. பத்திரிக்கையாளர்களும், சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த தீர்ப்பு குறித்து நடிகை டாப்சியின் ட்வீட்

பாபர் வசூதி வழக்கும், இந்த வழக்கும்

பாதிப்பையே நீதியாக்குவது, குற்றவாளியிடமே அதை வழங்கும் அதிகாரத்தை அளிக்கும் இந்த நடைமுறை பாபர் மசூதி இடிப்பு வழக்கிலும் கூட சில விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தது. அந்த தீர்ப்பினை வழங்கிய நீதிபதிகள் குழுவிலும் போப்டே ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

எந்த வரலாற்று ஆதாரங்களும் இல்லாமல் நம்பிக்கையின் அடிப்படையில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் இருந்ததாக சொல்லி 400 ஆண்டு பழமையான பாபர் மசூதியை இடித்துத் தள்ளியது சங் பரிவார கும்பல். இன்றைக்கு ஆட்சியில் இருக்கும் பாஜக RSS இதை ஒரு அரசியல் முழக்கமாக முன்னெடுத்து நடத்தியது. 28 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில், தீர்ப்பு பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ள அனுமதி வழங்கியது. பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்களுக்கு வேறு இடம் வழங்கப்பட்டது.

இந்துத்துவ சனாதன ஆதரவு மனநிலை கொண்ட இதே மாதிரியான ஒரு நீதியைத்தான் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணிற்கும் வழங்க நினைக்கிறார் நீதிபதி. சனாதன நீதி என்பது சமூக அளவிலும் பெண்களுக்கு எதிரானதாகவுமே எப்போதும் இருந்து வந்திருக்கிறது என்பது இந்த தீர்ப்புகள் உறுதிப்படுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *