புரேவி புயல்

காலை செய்தித் தொகுப்பு: கடலூரில் வெள்ளம், ஹைதராபாத், மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக பின்னடைவு உள்ளிட்ட 10 செய்திகள்

1. ஆறு மாதத்தில் உள்ளாட்சி தேர்தல்

சங்கர் என்பவர் தமிழக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ”தமிழக ஊரக உள்ளாட்சிகளில் இடஒதுக்கீடு மற்றும் 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி வார்டு மறுவரையறையை தெளிவுபடுத்திய பின்னர் தேர்தலை நடத்த வேண்டும், அதுவரை புதியதாக வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அட்டவணையை ரத்து செய்ய வேண்டும்” என கோரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலே நடத்த வேண்டும். இதில் புதிதாக உருவக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மாதத்தில் வார்டு மறுவரையறை மற்றும் இடஒதுக்கீடு பணிகளை விரைந்து முடித்து அதற்கும் தேர்தலை நடத்த வேண்டும். இதுகுறித்த அனைத்து பணிகளையும் மறுவரையறை ஆணையம் கண்காணிக்கும் என கடந்த ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி உத்தரவிட்டிருந்தது. 

இந்த சூழலில் மாநில தேர்தல் ஆணையத்தின் தரப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை முழுவதுமாக நடத்தி முடிக்க மேலும் 6 மாதம் கால அவகாசம் வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டது.

அப்போது மாநில தேர்தல் ஆணையத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பார்த்திபன், “தமிழகத்தில் நிலுவையில் இருக்கும் அதாவது புதியதாக உருவாக்கப்பட்டுள்ள ஒன்பது மாவட்டங்கள் உட்பட அனைத்து பகுதிகளிலும் வார்டு மறுவரையறை கிட்டத்தட்ட முடிந்த நிலையில் உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காலத்தில் தேர்தலை நடத்தும் சூழலும் தற்போது இல்லை. இதைத்தவிர வாக்கு இயந்திரங்களும் போதுமானதாக உடனடியாக வழங்க முடியாது என்பதால் தேர்தலை நடத்த மேலும் 6 மாதம் அவகாசம் வேண்டும் என வாதிட்டார். 

இதையடுத்து மாநில தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள், உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க மேலும் 6 மாதம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டது.

2. திமுக சார்பில் போராட்டம்

இன்று  தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் தி.மு.க. சார்பில் கொரோனா கால முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை கடைபிடித்து அறவழியில், ஜனநாயக முறையில் மத்திய – மாநில அரசுகளின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவது என அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கும், தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளின் நலன்களுக்கும் தார்மீக ஆதரவு தரும் வகையில் தி.மு.க. நடத்தும் கருப்புக் கொடி அறப்போராட்டத்தில் சேலத்தில் ஸ்டாலின் பங்கேற்கிறார்.

3. சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

நாடு முழுதும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மார்ச் இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மே வரை பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல் அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன. 

சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 85.76 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 78.45 ரூபாய்க்கும் விற்பனையானது.

இந்நிலையில் இன்று, பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 24 காசுகள் அதிகரித்து 86.00 ரூபாய்க்கும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 24 காசுகள் அதிகரித்து 78.69 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

4. கடலூரில் வெள்ளம்

கடலூர் மாவட்டம் முழுவதும் கன மழையால் வெள்ளம் சூழ்ந்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. முக்கிய சாலைகளில் மழை  நீர் சூழ்ந்ததால் போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலையுடன் முடிந்த 24 மணிநேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக சிதம்பரத்தில் 34 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பின. பெருமாள் ஏரியில் இருந்து உபரி நீர் 12 ஆயிரம் கன அடி வெளியேற்றப்படுவதால், அப்பகுதியில் உள்ள விவசாய விளைநிலங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. அப்பகுதியில் உள்ள 23 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

வீராணம் ஏரியில் இருந்து வெள்ளியங்கால் ஓடையில் 4 ஆயிரம் கன அடியும், விஎன்எஸ் மதகு மூலம் 1500 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பரவனாற்றில் அதிக அளவில் தண்ணீர் செல்வதாலும், என்எல்சி சுரங்கங்களில் இருந்து உபரி நீர்  வெளியேற்றப்படுவதால் குறிஞ்சிப்பாடி, கல்குணம், ஓணான்குப்பம், கொளக்குடி பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. 

கடலூர் மாவட்டத்தில் கன மழை, பரவனாற்றில் வெள்ளம், பெருமாள் ஏரி, வீராணம் ஏரி தண்ணீர் திறப்பு ஆகியவற்றின்  காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. பல ஆயிரக்கணக்கான விளை நிலங்கள் தண்ணீரில் முழ்கி பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. 

5. உலகம் முழுவதும் கொரோனா மரணம் 

உலகம் முழுவதும் கொரோனோவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15.24 லட்சத்தைத் தாண்டியது. உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, கொரோனா வைரசால் 15 லட்சத்து 24 ஆயிரத்து 255 பேர் உயிரிழந்துள்ளனர். 6 கோடியே 62 லட்சத்து 23  ஆயிரத்து 906 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4 கோடியே 58 லட்சத்து 07 ஆயிரத்து 872 பேர் குணமடைந்துள்ளனர். 

மேலும், 1 கோடியே 88 லட்சத்து 91 ஆயிரத்து 779 பேர் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வரும் நிலையில், 1 லட்சத்து 06 ஆயிரத்து 090 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

6. பொருளாதாரம் இன்னும் வீழும்

நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி  மைனஸ் 7.5 சதவீதமாக வீழ்ச்சியடையும் என்றும், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதம் 4 சதவீதமாகத் தொடரும் என்றும் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

7. 909 ஏரிகளில் 100% கொள்ளளவை எட்டியது

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 909 ஏரிகள் 100% கொள்ளளவை எட்டியுள்ளதாக பொதுப்பணித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், சித்தாமூர், சூனாம்பேடு, கடப்பாக்கம், அச்சரப்பாக்கம், மேல்மருவத்தூர், படாளம், கருங்குழி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக ஏரி, குளம், குட்டைகள் நிரம்பியது. ஏரி, குட்டைகள் நிரம்பியதால் அவற்றில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம், குட்டைகள் நிரம்பியது. ஏரி, குட்டைகள் நிரம்பியதால் அவற்றில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 909 ஏரிகள் 100% கொள்ளவை எட்டி உள்ளது.

8. ஐதராபாத் தேர்தல் பாஜவுக்கு பின்னடைவு

ஐதராபாத் மாநகராட்சித் தேர்தலில் மொத்தம் 1,222 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். டி.ஆர்.எஸ் 150, பாஜக 149, காங்கிரஸ் 146, தெலுங்கு தேசம் 10, ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி 51 இடங்களில் போட்டியிட்டன.இதில் 46.55 சதவீத வாக்குகள் பதிவாகின. அமித் ஷா, ஜே.பி.நட்டா, உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ஸ்மிருதி இரானி உள்ளிட்டோர் நேரடியாக வந்து வாக்கு சேகரித்தனர்.

அதேசமயம் மாநிலத்தை ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, ஹைதராபாத் மக்களவை தொகுதியை தன்வசம் வைத்துள்ள AIMIM கட்சியும் வலுவான போட்டியை ஏற்படுத்தியது.

தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி – 55 இடங்களில் வெற்றி, பாஜக – 48 இடங்களில் வெற்றி, அனைத்திந்திய மஜ்லிஸ் இ இத்திஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) – 44 இடங்களில் வெற்றி, காங்கிரஸ் – 2 இடங்களில் வெற்றி என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

9. முருகன் உண்ணாவிரதம் 

ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

தனது தாய், மகளுடன் தொலைபேசியில் பேச  அனுமதிக்கக்கோரி நேற்று 12-வது நாளாக முருகன் உண்ணாவிரதத்தினை தொடர்ந்தார். இதனால் முருகன் நேற்று சோர்வடைந்தார். இதையடுத்து அவருக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டதாகவும், அவரது உடல்நிலையை டாக்டர்கள் தொடர்ந்து  கண்காணித்து வருவதாகவும் சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

10. மராட்டிய தேர்தல் பாஜக தோல்வி

மாராட்டிய மேல் சபை தேர்தலை ஆளும் மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் கூட்டணியாக சந்தித்தன. இதில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலா 2 இடங்களிலும், ஒரு இடத்தில் சிவசேனாவும் போட்டியிட்டன. எதிர்க்கட்சியான பா.ஜனதா 4 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டது. ஒரு தொகுதியில் சுயேச்சைக்கு ஆதரவு அளித்தது.

தேர்தலில் பட்டதாரி தொகுதிகளில் பட்டதாரி வாக்காளர்களும், ஆசிரியர் தொகுதிகளில் ஆசிரியர் வாக்காளர்களும் ஓட்டுப்போட்டு இருந்தனர். 63.89 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. 

சிவசேனா கூட்டணி அரசின் ஒரு வருட ஆட்சி முடிந்த நிலையில், அரசை வாக்காளர்கள் ஆதரிக்கிறார்களா என்பதை கணிக்கும் தேர்தலாக இது பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் 5 தொகுதிகளில் நேற்று வாக்குகள் எண்ணப்பட்டபோது, ஆளும் கூட்டணி கட்சிகள் 4 தொகுதிகளை (காங்கிரஸ்-2, தேசியவாத காங்கிரஸ்-2 கைப்பற்றியது. சுயேச்சை ஒரு தொகுதியில் வெற்றி பெற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *