டெல்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகக் குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடிகை கங்கனா ரனாவத் தன்னுடைய ட்வீட்டில்(Tweet) விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வயதான பெண்மணியை “ஷாஹீன் பாகின் பாட்டி” என்று தவறாக சுட்டிக்காட்டி விவாசாயிகளின் போரட்டத்தை கொச்சைபடுத்தியுள்ளார். இதற்காக அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டுமென்று அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இந்த வாரத்தில் நடிகை கங்கனா மீது தொடரப்பட்ட இரண்டாவது வழக்காகும்.
இதைப்பற்றி அக்குழுவின் தலைவர் மஞ்சிந்தர் சிர்சா கூறுகையில், ரனாவத் ஒரு விவசாயத் தாய் குறித்து அவதூறாக ட்வீட் செய்துள்ளார். அந்த வயதான பெண்மணியை “ஷாஹீன் பாகின் பாட்டி” பில்கிஸ் பனோ என்று கூறியுள்ளார். ஆனால் இதனை சம்பந்தப்பட்ட “ஷாஹீன் பாகின் பாட்டி” பில்கிஸ் பனோ மறுத்துள்ளார். தான் அச்சமயம் தனது வீட்டில் இருந்ததாகவும், அந்த புகைப்படத்தில் காணப்படுபவர் தானல்ல என்றும் உறுதிப்படுத்தியுள்ளார்.
கங்கனாவின் ட்வீட்
கடந்த நவம்பர் 29-ம் தேதியன்று கங்கனா தனது ட்விட்டர் பக்கத்தில் “ஹா..ஹா..ஹா, அவர் மிகவும் சக்திவாய்ந்த இந்தியராக டைம் பத்திரிகையில் இடம்பெற்ற அதே பாட்டி…மேலும் அவர் 100 ரூபாய்க்கு கிடைக்கிறார்” என்று பதிவிட்டு இருந்தார்.
இந்த ட்வீட் பதிவிற்கு எழுந்த கடுமையான எதிர்ப்பின் காரணமாக தற்போது அந்த ட்வீட்டை நீக்கியுள்ளார்.
மஞ்சிந்தர் சிர்சா மேலும் கூறுகையில் நடிகை கங்கனா தனது ட்வீட் மூலம் விவசாயிகளின் போராட்டங்களை தேசவிரோத செயலாக சித்தரித்திருப்பதாகவும், அவரது பொறுப்பற்ற கருத்துக்களுக்காக அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக கடந்த டிசம்பர் 2 அன்று சிரக்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரும், “கங்கனா குறிப்பிட்டுள்ள அந்த பெண் போலியானவர் அல்ல; அவரது பெயர் மனிந்தர் கவுர். அவர் பகதூர் கர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். இதற்காக கங்கனா மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றும், மேலும், “கங்கனா ரனாவத் தனது ட்வீட்(Tweet) மூலம் விவசாயிகளின் போராட்டத்தை கேலி செய்துள்ளதகவும், விவசாயிகளால் நடத்தப்படும் போராட்டமானது மக்களை வாடகைக்கு கொண்டு வந்து நடத்தப்படுகிறது என்பதாக சுட்டிக்காட்ட முயன்றுள்ளார் என்றும்” கூறியவர், தன் சார்பாக ஒரு வழக்கையும் பதிவு செய்து இருக்கிறார்.
பஞ்சாபி பாடகர்கள் கன்வர் க்ரேவால், தில்ஜந்த் தோசாந்த், ஹிமான்ஷு குரானா உள்ளிட்ட பிரபலங்கள் கூட கங்கனாவைக் கண்டித்திருந்தனர் என்பதும் குறிப்பிடதக்கது.
பெண் விவசாயி அளித்த நேர்காணல்
இதற்கிடையில் கங்கனா அவதூறு பரப்பிய மொஹிந்தர் கவுர் என்கிற பெண் விவசாயியினை ‘தி ட்ரிபியூன்’ செய்தி நிறுவனம் பேட்டி எடுத்துள்ளது. அதில் அவர் “அந்த நடிகை, என் வீட்டிற்கு வந்து என் வாழ்க்கையை பார்த்திருக்கிறாரா? ரூ.100 கொடுத்தால் நான் போராட்டத்துக்கு வருவேன் என அவர் எப்படி சொல்லலாம். என்னிடம் 12 ஏக்கர் நிலம் இருக்கிறது. ஒரு விவசாயி என்ற முறையிலேயே நான் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டேன். விவசாயம் என்பது மிகவும் கடினமான விஷயம். அது தெரியாமல் நடிகை இப்படி பேசியது வருத்தமளிக்கிறது” என வேதனை தெரிவித்துள்ளார்.