அமித்ஷா எடப்பாடி

தேர்தலுக்காக தமிழ்நாட்டை சாதியாகக் கூறுபோட்டு பிரிக்கும் ஆர்.எஸ்.எஸ்-எடப்பாடி கூட்டணி

தேர்தலுக்காக தமிழகத்தில் சாதி அரசியல் செய்து நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு கிடைத்த சமூகநீதி இடஒதுக்கீட்டில் குழப்பம் விளைவிக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த பிப்ரவரி 26-ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாள் கூட்டத்தில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) பிரிவினருக்கு வழங்கப்படும் 20% இடஒதுக்கீட்டை மூன்றாகப் பிரித்து வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடும், சீர்மரபினருக்கு 7% உள் ஒதுக்கீடும் எஞ்சியவர்களுக்கு 2.5% உள் ஒதுக்கீடும் வழங்கும் சட்டமசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. 

ஒரு பக்கம் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் இதனை தனது 40 வருட போராட்டத்தின் வெற்றி என்று அறிவிப்பு செய்கிறார். இன்னொரு பக்கம் பாமக-விலிருந்து பிரிந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியை உருவாக்கிய பண்ருட்டி வேல்முருகன் இந்த அறிவிப்பின் மூலம் வன்னியர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி துரோகம் இழைத்திருப்பதாகக் கூறுகிறார். ஏற்கனவே கிடைத்திருந்த இடஒதுக்கீட்டினை குறைத்து வன்னியர் சாதியைச் சேர்ந்த மக்களின் முன்னேற்றத்திற்கு இது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக அவரது கருத்து இருக்கிறது. 

தேர்தல் நேரத்தில் அரசியல் வெற்றிகளைக் கருத்தில் கொண்டு சமூக ஆய்வுகளை முறையாக மேற்கொள்ளாமல் எடப்பாடி பழனிச்சாமியும், பாஜக அரசும் அளித்து வரும் அறிவிப்புகள் தொடர்ந்து பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றன.

மக்கள் தொகை கணக்கெடுப்புகளின் வரலாறு

நவீன மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தொடங்கி இன்றுவரை நடைபெற்று வருகிறது. 1871-ம் ஆண்டில்தான் இந்த நாட்டில் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தது. பின்னர் ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கொரு முறை 1871 முதல் 1921 வரை மக்களின் மதம் பற்றிய புள்ளி விவரங்கள் மட்டுமே தொகுக்கப்பட்டன. முதன்முறையாக 1931-ல் தான் சாதிவாரிக் கணக்கெடுப்பின் மூலம் ஒவ்வொரு சாதியிலும் இருக்கும் மக்கள் தொகை புள்ளி விவரம் தொகுக்கப்பட்டது. அதன் பின்னர் இன்றுவரை நடைபெறவில்லை.

1931-க்குப் பிறகு 80 ஆண்டுகள் கழித்து 2-வது முறையாக 2011-ல் மக்களின் மதங்களுடன், அவர்கள் பிறந்த சாதியின் விவரங்களும் திரட்டப்பட்டன. அது வெளியிடப்படவில்லை. ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்ததும், 2015-ம் ஆண்டு  மத ரீதியான மக்கள் தொகை கணக்கினை வெளியிட்டது. அதே ஆண்டு பீகாரில் நடந்த தேர்தலில் ”இந்துக்கள் மக்கள் தொகை 0.7 சதவிதம் குறைந்திருக்கிறது. இஸ்மியர்கள் மக்கள் தொகை 0.8 உயர்ந்திருக்கிறது. இது நாட்டுக்கே ஆபத்து” என்று பாஜக பிரச்சாரம் செய்வதற்குத்தான் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டன.

சீர்மரபினர் பழங்குடியினரை (DNT) சீர்மரபினர் வகுப்பு (DNC) என்று மாற்றிய 1979 அரசாணை

தமிழகத்தில் குற்றப்பரம்பரை சட்டத்தால் ஒடுக்கப்பட்ட 68 சமூக மக்களுக்கு 1979-ம் ஆண்டுவரை ‘சீர்மரபினர் பழங்குடியினர்’ என்ற பெயரில் சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், 1979-ல் அன்றைய அதிமுக அரசு ‘சீர்மரபினர் பழங்குடியினர்’ (Denotified Tribes – DNT) என்பதை ‘சீர்மரபினர் வகுப்பு’ (Denotified Communities – DNC ) என மாற்றி (GO 1310/1979) அரசாணை வெளியிட்டது. இந்த நடவடிக்கை மிகப்பெரும் தவறாக அமைந்தது

அதன் காரணமாக, சீர்மரபினருக்கு, ‘பழங்குடி மாணவர்கள்’ என்ற அடிப்படையில் கல்வி, வேலைவாய்ப்பில் கிடைக்கப்பெற்ற உரிமைகள் பறிக்கப்பட்டது. ஆகவே, இழந்த உரிமைகளை மீண்டும் பெற, ‘சீர்மரபினர் பழங்குடியினர்’ என்று பழையபடியே சான்றிதழ் வழங்கக்கோரி பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த பல ஆண்டுகளாகப் போராடி வந்தனர்.

தொடரும் DNC, DNT இரட்டை சான்றிதழ் நடைமுறை

1993-ம் ஆண்டு மண்டல் கமிசன் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு சட்டம் கொண்டுவரப்பட்டது. அந்த சட்டத்தின் பிரிவு 3-ல் உள்ள வரையறையின்படி 68 சாதிகளுக்கு சீர்மரபினர் பழங்குடியினர்(DNT) என்று சான்றிதழ் வழங்க எந்த தடையுமில்லை. 

ஆனாலும் அந்த 68 சாதிகளைச் சேர்ந்த மக்கள் தமிழ்நாட்டின் மாநில இடஒதுக்கீட்டிற்கு DNC என்ற பெயரிலான சான்றிதழும், மத்திய இடஒதுக்கீட்டிற்கு DNT என்ற பெயரிலான சான்றிதழும் என இரட்டை சான்றிதழ் வாங்குவதற்கு நிர்பந்திக்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் DNT எனும் பழங்குடி சான்றிதழ் அளிக்கப்படாமல் DNC தொடர்வதால் ’சீர்மரபினர் பழங்குடியினருக்கான’ பல்வேறு நலத்திட்டங்களும், உரிமைகளும் கிடைப்பதில்லை. பெரும்பாலும் கிராமப் புறங்களில் கல்வி அறிவும், விழிப்புணர்வும் இல்லாத மக்களாக இருப்பதால் DNT பிரிவின் கீழ் அவர்களுக்கு கிடைக்கும் நலத்திட்டங்கள் குறித்து அவர்களுக்கு தெரிந்திருப்பதில்லை. இதனை அம்மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகமாகவே சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள். 

கடந்த பல வருட காலமாக, DNT என்ற ஒற்றைச் சான்றிதழ் கொடுக்க வேண்டும் என பல கட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஆனால் அதிமுக அரசு அதனை கண்டுகொள்ளவில்லை. ஆனால் அவர்களின் கோரிக்கையில் வராத, 7% உள் இடஒதுக்கீடு என்பதை இப்போது அறிவித்து, அதனை சாதனையாகக் காட்டி 68 சமுதாய மக்களையும் ஏமாற்றியிருக்கிறது.

இது ஒருபுறமிருக்க, இன்னொரு புறத்தில் தேவேந்திர குல வேளாளர் எனும் பெயர் மாற்றம் மூலமாக அந்த சமூக வாக்குகளை ஒன்றுதிரட்ட மோடியும் எடப்பாடியும் ஒரு அரசாணையை அறிவித்துள்ளனர். அந்த அறிவிப்பிற்கு ஏற்கனவே ’வேளாளர்’ எனும் பட்டத்தினைக் கொண்ட சாதி சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

முத்தரையர் சாதி சங்கங்களில் ஆர்.எஸ்.எஸ்-ன் வேலை

28 சாதியினரை உள்ளடக்கிய முத்தரையர் பிரிவு சாதிகளில் வலையர் சாதி மட்டும் குற்றப்பரம்பரை சட்டத்தினால் பாதிக்கப்பட்டதனால் சீர்மரபினர் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தனர். இப்போது முத்தரையர் பிரிவின் கீழ் உள்ள அனைத்து சாதிகளையும் சீர்மரபினர் பழங்குடியினர் பட்டியலின் கீழ் இணைக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் ஆதரவுடன் நடந்த முத்தரையர் சாதிசங்க மாநாட்டில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தேவேந்திர குல வேளாளர்கள், முத்தரையர்கள் மற்றும் சீர்மரபினரில் பெரும்பான்மையாக இருக்கும் பிறமலைக் கள்ளர், மறவர் உள்ளிட்ட  சாதியினர் ஒரே நிலப் பகுதியில் பல்வேறு முரண்பாடுகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கடந்த காலங்களில் இப்பகுதிகளில் சாதி மோதல்களும் நடந்திருக்கின்றன. இந்த அறிவிப்புகள் ஒரு பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். பல திசைகளிலிருந்தும் மக்களை சாதிய ரீதியாக கூறுபோட்டு அணி திரட்டுவதற்கான கோரிக்கைகளை சாதி சங்கங்களை அணிதிரட்டி ஆர்.எஸ்.எஸ் எழுப்பி வருகிறது. 

கூர்ந்து பார்த்தோம் என்றால் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் அறிவிப்புகள் தமிழகத்தில் சாதிய ரீதியாக ஒரு குழப்பத்தை உருவாக்கி அதில் பாஜக மீன் பிடிக்க நினைப்பதை புரிந்துகொள்ள முடியும்.

முறையான சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படாமல் தேர்தல் ஆதாயங்களுக்காக அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் தமிழகத்தின் சமூக நீதிப் போராட்டத்தை பின்னுக்கு இழுக்கும் செயலாக அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *