கடந்த 2017 டிசம்பர் 31 அன்று பல எழுத்தாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்ட கூட்டம் (எல்கர் பரிஷத்) ஒன்றில் பேசிய பேச்சுகள்தான் அடுத்து நடந்த பீமா கொரேகான் வன்முறைக்குக் காரணம் எனக் கூறி பலரும் கைது செய்யபட்டு மாவோயிஸ்ட் என்று குற்றம் சாட்டப்பட்டு இன்றளவும் சிறையில் உள்ளனர்.
பாம்பே உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.ஜி.கோல்சே பாட்டில், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.பி.சாவந்த் என பல சமூக பொறுப்புள்ளவர்கள் கலந்து கொண்ட கூட்டம்தான் வன்முறையைத் தூண்டியது என ஒன்றிய அரசின் தேசிய புலனாய்வு அமைப்பு வாதிடுவதோடு பத்திரிக்கையாளர்/செயற்பாட்டாளர் கெளதம் நவ்லகா உட்பட பலரையும் ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. அவர்களுக்கு கிடைக்க வேண்டிய முறையான பிணையையும் மறுத்திருக்கிறது.
இந்த சூழலில், கெளதம் நவல்காவின் பிணை மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நேற்று ( மார்ச் 02,2021) நீதிபதிகள் லலித் மற்றும் கே.எம்.ஜோசப் அமர்வு முன்பு எடுத்துகொள்ளப்பட்டது.
90 நாட்களுக்கும் மேல் என்.ஐ.ஏ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாததால் நவ்லகா அளித்த மனு
முன்னதாக முதல் தகவல் அறிக்கை பதிந்து ‘கஸ்டடியில்’ 90 நாட்களுக்கு மேல் இருந்தும் என்.ஐ.ஏ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாததால், தனக்கு பிணை வழங்குமாறு கெளதம் நவ்லகா 11.06.2020 அன்று என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் மனு செய்தார்.
90 நாட்களுக்கு மேல் நவ்லகா ‘கஸ்டடியில்’ இருந்த விவரம்.
28.08.2018 முதல் 01.10.2108 வரை | வீட்டுக் காவல், புது டெல்லி | 34 நாட்கள் |
14.04.2020 முதல் 25.04.2020 வரை | என்.ஐ.ஏ கஸ்டடி | 11 நாட்கள் |
25.04.2020 முதல் 12.06.2020 வரை | நீதிமன்றக் காவல் | 48 நாட்கள் |
மொத்தம் ( 12.06.2020 வரை) | 93 நாட்கள் |
இந்த 90 நாட்களில் என்.ஐ.ஏ குற்றப்பத்திரிக்கை எதுவும் தாக்கல் செய்யவில்லை. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டு எந்த மனுவும் செய்யவில்லை. இந்திய குற்றவியல் நடைமுறை விதிமுறை (crpc) பிரிவு 167(2)’ன் படி ஒரு வழக்கில் கைது செய்யபட்டு 90 நாட்களுக்கு மேல் ஆகியும் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை என்றால் குற்றசாட்டபட்டவர் தனக்கு பிணை கோரலாம். இது குற்றம்சாட்டபட்டவரின் அடிப்படை உரிமையாகும். இந்த பிரிவின் கீழ் நவால்கா சிறப்பு நீதிமன்றத்தில் தனக்கு பிணை வழங்கக் கோரி மனு செய்தார்.
நவ்லகாவின் மனுவை தள்ளுபடி செய்த என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம்
முன்னதாக டெல்லி மெட்ரோபாலிட்டன் நீதிமன்றம் பிறப்பித்த வீட்டுக் காவலில் இருப்பதற்கான ஆணை ‘சட்டதிற்கு புறம்பானது’ என உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தபடியால் அந்த நாட்களை கணக்கில் கொள்ள முடியாது என கூறி பிணைக்கான மனுவை என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் 12.07.2020 அன்று தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து 27.08.2020 அன்று மும்பை உயர்நீதிமன்றத்தில் நவ்லகா என்.ஐ.ஏ நீதிமன்றத்தின் பிணை தள்ளுபடியை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார்.
மேல்முறையீட்டினை மும்பை உயர்நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது
ஆனால் என்.ஐ.ஏ நீதிமன்றத்தின் தீர்ப்பை அப்படியே வழங்கி, ”வீட்டுக்காவலில் இருந்த வழக்கு சட்டதிற்கு புறம்பானது என்றானதால் அந்த நாட்களை சி.ஆர்.பிசி 162’ன் படி பிணை வழங்குவதற்கான நாட்களுக்கான கணக்கில் ஏற்கமுடியாது” எனக் கூறி மும்பை உயர்நீதிமன்றம் 08.02.2021 அன்று தள்ளுபடி செய்தது. கைது ’சட்டதிற்கு புறம்பானது’ என்றானதால் ’கஸ்டடியும்’ சட்டதிற்கு புறம்பானது என மும்பை நீதிமன்றம் கூறியது.
உச்சநீதிமன்றத்தில் நவ்லகா தாக்கல் செய்த மனு
இதன் தொடர்ச்சியாக 18.02.2021 அன்று உச்சநீதிமன்றத்தில் கபில் சிபில் தலைமையிலான வழக்கறிஞர் குழு மூலம் நவ்லகா தனக்கு பிணை வழங்கக் கோரி சிறப்பு மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் ’கைது’ சட்டதிற்கு புறம்பானது என்று தீர்ப்பானாலும் குற்றம்சாட்டப்பட்டவர் ‘கஸ்ட்டடியில்’ இருந்தது மறுக்கமுடியாத உண்மையாகும். அதே முதல் தகவல் அறிக்கையின் கீழ்தான் அனைத்து பிரிவுகளும் பின்னால் சேர்க்கப்பட்டது. எது எப்படியானாலும் இந்திய சட்டங்களின் படி ஒருவர் நீதிமன்றக் காவலிலோ, வீட்டுக் காவலிலோ (நவ்லகாவை வீட்டு காவலில் இருக்க வைத்தது டெல்லி நீதிமன்றம்) மருத்துவமனையிலோ எங்கு இருந்தாலும் அது ‘கஸ்டடியாக’த்தான் கொள்ள முடியும் என சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் என்.ஐ.ஏ தரப்பு வாதத்தை அப்படியே தனது தீர்ப்பில் மும்பை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது என்ற ஆதங்கமும் வெளிப்பட்டது.
மார்ச் 15-க்கு ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்
இந்த வழக்கு அமர்வு நேற்று விசாரணைக்கு வந்தபோது என்.ஐ.ஏ தரப்பு வாதத்தை கேட்க மார்ச் 15 அன்று வழக்கை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.
நவ்லகா வழக்கின் பின்னணி
நவ்லகா, 153-அ, 505(1)(ஆ),117,120-ஆ உடன் இ.த.ச பிரிவு 34 மற்றும் ஊபா சட்டத்தின் கீழ் பிரிவு 13,16,17,18,18B, 20, 38, 40 ஆகியவைகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு என்.ஐ.ஏ விசாரணைக்கு ஆட்ப்பட்டிருக்கிறார். அவர் புகழ்பெற்ற எகனாமிக்கல் பொலிட்டக்கல் வீக்லி பத்திரிக்கையில் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவர். அவர் புனே காவல்துறையால் கைது செய்யபட்டு டெல்லியில் இருந்து மும்பைக்கு அழைத்துவரும் சூழல் நிலவியபோது புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர் ரொமிலா தாப்பர் உட்பட பல சமூக முன்னோடிகள் இணைந்து உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து அவர் டெல்லியிலேயே வீட்டு காவலில் வைக்க இடைக்கால நிவாரணம் கிடைக்க வழிசெய்தனர்.

இதே வழக்கில் நாடு முழுவதும் அறியப்பட்ட சமூக செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள், தலித்/பழங்குடி இன உரிமைக்காக போராடுபவர்கள் என பலரும் சிறையில் உள்ளனர். இந்த கருப்பு சட்டங்களில் இவர்களை அடைப்பதன் மூலம் வழக்கையே தண்டனையாக பயன்படுத்துகிறது இந்த அரசு என குற்றம்சாட்டப்படுகிறது. எதிர்கருத்து வைத்திருப்பவர்களை முடக்கும் பொருட்டு பிற செயற்பாட்டாளர்களை ஊமையாக்கலாம் என்ற எண்ணத்தில் இந்த வழக்கில் பொய்யான பல விஷயங்களை சேர்த்துள்ளது ஒன்றிய விசாரணை அமைப்பு என இந்த வழக்குகளை பின்தொடரும் பல சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.