ரோசா லக்சம்பர்க்

ரோசா லக்சம்பர்க்கின் உடலை கால்வாயில் வீசினார்கள்; ஆனால் அவரது வரலாறு இளையோர்க்கு பாடமாய் விளங்குகிறது

ரோசா லக்சம்பர்க் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Review

ஜெர்மானிய மார்க்சியவாதியும், சோசலிச மெய்யியலாளரும், பொருளியலாளரும், ஒரு புரட்சியாளருமான ரோசா லக்சம்பர்க் (Rosa Luxemburg) மார்ச் 5, 1871 ரசியக் கட்டுப்பாட்டில் இருந்த போலந்து நகரான சாமொஸ்க்கில் பிறந்தார்.

போலந்தின் இடதுசாரி கட்சியில்

1873 இல் குடும்பத்துடன் வார்சாவுக்குக் குடிபெயர்ந்த ரோசா 1886 இல் இருந்து போலந்தின் இடதுசாரி தொழிலாளர் கட்சியில் (Proletariat party) சேர்ந்தார். பொது வேலைநிறுத்தமொன்றை முன்னின்று நடத்தினார். இதனை அடுத்து இவரது கட்சியின் 4 முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டதில் கட்சி கலைக்கப்பட்டது. ஆனாலும் ரோசா தனது தோழர்களை இரகசியமாக சந்தித்து வந்தார்.

சுவிட்சர்லாந்திற்கு தப்பிச் சென்றார்

1889 இல் இவர் சுவிட்சர்லாந்துக்கு தப்பிச் சென்றார். அங்குச் சூரிச் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தத்துவம், வரலாறு, அரசியல், பொருளாதாரம், கணிதம் ஆகிய துறைகளில் உயர் கல்வியைப் பெற்றார். இங்குதான் லியோ ஜோகித்சேவை சந்தித்தார்.

1893 இல் ஜோகித்சேவுடன் இணைந்து “தொழிலாளர் குரல்” (Sprawa Robotnicza) என்ற பத்திரிகையை ஆரம்பித்து நடத்தினார். போலந்து சோசலிசக் கட்சியினரின் தேசியவாதக் கொள்கையை எதிர்த்து தமது பத்திரிகையில் எழுதினார். புரட்சியின் மூலமே போலந்தை விடுவிக்க முடியும் என்று நம்பினார். குறிப்பாக ஜெர்மனி, ஆஸ்திரியா, மற்றும் ரஷ்யாவில் புரட்சி வெடிக்க வேண்டும் என வலியுறுத்தினார். முதலாளித்துவத்துக்கு எதிராக அணிதிரள வேண்டும் என்பதும் இவரது கொள்கையாக இருந்தது.

ஜெர்மானியக் குடியுரிமை பெற்று இடம்பெயர்ந்து புதிய இயக்கம் தொடங்கினார்

1898 இல் குஸ்தாவ் லூபெக் என்பவரைத் திருமணம் புரிந்து ஜெர்மானியக் குடியுரிமை பெற்று பெர்லின் நகருக்கு குடிபெயர்ந்தார். அங்குச் ஜெர்மனியின் சமூக சனநாயகக் கட்சியில் இணைந்து பணியாற்றினார்.

1914, ஆகஸ்டில் கார்ல் லீப்னெக்ட், கிளாரா செட்கின், பிரான்ஸ் மேரிங் ஆகியோருடன் இணைந்து Die Internationale என்ற இயக்கத்தை லக்சம்பேர்க் ஆரம்பித்தார். இவ்வியக்கம் 1916 ஆம் ஆண்டில் ஸ்பர்டாசிஸ்ட் முன்னணி (Spartacist League) என்ற பெயராக மாற்றப்பட்டது. ஸ்பர்த்தாக்கசு என்ற பெயரில் போருக்கு எதிரான துண்டுப்பிரசுரங்களை அச்சிட்டு வெளியிட்டார்கள்.

முதல் உலகப் போருக்கு எதிரான குரல்

முதலாளித்துவம் ஒன்று சோஷலிசத்திற்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை அளிக்கிறது அல்லது காட்டுமிராண்டித்தனத்திற்கு திரும்புவதற்கு வாய்ப்பளிக்கிறது எனும் ஏங்கல்சின் நிலைபாட்டை விளக்கி போர் என்கிற பைத்தியக்கார வெறிக்கு ஒரே மாற்று சோஷலிசப் புரட்சி மட்டுமே என முதலாம் உலகப் போருக்கு எதிராக பேசியவர் ரோசா

லக்சம்பேர்க் ஜூனியசு என்ற புனைப்பெயரில் எழுதினார். ஜெர்மனியில் பாட்டாளி வர்க்கத்தைப் போருக்கெதிராகத் திரட்டினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இரண்டரை ஆண்டுகள் ரோசா, கார்ல் லீப்னெக்ட் ஆகியோர் சிறையிலடைக்கப்பட்டார்கள்.

1918, நவம்பர் 8 இல் சிறையிலிருந்து விடுதலையானார்கள். விடுதலையான அடுத்த நாள் லீப்னெக்டுடன் இணைந்து பெர்லினில் சுதந்திர சோசலிசக் குடியரசை அறிவித்தார்கள். ஸ்பர்த்தாக்கஸ் அணியை மீள நிறுவி “செங்கொடி” என்ற பத்திரிகையை ஆரம்பித்தார்கள். அரசியல் கைதிகள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும், மரண தண்டனைகளை ஒழிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் எழுதினார்கள்.

1907-ம் ஆண்டு இரண்டாவது அகிலத்தின் கூட்டத்தில் உரையாற்றும் ரோசா லக்சம்பர்க்

ரோசாவின் பேச்சுத்திறனும் இயல்பும்

ரோசா மக்களைக் கவரும் பேச்சுத்திறன் கொண்டவர். ரோசாவின் நாவன்மையை பற்றி ஃபுரோலிச் கூறுகையில், ரோசா ஆடம்பரமான சொற்களைப் பயன்படுத்தவில்லை. “தன் தாக்கத்தை தன் உரைவீச்சின் உள்ளடக்கத்தாலேயே சாதித்தார்” என்கிறார்.

சில சொற்களிலேயே கேட்போருடன் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வார். அரசியல் ரீதியாக, அவருடன் வாதம் செய்ய மற்றவர்கள் அஞ்சுமளவுக்கு இருந்தார். முற்றிலும் மாற்றுக் கருத்து கொண்டவர்களைக் கூட, கோர்வையான பேச்சு, வாதங்களை முன்வைக்கும் திறமை மூலம், தன் பக்கம் வென்றெடுத்து விடுவார். 

லெனினும் ரோசா லக்சம்பர்க்கும்

லெனினுடன் பல முறை கருத்து வேறுபாடு காரணமாக விவாதம் செய்த போதிலும், லெனினும் ரோசாவும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ரசிய புரட்சியாளர்  லெனின் உடனும், பால்ஷ்விக்குடனும் விவாதமும் முரண்பாடுகளும் கொண்ட தோழமையைக் கொண்டிருந்தார். அதனால் தான் ரசியப் புரட்சி குறித்து அவர் பின்வருமாறு எழுதினார். 

“வரலாற்று சாத்தியப்பாடுகளின் வரையறைக்குள் ஒரு மெய்யான புரட்சிகர கட்சியால் செய்யக்கூடிய பங்களிப்புகள் எல்லாவற்றையும் தம்மால் செய்யமுடியும் என்பதை போல்ஷிவிக்குகள் காட்டியுள்ளனர். அவர்கள் அதிசயங்களை நிகழ்த்துவார்கள் என எதிர்பார்க்க முடியாது. உலக யுத்தத்தினால் சோர்வடைந்த, ஏகாதிபத்தியத்தினால் குரல்வளைகள் நெரிக்கப்பட்ட, இரண்டாம் அகிலத்தால் காட்டிக்கொடுக்கப்பட்ட, தனிமைப்படுத்தப்பட்ட ஒரு நாட்டில், முன்மாதிரியானதும் பிழையற்றதுமான பாட்டாளி வர்க்கப் புரட்சி இடம்பெறுவது வியக்கத்தக்கதாகும்.”  என்று எழுதினார்.

ரோசா மற்றும் லெனின் புகைப்படங்களை ஏந்தி நடைபெற்ற பேரணி ஒன்றின் புகைப்படம் – File

ஜெர்மானிய பொதுவுடமைக் கட்சி உருவாக்கம்

1918, டிசம்பர் 29 முதல் 31 வரை இடம்பெற்ற ஸ்பர்த்தாசிசுக்களின் காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்டார். இதனை அடுத்து ஜெர்மானியப் பொதுவுடமைக் கட்சி (KPD) கார்ல் லீப்னெக்ட், ரோசா லக்சம்பேர்க் தலைமையில் 1919, சனவரி 1 இல் நிறுவப்பட்டது.

வெடித்தது புரட்சி

1919 சனவரியில் பெர்லின் நகரில் இரண்டாவது புரட்சி வெடித்தது. “செங்கொடி” இயக்கத்தினரை, லிபரல்களின் பத்திரிக்கை அலுவலகங்களைத் தமது குழுவினர் ஆக்கிரமித்துக் கொள்ள ஊக்குவித்தது. இதனை அடுத்து, ஜெர்மானிய அதிபர் பிரீட்ரிக் ஈபேர்ட் இடதுசாரிகளை ஒழிக்கத் தமது படையினருக்கு உத்தரவிட்டார். 1919, சனவரி 15 இல் ரோசா, மற்றும் லீப்னெக்ட் இருவரும் பெர்லினில் பிரீகோர்ப்ஸ் என்ற வலதுசாரி துணை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார்கள்.

சுட்டுக் கொல்லப்பட்டு கால்வாயில் எறியப்பட்ட ரோசாவின் உடல்

லக்சம்பர்க் ஒட்டோ ரூஞ்ச் என்பவனால் துப்பாக்கியால் அடித்துக் காயப்படுத்தப்பட்டு, லெப். ஹெர்மன் சூக்கோன் (1894–1982) என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டார்; அவரது உடல் பெர்லினில் லாண்ட்வெர் கால்வாயில் எறியப்பட்டது. கார்ல் லீப்னெக்ட் சுட்டுக் கொல்லப்பட்டு பெயர் குறிப்பிடப்படாமல், அவரது உடல் சவச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதேபோல், KPD இன் நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதனை அடுத்து ஜெர்மானியப் புரட்சி முடிவுக்கு வந்தது. நான்கு மாதங்களுக்குப் பின்னர் 1919, சூன் 1 இல் லக்சம்பேர்கின் உடல் கண்டுபிடிக்கப்பட்டு பெர்லின் மருத்துவமனையில் அடையாளம் காணப்பட்டது.

ரோசா குறித்து லெனின்

ரோசா குறித்து லெனின் கூறியதை நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும்.

“ரோசா மொத்த உலகிலும் இருக்கும் கம்யூனிஸ்டுகளின் நினைவில் நேசத்துக்குரியவராக இருப்பார் என்பதுடன் அவருடைய வாழ்க்கை வரலாறும், அவருடைய நூல்களின் முழுமையான பதிப்பும், கம்யூனிஸ்ட்களின் பல தலைமுறைகளுக்கான கல்வியில் மிகவும் பயனளிக்கும் பாடமாக விளக்கும்”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *