காலை செய்தித் தொகுப்பு

காலை செய்தித் தொகுப்பு: விவசாயிகளுக்காக பந்த், எட்டுவழி சாலை தீர்ப்பு, ஐ.சி.எஃப் தனியார்மயம் உள்ளிட்ட 10 செய்திகள்

1) விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் 

விவசாயிகளின் டெல்லி போராட்டத்துக்கு ஆதரவாக புதுச்சேரி மாநிலத்தில் முழு அடைப்பு நடந்து வருகிறது. புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், டெம்போக்கள் ஓடவில்லை.

புதுச்சேரியில் டீக்கடைகள், ஓட்டல்கள் மூடப்பட்டுள்ள நிலையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டத்தையொட்டி தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

2) பத்மஸ்ரீ திருப்பி வழங்கிய கவிஞர்

மத்திய அரசு வழங்கிய பத்மஸ்ரீ விருதை பஞ்சாப் கவிஞர் சுர்ஜித் பாட்டர் திருப்பி அளித்தார். டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக தனக்கு வழங்கிய விருதை திருப்பி அளித்தார்.

3) ஐ.சி.எப் தனியார்மயப்படுத்த எதிர்ப்பு

ஐ.சி.எப் ரயில்பெட்டி தொழிற்சாலையை தனியார்மயமாக்குவதை எதிர்த்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஐ.சி.எப் – யை தனியார்மயமாக்குவது அந்நிறுவனத்திற்கு மட்டுமல்ல, நாட்டின் நலனுக்கே எதிரானது!

ஐ.சி.எப் உள்ளிட்ட ரயில்வே பணிமனைகளை தனியார்மயமாக்க அறிக்கை தயார் செய்யப்பட்டு வருவதாக ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவ் கூறியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்ற வேதனை முழக்கம் தமிழகத்தில் எழுந்த போது, மண்ணின் மக்களுக்காக, காமராஜர் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டது தான் ஐ.சி.எப் தொழிற்சாலை . 

இந்நிறுவனத்தில் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் பணிப்புரிந்து வருகின்றனர். உள்கட்டமைப்பு மாற்றங்கள் மற்றும் இயந்திரங்கள் நவீனமயமாக்கல் மூலம் ஆண்டிற்கு, 2,000-க்கும் அதிகமான ரயில் பெட்டிகள் இங்கு தயாரிக்கப்படுகின்றன. இங்கு தயாரிக்கப்படும் தரம் வாய்ந்த  ரயில் பெட்டிகள் வெளிநாடுகளுக்கு அனுப்புவது மட்டுமல்லாமல், தொழிற்சாலை நல்ல லாபத்திலும் இயங்கி வருகிறது. 

ஐ.சி.எப் தொழிற்சாலையைப்போல, இந்திய ரயில்வேயினால் நிறுவப்பட்ட இரண்டாவது ரயில் பெட்டி தொழிற்சாலை ஆர்.சி.எப் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கபூர்தலாவில் இயக்கப்படுகிறது. 

இத்தொழிற்சாலை 30,000-க்கும் அதிகமாக பயணிகள் பெட்டிகளை, பல விதங்களிலும், 51-க்கும் அதிகமான தானியங்கி உந்திச் செல்லும் பயணிகளின் ரயில்களையும் தயாரித்துள்ளது. இந்திய ரயில்வே வாரியத்தின் 35 விழுக்காடு ரயில் பெட்டிகள் இங்குதான் தயாரிக்கப்படுகின்றன. 

இப்படிப்பட்ட விரிவான உட்கட்டமைப்பு வசதிகளும், அனுபவமிக்க தொழிலாளர்களும் இருக்கும் போது ரயில் பெட்டி உற்பத்தியை தனியார்வசம் ஒப்படைக்க வேண்டிய அவசியம் துளியும் இல்லை. ஆனால், நாட்டின் நலனை விட, கார்பரேட்டுகளின் நலனே முக்கியம் என மோடி அரசு கருதுகிறது.  அதனால்தான் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் போன்ற கொள்கைகளின் அடிப்படையில், அனைத்து அரசுத் துறைகளையும் தனியாருக்கு தாரைவார்க்க மோடி அரசு துடிக்கிறது. 

குறிப்பாக, கல்வி, மருத்துவம், புதிய வேளாண் சட்டங்கள், போக்குவரத்து தனியார்மயம்,  இயற்கை வளங்கள் சூறையாடப்படுதல் உள்ளிட்ட நாசக்கார திட்டங்களை மோடி அரசு அரங்கேற்றி வருகிறது. 

மண்ணின் மக்களுக்காக உருவாக்கப்பட்ட ஐ.சி.எப் ரயில்வே பணிமனை தனியார்மயமாக்கப்படும்போது, தமிழகத்தைச் சேர்ந்த ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு, வடமாநிலத்தவர்கள் அமர்த்தப்படும் அபாயம் உள்ளது. ஐ.சி.எப் தொழிற்சாலைக்காக நிலம் வழங்கிய மண்ணின் மக்கள் எல்லாம் முட்டாள் என மோடி அரசு நினைக்கிறது. 1,500 கோடி ரூபாய் மதிப்புடைய ஐ.சி.எப் – யை தனியார்மயமாக்குவது அந்நிறுவனத்திற்கு மட்டுமல்ல, நாட்டின் நலனுக்கே எதிரானது. 

எனவே, ஐ.சி.எப் உள்ளிட்ட ரயில்வே பணிமனைகளை தனியார்மயமாக்கும் மோடி அரசின் நடவடிக்கைக்கு எதிராக அரசியல் கட்சிகள், அரசியல் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் ஒன்றிணைய வேண்டும். தொழிலாளர்களுக்கும், மண்ணின் மக்களின் நலனுக்காகவும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்றும் துணை நிற்கும்.” என்று தெரிவித்துள்ளார்.

4) இன்று தீர்ப்பு

எட்டுவழி சாலை திட்டத்திற்கு நில உரிமையாளர்கள், விவசாயிகள், பல்வேறு அமைப்புகளின் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள், விவசாயிகள், பூவுலகின் நண்பர்கள், டாக்டர் அன்புமணி ராமதாஸ், வக்கீல் சூர்யபிரகாசம் உள்ளிட்டோர் சார்பில் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 

வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி தீர்ப்பு அளித்தது. அதில் சென்னை-சேலம் இடையிலான 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் இந்த திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை 8 வார காலத்துக்குள் திரும்ப ஒப்படைக்கவும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. விவசாயிகள், பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள் உள்ளிட்டோர் சார்பில் கேவியட் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு இன்று காலை 10.30 மணிக்கு அளிக்கிறது.

5) தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் மேலும் 1,312 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 7,91,552-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் மேலும் 1,312 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 7,91,552 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 7,69,048 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 1,389 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 16 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 11,809 ஆக உயர்ந்துள்ளது.

6) சூரப்பவை விசாரிக்க ஆளுநர் எதிர்ப்பு

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை விசாரிக்க தமிழக அரசு குழு அமைத்ததற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அதிருப்தி தெரிவித்துள்ளார். குழு அமைத்தது நியாயமற்றது எனவும் விசாரணையை முடித்துக்கொள்ள வேண்டும் என கூறி முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார்.

7) விவசாயிகளுக்கு பிரியங்கா ஆதரவு

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவின் உணவுப் படைவீரர்கள் விவசாயிகள்தான். அவர்களின் அச்சங்களை அரசு தீர்க்கவேண்டும். அவர்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்யவேண்டும். இந்த சிக்கல்கள் அனைத்தும் விரைவில் தீர்க்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்” என்று விவசாயிகளுக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார்.

8) செம்மஞ்சேரி வெள்ளம்  

செம்மஞ்சேரி எழில்முக நகர், ஜவகர் நகர், காந்தி நகர் மற்றும் சுனாமி குடியிருப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையில் குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. தற்போது மழைநீருடன் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்து வருவதால் அப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. 

மேலும், கடந்த 5 நாட்களுக்கு மேல் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் வீடுகளில் முடங்கியுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் மருந்து பொருட்கள், காய்கறி மற்றும் பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வாங்கக்கூட வெளியே செல்ல முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.

9) ஹரியானாவில் நிலநடுக்கம்

ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபத் என்ற பகுதியில் இன்று அதிகாலை 12.27 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.3 என்ற அளவில் பதிவாகியிருந்ததாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

10) காந்தியைக் கொன்றவர்கள்; மம்தா குற்றசாட்டு

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று பேரணி ஒன்றில் பங்கேற்றுப் பேசும்போது,

”நாம் எவ்வளவு வேலை செய்தாலும் அவை அனைத்துமே மோசமானவை என முத்திரை குத்தப்படுகின்றன. பி.எம்.கேர்ஸ் நிதி தொடர்பான விவரங்கள் வெளியிடப்படவில்லை. அது பாஜகவினருக்கு மோசமானதாகத் தெரியவில்லை. ஆனால் அவர்கள் அம்பன் புயல் பாதிப்பு தொடர்பாக உருவாக்கப்பட்ட கணக்கு விவரங்களைக் கேட்கின்றனர்.

மகாத்மா காந்தியைக் கொன்றவர்களிடம் மேற்குவங்காளம் ஒருபோதும் தலைவணங்காது என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *