இயக்குநர் பா.ரஞ்சித் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.
பா.ரஞ்சித் எனும் பெயர் தமிழ் திரையுலகிலும் சரி, தமிழ்நாட்டின் அரசியல் சூழலிலும் சரி தவிர்க்க முடியாத பெயராக மாறிப் போயிருக்கிறது. எந்த வலிமையான பின்புலமும் இல்லாமல் சாமானிய மனிதனாய் சினிமா உலகிற்குள் நுழைந்த ரஞ்சித் எனும் பிம்பம், இன்று வாய்ப்பு தேடி நிற்கும் அடுத்த தலைமுறை சாமானிய கலைஞர்களை கை தூக்கி விடும் ஏணியாய் மாறி நிற்கிறது.
தமிழ் சினிமா உலகில் தனி ஒரு பட்டறையை உருவாக்கி, வெற்றிகரமான இயக்குநர்களை உருவாக்கி நிறுத்தியதில் முக்கியமானவர் பாலுமகேந்திரா. அதன்பிறகு பல்வேறு இயக்குநர்களின் பட்டறைகளிலிருந்து பல்வேறு இயக்குநர்கள் வெளிவந்திருந்தாலும், ரஞ்சித்தின் பட்டறை என்பது இன்று தமிழ் சினிமா பிரபலங்களை புருவத்தினை உயர்த்தச் செய்திருக்கிறது.
நீ சமூக சீர்திருத்தவாதி மாதிரி பேசுற, உனக்கு சினிமா செட்டாகாது
சென்னையின் புறநகர் பகுதியில் பிறந்து, கவின் கலை கல்லூரியில் ஃபைன் ஆர்ட்ஸ் பயின்று, சினிமாவில் உதவி இயக்குநர் வாய்ப்பு தேடி அலைந்து, பின்னர் இயக்குநர் வேலு பிரபாகரனிடம் உதவி இயக்குநராய் சேர்ந்து, அதன்பின்னர் ஸ்டோரி போர்ட் ஆர்ட்டிஸ்ட்டாக வேலை பார்த்து, ஏராளமான இயக்குநர்களிடம் உதவி இயக்குநர் வாய்ப்பு கேட்டு கிடைக்காமல் திரும்பி, பின்னர் இயக்குநர் வெங்கட்பிரபுவின் ’சென்னை-600028’ படத்தில் உதவி இயக்குநராய் சேர்ந்தது என்று ரஞ்சித் கடந்து வந்த பாதைகள் கரடு முரடானவை. வெங்கட் பிரபுவிடம் சென்னை-28, சரோஜா, கோவா என்று மூன்று படங்களில் உதவி இயக்குநராய் இருந்தார். சென்னை-28 படத்தின் கிரிக்கெட் டீமில் ஒருவராய் திரையில் தலைகாட்டவும் செய்தார்.
”நீ சமூக சீர்திருத்தவாதி மாதிரி பேசுற, உனக்கு சினிமா செட்டாகாது” என்பது ரஞ்சித் உதவி இயக்குநராக வாய்ப்பு கேட்ட இடங்களிலிருந்து வந்த பதிலாக இருந்தது. எல்லா தடைகளையும் தாண்டி ஓவியம், கதை சொல்லல், திரைக்கதை என்று தனக்கிருந்த தனித்திறமைகளால் ரஞ்சித் இயக்குநராய் உருவெடுத்தார். 2012-ம் ஆண்டு அட்டக்கத்தி திரைப்படத்தின் மூலம் முதல் படத்திலேயே “இந்த படத்துல ஏதோ குறியீடு இருக்கேன்னு” பலரையும் பேச வைத்தவர். சென்னையின் கானா, புறநகர் இளைஞர்களின் இளவயசு காதல், மாட்டுக்கறி, ரூட்டு தல என்று ரஞ்சித் வைத்த அட்டக்கத்தி தமிழ் சினிமாவிற்குள் ஒரு ட்ரெண்ட்டை உருவாக்க ஆரம்பித்தது.
மெட்ராசின் அடையாளத்தை மாற்றிய ரஞ்சித்
அடுத்ததாக மெட்ராஸ் படம் சினிமா விமர்சகர்களிலிருந்து, அரசியல் செயல்பாட்டாளர்கள் வரை அனைவரின் பாராட்டையும் பெற்றது. மெட்ராஸ் யாருக்கானது என்ற பரந்த விவாதத்தினை சத்தமே இல்லாமல் துவக்கி வைத்தார் ரஞ்சித். வடசென்னையை மையப்படுத்திய திரைப்படங்களின் கதைக்களங்கள் மாறத்துவங்கின. அதுவரையில் ரஞ்சித் என்ற இளைஞன் கலை அரசியலின் மையமாய் வளர்ந்து நிற்பான் என்பதை யாரும் எதிர்பார்த்திடவில்லை.
மலேசிய கபாலீஸ்வரனும், தாராவியின் கரிகாலனும்
மூன்றாவது படத்திலேயே தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட ஹீரோவான ரஜினிகாந்தின் படத்திற்கு ஒப்பந்தமானார். குசேலன், கோச்சடையான், லிங்கா என்று சரியான படங்களே இல்லாமல் தவித்த ரஜினியின் இமேஜை மீட்டுக் கொண்டுவந்ததில் ரஞ்சித்தின் பங்கு மிக முக்கியமானது. கபாலி படத்தில் ரஜினியை ஒரு மாஸ் ஹீரோவாக மட்டுமல்லாமல் ஒரு நடிகராகவும் நிலைநிறுத்தினார் ரஞ்சித். கபாலி படத்தில் ரஜினியை வைத்து ரஞ்சித் பேசவைத்த சாதி எதிர்ப்பு வசனங்கள் பொறி கிளம்பின. தோட்டத் தொழிலாளர்களாக மலேசியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்களின் இன்றைய அரசியல் பொருளாதார நிலைகளை கபாலி படம் காட்டியது. கபாலி பெருவெற்றி பெற்றது.
ரஞ்சித்தின் சாதி எதிர்ப்பு அரசியலை சகித்துக் கொள்ள முடியாத தினமணி போன்ற ஊடகங்கள் ரஞ்சித்திற்கு ரஜினியை வைத்து படமே எடுக்கத் தெரியவில்லை என்று எழுதின. ஆனால் அந்த ஊடகங்களுக்கு பல்பு கொடுக்கும் விதமாக ரஜினியின் அடுத்த படமான காலாவையும் ரஞ்சித்தே இயக்கினார். மும்பை தமிழர்களின் பகுதியான தாராவியை மையப்படுத்தி அப்படத்தினை எடுத்தார். காலா படமும் ரஜினியை வேறுவிதமாக தூக்கி நிறுத்தியது. ஆன்மிக அரசியல் என்ற பெயரில் காவி அரசியலைப் பேசும் ரஜினியை வைத்தே காவி அரசியலை கிழித்துத் தொங்கவிட்டார் ரஞ்சித். ஹீரோவை ராவணனாகவும், வில்லனை ராமானாகவும் சித்தரிக்கும் வகையில் அமைக்கப்பட்ட காலாவின் கிளைமேக்ஸ் காட்சிகள் தரமான ரகம். ரஜினி தூத்துக்குடி போராட்டத்தை இழிவு செய்யாமல் இருந்திருந்தால், காலா திரைப்படம் இன்னும் பல வெற்றிகளைப் பெற்றிருக்க முடியும்.
சினிமா இயக்குநர் என்பதைத் தாண்டி அரசியலாக ரஞ்சித் கால்பதித்துள்ள துறைகள்
இயக்குநராக மட்டுமல்லாமல், தனது அரசியலைப் பேச எந்தெந்த வடிவங்கள் எல்லாம் தேவைப்படுகிறதோ எல்லா தளத்திலும் கால் பதிக்க ஆரம்பித்தார் ரஞ்சித்.
- நீட் தேர்வின் காரணமாக அனிதா இறந்த போதும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போதும் சினிமா பிரபலங்களைக் கூட்டி உரிமையேந்தல் மற்றும் கண்டனக் கூட்டங்கள் நடத்தினார்.
- ஒதுக்கப்பட்ட இசைவடிவமாகவே இருந்து கானாவை concert வடிவில் பிரம்மாண்டமாய் மேடையேற்றினார். Casteless Collective என்ற பெயரில் கானாவையும், Rap-ஐயும், HipHopஐயும், ஒப்பாரியையும் இணைத்து சாதிக்கு எதிரான குரலை ரஞ்சித் அமைத்த மேடை பெருவெற்றி பெற்றது. இசையை அரசியல் வடிவமாக பயன்படுத்துவதில் மிக முக்கியமான மாற்றத்தினை செய்தார்.

- மார்கழி என்றாலே கர்நாடக இசை என்றிருப்பதை மாற்ற மயிலாப்பூரில் ஆயிரம் பறைகள் முழங்க பறை இசை நிகழ்ச்சி நடத்தினார்.

- வானம் என்ற பெயரில் கலை-இலக்கிய-நாடக அரங்கையும் உருவாக்கி மிகப்பெரிய ஒன்றுகூடலை நடத்தினார்.

- நீலம் பண்பாட்டு மையம் என்றொரு அமைப்பைத் துவங்கினார்.
- மார்கழி கச்சேரிகளுக்கு மாற்றாக ’மக்களிசை’ என்ற பெயரில் அரங்குகளை உருவாக்கினார்.

- நீலம் புரொடக்சன்ஸ் என்ற பெயரில் சாதி ஒழிப்பின் குறியீடான நீல நிறத்தை குறியீடாக வைத்து சினிமா தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கினார். அத்திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் வாய்ப்பின் மூலமாக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் திரைப்படம் சாதி அரசியலை மிகத் தீவிரமாகப் பேசி பெரு வெற்றி பெற்றது. இடைநிலைச் சாதியினரின் மத்தியிலும் ஒரு குற்ற உணர்வைத் தூண்டுவதாய் இந்த படம் அமைந்தது. நீலம் புரொடக்சன்சின் அடுத்த இயக்குநராய் அதியன் ஆதிரை உருவெடுத்தார். அவர் எடுத்த குண்டு திரைப்படம் போருக்கு எதிரான அரசியலையும், சாதிக்கும் எதிரான அரசியலையும் இணைத்துப் பேசியது.

- குறும்படங்களுக்கான தயாரிப்பு நிறுவனத்தையும் உருவாக்கினார்.
- சினிமா உதவி இயக்குநர்களுக்கான நூலகமாகவும், திரைப்பட உரையாடல்களுக்கான களமாகவும் கூகை திரைப்பட இயக்கத்தினை உருவாக்கினார்.

- நீலம் பண்பாட்டு மையத்தின் சார்பில் கலை இலக்கிய பயிற்சி முகாம்கள் நடத்தினார்.
- நீலம் என்ற பெயரில் கலை-இலக்கிய-அரசியல் மாத இதழைக் கொண்டுவந்தார்.

- நீலம் பதிப்பகம் உருவாகி அம்பேத்கரிய சிந்தனை கொண்ட இளம் எழுத்தாளர்களின் எழுத்துக்களை பதிப்பித்து புத்தகக் கண்காட்சிகளில் பங்கேற்றது.
ரஞ்சித்தின் அரசியல் அடையாளம்
எல்லாவற்றிற்கும் மேலாக தான் விருது பெற்ற அரங்குகளில் எல்லாம், “நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா?” என்று கேட்டபோது, ”நான் அரசியலில்தான் இருக்கிறேன்” என்று பதிலளித்து அசத்தினார்.
ஒடுக்கப்பட்ட சமூகப் பின்னணியிலிருந்து சினிமா துறையில் சாதித்தவர்கள் பலரும் தனது அடையாளத்தை வெளிக்காட்டிக் கொள்ளத் தயங்கியே இருந்த சூழலில், ”நான் தலித் தான், நான் அம்பேத்கரின் அரசியலைப் பேசுகிறேன், சாதி ஒழிப்பு தான் என் இலக்கு, அதைத்தான் நான் படமாக எடுப்பேன்” என்று பகிரங்கமாக அறிவித்து வெற்றியடைந்த மிக முக்கியமான சக்தியாய் ரஞ்சித் நிற்கிறார்.
நடிகர் ஆர்யாவை வைத்து ரஞ்சித் இயக்கும் சார்பட்டா பரம்பரை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி விவாதத்தினை உருவாக்கியுள்ளது. அப்படத்தின் செட்டில் அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் என்று மூவரின் படங்கள் வரையப்பட்டு, ”இனமானம் காக்க இராவண லீலா நடத்தி சிறை சென்று விடுதலை பெற்ற தோழர்களுக்கு பாராட்டு விழா” என்று எழுதப்பட்டிருப்பதைப் பார்த்து இப்போதே குறியீடுகளை Decode செய்யத் துவங்கிவிட்டார்கள் பலர்.

இனி ரஞ்சித்தை தவிர்க்க முடியாது
அடுத்ததாக பாலிவுட்டை நோக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் வீரன் பிர்சா முண்டாவின் வாழ்க்கையை படமாக்கும் வேலையில் இருக்கிறார். கால் வைத்த இடங்களிலெல்லாம் வெற்றி பெற்று முன்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார் ரஞ்சித். இன்று தமிழ் சினிமாவில் சாதி ஒழிப்பைப் பேசும் இத்தனை திரைப்படங்கள் வருவதற்கு துவக்கப் புள்ளியாய் ரஞ்சித் இருக்கிறார் என்பதை யாரும் மறுக்க முடியாது.
தான் பேசும் சாதி எதிர்ப்பிற்காக சினிமா, இசை, ஓவியம், இலக்கியம், அரசியல் என்று இத்தனையையும் ஒரு மனிதன் பயன்படுத்தி, அத்தனையிலும் வெற்றிபெற முடியுமா என்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தவர் பா.ரஞ்சித்.
இனி எப்படிப் பார்த்தாலும் எங்கும் தவிர்க்க முடியாதவர் ரஞ்சித்!