UAPA on Student Activists

நீளும் UAPA! அரசை விமர்சிப்பவர்கள் தேசத்தின் எதிரிகளா?

கடந்த இரண்டு ஆண்டுகளாக மனித உரிமை செயல்பாட்டாளர்கள், அரசியல் இயக்கம் சார்ந்தவர்கள், மாணவர்கள் மற்றும் விவசாயிகள் சங்கத்தைச் சார்ந்தவர்கள் போன்ற அனைவரின் மீதும் பாஜக அரசு UAPA-ஊபா சட்டத்தின் அடிப்படையில் வழக்கு பதிந்து வருகிறது. இந்தியாவின் முக்கியமான அறிவுஜீவிகளான வரவர ராவ், ஷோமா சென், ரோனா வில்சன், சுரேந்திர காட்லிங், அருண் பெரேரா, வெர்னோன் கோன்சல்வேஸ், சுதா பரத்வாஜ், சுதிர் தவாலே, மகேஷ் ராவத், கவுதம் நவ்லகா, ஆனந்த் டெல்டும்டே போன்றோர் மீதும் இந்த சட்டம் பாய்ந்துள்ளது. அதேபோல் டெல்லி CAA போராட்டத்தில் கலந்து கொண்ட நடாஷா, தேவங்கனா, சஃபூரா சர்கர் என்ற மூன்று மாணவிகள் மீதும் UAPA சட்டம் பாய்ந்துள்ளது. மோடி அரசின் இந்துத்துவ சித்தாந்தத்திற்கும் தனியார்மய பொருளாதார கொள்கைக்கும் எதிராக செயல்படுபவர்களை மிகக் கொடூரமாக நசுக்கி வருகிறது. 

குடியுரிமை சட்டத்திருத்தை எதிர்த்து போராடியதற்காக அசாம் மாநிலத்தின் விவசாயிகள் தலைவர் அகில் கோகி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது அரசு பல்வேறு வழக்குகளைத் தொடர்ந்து பதிந்து வருகிறது. ஆரம்பத்தில் 120B, 153A, 153B போன்ற பிரிவுகளில் வழக்கு பதிந்தது. பின்பு UAPA சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்துள்ளது. ஜனநாயகமாக மக்கள் பிரச்சனைகளுக்கு குரல்கொடுப்போர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவது வாடிக்கையாகி விட்டது. ஏறத்தாழ 200 நாட்களுக்கும் அதிகமாக சிறையில் இருக்கும் அகில் கோகிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருந்தும் அவரது காவல் குறித்து எந்த தளர்வும் அரசு காட்டவில்லை. பெருந்தொற்று காலக்கட்டத்தில் கூட அரசு இதுபோன்று கருணையற்று செயல்பட்டு வருகிறது. 

2019-ம் ஆண்டின் UAPA திருத்தங்கள்

UAPA என்றழைக்கப்படும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் 1967-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. மோடி அரசு கடந்த 2019-ம் ஆண்டு அந்த சட்டத்தில் இரு திருத்தங்கள் செய்துள்ளது. அந்த திருத்தங்கள் இந்தியக் கூட்டாட்சி தத்துவத்திற்கு விரோதமாகவும் மற்றும் மனித உரிமைகளுக்கு எதிரானதாகவும் இருக்கிறது. 

முதல் திருத்தம்

இந்த சட்டத்தின் முதல் திருத்தத்தில் ‘தீவிரவாதி’ என்ற சொல்லை விரிவாக்கியுள்ளது. அதாவது சில இயக்கங்கள் மற்றும் குழுக்களை சார்ந்தவர்களைத்தான் தீவிரவாதி என்று கருதமுடியும். ஆனால் இப்போது எந்த இயக்கத்தையும் சாராத தனிநபர்களையும் பிரிவு 35 மற்றும் 36-ன்  கீழ் தீவிரவாதிகளாக கருதி வழக்கு பதியலாம். அனைத்து சிவில் செயல்பாடுகளில் இருந்தும் அந்த தனிநபரை தடைசெய்யமுடியும். அரசின் கொள்கைகளை விமர்சிக்கும் அறிவுஜீகள் இந்த சட்டத்தின் அடிப்படையில்தான் ஒடுக்கப்பட்டு வருகின்றனர். இந்த மாற்றம் சர்வதே மனிதஉரிமை கொள்கையான International Covenant on Civil and Political Rights-ஐ மீறுகிறது. 

கடந்த ஒரு ஆண்டாக கைது செய்யப்பட்டவர்களின் பட்டியலை ஆய்வு செய்தால், இந்த சட்டதிருத்தம் தீவிரவாதத்தைத் தடுப்பதற்காக  கொண்டுவரப்படவில்லை, மாறாக அரசை விமர்சிக்கும் சிவில் சமூகத்தை ஒடுக்குவதற்காக கொண்டுவரப்பட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது.

இரண்டாவது திருத்தம்

இரண்டாவது மாற்றம் NIA என்றழைக்கப்படும் தேசிய புலனாய்வு முகமை மாநில அரசின் எந்தவித ஒப்புதலும் இல்லாமல் நேரடியாக ஒன்றிய அரசின் ஆணைப்படி எந்த மாநிலத்திற்குள் வேண்டுமானலும் சென்று, யாரை வேண்டுமானாலும்  விசாரிக்கலாம். தேவைப்பட்டால் UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யலாம். தலைமைக் காவல் அதிகாரியான DGP அல்லது மாநில அரசிடம் எந்த வித ஒப்புதலும் பெறத் தேவையில்லை. ஏன் மாநில அரசிடம் தகவல்கூட பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை. இது  ஒன்றிய அரசுக்கு பாதுகாப்புத் துறைசார்ந்த ஒரு எதேச்சதிகாரத்தை உருவாக்கித் தந்துள்ளது. 

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின்படி பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை எந்த காரணம் கொண்டும் தடுக்கப்படலாகாது. ஆனால் இந்த UAPA திருத்தங்கள் நடைமுறையில் அதை பொருட்படுத்தவில்லை. இந்த திருத்தத்திற்குப் பிறகு இந்தியாவில் UAPA சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டவர்களின் பட்டியலை எடுத்துப் பார்த்தாலே பல்வேறு உண்மைகள் புலப்படும். பாஜக ஆட்சி செய்யாத மாநிலத்தை அச்சுறுத்துவதற்காக CBI மற்றும் வருமானவரித் துறை எப்படி பயன்படுத்தப்பட்டு வருகிறதோ அதேபோல் UAPA சட்டத்தை NIA பயன்படுத்தி வருகிறது. 

2004-ம் ஆண்டின் UAPA திருத்தம்

ஒன்றிய அரசு 2004-ம் ஆண்டு UAPA சட்டத்தை திருத்தும்போது பிரிவு 2(o)-வில்  சட்டவிரோத (Unlawful activity) நடவடிக்கை என்னும் பதத்தை விரிவுபடுத்தியது. அதன்படி சட்டவிரோத செயல் என்பது ஒரு வன்முறையில் ஈடுபடுதல் மட்டும் கிடையாது. ஒருவரை சந்தேக அடிப்படையிலோ அல்லது குறிப்பிட்ட கொள்கை உடையவர் என்று யூகித்தாலோ கூட அவரைக் கைது செய்யலாம். எந்த ஒரு சித்தாந்தமும் ஆட்சியாளர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தால், அது சட்டவிரோதம் என்று கருதப்பட முடியும். 

ஆனந்த் டெல்டும்டே, வரவர ராவ் போன்ற தலித் மற்றம் இடதுசாரி சித்தாந்தவாதிகளின் மீது UAPA பாய்ந்ததற்கான உள்நோக்கம் இதுதான். ஒரு கட்சியின் சித்தாந்தம் தேசத்தின் சித்தாந்தமாக பார்க்கப்படுகிறது. பாஜகவின் இந்துத்துவ சித்தாந்த்தை எதிர்ப்பவர்கள் தேசத்துரோகியாக வரையறுக்கப்படும் அவல நிலையில் நாம் வாழ்ந்து வருகிறோம். எந்தவித சித்தாந்த நோக்கமும் இல்லாமல் அரசின் கொள்கைத் திட்டங்களை விமர்சிப்பவர்கள்  மீதும் இந்த சட்டம் பாய்ந்து வருகிறது. 

பிரிவு 15-ல் உள்ள தீவிரவாதி என்ற பதம் பொது கருத்தாக்கத்திற்கு அப்பாற்ப்பட்டு உள்ளது. ஒருவரைக் காயப்படுத்துவது, மரணத்திற்கு தள்ளுவது அல்லது சொத்துக்களை சிதைப்பது, அரசாங்கத்தையோ அல்லது தனி நபரையோ சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுத்துவது போன்ற பல்வேறு கூறுகளை உள்ளடக்கி விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

குற்றங்களின் மீதான உண்மைத் தன்மையை நிரூபிக்க அரசு எந்தவித முயற்சியும் செய்யத் தேவையில்லை. யாரையாவது குற்றவாளியாக்க நினைத்தால் அதை மிக எளிதாக செய்துவிடுவதற்கு உகந்தபடி மாற்றம் நடந்துள்ளது. இஸ்லாமிய சிறுபான்மையினர் இச்சட்டத்தின் கீழ் எந்தவித உறுதியான ஆதாரமும் இன்றி குற்றவாளியாக்கப்படுகின்றனர்.

தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் ஏவப்படும் UAPA

தேசிய குற்றப் பதிவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த சில வருடங்களாக UAPA சட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2016-ம் ஆண்டு 922 வழக்குகளாக இருந்தது 2018-ம் ஆண்டு 1421 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக குடியுரிமை சட்டத் திருத்ததிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய மாணவர்கள் மீது UAPA வழக்குகள் பதியப்பட்ட பிறகு இந்த எண்ணிக்கை கூடியுள்ளது. 

அதேபோல் வடகிழக்கு மாநிலங்களில் NRC என்றழைக்கப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது UAPA பதியப்பட்டுள்ளது. குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராகப் போராடிய மீரான் ஹைதர், நடாஷா நர்வால், உமர் காலித், சஃபூரா சர்கர் ( Meeran Haider, Natasha Narwal,  Umar Khalid and Safoora Zargar) போன்ற மாணவர்கள் மீது பதியப்பட்ட UAPA வழக்கு  இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைக்கு விரோதமானது. எனவே அவர்கள் மீது பாய்ந்துள்ள  அந்த UAPA வழக்கு சட்டவிரோதமானது மற்றும் பொது மனசாட்சியின் முன்பு கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒன்று.

பிணை மறுக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் சஃபூரா சர்கர்

வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் நடந்த வன்முறையில் சம்மந்தம் உடையவர் என்று M.Phil படிக்கும் மாணவியான  சஃபூரா சர்கர் ஏப்ரல் 10-ம் தேதி UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்படும்போது மூன்று மாத கர்ப்பிணி. அவருக்கு நிதிமன்றம் பிணை தர மறுத்துவிட்டது. அந்த கலவரத்தில் சதிசெயல்கள் உள்ளது என்ற அடிப்படையில் அவருக்கு பிணை தர மறுத்துவிட்டது நீதிமன்றம். நீதிமன்றத்திற்கு இந்த அதிகாரத்தை 2008-ம் ஆண்டு செய்யப்பட்ட திருத்தங்கள் வழங்கியுள்ளது.  பின் அவர்  திகார் சிறையில் அடைக்கப்பட்டார். பின் இரு மாதங்களுக்குப் பிறகு அவர் கருவுற்ற காரணத்தால் பிணை வழங்கப்பட்டது. 

ஊடகவியலாளர்கள் மீதும் பாயும் UAPA

கடந்த ஏப்ரல் 20-ம் தேதி காஷ்மீர் பத்திரிக்கையாளர் மஸ்ரத் சஹ்ரா (Masrat Zahra) தனது முகநூல் பக்கத்தில் அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அதற்கு  சர்வேதச மனித உரிமைகள் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மேலும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தற்காக காஷ்மீர் பத்திரிக்கையாளர் கெளஹார் கிலானி (Gowhar Gilani) கடந்த ஏப்ரல் மாதம் UAPA சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டார்.

அதேபோல் பீர்ஸாடா ஆசிக் (Peerzada Ashiq) எனும் பத்திரிக்கையாளர் கொரோனா பரிசோதனை கிட் குறித்தான சந்தேகத்தை எழுப்பியதால் அவர் சமூகத்தில் தேவையில்லாத பீதியை ஏற்படுத்தினார்  என்று UAPA சட்டத்தின் கீழ வழக்கு பதியப்பட்டது. 

UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாமலே 180 நாட்கள் தடுப்புக் காவலில் வைப்பதற்கான வழிமுறைகள் உள்ளது. இது அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 21-க்கு எதிரானது. இதுபோன்ற நடவடிக்கைகள் அரசு கொள்கைகளில் உள்ள குறைபாடுகளை பொது வெளியில் விவாதிப்பதற்கு அச்சத்தை எற்படுத்துகிறது. 

CAA போராட்டத்தில் மக்கள் அமைதி வழியில் ஒன்று கூடியதை ஆதரித்த ஹர்ஷ் மந்தர் மற்றும் யோகேந்திர யாதவ் (Harsh Mander and YogendraYadav) இருவர் மீதும் வழக்குகள் பதியப்பட்டன. ஆனால் கபில் மிஸ்ரா மற்றும் அனுராக் தக்கூர் (Kapil Mishra and Anurag Thakur) ஆகிய இரு பிஜேபி தலைவர்களின் வெறுப்பு பிரச்சாரம்தான் டெல்லி கலவரத்திற்கு காரணமாக அமைந்தது. ஆனால் அவர்கள் மீது எந்த வழக்கும் பதியப்படவில்லை. 

இங்கு சமூக அக்கறையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் மதிப்புமிக்க மனிதர்களை எந்தவித  அடிப்படைகளும்  இன்றி தீவிரவாதிகளாக சித்தரிப்பது, அவர்களின் குடும்பத்தையும் உறவினர்களையும் சமூகத்தில் இருந்து நிரந்தரமாக அந்நியப்படுத்துகிறது. அதேபோல் அரசின் துணையுடன் வெறுப்புப் பிரச்சாரம் செய்பவர்கள் மதிப்புமிக்க மனிதர்களாக சித்தரிக்கப்படுகின்றனர்.

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகள்

தேசிய குற்றப் பதிவுத் துறையின் 2018-ம் ஆண்டின் ஆவணத்தின்படி, UAPA வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1421. அதில் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெறும் 35 தான். இது இச்சட்டம் தவறாக ஏவப்படுவதன் பின்னணியைக் காட்டுகிறது. 

பெரும்பான்மையானவர்கள் எந்தவித அடிப்படை ஆதரமும் இன்றி இன்னும் சிறையில்தான் வாழ்கின்றனர். அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் தேசத்தின் எதிரிகளாக சித்தரிக்கப்படுவதன் விளைவுதான் இது. இது ஒரு காலனிய கால மனநிலை. அதிகாரவர்க்கத்தின் அரசியல் பொருளாதார நலன்களுக்காக ஒரு தேசத்தின் மக்கள் எந்தவித முகாந்திரமும் இல்லாமல் தேசவிரோதியாக சித்தரிக்கப்பட்டு சமூகத்தில் இருந்து அந்நியப்படுத்தப்படும் போக்கு தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *