GST liability

ஜி.எஸ்.டி இழப்பீடு தர முடியாதா? கொதிக்கும் மாநிலங்கள்

மாநிலங்களுக்குரிய ஜி.எஸ்.டி வரி வருமான இழப்பீட்டுப் பங்கினைத் தரக்கூடிய நிலையில் இந்திய ஒன்றிய அரசு தற்போது இல்லை என ஒன்றிய நிதி செயலாளர் அஜய் பூஷன் பாண்டே கூறியுள்ளார். பாராளுமன்ற நிலைக் குழுவின் முன் இதனை கூறிய அவர், ”ஜி.எஸ்.டி வரி சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் நடப்பிலுள்ள மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி வரி பங்கீட்டு முறையியலின் படி, நிதிப் பங்கீடு செய்ய ஒன்றிய அரசிடம் போதிய நிதி இல்லை” என குறிப்பிட்டுள்ளார். 

கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் ஜி.எஸ்.டி வரி முறை அமல்படுத்தப்பட்டது. ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையின் மூலம் அதுவரையில் மாநில அரசுகளால் வசூலிக்கப்பட்ட மாநில வரிகள் முற்றிலுமாக நீக்கப்பட்டன; ஒரு அரசாக மாநிலங்கள் வரி விதிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக மாநிலங்களுக்கு ஏற்படும் வருமான இழப்பை ஈடுசெய்ய, மாநிலங்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகள் ஜி.எஸ்.டி வருமான இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என ஜி.எஸ்.டி சட்டத்தால் உத்திரவாதம் அளிக்கப்பட்டது; 

ஜி.எஸ்.டி இழப்பீட்டின் மதிப்பு

அதன்படி ஜி.எஸ்.டிக்கு முன்னர் மாநிலங்கள் ஈட்டிய வரி  வருமானத் தொகையை விட ஒவ்வொரு ஆண்டும் 14% கூடுதல் தொகை வீதம் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு வழங்கிட ஜி.எஸ்.டி சட்டம் குறிப்பிடுகிறது. கூடுதல் 14% சதவீத அளவீடுக்கான அளவுகோளாக மாநிலங்களின் 2015-16 நிதி ஆண்டின் வரி வருமானம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதற்காகவென்றே ஜி.எஸ்.டி வருமான இழப்பு வரி (GST Compensation Cess)  என்ற புதிய வரி அறிமுகப்படுத்தப்பட்டது. 

ஆடம்பர (Luxary) பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி மட்டுமல்லாது கூடுதலாக ஜி.எஸ்.டி வருமான இழப்பு வரி வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் கிடைக்கும் வரி வருமானத் தொகையை ’கூடுதல் 14% அளவுகோலின்’ அடிப்படையில் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு பங்கிட்டு கொடுக்கும். 

ஒவ்வொரு மாதமும் வசூலாகும் ஜி.எஸ்.டி வருமான இழப்பு வரியை மாநிலங்களுக்கு மாதாமாதம் ஒன்றிய அரசு பங்கிட்டுத் தர வேண்டும். மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி வருமான இழப்பீட்டின்படி 2017-18 நிதியாண்டில் ரூ.41,146 கோடியும், 2018-19 நிதியாண்டில் ரூ. 69,275 கோடியும் ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு பங்கிட்டுக் கொடுத்தது. 2019 ஆகஸ்ட் மாதத்திலிருந்து ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு மாதாமாதம் கொடுக்க வேண்டிய ஜி.எஸ்.டி வருமான இழப்பீட்டுத் தொகையை சரிவரக் கொடுக்கவில்லை. 

நீதிமன்றம் செல்வோம் என சொன்ன கேரள அரசு

இந்நிலையில் தங்களுக்கு ஒன்றிய அரசு நிலுவை வைத்துள்ள ரூ. 3,200 கோடி ஜி.எஸ்.டி வருமான இழப்பீட்டுத் தொகையினைப் பெற உச்சநீதி மன்றத்தை நாடப் போவதாக கேரள அரசு கூறியிருந்தது. கேரளா போன்று பல மாநிலங்களும் ஒன்றிய அரசிடம் தங்களுக்கான ஜி.எஸ்.டி வருமான இழப்பீட்டுத் தொகையினை கோரின. அதனைத் தொடர்ந்து 2019 டிசம்பர் மாதம் முதல் 2020 பிப்ரவரி மாதம் வரை மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய ரூ, 36,400 கோடியை ஒன்றிய அரசு கொடுத்தது. 

கொரோனா பெருந்தொற்றும் அதைத் தொடர்ந்து மார்ச் மாத இறுதியில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கும் மாநிலங்களின் நிதிச் சுமையினை அதிகரித்தன. கொரோனா தடுப்பு பணிகளுக்கான நிதிப் பற்றாக்குறையை சுட்டிக்காட்டி நிலுவையிலுள்ள ஜி.எஸ்.டி வருமான இழப்பீட்டினை வழங்குமாறு மாநில அரசுகள் ஒன்றிய அரசிடம் தொடர்ந்து முறையிட்டு கொண்டிருக்கின்றன.

மக்கள் மீது சுமத்தப்படும் கொரோனா செஸ் வரி

வரி வருமானத்தை ஒன்றிய அரசிடம் இழந்த மாநில அரசுகள், கொரோனா தடுப்புப் பணிகளுக்கு போதிய நிதி ஆதாரமில்லாததால் ’கொரோனா வரி (Corona Cess)’ விதிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன; மதுபானங்கள், எரிப் பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்தன. ஊரடங்கினால் வருமானத்திற்கு வாய்ப்பில்லாத மக்கள் மீதே கூடுதல் வரிச்சுமை சுமத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

மொத்த மக்கள் நலப் பணியையும் சுமந்து கொண்டு, நிதி ஆதாரமுமில்லாத கையறு நிலையில்தான் மாநில அரசுகள் ஜி.எஸ்.டி வருமான இழப்பீடுக்கான குரலை எழுப்பிக் கொண்டிருக்கின்றன. அதற்கு பதிலளிக்கும் விதமாகவே நிதி தொடர்பான பாராளுமன்ற நிலைக் குழுவின் முன் கருத்து தெரிவித்த ஒன்றிய நிதி செயலாளர்,”தற்போது ஒன்றிய அரசால் மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி வருமான இழப்பீடை கொடுக்க முடியாது” என தெரிவித்துள்ளார்.

கூட்டாட்சி நம்பிக்கைக்கு துரோகம் – கேரள நிதி அமைச்சர்

இதுப்பற்றி கருத்து தெரிவித்துள்ள கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக்,”ஒன்றிய அரசால், மாநிலங்களுக்குரிய ஜி.எஸ்.டி வருமான இழப்பீடை கொடுக்க  முடியாது என்றும், தற்போதைய ஜி.எஸ்.டி பங்கீட்டு நடைமுறை மாற்றியமைக்கப்பட வேண்டும் எனவும் கூறியிருப்பதாக அறிகிறேன். இது (மாநிலங்கள் கொண்டிருக்கும்) கூட்டாட்சி நம்பிக்கைக்கு ஒன்றிய அரசு செய்திருக்கும் துரோகமாகும். உடனே ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தைக் கூட்டுங்கள்” என்றும்,

”(ஒன்றிய அரசின் நிதித் துறை அதிகாரிகளின் கருத்தானது) வரி வருமான நிதி ஆதாரத்தில் போதிய நிதி இல்லை என்பதினால் ஜி.எஸ்.டி கவுன்சில் அதற்கு தகுந்தாற் போல் மாநிலங்களுக்கான பங்கீட்டு முறையை மாற்றியமைக்க வேண்டும் என்பது போல் உள்ளது. நல்லது. ஆனால் ஒன்றிய அரசிற்கு ஜி.எஸ்.டி கவுன்சிலில் மூன்றில் ஒருபங்கு மட்டுமே வாக்கு உள்ளது. ஆகையால் ஒன்றிய அரசு தன்னிச்சையாக இது தொடர்பாக முடிவெடுக்க முடியாது. எனவே எனது கேள்வி என்பது இது தொடர்பாக  ஒன்றிய அரசு என்ன நிலைப்பாடு கொண்டுள்ளது? கொடுக்க முடியுமென்றா அல்லது கொடுக்க முடியாதென்றா?” என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

பஞ்சாப் நிதி அமைச்சர் கேள்வி

ஒன்றிய அரசின் இத்தகைய ‘கைவிரிப்பு’ நிலைப்பாடு குறித்து ஒன்றிய நிதி அமைச்சருக்கு, பஞ்சாப் மாநில நிதியமைச்சர் மன்பிரித் சிங் பாதல் எழுதியுள்ள கடிதத்தில்,’ (மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி வருமான இழப்புத் தொகையை கொடுப்பதற்கு) ஒன்றிய அரசிடம் பணமும் இல்லை, கொடுக்க வேண்டிய கடப்பாடு இல்லை என்று ஒன்றிய அரசு பாராளுமன்ற நிலைக்குழுவிடம் தெரிவித்திருப்பது பஞ்சாபிற்கு கடும் அதிர்ச்சியை தரக்கூடியதாக இருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார். 

மேலும் அவர்,”ஜி.எஸ்.டி என்பது ஒன்றிய அரசமைப்பின் அதிகார வரம்பிற்குள் வருவதால் இயல்பிலே ஒன்றிய அரசானது ஜி.எஸ்.டி சட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி வருமான இழப்பீடு தொகை வழங்குவதற்கு கடப்பாடு உடையது. மேலும் ஜி.எஸ்.டி சட்டத்தின் பிரிவு 8-ன் படி வருமான இழப்பீட்டு வரி வசூல் (Compensation cess leviable) மூலமாகவோ, பிரிவு 10(1)-ல் குறிப்பிட்டுள்ள படி ஜி.எஸ்.டி கவுன்சில் பரிந்துரைக்கும் வேறு வழிமுறையின் மூலமாகவோ செலுத்தப்பட வேண்டும். இழப்பீட்டுத் தொகையானது, வருமான இழப்பீடு வரியை மட்டும் சார்ந்ததன்று” என தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். பஞ்சாப் நிதி அமைச்சரின் கருத்துகள் வருமான இழப்பீட்டு வரி போதிய அளவில் வசூலாகவில்லை என்ற காரணத்தை சொல்லி, மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டை  ஒன்றிய அரசு மறுக்க முடியாது என்பதைக் காட்டுகிறது.

பஞ்சாப் அரசியலில் ஏற்படுத்திய கொந்தளிப்பு

இப்பிரச்சனையானது பஞ்சாப் அரசியலில் கொந்தளிப்பை ஏற்படுத்தவே, ஷிரோமனி அகாலி தளம் கட்சியைச் சேர்ந்த ஒன்றிய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்ஷ்மிரத் கவுர் பாதல் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு செலுத்த வேண்டிய ஜி.எஸ்.டி வருமான இழப்பீட்டுத் தொகை நிலுவையின்றி முழுவதுமாக வழங்கப்பட்டுள்ளது. பஞ்சாபிற்கு 2020-21 நிதி ஆண்டில் மட்டும் ரூ.12,187 கோடி ஒன்றிய அரசால் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார்.

இதனை மறுத்த பஞ்சாப் நிதியமைச்சர் மன்பிரீத் சிங் பாதல், “என்ன ஒன்றிய அரசால் முழு ஜி.எஸ்.டி வருமான இழப்பீட்டுத் தொகையும் கொடுக்கப்பட்டுள்ளதா? மன்னிக்கவும், மார்ச் மாதம் வரையில் மட்டுமே இழப்பீடு கொடுக்கப்பட்டுள்ளது. ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதம் என நான்கு மாதங்களுக்கான இழப்பீடு தொகை இன்னும் கொடுக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. பஞ்சாபிற்கு வர வேண்டிய மொத்த நிலுவைத் தொகையானது, பஞ்சாபின் ஒட்டுமொத்த அரசு ஊழியர்களுக்கும் கொடுக்க வேண்டிய இரு மாத சம்பளத்திற்கு நிகரானதாகும். சந்தேகமிருந்தால் தங்களது கூட்டனி கட்சியினரையே கேட்டுக் கொள்ளுங்கள்;  பஞ்சாபிற்கு மட்டுமல்ல எல்லா மாநிலங்களுக்குமான ஜி.எஸ்.டி வருமான இழப்பீட்டு தொகையை விடுவிக்கப்பட வேண்டும்” என பதிலுரைத்துள்ளார்.

கூட்டாட்சி காப்பது முக்கியம்

ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்தே கூட்டாட்சிக்கு விரோதமானது என முன்வைக்கப்படுகிறது; முன்னாள் தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா ”ஜி.எஸ்.டி. கூட்டாட்சி தத்துவத்திற்கு விரோதமானது” என அதனை எதிர்த்தார். மாநிலங்களின் வரி விதிப்பு அதிகாரம் பறிக்கப்பட்டு, வரி விதிப்பு என்பது முற்று முழுதாக ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு சேர்க்கவே ஜி.எஸ்.டி பயன்பட்டது. ஜி.எஸ்.டி நடைமுறையை ஏற்றுக் கொண்டு செயல்பட மாநிலங்களுக்கு முன்வைக்கப்பட்ட குறைந்தபட்ச கூட்டு நடைமுறையும் இன்று கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. 

தங்களுக்கு உறுதியளிக்கப்பட்ட குறைந்தபட்ச உத்திரவாதத்தைக் கூட பெற முடியாத நிலைக்கு மாநில அரசுகள் ஆளாகியுள்ளன. மிகவும் இன்றியமையாத காலக்கட்டத்தில் கூட தங்களால் தங்களுக்குரிய நிதியை பெற முடியாத நிலைக்கு மாநிலங்கள் தள்ளப்பட்டுள்ளன. ஜி.எஸ்.டி நடைமுறைக்கு வந்த 3 ஆண்டுகளுக்குள்ளாகவே  மாநில அரசுகள் மிகப்பெரும் பாதிப்பை சந்தித்திருக்கின்றன. 

முன்னர் ஜி.எஸ்.டி யை ஆதரித்த மாநில அரசுகள் தற்போது அதுகுறித்து அதிருப்தியை வெளிப்படுத்துகின்றன. ஜி.எஸ்டி குறித்து மாநிலங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *