Tamilnadu students education

தமிழ்நாடுதான் இந்தியாவிலேயே கல்வியில் சிறந்த மாநிலம்! சில விவரங்கள் உங்களுக்காக!

இந்திய அரசின் அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கும் புதிய தேசிய கல்விக் கொள்கை 2020 பல்வேறு எதிர்ப்புகளை தமிழ்நாட்டில் உருவாக்கியிருக்கிறது. பல மாநிலங்கள் இக்கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டு அமைதியாக இருக்கும் போது தமிழ்நாடு மட்டும் ஏன் எதிர்க்கிறது என்ற கேள்வியும் இன்னொரு புறம் எழுப்பப்படுகிறது. இந்த கேள்விக்கு விடை தெரிய வேண்டுமென்றால் தமிழ்நாட்டின் கல்வி கட்டமைப்பு எத்தகையது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். 

ஷங்கர் போன்ற இயக்குநர்களின் திரைப்படங்களில் காட்டப்படுவதைப் பார்த்து நாம், தமிழ்நாடு கல்வியில் மிகவும் பின் தங்கி இருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை வேறாக இருக்கிறது. சில புள்ளிவிவரங்களைப் பார்ப்போம்!

மொத்த சேர்க்கை விகிதம் (Gross Enrollment Ratio)

மொத்த சேர்க்கை விகிதம், அதாவது Gross Enrollment Ratio (GER) என்று சொல்வார்கள். அது என்னவென்றால், ஒரு ஆண்டில் பள்ளிப் படிப்பை முடித்து எத்தனை சதவீத மாணவர்கள் கல்லூரிக்கு செல்கிறார்கள் என்ற விகிதம் ஆகும். 

இதில் இந்தியாவின் GER சதவிகிதம் 26.3 ஆக இருக்கிறது. அதாவது ஒவ்வொரு 100 பள்ளி மாணவர்களிலும் 26 பேர் தான் கல்லூரிகளில் சேருகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டின் GER சதவிகிதம் 49 ஆக இருக்கிறது.

இந்தியாவில் 100 சதவிகித கல்வி அறிவை எட்டியதாக பல சமயங்களில் உதாரணமாகக் காட்டப்படும் கேரளாவின் GER மதிப்பு கூட தமிழ்நாட்டை விட குறைவு தான். கேரளாவின் GER சதவிகிதம் 37 தான். நரேந்திர மோடி அவர்களின் குஜராத்தின் GER சதவிகிதம் வெறும் 20.4 தான்.

மாநிலங்களின் GER விகிதம்
GER விகிதம் ஒப்பீடு

10 ஆண்டுகள் முன்னோக்கி தமிழ்நாடு

பள்ளிப் படிப்பை முடிக்கும் மாணவர்களில் கிட்டத்தட்ட பாதிப்பேரை தமிழ்நாடு கல்லூரிகளுக்கு அனுப்புகிறது. இந்த 50 சதவிகிதத்தை எப்படியாவது இன்னும் 10 ஆண்டுகாலத்தில் எட்ட வேண்டும் என்பதுதான் புதிய தேசிய கல்விக் கொள்கையின் நோக்கமாக சொல்லப்படுகிறது. ஆனால் அந்த இலக்கினை தமிழ்நாடு எப்போதோ எட்டி விட்டது. 

கல்வியில் மாநிலங்களுக்கிடையில் இத்தனை வேறுபாடுகள் இருக்கும்போது நாடு முழுமைக்கும் சேர்த்து ஒற்றைக் கல்வி முறை என்று எப்படி சொல்ல முடியும் என்பது தான் தமிழ்நாட்டிலிருந்து எழும் கேள்வியாக இருக்கிறது. ஏற்கனவே கல்வியில் முன்னேறிக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டை, தேசிய கல்விக் கொள்கை என்று சொல்லி பின்னோக்கி இழுக்கக் கூடாது என்ற கோரிக்கையே இங்கு பிரதானமாக இருக்கிறது.

பட்டியலின மக்களின் GER

பட்டியலின மக்களின் (SC) GER சதவிகிதம் அதிகமாக இருப்பதும் தமிழ்நாட்டில்தான். தமிழ்நாடு பட்டியலின மக்களின் GER சதவிகிதம் 41.6 ஆக இருக்கிறது. மகாராஷ்டிராவில் 31.2 ஆகவும், கேரளாவில் 25.9 ஆகவும், உத்திரப் பிரதேசத்தில் 24 ஆகவும் இருக்கிறது. மொத்த இந்தியாவின் சதவிகிதம் வெறும் 23 தான். சமூக நீதி அடிப்படையில் பார்த்தாலும் தமிழ்நாடு தான் கல்வியில் சரியான அணுகுமுறையைக் கொண்டிருக்கிறது. 

ஆராய்ச்சிப் படிப்பு

ஆராய்ச்சிப் படிப்பான பி.எச்டி படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையிலும் தமிழ்நாடுதான் முதலிடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து 2018-19 கல்வி ஆண்டில் 25,820 பேர் பி.எச்டி படிப்பிற்கு சேர்ந்திருக்கிறார்கள். இதில் மொத்த இந்தியாவின் எண்ணிக்கையில் ஆறில் ஒரு பங்கு மாணவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்தான். அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் அதில் 12121 பேர் பெண்கள். பெண்கள் அதிகமாக ஆராய்ச்சிப் படிப்பில் சேருவதும் தமிழ்நாட்டில்தான். இதுதான் மாற்றத்தின் மையம். 

இளங்கலை ஆராய்ச்சிப் படிப்பான எம்.பில் படிப்பில் 12425 பேர் சேர்ந்திருக்கிறார்கள். இதிலும் தமிழ்நாடுதான் முதலிடம். குஜராத்தில் இந்த எண்ணிக்கை வெறும் 884. 

பெண்கள் முன்னேற்றத்தில் முன்னிலை

முதுகலைப் பட்டப் படிப்பில் (Post Graduate) 4,44,388 பேர் சேர்ந்திருக்கிறார்கள். அதில் 2,74,576 பேர் பெண்கள். இளங்கலைப் படிப்பிலும் கூட பாதிக்கும் மேல் பெண்கள் தான். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் ஆண்-பெண் விகிதத்திலும் தமிழ்நாடு மாற்றத்தை உருவாக்கிக் காட்டியிருக்கிறது. இங்கு பெண்கள் முன்னணியில் நிற்கிறார்கள். கல்லூரி விரிவுரையாளர்களாக பெண்கள் அதிகம் பணி செய்வது தமிழ்நாட்டில் தான். 

தொலைதூரக் கல்வி முறையில் வீட்டிலிருந்தே முதுகலைப் பட்டப்படிப்பு படிப்பவர்களின் எண்ணிக்கையும் தமிழ்நாட்டில் தான் அதிகம்.

டிப்ளமோ படிப்பில் கூட அதிக மாணவர்களை தமிழ்நாடுதான் உருவாக்குகிறது. 2018-19ம் ஆண்டில் 3,77,585 பேர் டிப்ளமோ படிப்பில் சேர்ந்திருக்கிறார்கள்.

மேற்கண்ட புள்ளிவிவரங்கள் இந்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் உயர்கல்விக்கான அகில இந்திய கணக்கெடுப்பின் (AISHE) 2018-19 ஆண்டு அறிக்கையிலிருந்து எடுத்தாளப்பட்டவை.

கடந்த 50 ஆண்டுகளில் தமிழ்நாடு உருவாக்கியிருக்கிற மாற்றம் என்பது இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுதாரணமானது. ஏற்கனவே நீட் தேர்வின் மூலமாக தமிழ்நாடு உருவாக்கிய அதிசிறந்த மருத்துவக் கட்டமைப்பு பாழாவதாக கடுமையான விமர்சனம் இங்கு இருக்கிறது. ஆகவேதான் தேசிய கல்விக் கொள்கையை மற்ற எந்த மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டின் கட்சிகளும், அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும், கல்வியாளர்களும் தீவிரமாக எதிர்க்கிறார்கள். 

கல்வியின் மீது தமிழ்நாட்டிற்கு இருந்த தனித்தன்மையான உரிமையும், அதிகாரமும்தான் இத்தகைய மாற்றத்தை உருவாக்கிக் காட்டுவதற்கு முக்கியமான காரணமாக அமைந்தது. ஆனால் கல்வியின் மீதான மாநில அரசின் அதிகாரம் தேசிய கல்விக் கொள்கையின் மூலமாக கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசின் கல்வி அதிகாரம் பறிபோவது, தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்பினை நிச்சயமாக பாதிக்கும் என்பது இக்கொள்கையின் முக்கிய பிரச்சினையாகும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *