எடப்பாடி பழனிச்சாமி

தனியே தன்னந்தனியே எடப்பாடி பழனிச்சாமி; தங்கள் தொகுதியைத் தாண்டி வெளியே வராத அமைச்சர்கள்!

நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் மிகத் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதாவும் கருணாநிதியும் இல்லாத இந்த தேர்தலில் பிரச்சாரத்தில் யார் முன்னிலையில் இருக்கிறார்கள் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. 

இந்த தேர்தலில் அதிமுக மண்டல பொறுப்பாளர்களாக இருக்கக்கூடிய அமைச்சர்கள் அனைவரும் தங்கள் தொகுதியை விட்டு வெளியே வராமல், தொகுதிக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். கூட்டணி கட்சியான பாஜக தனது தொகுதிகளுக்கு கர்நாடகாவில் இருந்து ஆட்களை இறக்கி வேலை பார்ர்க்கும் நிலையில் இருக்கிறது. 

இன்னொரு பக்கம் பாமக-வினர் ஒத்துழைப்பு தரவில்லை என்று அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனே புலம்புகிற நிலையில் இருப்பதால் அதிமுக வேட்பாளர்கள் திக்கு தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதேவேளையில் எதிர் அணியில் ஸ்டாலின் மட்டுமின்றி வைகோ, உதயநிதி,  கனிமொழி, திருமாவளவன் என்று மக்கள் அறிந்த தலைவர்கள் மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்கிறார்கள்.  

ஆனால் அதிமுகவிலோ முக்கிய அமைச்சர்கள் யாரும் தங்கள் பொறுப்பின் கீழ் ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்குக் கூட செல்வதில்லை என்று அதிமுக வேட்பாளர்கள் புலம்புகிறார்கள்.

செங்கோட்டையன்

செல்வி ஜெயலலிதா காலத்தில் அவருடனான பிரச்சார பயணத்தில் தமிழ்நாடு முழுவதும் பயணிக்கும் கட்சியின் மூத்த தலைவரான செங்கோட்டையன் ஒவ்வொரு மாவட்ட அளவிலும் பிரச்சாரங்களில் நிறை, குறைகளை  தனது நீண்ட அனுபவத்தில் இருந்து சுட்டிக்காட்டி சரி செய்வார். இந்தமுறை கோபிசெட்டிபாளையத்தைத் தவிர ஈரோட்டின் மற்ற தொகுதிகளுக்குக் கூட அவர் செல்லவில்லை. முன்னால் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் தனித்து நிற்கும் சிக்கல் வந்ததால் இரண்டு முறை பெருந்துறைக்கு மட்டும் கட்சி செயல்வீர்கள் கூட்டத்திற்கு சென்றுள்ளார்.  

தம்பிதுரை

அதிமுக-வின் கொள்கை பரப்புச் செயலாளரும், மூத்த தலைவருமான   தம்பிதுரை கடந்த காலங்களில் மாநில தேர்தல் பொறுப்பாளராக இருந்து  ஜெயலலிதா முதல் நட்சத்திரப் பேச்சாளர்கள் வரை அனைவரது பிரச்சார பயணத்தையும் திட்டமிட்டவர். தற்போது நடை பெறும் தேர்தலில் அவர் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை. 

அன்வர் ராஜா

கட்சியின் மூத்த தலைவரும்,  சிறுபான்மை பிரிவு செயலாளருமான அன்வர் ராஜா தனது சொந்த மாவட்டமான ராமநாதபுரத்திலேயே பிரச்சாரத்திற்கு வரவில்லை.

ஆர்.பி.உதயகுமார்

மதுரை, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களுக்கு பொறுப்பாளரான   அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தனது திருமங்கலம் தொகுதியைத் தாண்டி இன்னும் உசிலம்பட்டிக்குக் கூட பிரச்சாரத்திற்கு செல்லவில்லை. இவர்  பொறுப்பில் இருக்கும் தென்காசி மாவட்ட அமைச்சரான ராஜலெட்சுமி தனது சொந்த தொகுதியான சங்கரன்கோவில் தொகுதியிலேயே பல இடங்களில் மக்களால் விரட்டப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்திற்கென்று அதிமுகவில் எந்த அமைச்சரும் இல்லாத நிலையில், தேர்தலுக்கு பொறுப்பாளரான ஆர்.பி.உதயகுமாரும் கைவிட்டுவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.

கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி மாவட்ட அமைச்சரான கடம்பூர் ராஜூ வேட்புமனு தாக்கல் செய்யவே தன் தொகுதியில் முக்கியத் தலைவர்கள் ஒத்துழைப்பு இல்லாமல் திருநெல்வேலியில் இருந்து பாப்புலர் முத்தையாவை வரவைத்து தாக்கல் செய்தார். அவரும் தூத்துக்குடியின் மற்ற தொகுதிகளுக்கு செல்லவில்லை.

விஜயபாஸ்கர்

ஐந்து ஆண்டுகள் இந்த அரசின் முக்கிய அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர், கடந்த ஜனவரியில் பொங்கல் பரிசு கொடுத்து தனது விராலிமலையில் பிரச்சாரத்தை தொடங்கியவர். இன்னும் விராலிமலை தொகுதியைத் தாண்டி  மாவட்டத்தின் மற்ற தொகுதிகளுக்கான பிரச்சாரங்களில் கூட பங்கெடுக்கவில்லை.

ராஜேந்திர பாலாஜி

விருதுநகர் மாவட்டத்தின் பொறுப்பாளரான அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தற்போது  சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் சிவகாசி தொகுதிக்குக் கூட  பிரச்சாரத்திற்கு செல்லாமல் ராஜபாளையத்தில் மட்டுமே வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். 

எஸ்.பி.வேலுமணி

மூன்று மாவட்டங்களுக்கு பொறுப்பாளரான அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  தனது தொண்டாமுத்தூர் தொகுதிக்குள் மட்டுமே சுற்றி வருகிறார். மற்ற தொகுதிகளுக்குச் சென்றாலும் அது பெரும்பாலும் வேட்பாளர் அறிமுகக் கூட்டமாகவோ அல்லது கட்சிகாரர்களை சந்திக்கும் கூட்டமாகவோதான்  இருக்கிறது.

இந்தமுறை வாய்ப்பு கிடைக்காமல் தனித்து நிற்கும் முன்னாள் அமைச்சர்  தோப்பு வெங்கடாசலம் கடந்த தேர்தலில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் பிரச்சாரத்தை நடத்தியதாகக் கூறியுள்ளார்.

ஈ.பி.எஸ்-சும், ஓ.பி.எஸ்-சும் மட்டுமே செய்யும் பிரச்சாரம்

அதிமுக-வைப் பொறுத்தவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரைத் தவிர வேறு எந்த அமைச்சரும் தனது தொகுதியைத் தாண்டி பிரச்சாரத்திற்கோ, தேர்தல் வேலைகளுக்கோ செல்லவில்லை. 

எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கூட தனது தொகுதிக்கு அதிக நாள் ஒதுக்கி பிரச்சாரம் செய்கிறார். இதற்குமுன் எந்த முதலைமைச்சர் வேட்பாளரும் இப்படி தனது தொகுதிக்குள் அதிக நேரத்தை செலவு செய்தது இல்லை. 

கட்சியின்  ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வத்திற்கு தன் சொந்த தொகுதியில் பல எதிர்ப்பு இருக்கிறது. அவரும் அதனால் அதிக நேரத்தை  போடியில் தான் செலவிட்டு வருகிறார். அதைத் தாண்டி தனது  ஆதரவாளர்களுக்கு மட்டும் தமிழகத்தில் சில பகுதியில் பிரச்சாரத்திற்கு சென்றுள்ளார்.

இவர்கள் இருவரைத் தவிர தமிழகத்தில் அதிமுகவில் வேறு யாரும் மாநிலம் தழுவிய பிரச்சாரத்தை முன்னெடுக்கவில்லை. மண்டலப் பொறுப்பாளர்கள் தாங்கள் சட்டமன்றம் செல்வதே சவாலாக இருப்பதாக அதற்கே முன்னுரிமை கொடுக்கிறார்கள். 

ஒரு கட்சியாக ஒருங்கிணைந்த தேர்தல் வேலைகளே செய்யாமல் ஆங்காங்கே அமைச்சர்கள் தொகுதிகளில் மட்டும் கவனம் செலுத்தி தான்  தேர்தல் வேலைகள் நடக்கிறது. ஊடகங்களில் ஆளுமையாக காட்டப்படும் எடப்பாடி பழனிசாமி அவர்கள், கட்சியை தேர்தல் வேலையில் ஒருங்கிணைத்து ஒருமுகப்படுத்துவதில் தோல்வியடைந்துள்ளார் என்பதையே இது காட்டுகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *