சென்னையில் 2005-க்கும் 2016-ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட 11 ஆண்டு காலத்தில் மூன்றில் இரண்டு பங்கு விவசாய நிலங்களும், மூன்றில் ஒரு பங்கு நீர்நிலைகளும் அழிக்கப்பட்டிருப்பதாக அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வுக்குழு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. சென்னை ஒரு நகர்ப்புற வெப்பத் தீவாக மாறி வருவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
அம்பத்தூர், அண்ணனூர், ஐயப்பந்தாங்கல், மணப்பாக்கம், மடிப்பாக்கம், ஈஞ்சம்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் போன்ற பகுதிகளை சுற்றியுள்ள இடங்களில் இருந்த விவசாய நிலங்களில் பெரும்பாலானவை கான்கிரீட் கட்டிடங்களாக மாற்றப்பட்டுவிட்டன என்று இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
ஆய்வுமுறை
Landsat 5, 8 மற்றும் Resourcesat 2 ஆகிய செயற்கைக்கோள் படங்களைப் பயன்படுத்தி 442 சதுர கி.மீ தூரத்தில் உள்ள நிலங்களின் மீதான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த செயற்கைகோள் படங்களின் 2005-ம் ஆண்டின் படங்களும், 2016-ம் ஆண்டின் படங்களும் ஒப்பிடப்பட்டு எந்தெந்த நிலங்கள் என்னென்னவாக மாற்றப்பட்டுள்ளன என்ற விவரங்களை கண்டறிந்தனர்.
மேலே உள்ள படத்தில் மஞ்சள் நிறத்தில் குறிக்கப்பட்டவை விவசாய நிலங்களையும், சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்டவை கட்டிடங்களையும், பச்சை நிறத்தில் குறிக்கப்பட்டவை காடுகளையும், நீல நிறத்தில் குறிக்கப்பட்டவை நீர்நிலைகளையும், வானத்தின் நீல நிறத்தில் (Sky-Blue) குறிக்கப்பட்டவை சதுப்பு நிலங்களையும் குறிக்கின்றன.
ஆய்வு முடிவில் தெரியவந்தவை
- 2005-ம் ஆண்டு 52.14 சதுர கி.மீ ஆக இருந்த விவசாய நிலங்களின் பரப்பளவானது 2016-ம் ஆண்டில் வெறும் 18.28 சதுர கி.மீ ஆக சுருங்கியுள்ளது.
- அதேபோல் 2005-ம் ஆண்டு 37.53 சதுர கி.மீ ஆக இருந்த நீர்நிலைகளின் பரப்பளவானது, 2016-ம் ஆண்டில் 24.99 சதுர கி.மீ ஆக சுருங்கியுள்ளது. கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு நீர்நிலைகள் கட்டிடங்களாக மாற்றப்பட்டுள்ளன.
- 2005-ம் ஆண்டு 14.37 சதுர கி.மீ ஆக இருந்த சதுப்பு நிலங்களின் பரப்பளவானது 10.05 சதுர கி.மீ ஆக சுருங்கியுள்ளது.
- காடுகளைப் பொறுத்தவரை 7.98 சதுர கி.மீ லிருந்து 7.82 சதுர கி.மீ ஆக சுருங்கியுள்ளது.
- 2005-ல் 319.22 சதுர கி.மீ ஆக இருந்த கட்டிடங்களின் பரப்பளவானது 363.99 சதுர கி.மீ ஆக அதிகரித்துள்ளது. அதாவது கிட்டத்தட்ட 10.13% அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக விவசாய நிலங்களும், இரண்டாவது நீர் நிலைகளும், மூன்றாவதாக சதுப்பு நிலங்களும் கட்டிடங்களாக மாற்றப்பட்டுள்ளன.
அதிகரிக்கும் சென்னையின் வெப்பநிலை
விவசாய நிலங்களும், நீர் நிலைகளும், சதுப்பு நிலங்களும் கட்டிடங்களாக மாற்றப்பட்டதால், கட்டிடங்கள் சூரிய ஒளியை தக்கவைத்துக் கொள்வதால் சென்னை நிலப்பரப்பின் மேற்புற வெப்பநிலையானது குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்ந்திருக்கிறது என்று அண்ணா பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் பேராசிரியர் இளங்கோ டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஆய்வாளர்கள்
அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் இளங்கோ, சாமுரேம்பி சானு ஆகியோரும், ஹைதராபாத் நேஷனல் ரிமோட் சென்சிங் செண்டரின் ரவி சங்கரும் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டிருக்கிறார்கள். இந்த ஆய்வு ’அரேபியன் ஜார்னல் ஆஃப் ஜியோ சயின்சஸ்’ இதழில் பதியப்பட்டுள்ளது.
திட்டமிடப்படாத நகரமயமாக்கல்
வளர்ச்சி என்ற பெயரில் ஒழுங்குபடுத்தப்படாத மற்றும் திட்டமிடப்படாத நகரமயமாக்கலால் புயல், சூறாவளி, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான தன்மையை சென்னை மாநகரம் இழந்து வருவதாக சூழலியல் செயல்பாட்டாளர்கள் தெரிவிக்கிறார்கள். இருக்கின்ற காடுகளும், நீர்நிலைகளும் மேலும் அழிக்கப்படும்போது நிலைமை இன்னும் தீவிரமாகும்.
காலநிலை மாற்றத்தின் விளைவாக இயற்கைப் பேரிடர்கள் மிகச் சாதாரணமாக ஆண்டுதோறும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. காடுகளையும், நீர் நிலைகளையும் பாதுகாப்பதும், அவற்றின் பரப்பினை அதிகரிக்க முயல்வதும் மட்டுமே சென்னை மாநகராட்சியின் மக்களை இயற்கை பேரிடர்களின் பிடியிலிருந்து காத்திட முடியும்.
Lot of lake lands are acquired by DMK party men during their regime and got patta which eventually got a building during the mentioned period. 90% of land brokers in Ambattur Avadi areas are DMK and they made lot of money by acquiring water lands near Ambattur lake, Korattur lake and Puzhal lake.