தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி இறந்த பின்பு தமிழக அரசியலில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. ஜெயலலிதா மரணமடைந்த அன்று இரவே ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது.
சசிகலாவை பொதுச்செயலாளராக அறிமுகம் செய்துவைத்த ஓ.பி.எஸ்
அதேமாதம் 28-ம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக-வின் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் கூடிய பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமான ஒன்று திருமதி வி.கே.சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தது.
இதனை பத்திரிக்கையாளர்களிடம் அன்றைய முதல்வர் பன்னீர்செல்வம் தான் அறிவித்தார். 2017-ம் ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதி சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கூடிய அந்த கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் சசிகலாவை முதல்வராகத் தேர்ந்தெடுத்தனர். தனது ராஜினாமா கடிதத்தை சசிகலாவிடம் வழங்கிய ஓ.பன்னிர்செல்வமும் சேர்ந்துதான் சசிகலாவை தேர்ந்தெடுத்தார்.
”சின்னம்மா தலைமையின் கீழ் விசுவாசத்துடன் பணியாற்றுவோம்” என தீர்மானம் போட்டு சசிகலாவை அந்த கூட்டத்தில் அறிமுகம் செய்துவைத்துப் பேசியதும் ஓ.பி.எஸ். தான்.
மெரீனாவில் தர்மயுத்தம் தொடக்கம்
2017-ம் ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி மாலை 7 மணிக்கு மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்த ஓ.பி.எஸ் சில மணித்துளிகள் அங்கு தியானத்தில் அமர்ந்தார்.
அடுத்து ஊடகங்கள் முன்னால் தனது தர்மயுத்தத்தை தொடங்கினார். ”கட்டாயத்தின் பேரில் தான் ராஜினாமா செய்தேன். சசிகலாவை யாரும் முதல்வராக ஏற்கவில்லை. என்னை அவமானப்படுத்தினார்கள். சசிகலாவை மக்களும் தொண்டர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை” என்றார்.
நடந்த எல்லாவற்றையும் விட முக்கியமானது, சசிகலா தரப்பின் மீது மக்களுக்கு இருந்த அதிருப்தியைப் பயன்படுத்திக் கொண்ட ஓ.பி.எஸ், ”ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது” என்று கேள்வி எழுப்பியதுதான்.
ஜெயலலிதா மரணத்திற்கு சி.பி.ஐ விசாரணை கோரிய ஓ.பி.எஸ்
மார்ச் 8-ம் தேதி தமிழகம் முழுவதும் ஜெயா மரணம் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று கோரிக்கை வைத்து ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்தவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். ”ஜெயலலிதாவைப் பார்க்க மோடி வந்திருந்தால் அவரை ஏதேனும் வெளிநாட்டிற்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு அழைத்துச் சென்றிருப்பார்கள்” என்று ஒபிஎஸ் ஆதரவாளர் செம்மலை சேலத்தில் பேசினார்.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்த ஓ.பி.எஸ் அங்கு பேசும்போது, ”சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட அப்பல்லோ இரண்டாவது தளத்தில் குண்டர்ளை போட்டு வைத்திருந்தார்” என்று குற்றம்சாட்டினார்.
ஓ.பி.எஸ்-சை குற்றம் சாட்டிய சி.வி.சண்முகம்
”ஓ.பி.எஸ் தான் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது முதல்வரின் பொறுப்புகளைப் பார்த்தவர். அவர் முதல்வர் ஆவதற்காக ஜெயலலிதாவைக் கொன்றாரோ என்ற சந்தேகம் எங்களுக்கு இருக்கிறது” என்று சசிகலா அணியில் இருந்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.
10 சதவிகித உண்மையைத் தான் கூறியிருக்கிறேன்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்கு எதிராகப் போட்டியிட்ட ஓ.பி.எஸ் ஆதரவாளரான மதுசூதனனுக்கு வாக்கு கேட்ட அமைச்சர் பாண்டியராஜன் ஜெயலலிதா போன்றதொரு உடலை வைத்து பிரச்சாரம் செய்து கடும் கண்டனத்திற்கு உள்ளானார்.
”மேலும் சசிகலாவைப் பற்றி 10 சதவிகிதம்தான் கூறியிருக்கிறேன். தேவைப்படும்போது மீதமுள்ள 90 சதவிகிதத்தைக் கூறுவேன்” என்று ஓ.பன்னீர்செல்வம் கூறிக் கொண்டிருந்தார்.
எடப்பாடி முதல்வராவதை எதிர்த்து வாக்களித்த ஓ.பி.எஸ் அணி
எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக்க கூவத்தூர் பங்களாவில் எம்.எல்.ஏக்களை வைத்திருந்தது, பின்னர் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குச் சென்றது என்று பல விடயங்கள் அடுத்தடுத்து நடந்தன.
சசிகலா சிறைக்குச் சென்றபோது எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கி விட்டுச் சென்றார். அதன்பிறகு எடப்பாடி பழனிச்சாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். இப்படி பல காட்சிகள் அடுத்தடுத்து அரங்கேறின.
இதில் பாஜக திரைக்கு பின்னிருந்து ஆட்டுவிப்பது போலவே ஓ.பி.எஸ் அணியினர் திரைக்கு முன்னால் ஆடிக் கொண்டிருந்தனர்.
யூ டர்ன் அடித்த சசிகலா ஆதரவு அமைச்சர்கள்
சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் சசிகலா மற்று தினகரனுக்கு எதிராக பல்டி அடித்தனர். எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராவதை எதிர்த்து வாக்களித்த ஓ.பி.எஸ் அணியினர் எடப்பாடி அணியினரோடு இணைந்தனர். சசிகலாவும், டிடிவி தினகரனும் ஓரங்கட்டப்பட்டனர். ஓ.பி.எஸ். – ஈ.பி.எஸ். அணிகள் இணைந்து இரட்டை இலை சின்னமும் அவர்களிடம் வழங்கப்பட்டது.
துணை முதல்வரான பிறகு சி.பி.ஐ விசாரணை கேட்காத பன்னீர்செல்வம்
பன்னீர்செல்வத்திற்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்ட பிறகு சிபிஐ விசாரணை என்கிற கோரிக்கையை ஓ.பி.எஸ் தரப்பு வலியுறுத்தவேயில்லை. பிற்காலத்தில் ”நான் தான் ஓ.பி.எஸ்-சை ஜெயலலிதா சமாதியில் போய் உட்காருங்க என்று வழிகாட்டினேன்” என்று துக்ளக் குருமூர்த்தி உண்மையை வெளிப்படுத்தி தர்மயுத்தத்திற்கு பின்னால் இருந்த மர்மத்தை அம்பலப்படுத்தினார்.
நீண்ட இழுபறிக்குப் பிறகு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.
ஜெயலலிதா மறைவில் சசிகலா மீது சந்தேகமில்லை; பன்னீர்செல்வம் அடித்த அந்தர்பல்டி
இந்த ஆண்டு ஜனவரி 19-ம் தேதி டெல்லியில் பிரதமரை சந்தித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பதற்கு 100% வாய்ப்பே இல்லை” என்று அடித்துச் சொன்னார்.
தேர்தல் கூட்டணி எல்லாம் பேசி முடிக்கப்பட்டு பிரச்சாரத்திற்கு சென்றபோது அங்கு தினகரனின் அமமுக பெரும் சவாலாக இருக்கிறது. அது மட்டுமல்லாமல் வன்னியர்களுக்கு கொடுக்கப்பட்ட 10.5% இடஒதுக்கீடு சீர்மரபினர் சமூகங்களிடம் ஏற்படுத்திய கொந்தளிப்பின் காரணமாக தென் மாவட்டங்களில் பல ஊர்களில் அதிமுக அமைச்சர்களே மக்களால் திருப்பி அனுப்பப்பட்டனர். ஒபிஎஸ்-க்கு அவரது சொந்த தொகுதியில் கூட மக்களிடம் எதிர்ப்பு வெளிப்பட்டது.
சசிகலாவை சேர்த்துக்கொள்ள வாய்ப்பே இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி சொன்னபோது அமைதியாகக் கடந்த ஓ.பி.எஸ், தற்போது சசிகலாவை சேர்த்துக்கொள்ள பரிசீலிப்போம் என்று கூறி அனைவரையும் புருவத்தை உயர்த்த வைத்துள்ளார்.
தந்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ஓ.பன்னீர்செல்வம், “ஜெயலலிதா மறைவில் சசிகலா மீது எனக்கு எந்த சந்தேகமும் இருந்ததில்லை. அவர்மீது சில பழிகள் விழுந்தன. அவற்றிலிருந்து அவர் மீண்டு நிரபராதி என்று நிரூபிப்பதற்காகத்தான் நீதி விசாரணை கேட்டேன். அவர் ஜெயலலிதாவுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்தவர். அவர் மீது எங்களுக்கு நல்லெண்ணம்தான் உள்ளது” என்று அந்தர்பல்டி அடித்திருக்கிறார்.
சசிகலாவைப் பற்றி 10% உண்மையைத் தான் சொல்லியிருக்கிறேன் என்று சவால் விட்டாரே, அந்த சொல்லாமல் விட்ட 90% உண்மை என்ன ஆனது? இந்த தேர்தல் பிரச்சாரத்தோடு தர்மயுத்தம் முடிவுக்கு வந்ததா என்ற கேள்விகள் தான் மக்களுக்கு எழுகிறது.