சூயஸ் கால்வாய் கப்பல்

சூயஸ் கால்வாயை அடைத்து நிற்கும் கப்பல்; உலகின் கவனம் இப்போது ஒற்றை கால்வாயை நோக்கி!

உலகத்தின் மிக முக்கிய கடல்வழி வணிகப் பாதையான சூயஸ் கால்வாயில் ’எவர் கிவன் (Ever Given)’ எனும் மிகப் பெரிய ராட்சதக் கப்பல் நேற்றிலிருந்து அடைத்து நிற்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சூயஸ் கால்வாய் பகுதியில் கப்பல் போக்குவரத்து முற்றிலும் நின்று போயுள்ளது. இந்த அடைப்பினால் ஒரு மணிநேரத்திற்கு 400 மில்லியன் டாலர் வரையில் இழப்பு ஏற்படுவதாகக் கணிக்கப்பட்டுள்ளது. 

சூயஸ் கால்வாய் உருவாக்கப்பட்ட பின்னணி

சூயஸ் கால்வாயானது ஒரு செயற்கையாக அமைக்கப்பட்ட கடல்வழிப் பாதையாகும். இது எகிப்து நாட்டினால் இயக்கப்படுகிறது. ஆசியாவிலிருந்தும், கிழக்கு ஆப்ரிக்காவிலிருந்தும் ஐரோப்பாவிற்கு செல்வதற்கு மிகப் பெரும் தூரத்திற்கு கடலில் ஆப்ரிக்காவைச் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை இருந்தது. தென் ஆப்ரிக்காவிலுள்ள நன்னம்பிக்கை முனையைச் சுற்றித்தான் ஐரோப்பாவிற்கு செல்ல வேண்டும். இப்பாதையில் ஐரோப்பாவிற்கு செல்வதானால் ஒரு மாதத்திற்கும் மேல் பிடிக்கும். 

இந்த பயண தூரத்தினை குறைக்கும் வகையில் செங்கடலை மெடிட்டரினியன் கடலோடு இணைத்திட எகிப்தின் வழியாக 1859-ம் ஆண்டு சூயஸ் கால்வாய் தோண்டப்பட்டது. சூயஸ் கால்வாய் கட்டுமானப் பணியானது 10 வருடங்களுக்கு நடைபெற்றது. 1869-ம் ஆண்டு நவம்பர் 17-ம் தேதி முதல் சூயஸ் கால்வாய் துவங்கப்பட்டது. 

சூயஸ் கால்வாய் கட்டப்பட்ட இடம்
நடுவில் உள்ள பாதை சூயஸ் கால்வாய் பாதை. மற்ற இரண்டு பாதைகள் சுற்றிக்கொண்டு செல்லக் கூடிய பாதைகள்

இந்த கால்வாயின் நீளம் 193.3 கி.மீ ஆகும். அகலம் 205 மீ, ஆழம் 24 மீ. இந்த கால்வாயின் வழியாக 77.5 மீ அகலம் வரை உள்ள கப்பல் சென்று வர முடியும். 

சூயஸ் கால்வாய் ஏன் உற்றுநோக்கப்படுகிறது?

2010-ம் ஆண்டின் தரவுகளின்படி, ஒரு நாளைக்கு இந்த கால்வாயின் வழியாக 47 கப்பல்கள் பயணிக்கின்றன. 2020-ம் ஆண்டில் மட்டும் இந்த வணிகப் பாதையினால் எகிப்து அரசுக்கு 5 பில்லியன் டாலர் வருமானம் கிடைத்ததாக அந்த நாடு தெரிவித்துள்ளது. 

கச்சா எண்ணெய், பெட்ரோலியப் பொருட்கள், திரவ இயற்கை எரிவாயு (LNG) போன்றவை இப்பாதையின் வழியாக வர்த்தகத்திற்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படுகிறது. உலகின் மொத்த எண்ணெய் போக்குவரத்தில் 10% இந்த கால்வாய் வழியாக நடைபெறுகிறது. அதேபோல மொத்த LNG போக்குவரத்தில் 8% இந்த கால்வாய் வழியாக நடைபெறுகிறது. 

எண்ணெய் வர்த்தகத்தில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த இப்பாதையை கப்பல் அடைத்து நிற்பதால், உடனடியாக பாதையை திறக்காத பட்சத்தில் எண்ணெய் விலை உயரும் அபாயமும் இருப்பதாக சொல்லப்படுகிறது.

கப்பல் அடைத்து நிற்கும் சேட்டிலைட் புகைப்படம்

எவர் கிவன் கப்பல்

எவர் கிவன் கப்பல் 400 மீ நீளமும், 59 மீ அகலமும் கொண்டது. இந்த கப்பல் 20,000 கண்டெய்னர்கள் வரை ஏற்றிச் செல்லக் கூடிய பிரம்மாண்டமான ராட்சதக் கப்பல் ஆகும். நெதர்லாந்தை அடைவதற்காக சூயஸ் கால்வாயின் வழியாக சென்று கொண்டிருந்த எவர்கிவன் கப்பல் திடீரென வீசிய சூறைக் காற்றினால் வடக்குக் கரையில் மோதியதில், பக்கவாட்டில் திரும்பில் கால்வாயில் சிக்கிக் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக கால்வாயின் பாதை முற்றிலுமாக அடைபட்டுள்ளது. கப்பல் மாட்டிக் கொண்ட உண்மையான காரணத்தை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். 

டிராஃபிக் போல் சிக்கித் தவிக்கும் கப்பல்கள்

பல்வேறு கண்டங்களுக்கிடையே பொருட்களை ஏற்றிச் செல்லக் கூடிய ஏராளமான கப்பல்கள் செல்வதற்கு வழியின்றி சூயஸ் கால்வாயில் அணிவகுத்து நின்று கொண்டிருக்கின்றன. 100-க்கும் மேற்பட்ட கப்பல்கள் செல்வதற்கான வழியின்றி தடைபட்டுள்ளன என்று ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதில் 9 கப்பல்கள் ஏற்கனவே கால்வாய் பகுதிக்குள் நுழைந்து முன்னே அல்லது பின்னே எந்த திசையிலும் செல்ல வழியின்றி நின்று கொண்டிருக்கின்றன. 

மஞ்சள் நிற புள்ளிகள் கடலில் போக வழியின்றி நிற்கும் மற்ற கப்பல்களை குறிக்கின்றன

நகர்த்த மேற்கொள்ளப்படும் முயற்சி

கெய்ரோ 24 என்ற எகிப்து செய்தி நிறுவனம், கப்பலின் இயந்திரங்களில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளாலே இரு பக்கமும் கரைகளில் மோதியதாக குறிப்பிட்டுள்ளது. கப்பல் மோதியிருக்கும் இடத்தில் உள்ள மணலை அகற்றுவதற்கு கிரேன்களைப் பயன்படுத்தி வேலை செய்து வருகிறார்கள். இந்த முயற்சி வெற்றியடையவில்லை என்றால் கப்பலில் உள்ள எடையினைக் குறைத்து நகர்த்துவதற்கு முயற்சிக்க வேண்டும். 

கப்பலை நகர்த்த மேற்கொள்ளப்படும் முயற்சி

விலை உயருமா?

சூயஸ் கால்வாயில் நிகழ்ந்துள்ள அடைப்பின் காரணமாக, நியூயார்க்கில் எண்ணெய் பொருட்களின் விலை 1.3% சதவிகிதம் உயர்ந்திருப்பதாக ப்ளூம்பெர்க் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த விலையேற்றம் தற்காலிகமானதே என்பது ஒரு ஆறுதலான செய்தி. நிலைமை விரைவில் சரியாகாவிட்டால் எண்ணெய் நிறுவனங்கள் என்ன செய்வதென்று முடிவெடுத்துக் கொண்டிருக்கின்றன. இதுவரை எப்போதும் இல்லாத அளவிற்கு சூயஸ் கால்வாயில் சிக்குண்ட இந்த ராட்சதக் கப்பல் விவகாரம் இப்போது உலகப் பொருளாதார வல்லுநர்கள் அனைவரும் உற்றுநோக்கும் விவகாரமாக மாறியிருக்கிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *