டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தைக் காட்டிலும், அதிகாரத்தில் ஆளுநரே முதன்மையானவர் என அறிவிக்கும் மசோதாவினை மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டிலும் பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது.
இந்திய ஜனநாயகத்தின் வருத்தத்திற்குரிய நாள்
இந்த மசோதாவிற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதனை “இந்திய ஜனநாயகத்தின் வருத்தத்திற்குரிய நாள்” என்று தெரிவித்துள்ளார். நாட்டின் தலைநகரில் குடிமக்களின் அதிகாரத்தினை மீட்டெடுக்கும் போராட்டத்தினை ஆம் ஆத்மி கட்சி முன்னெடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மசோதா அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும், தலைநகரின் மக்களால் தோற்கடிக்கப்பட்டு ஒன்றுமில்லாமல் ஆக்கப்பட்ட ஒரு கட்சி (பாஜக), டெல்லி அரசாங்கத்தினை ஒன்றுமில்லாமல் ஆக்க முயல்கிறது என்றும் ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவும் ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளது.
அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைந்து எதிர்ப்பு
நேற்று (24-03-2021) புதன்கிழமை ராஜ்யசபாவில் இந்த மசோதா வைக்கப்பட்டபோது அனைத்து எதிர்கட்சிகளும் இணைந்து கடுமையாக எதிர்த்தன. குறிப்பாக மாநில கட்சிகள் அனைத்தும் ஒற்றைக் குரலில் எதிர்ப்பு தெரிவித்தன. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் இம்மசோதாவை எதிர்ப்பதில் இணைந்து நின்றனர். இம்மசோதாவினை தேர்வுக் குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் அவர்களின் கோரிக்கை பாஜகவால் நிராகரிக்கப்பட்டது.
இந்த மசோதாவிற்கு முன்பு டெல்லி சட்டமன்றத்தின் அதிகாரம்
நாட்டின் தலைநகரான டெல்லி ஒரு யூனியன் பிரதேசமாகும். அதற்கென தனி சட்டமன்றமும், 2 கோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும் இருக்கிறது. மாநில அரசுகளுக்கு இருக்கும் அளவிற்கான அதிகாரம் அதற்கு இல்லையென்றாலும், அதற்கான தனித்த அதிகாரங்கள் உண்டு. சட்டம் ஒழுங்கு மற்றும் நிலம் இவை சார்ந்த துறைகள் தவிர, மற்ற அனைத்து துறைகளிலும் டெல்லி சட்டமன்றம் சட்டம் இயற்ற இயலும்.
டெல்லியில் தொடர்ச்சியாக தோற்று வந்த பாஜக
டெல்லியில் கடைசியாக நடைபெற்ற தேர்தல்களில் மூன்று முறையாக தொடர்ச்சியாக பாஜகவானது, ஆம் ஆத்மி கட்சியிடம் தோற்றுள்ளது. நாட்டையே ஆளும் கட்சியாக இருந்தாலும், நாட்டின் தலைநகரை ஆள்வது என்பது பாஜகவிற்கு ஒரு கனவாகவே இருந்து வருகிறது. டெல்லியின் 2 கோடி மக்கள் தேர்தலில் தொடர்ச்சியாக பாஜகவினை நிராகரித்து வருகிறார்கள்.
இதன் காரணமாக மத்தியில் உள்ள பாஜக அரசினால் நியமிக்கப்பட்ட ஆளுநருக்கும், டெல்லி சட்டமன்றத்திற்கும் இடையிலான சர்ச்சைகள் தொடர்ந்து ஏற்பட்டு வந்தன. ஆளுநர் சட்டமன்ற அதிகாரத்தில் நுழைந்து அத்துமீறுகிறார் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உண்ணாவிரதத்தில் அமரும் சம்பவங்கள் கூட நடந்தன. இந்நிலையில் ஆளுநரின் அதிகார மேலாண்மையை தற்போது சட்டப்பூர்வமாக ஆக்கியிருக்கிறது பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு.
புதிய மசோதா: அரசாங்கம் என்பதே ஆளுநர் தான்
”தேசிய தலைநகர் டெல்லி அரசு (திருத்த) மசோதா, 2021” (Government of National Capital Territory of Delhi (Amendment) Bill, 2021) என்று இந்த புதிய மசோதா அழைக்கப்படுகிறது. 1991-ம் ஆண்டின் ”தேசிய தலைநகர் டெல்லியின் அரசு”-க்கான சட்டத்தில் தற்போது திருத்தம் மேற்கொள்ளப்பட்டு இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.
Government of National Capital Territory of Delhi Act, 1991 சட்டத்தின் பிரிவுகள் 21, 24, 33 மற்றும் 44 ஆகியவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரிவு 21-ல் ஒரு துணைப்பிரிவு சேர்க்கப்பட்டு “அரசாங்கம்” என்ற வார்த்தை “டெல்லி கவர்னரை”யே குறிக்கும் என்று மாற்றப்பட்டுள்ளது.
அரசியல் சாசனத்திற்கு எதிராக கூட்டாட்சியின் மீதான தாக்குதல்
அரசாங்கமும், அமைச்சரவையும் எடுக்கும் எந்தவொரு நிர்வாக முடிவுகளும் ஆளுநரின் அனுமதியின்றி நிறைவேற்றப்பட முடியாது எனும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ’அரசாங்கம்’ என்ற வார்த்தை ஆளுநரைக் குறிக்கும் என்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு என்ன முக்கியத்துவம் இருக்கிறது என்ற கேள்வியை ஆம் ஆத்மி எழுப்புகிறது.
இந்தியக் கூட்டாட்சியின் மீது பாஜக தொடுத்துள்ள தாக்குதல் இது என்று எதிர்கட்சிகள் கூறியுள்ளன. பாஜகவிற்கு விருப்பமில்லாத எதை டெல்லி அரசு செய்தாலும் அதை தடுத்து நிறுத்துவதற்கான லைசென்ஸ் ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவே இந்த மசோதாவினை எதிர்கட்சிகள் பார்க்கின்றன.
இனி மத்திய அரசின் கீழ் இயங்கும் அதிகாரவர்க்கம் டெல்லி சார்ந்து எடுகும் எந்த முடிவுகளையும் டெல்லி சட்டமன்றம் கேள்வி கேட்க முடியாது.
டெல்லி சட்டமன்றம் உருவான பின்னணி
ஆரம்ப காலங்களில் டெல்லியானது ஒன்றிய அரசினால் நியமிக்கப்படும் அதிகாரவர்க்கங்களாலேயே ஆளப்பட்டு வந்தது. அதிகாரவர்க்கத்தின் ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்றத்தினை டெல்லி யூனியன் பிரதேசத்தில் உருவாக்கிட வேண்டும் என்று தொடர்ச்சியான போராட்டங்கள் பல ஆண்டுகளாக நடந்தன. 1990 காலக்கட்டங்களில் டெல்லி சட்டமன்றம் உருவாக்கப்படும் எனும் கோரிக்கைக்காக பாஜகவும் போராட்டங்களை நடத்தியது.
தொடர் போராட்டங்களின் விளைவாகவே 1991-ம் ஆண்டு டெல்லிக்கான புதிய சட்டம் இயற்றப்பட்டு “டெல்லி சட்டமன்றம்” உருவாக்கப்பட்டது. டெல்லி சட்டமன்றம் அமைக்கப்பட்டு 1993-ம் ஆண்டு நடைபெற்ற முதல் தேர்தலில் பாஜக-வே வெற்றி பெற்றது. ஆனால் தற்போது தொடர்ச்சியாக பாஜகவால் டெல்லியில் வெற்றி பெற முடியவில்லை என்பதால், தலைநகரில் வேறு கட்சி அதிகாரம் செலுத்துவதை கட்டுப்படுத்த இப்படிப்பட்ட மசோதாவினை கொண்டுவந்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள்.