இந்த மதன் ஆபரேசன் விசயங்கள் எல்லாம் முதலாளித்துவத்தின் எந்த பரிணாமத்தில் நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்வது அவசியமானது. அப்பொழுதான் நாம் எவ்வளவு மோசமான போர் முனையில் இருக்கிறோம் என்பது புரியும்.
இந்தியாவில் 4G வந்த பிறகு 2020-ல் 79 கோடியாக இருந்த இன்டெர்நெட் சப்ஸ்க்ரைபர்கள் 2021 செப்டம்பரில் 84 கோடி. Tele Density என்று சொல்லக்கூடிய ஒரு பகுதியில் ஒவ்வொரு நூறு மனிதர்களுக்கும் இருக்கும் தொலைபேசி இணைப்பு என்பது இன்று 86%. Urban ஏரியாவில் 136%.
வெறும் எண்ணிக்கை மட்டுமல்ல Data consumption என்று சொல்லக்கூடிய ஒரு தனி நபருடைய இணையதளப் பயன்பாடு 2016-ல் 884MB. 2021 செப்டம்பரில் இது 14 ஜிபி. அப்போ இன்று?
இந்த டேட்டாவை ஏன் சொல்கிறோம் என்றால் மார்க்ஸ் சொல்கிறார் நேரம் தான் முதலாளித்துவத்தில் முக்கியமான வளம். “Time is everything, man is nothing” என்கிறார். உழைப்பு நேரத்திற்குத் தான் மதிப்பு உழைப்பாளிக்கு கிடையாது என்கிறார். தரம் இனி முக்கியமில்லை எண்ணிக்கை மட்டுமே முடிவு செய்யும் என்கிறார். எல்லாமே இதில் தான் அடங்கி இருக்கிறது.
விஷயத்திற்கு வருவோம்..!
எண்பதுகள் வரைக்கும் உலகில் செய்தி ஊடகங்கள் என்பது மரபான அல்லது பெரும்பாலும் அரசு ஊடகங்களின் கைகளில் தான் இருந்தது. அதன் பிறகு ஒரு பெரும் பாய்ச்சல் நடக்கிறது. அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிகல்ஸ், வால்ட் டிஸ்டனி, டைம்ஸ், வார்னர் பிரதர்ஸ் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களில் தொடங்கிய இந்த பாய்ச்சல் இன்றைக்கு பிரிண்டிங் மீடியா, தொலைக்காட்சி, டிஜிட்டல் மீடியா, வெப்சைட் என்று பல்லாயிரம் பில்லியன் கோடி டாலர் புழங்கும் மாபெரும் ஊடக சாம்ராஜ்யமாக வளர்ந்து நிற்கிறது.
இன்றைக்கு வெறும் ஆறு கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் அமெரிக்காவின் 90 சதவீத ஊடகத்தை கட்டுப்படுத்துகின்றன. 1983இல் ஒரு 50 கம்பெனிகளிடமிருந்த இந்த 90% அமெரிக்க ஊடக சந்தை என்பது படிப்படியாக ஆறு பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளுக்குள் வந்து சேர்கிறது. பிரிட்டனின் 90% பிரிண்டிங் மீடியாவை வெறும் மூன்று கார்ப்பரேட் கம்பெனிகள் தான் கட்டுப்படுத்துகின்றன.
ஏன் இந்த இரண்டு நாடுகளைப் பற்றி மட்டும் குறிப்பிடுகிறோம் என்றால் இந்த இரண்டு நாடுகளில் உள்ள செய்தி நிறுவனங்கள் சொல்வதுதான் இன்றைக்கு ஏனைய உலகத்திற்கு செய்தியாக இருக்கிறது. இதற்கு நல்ல உதாரணம் இன்றைய உக்ரைன் போர்தான். இந்த போர் குறித்து ரசியா என்ன சொல்கிறது என்று ஒருவர் அறிந்து கொள்ள விரும்பினால் அது எங்கேயும் கிடைக்காது. அப்படி ஒரு மோனோபோலியை உலகில் வழமையான ஊடகங்களுக்குள் இந்த 40 வருடங்களுக்குள் இந்த வல்லரசு நாடுகள் ஏற்படுத்தி இருக்கின்றன. கூகுளில் போய் ரசியா ஊடகங்கள் என்ன சொல்கிறது என்று தேடினால் அவ்வளவு எளிதாக கிடைக்காது.
சரி இந்தியாவிற்கு வருவோம்..!
இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட 90-களுக்குப் பிறகு பெரும் எண்ணிக்கையிலான தொலைக்காட்சிகள் பிற சாட்டிலைட் ஊடகங்கள் ஆரம்பிக்கப்படுகின்றன, பெரும்பாலும் பெரும் முதலாளிகள், பணக்கார குடும்பங்கள் மற்றும் தனி நபர்கள்தான் இவற்றை ஆரம்பிக்கிறார்கள்.
இங்கேயும் இந்த எண்ணிக்கை அமெரிக்காவைப் போல படிப்படியாக சுருங்கி ஒரு மோனாபோலியை நோக்கி நகர்ந்து வருகிறது. இன்றைக்கு இந்தியாவின் முக்கியமான செய்தி ஊடகமாக இருக்கக்கூடிய நியூஸ் 18 அம்பானிக்கு சொந்தமானது. தேசிய அளவில் இரண்டு செய்தி சேனல்களும், பிராந்திய அளவில் 14 செய்தி சேனல்களும், எண்டர்டெயின்மெண்ட் சினிமா வகையில் ஒரு 50 சேனல்களாகவும் இது வளர்ந்து நிற்கிறது.
ஹிந்தி பெல்டிலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் மிகப்பெரிய ஊடகமாக இருக்கக்கூடிய ஜீ மீடியா (Zee Media) அதன் முதலாளி சுபாஷ் சந்திரா பாஜகவின் உதவியால் எம்.பி ஆனவர் தான்.
- டைம்ஸ் நவ் சேனல் ஜெயின் குடும்பத்திற்கு சொந்தமானது.
- ABP முழுக்க முழுக்க சர்க்கார் குடும்பத்திற்கு சொந்தமானது.
- இந்தியா டுடே ஊடகம் பிர்லா குடும்பத்துக்கு சொந்தமானது.
- இந்தியன் எக்ஸ்பிரஸ் கோயங்கா குடும்பத்திற்கு சொந்தமானது.
- தி இந்து கஸ்தூரி ரங்கன் குடும்பத்திற்கு சொந்தமானது.
- இது தவிர ஒடிசா டெலிவிஷன் பிஜேபி சேர்ந்த பாண்டா ஃபேமிலிக்கு சொந்தமானது.
- அர்னாப் கோஸ்வாமி திடீரென வெளியில் வந்து ஒரு சேனல் ஆரம்பித்து இந்தியாவின் முக்கியமான ஊடகமாக மாறிவிட்டார். இதன் பின்னால் இருப்பது பாரதிய ஜனதாவின் பணம்.
- கடைசியாக குறைந்தபட்ச ஜனநாயகத்தோடு இருந்த என்.டி.டி.வி-யை இப்போது அதானி வாங்கிவிட்டார்.
இன்னும் கீழே இறங்கி தமிழ்நாட்டிற்கு வந்தால் சன் டிவி – கலாநிதி மாறன் குடும்பம், புதிய தலைமுறை – பச்சைமுத்து குடும்பம், நியூஸ் 7, பாலிமர், தந்தி என்று ரிலையன்ஸ் அம்பானி தொடங்கி தந்தி குடும்பம் வரைக்கும் வளமையான அத்தனை ஊடகங்களும் பெரும் கார்ப்பரேட்டுகளின் கட்டுப்பாட்டில் தான் வருகின்றன.
இதற்குள் அரசியல்வாதிகளும் வருகிறார்கள் கார்ப்பரேட் முதலாளிகளும் வருகிறார்கள். இருவரும் பரஸ்பர புரிதலோடு இந்த ஊடகங்களில் ஆளுமையை செலுத்துகிறார்கள்.
இப்போ திடீரென ஒரு கேம் சேஞ்சர் நடக்கிறது. சமூக ஊடகங்கள் வருகின்றன. பேஸ்புக், யூடியூப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், வேர்ட் பிரஸ் என்று சமூக ஊடகங்களில் மாபெரும் புரட்சி நடக்கிறது. எல்லோர் கைகளிலும் ஸ்மார்ட் போனும் 4ஜி டெக்னாலஜியும் வந்துவிடுகிறது.
பத்து வருடங்களுக்கு முன்பு 2012 ஆய்வின்படி பேஸ்புக் பார்ப்பதற்கு மட்டும் ஒரு நாளைக்கு 175 மில்லியன் மணி நேரங்களை மக்கள் செலவழித்து இருக்கிறார்கள். ஒரு வாரத்திற்கு 63 பில்லியன் மணி நேரங்களை பேஸ்புக் பயன்படுத்த செலவிட்டு இருக்கிறார்கள். ஒரு தனி நபர் ஒரு நாளைக்கு 18 நிமிடங்கள் வீதம் ஒரு வருடத்திற்கு 65 மணி நேரங்களை பேஸ்புக் பார்ப்பதற்காக செலவழித்து இருக்கிறார். இந்த தகவல் வெறும் பேஸ்புக் பார்ப்பவர்கள் மட்டும். யூட்யூப் போன்ற மற்ற ஊடகங்கள் தனி.
அடுத்து இந்த டேட்டா 2012ன் பயனாளர்கள் அடிப்படையில் எடுக்கப்பட்டது. அன்றைக்கு வெறும் ஒரு பில்லியன் பேஸ்புக் பயனாளர்கள்தான். இன்று 2.9 பில்லியன். கிட்டத்தட்ட 300 கோடி Facebook பயனாளர்கள். அப்படியே இந்த டேட்டாவை யூடியூப், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற பிற சமூக ஊடகங்களுக்கும் பொருத்திப் பாருங்கள்.
2012ல் 2G மாதிரியான பழைய தலைமுறை டெக்னாலஜி இன்றைக்கு 4G, 5G வந்துவிட்டது என்றால் சமூக ஊடகம் என்பது ஒவ்வொரு தனி நபரின் உழைப்பின் நேரத்தில் எவ்வளவு பெரிய தாக்கத்தை செலுத்துகிறது என்று கற்பனை செய்து பாருங்கள்.
ஒரு நாளைக்கு நான்கு மணி நேரங்களை சமூக ஊடகங்களுக்காக ஒரு தனி நபர் செலவிடுகிறார் என்று ஒரு தகவல் சொல்கிறது. இதை 300 கோடி பயனாளர்களோடு பெருக்கி அதன் சந்தை மதிப்பை கற்பனை செய்து பாருங்கள். இவ்வளவு பெரிய சந்தையை ஏற்கனவே ஊடகத் துறையில் வளர்ந்து நிற்கும் கார்ப்பரேட்டுகள் எப்படி விட்டு வைப்பார்கள். அப்படி நம்புவதே எவ்வளவு அப்பாவித்தனமானது.
இந்தியத் தொழில் வர்த்தக கழகம் FCCIன் மதிப்பீட்டின்படி 2017 இல் இந்திய ஊடகங்களின் ஆண்டு வருமானம் என்பது 1.5 ட்ரில்லியன் அளவுக்கு சென்று விட்டது. அடுத்த மூன்று ஆண்டுகளில் 2020ல் இந்த மதிப்பு இரண்டு ட்ரில்லியன் ஆக இருக்கும் என்று அன்று கணக்கிட்டு இருக்கிறார்கள்.
இந்த கார்ப்பரேட் ஊடகங்களில் சந்தை மதிப்பையும் இன்றைக்கு வளர்ந்து நிற்கும் சமூக ஊடகங்களையும் அதில் இருக்கும் கோடிக்கணக்கான பயனாளர்களையும் அவர்கள் செலவழிக்கும் பல கோடி மணி நேரங்களையும் கணக்கிட்டு பாருங்கள். இதை எப்படி அவர்கள் விட்டு வைப்பார்கள்.
இந்த சந்தையை தெரிந்து கொண்டதால் தான் பிஜேபி இதில் முதலில் இறங்கி விடுகிறார்கள். இயல்பிலேயே நூறு ஆண்டுகளாக பொய் சொல்லும் பயிற்சி இருப்பதால் ஃபேக் நியூஸ் பேக்டரிகளை உருவாக்கி விடுகிறார்கள்.
இந்த ஊடகங்கள் புதிதாக வந்த பொழுதில் அதன் சமூகமயமான தன்மையில் பல தனி நபர்கள் இதில் வளர்ந்திருக்கக் கூடும். ஆனால் அவர்களை மேலும் வளர அனுமதிக்காது. கார்ப்பரேட் தன்மையே அதுதான். சந்தையைக் கைப்பற்றுவதுதான். அந்த போட்டியில் பெரும் பணம் புரளும். நாம் ஆளுமைகள் என்று நினைக்கும் பலரும் விலை பேசப்படுவார்கள். பல ஊடகங்கள் விலை பேசப்படும். பலரும் விலை போவார்கள். இன்னமும் விலை போவார்கள். இது தவிர்க்க முடியாதது.
சுயாதீனமாக வளர்ந்த பல நிறுவனங்களும் மெல்ல மெல்ல ஒரு குடைக்குள் போவார்கள். கலாட்டாவை அவர் வாங்கி விட்டார், behindwoods ஐ இவர் வாங்கி விட்டார், Black Sheep-ஐ அவர் வாங்கி விட்டார் போன்று செவி வழியாக நமக்கு அறியப்படும் செய்திகள் எல்லாமே இந்த சண்டையில் ஒரு நிகழ்ச்சி நிரல் தான். எல்லோருமே இறுதியாக நம் நேரத்தை எப்படி ஆக்கிரமிக்க போகிறார்கள் என்பதில் தான் வந்து நிற்கிறார்கள்.
நம் விருப்பங்களுக்கான நிகழ்ச்சிகளை வழங்குவார்கள். அவர்களின் நிகழ்ச்சிகளுக்கு விருப்பமானவர்களாக நம்மை மாற்றுவார்கள். இரண்டுமே பரஸ்பரம் பெரும் நுட்பத்துடன் நடக்கும். நமக்காக போர்ன் வீடியோக்களையும் கொட்டுவார்கள். மருத்துவக் குறிப்புகளையும் கொட்டுவார்கள். எதையெல்லாம் சந்தையாக்க முடியுமோ அதை எல்லாம் சந்தையாக்கி நமக்கு நிகழ்ச்சிகளாக வழங்குவார்கள்.
இதற்குள்ளாக யாரை எப்படி வீழ்த்துவது? எப்படி கைப்பற்றுவது? ஸ்டிங் ஆபரேசன், சரக்கு, பணம் வேறு விஷயங்கள் என்று எல்லா விதத்திலும் முதலாளித்துவம் அதன் அழுகிய தன்மையோடு மிக மூர்க்கமாக இந்த சந்தையை கைப்பற்றுவதற்கு இறங்கும். அதன் விஷயம் எல்லாம் இந்த சண்டையில் சிறு துரும்பு அவ்வளவுதான்.
இதுதான் நாம் புரிந்துகொள்ள வேண்டியது.
இந்தப் போர்முனையில் தான் நாம் சமூக ஊடகப் பயனாளர்களாக இருக்கிறோம். நாம் பெரும் ஆளுமையாகப் பார்த்தவர்கள் நேர்மையாளராகப் பார்த்தவர்கள் எல்லோரும் இதற்குள்ளாக வீழ்வார்கள். அதன் ஒரு சாம்பிள்தான் மதன் ஸ்டிங் ஆபரேசன் விசயங்கள் எல்லாம்.
இது இந்தச் சண்டையில் ஒரு சிறு நிகழ்ச்சி போக்கு தான். இது இன்னும் தொடரும் என்பதை நாம் புரிந்து கொண்டால் பெரும் அதிர்ச்சியோ ஏமாற்றமோ அடையத் தேவையில்லை. இதற்குள்ளாக நாம் நம்முடைய பொறுப்பை வந்தடைய வேண்டிய தேவையும் இருக்கிறது.
இந்த சமூக ஊடகங்களில் உலகளாவிய அளவில் நமக்கான கட்சிகள், இயக்கங்கள் வலிமையாக இல்லை. ஆழ்ந்த சித்தாந்த பொருள் கொண்ட தர்க்கப்பூர்வமான விவாதங்களுக்குள் முகம் கொடுப்பவராக சமூக ஊடகங்களுக்குள் நாம் வளரவில்லை. எந்தக் கட்சியும் இயக்கமும் அந்த பொறுப்போடு நம்மை வளர்க்கவும் இல்லை.
முதலாளித்துவ வாழ்வின் அவசரத்துடனேயே நாம் சமூக ஊடகங்களை கையாளுகிறோம். கார்ப்பரேட்டுகளும் அதற்கான கச்சா பொருளையே உற்பத்தி செய்கின்றனர். அரசியல் கட்சிகளும் மரபான போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் சுவர் எழுத்துகள் என்று மரபாக மக்களை அணி திரட்டுவதில் இருந்து விலகி படிப்படியாக இந்த வார் ரூம் சண்டைக்குள் வருகிறார்கள். சிக்கும் அனைவரையும் விலை பேசுகிறார்கள், வாங்குகிறார்கள்.
ஒரு தேர்தலுக்கு 20 ஆயிரம் கோடிகளுக்கு மேல் செலவு செய்யும் இடத்தில், மக்களின் சமூக நேரத்தை இவ்வளவு ஆக்கிரமிக்கும் சமூக ஊடகங்களின் மூலமாக மக்களைக் கைப்பற்றுவதற்காக எவ்வளவு ஆயிரம் கோடிகளை வேண்டுமானாலும் செலவு செய்வார்கள். இதற்குள்ளாகத்தான் ஃபேக் நியூஸ் பேக்டரிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நேர்மையாளர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல் பார்வையாளர்கள் விலைக்கு வாங்கப்படுகிறார்கள். ஃபேக் நியூஸ் ஃபேக்டரியின் அடுத்த பரிணாமமாக ஃபேக் சிட்டிசன் வரைக்கும் வந்து விட்டார்கள்.
அமெரிக்காவில் இருந்து கொண்டு பிஜேபியின் இந்துத்துவப் பாசிசத்திற்காக ட்விட்டரில் அடியாட்கள் போல் வேலை செய்த 40 ஆயிரம் ஐ.டி-க்களை அந்த நாட்டு நிறுவனம் கண்டுபிடித்து பட்டியலிட்டது. அது எதுவுமே போலி கிடையாது. எல்லோரும் அமெரிக்கர்கள் யாரும் இந்திய குடியுரிமை இல்லாதவர்கள். இந்தியாவில் காலடி கூட வைத்தவர்கள் கிடையாது. இந்தியாவின் அரசியல் சூழலைப் பற்றிய எந்த அறிவும் இல்லாதவர்கள். ஒரு கூலிப்படையைப் போல பிஜேபியின் இந்துத்துவப் பாசிசத்திற்காக இந்தியர்களைப் போல ட்விட்டரில் செயல்பட்டவர்கள்.
எல்லாமே இந்த சமூக ஊடகத்தைக் கட்டுப்படுத்துவதில் இந்த சந்தையைக் கைப்பற்றுவதில் முதலாளித்துவம் அதன் அழுகிய தன்மையிலிருந்து செயல்படுத்தும் யுக்திகள் தான்.
இந்த சண்டைக்குள்ளாகதான் நாம் இருக்கிறோம் என்பதை முதலில் நாம் உணர வேண்டும். அடுத்து இதிலிருந்து நாம் நமக்கான அரசியல் தெளிவை, அரசியல் அணி திரட்டலை எப்படி பெறப் போகிறோம் என்பதுதான் நாம் விவாதிக்க வேண்டிய விடயம்.
இந்த தகவல் யுத்தத்தில் இருந்து வேறொரு பரிணாமத்தை யோசிக்க வேண்டிய தேவை மற்றும் பொறுப்பு நம் கட்சிகள் மற்றும் அமைப்புகளுக்கும், நமக்கும் இருக்கிறது.
மார்க்ஸ் சொன்னதை சொல்லி முடிக்கலாம்.
Marx saw the importance of time as a resource in capitalism and wrote that under this regime of the organization of life and society, time ‘is everything, man is nothing; he is, at the most, time’s carcase. Quality no longer matters. Quantity alone decides everything; hour for hour, day for day’ (Marx, 1847: 47).
– அன்பே செல்வா
மிக மிக முக்கியமான கட்டுரை! மரபு ஊடகங்கள் விலை போவதால்தான் மக்களாலேயே நடத்தப்படும் சமுக ஊடகங்களை நம்பத் தொடங்கினோம். ஒவ்வொரு தனி மனிதரும் ஒரு தனி ஊடகமாக இயங்க முடியும் என்பதுதான் சமுக ஊடகங்களின் வலிமை. ஆனால் அந்தத் தனி மனிதர்களையும் தனித் தனியாக விலைக்கு வாங்கும் புதிய பாணி இப்பொழுது தொடங்கி விட்டது. எல்லாக் கட்சிகளும் பெருநிறுவனங்களும் இதில் இருக்கின்றன என்றாலும் பா.ச.க., மற்றும் பா.சக., ஆதரவாளர்களின் கைதான் ஓங்கியிருக்கிறது. ஆனால் ஆயிரம் வேறுபாடுகளும் மாறுபாடுகளும் இருந்தாலும் தமிழர் பார்வையிலிருந்து பார்க்கும்பொழுது மொத்தத்தில் இங்கு இரண்டே பிரிவுதான். ஒன்று தமிழர் ஆதரவு, மற்றொன்று தமிழர் எதிர்ப்பு. ஆனால் யார் உண்மையாகவே தமிழர்களை ஆதரிக்கிறார்கள், தமிழர்களுக்கு நன்மை செய்கிறார்கள் என அறிவதுதான் சிக்கல். எல்லாருமே தங்களைத் தமிழ்ப் பற்றாளர்களாகவும் தமிழர்களின் நன்மைக்குப் பாடுபடுபவர்களாகவும்தாம் காட்டிக் கொள்கிறார்கள். எனவே இதற்குத் தீர்வு ஒன்றுதான். அது புதிதாக நான் சொல்வதற்கில்லை. ஏற்கெனவே நம் தந்தை பெரியார் சொன்னதுதான். “பார்ப்பான் எதை ஆதரிக்கிறானோ அதை எதிர்த்து நில்! பார்ப்பான் எதை எதிர்க்கிறானோ அதை ஆதரி” என்பதுதான் அது. காரணம் பார்ப்பனர்கள் ஆதரிக்கும் எதுவும் தமிழர்களுக்கோ மனிதக் குலத்துக்கோ – ஏன் உலக உயிரினங்கள் எதற்குமே ஒருநாளும் நன்மை தருவதாக இருப்பதில்லை. இது மேலோட்டமாகப் படிக்கத் தட்டையான பார்வை போல் இருந்தாலும் கண்டிப்பாய் 100% உண்மையே! உற்றுப் பார்த்தால் உண்மை விளங்கும்!
இன்றுதான் இந்த இதழை முதன் முறையாகப் பார்க்கிறேன். மிகச் சிறப்பாக இருக்கிறது! தெளிவான அரசியல் பார்வை, நல்ல தமிழ், எளிமையான இணையத்தள வடிவமைப்பு என அனைத்து வகைகளிலும் மிகச் சிறப்பான இதழ்! தொடருங்கள்! தொடர்கிறேன்!!