இந்தியாவில் தேசியவாதம் பேசும் அரசியல்வாதிகள், இங்கு எப்படி மத மற்றும் இன ரீதியான மோதல்களைக் கிளப்பி விடுகிறார்களோ, அதையே வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய முயற்சிக்கிறார்களா என்ற கேள்வி உள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் இங்கிலாந்தின் லான்செஸ்டர் நகரத்தில் இந்து முஸ்லிகளுக்கு இடையே நடந்த மோதலைப் பார்க்கும்போது அது உண்மை தான் என்று தோன்றுகிறது. இந்த வன்முறையைப் பற்றி டுவிட்டரில் வந்த இரண்டு லட்சம் பதிவுகளில், பாதிக்கும் மேல் இந்தியாவில் உள்ளவர்களால் பதிவிடப்பட்டவை என்று பிபிசி ஆய்வு தெரிவிக்கிறது. இந்துத்துவ ஆதரவாளர்களான இவர்கள், ஒவ்வொருவரும் ஒன்றுக்கும் மேற்பட்ட ட்விட்டர் கணக்குகளைக் கொண்டு செயல்படுகிறார்கள். இந்து மேலாதிக்கத்தை நிறுவுவது தான் இவர்களின் நோக்கம்.
வீர் சவார்கர் என்று அழைக்கப்படும் வினாயக் தாமோதர் சவார்கர் எழுதிய, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மூல நூல்களில் ஒன்றான Essentials of Hindutva என்ற புத்தகத்தின் மூலம் தான் இந்துத்வா என்ற சொல் பிரபலாமகியது. முசோலினி இத்தாலியில் உருவாக்கிய ஃபாசிச அமைப்பான Fasces of Combatஇன் வழியில் 1925இல் ஆர்.எஸ்.எஸ் உருவாக்கப்பட்டது. நவீன இந்து தேசியத்தின் முன்னோடியாக ஆர்.எஸ்.எஸ் கருதப்படுகிறது. மாணவர் சங்கம், தொழிற் சங்கம், பெண்களுக்கான அமைப்பு, தங்களுக்கு என்று ஒரு பிரசுர நிறுவனம் போன்ற பல்வேறு கிளை அமைப்புகளைக் கொண்டு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஆர்.எஸ்.எஸ் செயல்படுகிறது.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இந்தியாவில் இரண்டு முறை தடை செய்யப்பட்டது: ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தின் தந்தையான மகாத்மா காந்தியை ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர் (கோட்சே) 1948இல் சுட்டுக் கொன்ற போது முதல்முறை தடை செய்யப்பட்டது. பிறகு 1975-77 இல் இந்திரா காந்தி அவசர நிலையை பிரகடனம் செய்த போதும் தடைசெய்யப்பட்டது. வெளிநாடுகளில் வாழும் தங்கள் ஆதவாளர்களுடனான உறவை வலுப்படுத்தவும், அவர்களை தங்களின் வெளிநாட்டுப் பிரதிநிதிகாளாக மாற்ற வேண்டும் என்ற முடிவை ஆர்.எஸ்.எஸ் அப்போது எடுத்தது. 1976இல் இங்கிலாந்தில் வாழ்ந்த ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்கள் ஹிந்துத்துவத்தை பரப்பும் நோக்குடன் “Friends of Indian Society International (FISI)” என்ற அமைப்பை உருவாக்கினர். இங்கிலாந்திலும், ஐரோப்பாவில் குறிப்பாக பாரீஸிலும் FISI இன்றளவும் செயல்பட்டு வருகிறது.
ஆர்.எஸ்.எஸ் தங்களுக்கான அரசியல் பிரிவாக, பாரதிய ஜனதா கட்சி என்ற அரசியல் கட்சியை உருவாக்கி இருக்கிறது. இந்தியாவின் தற்போதைய பிரதமரான நரேந்திர மோடி, நீண்ட கால ஆர்.எஸ்.எஸ் உறுப்பினராக இருந்தவர். பாரதிய ஜனதா கட்சியில் முக்கிய தலைவராக இருந்த மோடியின் தலைமையில் 2014 மற்றும் 2019 தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றது.
யார் இந்து?
(மதவாதத்தின் அடிப்படையிலான) இனவாத தேசியத்தை மய்யமாகக் கொண்டு இந்துத்துவ இயக்கம் செயல்படுகிறது. நிலமும், நிலத்தில் வாழும் மக்களும் யாராக இருக்கிறார்கள் என்பதைப் பற்றியே இந்துத்துவ இயக்கத்திற்கு அக்கறையேயன்றி, மதத்தைப் பற்றியோ தத்துவத்தைப் பற்றியோ இதற்கு பெரிய கவலை இல்லை. இந்தியாவை இந்து தேசமாகவும், இந்துக்களை மட்டுமே (அவர்கள் உலகில் எங்கு வாழ்பவர்களாக இருப்பினும்) இந்நாட்டின் மக்களாகவும் இது கருதுகிறது. இந்துக்கள் அல்லாதவர்களை விருந்தாளிகளாகவோ, படை எடுத்து வந்திருக்கும் ஆக்கிரமிப்பாளர்களாகவோ தான் கருதுகிறது. இந்து அல்லாதார் அனைவரையும் அடையாளம் கண்டு,கண்காணிப்புக்கு உட்படுத்தி அவர்களின் உரிமைகளைப் பறித்து, அவர்களை இந்த நாட்டை விட்டு வெளியேற்றவோ அல்லது அழித்தொழிக்க வேண்டும் என்று இந்துத்துவா கருதுகிறது.
இஸ்லாமியர்களும் (இந்தியாவின் மக்கள் தொகையில் 13%), கிறிஸ்தவர்களும் (2.3 %), தலித்துகளும், ஆதிவாசி மக்களும், இந்து ஆணாதிக்க குடும்ப முறையை ஏற்காமல் வாழும் இந்து பெண்களையும் இந்துத்துவத் தத்துவம் குறி வைக்கிறது.
இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே நடக்கும் கலப்புத் திருமணங்களை இவர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். இந்து பெண்களை இஸ்லாமியர்களாக மாற்றுவதற்கான சதியாக இதை சித்திரித்து, லவ் ஜிகாத் என்று இதை அழைக்கிறார்கள். போலியாக கிளப்பி விடப்படும் இந்த அச்ச உணர்வின் காரணமாக நாடெங்கும் இஸ்லாமியர்கள் அவமானப்படுத்தப்படுவதுடன், தாக்குதலுக்கும் உள்ளாகிறார்கள்.
உலகின் 110 நாடுகளில் பரவி வாழும் 30 மில்லியன் இந்தியர்கள், ஆர்.எஸ்.எஸ் க்கு தொடர்புடைய பல்வேறு சங் பரிவார அமைப்புகளுக்கு அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் குறிப்பிடத்தக்க ஆதரவைத் தருகின்றனர். வெளிநாட்டு வாழ் இந்தியர்களை கவர்வதன் மூலமாகவே தான் வளர முடியும் என்று ஆர்.எஸ்.எஸ் ஆரம்ப கால கட்டத்திலேயே உணர்ந்தது. ஐ.டி மாணவர்கள், பொறியாளர்கள் என அனைவரையும் அது திரட்டியது. 1996இல் Global Hindu Electronic Network (GHEN), என்ற அமைப்பை ஆர்.எஸ்.எஸ் தொடங்கியது. உலகெங்கும் வாழும் இதன் ஆதரவாளர்கள், இணையம் மூலமாக கூட்டங்களில் பங்கெடுத்துக் கொள்வது இதன் மூலம் சாத்தியம் ஆனது.
பா.ஜ.க வின் இணைய சேனை
இந்தியாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் சுவாதி சதுர்வேதி, பாஜகவின் இணைய சேனைகளைப் பற்றி ஆராய்ந்து எழுதியுள்ளார். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள பாஜக ஆதரவாளர்கள் இணையத்தில் பிறரை அச்சுறுத்தும் வகையில் (trolls) எப்படி செயல்படுகிறார்கள் என்பதைப் பற்றியும், கட்சி நிர்வாகிகளின் கட்டளைக்கிணங்க செயல்படும் தானியங்கி மென்பொறிகளைப்(Bot) பற்றியும் விரிவாக எழுதியுள்ளார். பாஜவின் இந்த பிரச்சாரமும் அச்சுறுத்தலும், சிறுபான்மையினரை, குறிப்பாக பெண்களை (தன்பால் ஈர்ப்புக் கொண்ட பெண்கள், மதச் சிறுபான்மை மற்றும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த பெண்களை) மற்றும் பத்திரிக்கையாளர்களை மையப்படுத்தியே இருக்கிறது. Twitterஇல் செயல்படும் இந்த பாஜக ஆதரவாளர்கள் “sickular” (secularism- மதச்சார்பின்மை ஒரு வியாதி என்பதை குறிக்கும் வகையில் பயன்படுத்தப்படும் சொல்), “presstitute” (press- செய்தி நிறுவனங்களை விபச்சாரகர்கள் (prostitute) என்று குறிக்கும் நோக்கில்) போன்ற சொற்களைப் பயன்படுத்துகிறார்கள்.
இந்தியாவில் இருக்கும் இந்த அரசியல் அமைப்புகளும் சரி, அரசியல்படுத்தப்பட்ட தனி நபர்களும் சரி ஏன் வெளிநாட்டு விவகாரங்களில் தலையிடுகிறார்கள் என்பதையும், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் ஏன் இந்தியாவில் நிலவும் சிந்தனைகளையும் முறைகளையும் தாங்கள் வாழும் நாடுகளுக்குள் இறக்குமதி செய்கிறார்கள் என்பதையும் பாஜகவின் கோட்பாடுகளை மட்டும் கொண்டு விளக்கி விட முடியாது.
தங்களுக்கான முக்கியமான நிதி ஆதாரமாகவும், குரல் கொடுக்கக் கூடியவர்களாகவும் சங் பரிவார அமைப்புகள் இவர்களைப் பார்க்கிறது. இதற்கு கைமாறாக வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு சங் பரிவார அமைப்புகள் உதவிகளை செய்கின்றன.
2001இல் குஜராத் பூஜ் நகரத்தில் நடந்த நிலநடுக்கத்திற்குப் பிறகும், 2002இல் குஜராத்தில் நடந்த இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரத்திற்குப் பிறகும் வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் இருந்து (குறிப்பாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து) நிதி உதவிகள் வந்து குவிந்தன.
இந்த நிதி ஆதாரம் அனைத்தும், ஹிந்துத்துவ ஆதரவு பள்ளிகளைக் கட்டவும், ஆதிவாசி மக்களை இந்துமயமாக்கவும், 1992 இல் இந்து தேசியவாதிகளால் இடிக்கப்பட்ட 16ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கான பிரச்சாரத்திற்கும் தான் பயன்படுத்தப்பட்டது. Sabrang Communications and Publishing மற்றும் Awaaz South Asia Watch ஆகிய தன்னார்வலர் அமைப்புகள் 2002 மற்றும் 2004இல் வெளியிட்ட அறிக்கைகளும், இங்கிலாந்தின் Channel 4 வெளியிட்ட ஆவணப்படமும், சங் பரிவார அமைப்புகள் எப்படி வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் இருந்து சட்டத்திற்குப் புறம்பாக பணம் வசூலிக்கிறது என்பதையும், இந்தியாவில் இருக்கும் இந்து தேசியவாதிகளுக்கும், மேற்குலகு நாடுகளில் வாழும் இந்தியர்களுக்கும் இடையில் எத்தகைய அமைப்பு முறை நிலவுகிறது என்பதையும் அம்பலப்படுத்தின.
அமெரிக்காவின் மேரிலாண்ட் நகரத்தில், 1989இல் தொடங்கப்பட்ட Indian Development and Relief Fund (IDRF) அமைப்பு சங் பரிவார அமைப்புகளுக்கு நிதி சேகரித்து அனுப்பி கொண்டு இருக்கிறது. ஆனாலும் இன்று வரை அந்த அமைப்பு அரசியல் சாராத, எந்த வித சார்புமற்ற , தொண்டு நிறுவனமாகத் தான் பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது. மொத்தம் 75 அமைப்புகளைக் கொண்ட IDRFஇல், 60 அமைப்புகள் சங் பரிவார அமைப்புகளுடன் தொடர்புடையவை.
1995 -2002 காலகட்டத்தில் மட்டும் IDRF 5 மில்லியல் டாலர் பணத்தை 184 சங் பரிவார அமைப்புகளுக்கு அளித்துள்ளது. இதில் 80% நன்கொடை (மொத்த பணத்தில் 75%) எந்த ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகவும் பெறப்பட்டதாக பதிவிடப்படாமல், சங் பரிவார அமைப்புகளுக்குப் போய்ச் சேர்ந்தன. 1989 இல் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து ஆர்.எஸ்.எஸ் நடத்தும் நிதி வசூலின் முக்கிய அங்கமாக IDRF திட்டமிட்டு வளர்க்கப்பட்டுள்ளது என்று Sabrang அறிக்கை கூறுகிறது.
இங்கிலாந்தில் இருந்து செயல்படும் Sewa UK அமைப்பின் நிலைமையும் இதுதான். குஜராத் நிலநடுக்கத்திற்குப் பிறகு 2.3மில்லியன் யூரோ அளவிலான நிதியை அந்த அமைப்பு திரட்டியது. அதில் 1.9 மில்லியன் யூரோக்கள் குஜராத்தில் இயங்கும் சேவா பாரதி அமைப்புக்குப் போய்ச் சேர்ந்தது. இடிந்த வீடுகளை திருப்பிக் கட்டித் தருவதற்காக வசூலிக்கப்பட்ட அந்த நிதியின் மூன்றில் ஒரு பங்கு பணத்தை, இந்துத்துவச் சார்புடைய பள்ளிகளை கட்டுவதற்கு, குறிப்பாக பழங்குடி வாழும் பகுதிகளில் கட்டுவதற்கு அந்த அமைப்பு பயன்படுத்தியது என்று Awaaz South Asia Watch அமைப்பின் அறிக்கை கூறுகிறது. குஜராத் கலவரத்தில் இஸ்லாமியர்களை அழித்தொழிப்பிலும், இஸ்லாமியர்களின் நிலங்களை ஆக்கிரமிக்கவும் செயல்பட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளுக்கு Sewa International அமைப்பின் நிதிகள் போய்ச் சேர்ந்தன என்று Awaaz South Asia Watch குற்றம் சாட்டுகிறது.
சங் பரிவார அமைப்புகளின் இந்த வலைப்பின்னலைப் பற்றி பல அறிஞர்கள் ஆராய்ந்து எழுதியுள்ளார்கள். விஜய் பிரசாத் இதை Yankee Hindutva (Yankee என்ற சொல் வடக்கில் வாழும் அமெரிக்கர்களைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஒரு சொல்) என்று அழைக்கிறார். கிழக்கு ஆப்ரிக்காவில் ஆர்.எஸ்.எஸ்’இன் அமைப்பான விஸ்வ இந்து பரிசத் எப்படி செயல்படுகிறது எனபதைப் பற்றி தாமஸ் பிளாம் ஹான்சன் ஆராய்ந்து எழுதியுள்ளார். அமெரிக்காவில் விஸ்வ இந்து பரிசத் அமைப்பின் வளர்ச்சியைப் பற்றி அமினா மொகமத்து ஆரிஃப் எழுதியுள்ளார். இவ்வளவு இருந்தும் கூட சர்வதேச ஹிந்து அமைப்புகளின் வலைப்பின்னலைப் பற்றிய ஒரு தெளிவற்ற தன்மையே நிலவுகிறது.
இந்துத்துவத்தின் பணக்கார நன்கொடையாளர்கள்
சமீப காலங்களில், அமெரிக்காவில் வசிக்கும் சுபாஷ் மற்றும் சரோஜினி குப்தா, ரமேஷ் பூதாடா (சங் பரிவார சமூக கலாச்சார நிறுவனமான ஹிந்து சுயம்சேவக் சங் அமைப்பின் தலைவர்) மற்றும் அவரது மகன் ரிஷி ஆகியோர் லட்சக்கணக்கான டாலர்களை இந்துத்துவ அமைப்புகளுக்கு தங்கள் தொண்டு நிறுவனங்கள் மூலமாக வழங்கியுள்ளனர். இதன் மூலம் அமெரிக்காவில் உள்ள இந்து மக்களிடையே இவர்களுக்கு ஒரு மதிப்பும் மரியாதையும் உருவாகிறது.
அமெரிக்காவின் Republican Party யில் இவர்கள் ஒரு அரசியல் சக்தியாக விளங்குகிறார்கள். இந்த நன்கொடைகள் வழி இந்தியாவில் உருவாகும் தொடர்புகள் மூலம் இவர்களுக்கு நிதி ரீதியான மற்றும் பிறவகையான பலன்கள் கிட்டுகின்றன. 2022இல் வெளியான South Asian Citizens Web அமைப்பின் அறிக்கை, அமெரிக்காவில் செயல்படும் 24 அமைப்புகளுக்கும் (தொண்டு அமைப்பு, அரசியல் அமைப்பு, அரசியல் திட்ட ஆய்வு அமைப்புகள் , உயர் கல்வி அமைப்புகள் என்ற போர்வையில் இயங்கும் இவற்றின் மொத்த மதிப்பு ஒரு பில்லியன் டாலர்) சங் பரிவார அமைப்புகளுக்கும் இடையே இருக்கும் தொடர்பைப் பற்றியும், இந்துத்துவக் கொள்கையை அமெரிக்காவில் வளர்க்க, குறிப்பாக கல்வித் துறைகள் மூலம் வளர்க்க இவர்கள் செயல்படுவதைப் பற்றியும் அம்பலப்படுத்தியது.
இங்கிலாந்திலும் இதே நிலை தான். மனோஜ் லத்வா, ஹிந்துஜா குரூப்ஸ் நிறுவனத்தின் தலைமைகளாக இருக்கும் ஸ்ரிசந்த் மற்றும் கோபிசந்த் ஹிந்துஜா போன்ற படித்த, பணக்கார, உயர் சாதி இந்துக்கள் இந்துத்துவ அமைப்புகளுக்குப் பணத்தை வாரி இறைக்கின்றனர். இவர்களுக்கு உள்நாட்டு அதிகாரிகளிடத்திலும், வெளிநாட்டு ஆர்.எஸ்.எஸ் தலைமைகளிடத்திலும் செல்வாக்கு நிலவுகிறது. வருங்காலத்தில் செல்வந்தர்களாக உருவாக உள்ளவர்களையும் தங்கள் வசப்படுத்தும் முயற்சிகளை இந்துத்துவ மாணவர் அமைப்புகளிடையே காணலாம்.
பல மேற்குலக நாடுகளில், மனித உரிமை மீறலில் ஈடுபடும் ஆர்.எஸ்.எஸ், பாஜக போன்ற வெளிநாட்டு அமைப்புகளுக்கு நிதி உதவியோ அரசியல் உதவியோ அளிப்பது சட்டத்திற்கு எதிரானது. இதன் காரணமாகவே சங் பரிவார அமைப்புகள் இந்தியாவிற்கு வெளியே தங்களை மிகவும் நல்லவர்களாகக் காட்டிக் கொள்கிறது. இந்துத்துவ அமைப்புகளை கண்காணிக்க வேண்டும் என்றும், தீவிரவாதிகள் பட்டியலில் வைக்க வேண்டும் என்றும் குரல்கள் தொடர்ந்து எழுந்துள்ளன. குறிப்பாக அமெரிக்காவில் இந்த கோரிக்கை நிலவுகிறது. ஆனால் இந்துத்துவ ஆதரவாளர்கள் தங்களால் எந்த தீங்கும் இல்லை என்றும், பன்முக கலாச்சார அமைப்பாக தாங்கள் செயல்படுவதாக கூறிக்கொள்கின்றனர். கலாச்சார மற்றும் கல்வித் துறைகளில் ஈடுபாடு உடைய இந்துக்களை தன் வசம் ஈர்பதற்கு இது உதவுவதுடன், அந்த நாட்டு அரசியல் மற்றும் சமூக கட்டமைப்பிற்குள் இவர்களுக்கென்று ஒரு அங்கீகாரம் கிடைக்கிறது. அரசியல் மற்றும் வரித்துறை அதிகாரிகளின் கண்காணிப்பில் இருந்து தப்பிக்க இது உதவுகிறது.
ஆகஸ்ட் 2022இல் போபாலில் நடந்து முடிந்த சர்வதேச உறுப்பினர்களுக்கான மாநாட்டில் பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், வெளிநாட்டு வாழ் இந்துக்கள் இந்தியா செழிப்படையவும், உலகத்தின் தலைமையாக (vishwa guru) உருவாகவும் உழைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதனை நிதி திரட்டலும், அரசியல் ரீதியான ஆதரவு திரட்டலும், இஸ்லாத்தை இழிவுபடுத்தலும் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.
(இந்த கட்டுரையானது பிரான்ஸ் நாட்டினைச் சேர்ந்த லெமுண்ட டிப்ளமேட்டிக் (Le Monde Diplomatique) எனும் சுயாதீன ஊடக வலைத்தளத்தில் வெளியானது ஆகும். இக்கட்டுரையினை இங்கிரிட் தேர்வார்த் (Ingrid Therwath) என்பவர் எழுதியுள்ளார். இவர் பிரான்ஸைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஆவார். இவர் அரசியல் அறிவியல் துறையில், இந்தியா மற்றும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தொடர்பாக முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.)
மொழிபெயர்ப்பு: அருண் காளிராஜா