வட மாநிலத் தொழிலாளர்கள்

புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்தான கேள்விகள்: தமிழ்நாட்டில் தேவை ஒரு கேரள மாதிரி ஆய்வு

கடந்த வாரம் தமிழ்நாட்டிலுள்ள வடமாநிலத் தொழிலாளர்கள் தொடர்பான அரசியல் பிரச்சனை ஒரு புதிய உச்சத்தை, வடிவத்தை எட்டியது. தமிழ்நாட்டில் பணியாற்றுகின்ற வடமாநிலத் தொழிலாளர்கள் ‘குறிப்பாக பீகாரிகள், இந்தி பேசுபவர்கள்’ தமிழ்நாட்டினரால் அடித்துக் கொல்லப்படுகிறார்கள் என்ற வதந்தி பீகாரில் பரப்பப்பட்டது. மார்ச் 1-ம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் பங்கெடுத்துக் கொண்ட சமயத்தில் ‘தமிழ்நாட்டில் பீகாரிகள் தாக்கப்படுவதாக’ பீகாரில் வதந்தி பரப்பப்பட்டது. ’தமிழ்நாட்டில் பீகாரிகள் தாக்கப்படுகின்றனர்; பீகாரிகளை தாக்குகின்ற தமிழ்நாட்டின் திமுக அரசுடன் பீகாரினை ஆளும் ராஷ்டிரிய ஜனதா தளம்+ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியின் துனை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உறவுப் பாராட்டுகிறார்’ என்ற தேர்தல் அரசியல் உள்நோக்கத்துடன் இத்தகைய வதந்திகளை பாஜக பரப்பியது அம்பலமானது.

தமிழ்நாட்டில் பீகாரிகள் தாக்கப்படுவதாக இத்தகைய வதந்திதகளை பரப்பிவிட்டு, பீகார் அரசியலின் கொதிநிலை பிரச்சினையாக இந்த பிரச்சனையை பீகார் சட்டமன்றத்தில் எழுப்பியது பாஜக. இந்த பிரச்சினையினுடைய போக்கின் தீவிரத் தன்மையை உணர்ந்து பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ’தமிழ்நாட்டில் பீகாரிகளின் நிலை’ குறித்து தனது அக்கறையை வெளிப்படுத்தியிருந்தார். தமிழ்நாட்டின் முதல்வரும், பீகார் முதல்வரை தொடர்புகொண்டு வதந்திகளின் உண்மை நிலையை எடுத்துரைத்தார். தமிழ்நாடு அரசின் காவல்துறையும் உடனடியாக இப்பிரச்சினையில் கவனம் செலுத்தி பீகார் அரசிற்கு உண்மை நிலையினை விளக்கியது; வதந்தி பரப்பியோர் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கையை மேற்கொண்டது. இதனையடுத்து பாஜக பரப்பிய வதந்திகள் தற்காலிகமாக முடிவுக்கு வந்தன.

வட மாநில தொழிலாளர்கள் தொடர்பாக தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் எழும் சந்தேகங்கள்

பீகாரிலும், தமிழ்நாட்டிலும் தங்களின் தேர்தல் அரசியல் நலனுக்கு எதிர் ஆற்றலாக இயங்குகின்ற, பீகாரை ஆளும் ராஷ்டிரிய ஜனதா தளம்+ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி மற்றும் தமிழ்நாட்டினை ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியை ஒரு பொது மையமாக்கி, அரசியல் உள்நோக்கத்துடன் இத்தகைய  வதந்திதகளை பாஜக பரப்பியதையடுத்தே, சிக்கலின் தீவிரத் தன்மையை  ஆளும் திமுக அரசு அறிந்து கொண்டதாகத் தெரிகிறது.

ஆனால் வடமாநிலத் தொழிலாளர்கள் தொடர்பாக தமிழ்நாட்டிலும் நாள்தோறும் வதந்திகள் பரப்பப்பட்டுக் கொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்கள் வருகை தொடர்பாக ’பல்வேறு அரசியல் சந்தேகங்கள்’ தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் உள்ளது.

 • வடமாநிலத் தொழிலாளர்களால், உடலுழைப்பில் ஈடுபடத் தயாராக இருக்கும் தமிழ்நாட்டுத் தொழிலாளர்களின் வேலைகள் பறிக்கப்படுகிறது?
 • தமிழ்நாட்டை ஆக்கிரமிக்கவே வடமாநிலத்தவர் படையெடுக்கின்றனர்?
 • வடமாநிலத் தொழிலாளர்களின் அதிகப்படியான வருகை மற்றும் குடியேற்றம் மொழியின் அடிப்படையில் அமைக்கப்பட்ட மொழிவழித் தேசியமான தமிழ்நாட்டின் (தமிழர்களின் பண்பாடு, மொழி, பொருளாதாரம் சார்ந்த) அரசியல் இறையாண்மையை பாதிப்புக்குள்ளாக்கும்?
 • வடமாநிலத் தொழிலாளர்களுக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டையை தமிழ்நாடு அரசு வழங்குவது அவர்களது தமிழ்நாட்டு குடியேற்றங்களை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திவிடும்?
 • அவர்கள் மிகப்பெரும் வாக்காளர் திரட்சியாகி தமிழ்நாட்டின் தேர்தல் அரசியலை தீர்மானிக்கும் சக்திகளாக மாறிவிடுவார்கள்?

போன்ற தமிழ்நாட்டுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் தமிழ்நாட்டு அரசியல் இறையாண்மை தொடர்பான அடிப்படை சந்தேகங்கள், கேள்விகளை மையப்படுத்தி தமிழ்நாட்டிலும் வடமாநிலத்தவர் தொடர்பான பல்வேறு செய்திகள் பரவுகிறது.

தமிழ்நாட்டு மக்களிடையே பரவும் வதந்திகளும் விளைவுகளும்

வடமாநிலத் தொழிலாளர்கள் தொடர்பாக அதிகாரப்பூர்வமான, ஆதாரப்பூர்வமான தகவல்கள் பொதுவெளியில் கிடைக்க வழியில்லாததையடுத்து, வடமாநிலத் தொழிலாளர்கள் தொடர்பான அடிப்படை ஆதாரமில்லாத செய்திகள், வதந்திகள் தமிழ்நாட்டு மக்களிடையே பரவுகின்றன.

உதாரணமாக, கடந்த பிப்ரவரி மாதம் தொடர்வண்டியில் பயணம் செய்த வடமாநிலத்தவர் தாக்கப்பட்ட சம்பவத்தையடுத்து நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூடுதல் காவல்துறை இயக்குநர் (ரயில்வே) வனிதா அவர்களிடம், ”தமிழ்நாட்டில் நடக்கும் பெரும்பாலான குற்றங்களுக்கு வடமாநிலத்தவர்கள் தான் காரணமாக இருக்கிறார்கள். அவர்கள் தான் முதலில் தாக்குவது, வம்பிழுப்பது மூலம் குற்றச் செயல்களுக்கு காரணமாக அமைகின்றனர். தமிழ்நாட்டில் நடக்கும் குற்றங்களில் 70 சதவீத குற்றங்கள் அவர்களால் தான் நடக்கிறது” என ஒரு ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார்; அதற்கு உரிய பதிலை வழங்காமல், கூடுதல் காவல்துறை இயக்குநர் (ரயில்வே), காவல்துறையை (சட்ட ஒழுங்கு) நோக்கி பதிலளிக்கக் கோரினார்; அவர்களும் உரிய பதிலின்றி அந்த கேள்வியைக் கடந்து சென்றனர்.

அதற்கு முன்பு சில நாட்களாக ’தொடர்வண்டியில் வடமாநிலத்தவர்களால் தொல்லை’ என தமிழ்நாட்டில் பரவிய செய்தி, அதற்குரிய விளைவை உருவாக்கியதையடுத்து நடந்த காவல்துறையுடனான ஊடகவியலாளர் சந்திப்பு நேரலையில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது!

அத்தகைய ஊடகவியலாளர் சந்திப்பில் எந்தவித தகவல் ஆதாரமும் இல்லாமல் ”வடமாநிலத் தொழிலாளர்கள் தொடர்பாக பரப்பப்பட்ட செய்திகளிலிருந்து’ தமிழ்நாட்டின் 70 சதவீத குற்றங்களுக்கு காரணமாக வடமாநிலத்தவர்கள் இருக்கின்றனர்” என ஊடகவியலாளர் ஒருவர் குற்றவியல் சம்மந்தப்பட்ட துறையினரிடமே நேரிடையாக அதனை முன்வைக்கிறார். தங்களிடமுள்ள குற்ற விபரங்களினுடைய தகவல் அடிப்படையில் அது உண்மையா அல்லது பொய்யா என விளக்கியிருக்க வேண்டிய காவல்துறை அந்த விடயத்தை கடந்து செல்கிறது. குற்ற ஆவணத் தகவல்கள் (Crime Records) கையிருப்பில் இருக்கும் பொழுதே, பரப்பப்படும் செய்திகளின் அடிப்படையில் தமிழ்நாட்டினரிடையே எழும் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் பதில் இல்லாமல் போகிறது. யதார்த்தத்தில் அந்த ஊடகவியலாளர் குறிப்பிடுவது போன்று ’70 சதவீத குற்றங்களுக்கு’ வடமாநிலத்தவர் காரணமில்லையென்றாலும், கையிருப்பில் இருக்கும் தகவலைக் கொண்டு அதனை விளக்க தவறியதானது, வடமாநிலத்தவர் தொடர்பாக பரப்பப்படும் செய்திகளுக்கு ’சமூக அங்கீகாரத்தை’ வழங்கிவிடுகிறது. கையிருப்பில் தகவல் இருக்கும் பொழுதே இந்நிலைமை!

கையிருப்பிலும், பொதுவெளியிலும் உரிய தகவல்கள் இல்லாத பொழுது பரப்பப்படும் செய்திகள் உருவாக்கும் சமூக விளைவுகள் மிக மோசமானதாக மாறக்கூடிய வாய்ப்புகளைக் கொண்டிருக்கிறது.

வடக்கன் எனும் இனவாதக் கருத்தாக்கம்

தமிழ்நாடு தொடர்பில் வடமாநிலத் தொழிலாளர்கள் பற்றிய போதுமான தகவல்கள் இல்லாததும், அதன் விளைவாக அவர்களால் தமிழ்நாட்டில் ஏற்படப்போகும் தாக்கத்தை மதிப்பிட முடியாததுமானது, வடமாநிலத் தொழிலாளர்கள் தொடர்பாக தமிழ்நாட்டில் பரப்பப்படும் செய்திகள் ‘வடமாநிலத்தவருக்கு எதிரான இனவெறிப் போக்கை தமிழ்நாட்டினரிடத்தில் வளர்த்தெடுக்கும்’ சமூக புறச்சூழலுக்கு வழியமைத்துத் தந்து கொண்டிருக்கிறது.

 விளைவு வடமாநிலத்தவர்கள், வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் ‘வடக்கன்களாக’ மாற்றப்பட்டுவிட்டனர். இன்று தமிழ்நாட்டில் ’வடக்கன்’ என்ற சொல் தாங்கி நிற்கும் அரசியல் பண்பு என்பது உள்ளூர இனவெறிப் போக்கை வளர்த்தெடுக்கும் பண்பைக் கொண்டிருக்கிறது.

அதேபோல ’போதிய தகவல்களிலின்றி ஒரு முடிவுக்கு வர இயலாததால், தமிழ்நாட்டினர் தங்களது அரசியல் இறையாண்மை தொடர்பாக எழுப்புகின்ற நியாயமான அச்சமும், கவலையும் ’இனவெறியென’ முத்திரையிட்டு கடந்து செல்வதற்கும் வாய்ப்பை வழங்குகிறது.

கேரளாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வும், தமிழ்நாடு அரசின் பொறுப்பும்

தமிழ்நாடு அரசுக்கு, ’பீகார் தொழிலாளர்கள்-தமிழ்நாடு’ தொடர்பாக வதந்தி பரப்பப்பட்டபோது செயல்பட்டதை விட, தமிழ்நாட்டளவில் வடமாநிலத் தொழிலாளர்கள் தொடர்பாக பரப்பப்படும் செய்திகளின் உண்மை, யதார்த்த நிலையை தமிழ்நாட்டு மக்கள் அறியச் செய்வதற்கு இன்னும் கூடுதல் பொறுப்பிருக்கிறது.  

அந்த பொறுப்பின் முதன்மை மற்றும் குறைந்தபட்சத் தேவையாக தமிழ்நாட்டிலுள்ள பிறமாநிலத்தவர் பற்றிய கணக்கெடுப்பும், பிறமாநிலத்தவர்கள் வருகைக்குக் காரணமாக தமிழ்நாட்டில் நிலவும் சமூக- பொருளியல் அடிப்படை பற்றிய தகவல்களும் தேவையாக உள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பாக கேரள அரசு மேற்கொண்ட ’கேரளாவில் வெளிமாநிலத்தவர், அமைப்புசாரா வேலைவாய்ப்பு மற்றும் நகரமயம் பற்றிய ஆய்வு (A Study on In- Migration, Informal Employment and urbanisation in Kerala), தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டிய ஆய்வுக்கான ஒரு மாதிரியாக அமையக்கூடும்.

கேரளாவிற்கு வருகைதரும் புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான மேற்சொன்ன ஆய்வானது கேரள மாநில அரசின் திட்டக் குழுவின் பங்கேற்பில், கேரள அரசின் நிதிநல்கையால் நடத்தப்பட்டது. கேரளாவில் புலம்பெயர் தொழிலாளர்களின் வருகை- எண்ணிக்கை, அவர்களது வருகைக்கான காரணம், அவர்களின் வாழ்நிலைச் சூழல், கேரளப் பொருளாதாரத்தில்- வளர்ச்சியில் அவர்களது பங்கு மற்றும் அவர்களது தேவை பற்றி இந்த ஆய்வு தன் முடிவுகளை முன்வைக்கிறது.

கேரளாவில் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை விவரங்கள்

”2001-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கேரளாவில் 4.5 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் இருந்துள்ளனர். இவர்களது எண்ணிக்கை 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது  6.5 லட்சமாக உயர்கிறது. கேரள மாவட்டங்களில் மக்கள்தொகை மற்றும் சமூகப் பொருளியல் நிலைமையை கணக்கிட்ட 2017-18ம் ஆண்டின் அடிப்படை கணக்கெடுப்பின் (Baseline Survey)படி 31 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் கேரளாவில் வசித்துள்ளனர்.

 • இந்த ஆய்வில் கணக்கெடுக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களில் 80 சதவீதத்தினர் (21 லட்சம் பேர்) குறுகிய காலம் (மூன்று மாத கால அளவில்) கேரளாவில் தங்கி பணி செய்கின்றனர்.
 • 20 சதவீதத்தினர் (10 லட்சம் பேர்) மட்டுமே நீண்ட காலம் தங்கி பணி செய்கின்றனர்.
 • நீண்டகாலம் கேரளாவில் தங்கும் 10 லட்சம் பேரில், 5 சதவீதத்தினர் மட்டுமே தங்களது குடும்பத்தினருடன் வசிக்கின்றனர்.

கேரளாவில் குடும்பத்தோடு வசிக்கும் புலம்பெயர்ந்தோரில் ஒரு குடும்பத்திற்கு சராசரியாக இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்த ஆய்வு, கேரளாவில் புலம்பெயர்ந்தோரின் குழந்தைகள் 98 ஆயிரம் பேர் உள்ளதாகக் கண்டறிந்துள்ளது. இவர்களில் 81 சதவீதத்தினர் (61 ஆயிரம் குழந்தைகள்) கேரளப் பள்ளிகளில் கல்வி பெறுகின்றனர்.

கேரளாவில் துறைவாரியாக பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்கள்

 • ஒட்டுமொத்த புலம்பெயர் தொழிலாளர்களில் மிக அதிகமாக, 17.5 லட்சம் பேர் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுகின்றனர்;
 • இதற்கடுத்ததாக 6.3 லட்சம் பேர் உற்பத்தி தொழில் வாய்ப்புகளில் பணியாற்றுகின்றனர்; 
 • 3 லட்சம் பேர் விவசாயம் மற்றும் அதன் சார்ந்த பணிகளில் பணியாற்றுகின்றனர்;
 • தங்கும் விடுதி, உணவகங்களில் பணியாற்றுவது போன்ற சேவைத் துறை பணிகளில் 1.7 லட்சம் பேர் பங்கெடுக்கின்றனர்;
 • மொத்த மற்றும் சில்லறை வியாபாரம் சார்ந்த பணிகளில் ஒரு லட்சம் பேரும்; இதரப் பணிகளில் 1.7 லட்சம் பேரும் பணியாற்றுகின்றனர்”.

புலம்பெயர் தொழிலாளர் எண்ணிக்கை கேரளாவில் அதிகரித்ததன் காரணம்

கேரளாவினுடைய புலம்பெயர் தொழிலாளர்களது தேவைக்கு அம்மாநிலத்தின் ‘சொந்த உடலுழைப்பாளர்கள் குறைவாக இருப்பது’ மிக முக்கிய காரணமாக உள்ளது.

தோராயமாக 40 லட்சம் மலையாளிகள் கேரளாவிலிருந்து வெளிநாடு சென்று பணியாற்றுவதாக திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சர்வதேச புலம்பெயர் மற்றும் வளர்ச்சி நிறுவனம் (International Institute of Migration and Development- IIMD) மதிப்பிட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் வேலை செய்து இந்தியாவுக்கு பணம் அனுப்புகிற மொத்த மதிப்பில் 19 சதவீதம் கேரளாவைச் சேர்ந்தவர்கள் அனுப்புகின்றனர் (வெளிநாட்டில் சம்பாதித்து இந்தியாவுக்கு அனுப்பும் மொத்த மதிப்பில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய நான்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் 58.7% பங்களிக்கின்றனர்).

கேரளாவிலிருந்து வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வது அதிகரித்ததும், கேரள மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்ததுமானது, உள்ளூர் உடலுழைப்பாளர்கள் தொடர்பில் எதிர்மறை விளைவை ஏற்படுத்தியது. கேரளாவின் சொந்த இளம் உழைப்பாளர் தரப்பு (Young Working Force) வெளிநாடுகளுக்குச் சென்றதும், குடும்பத்தில் இளைஞர்களல்லாது மூத்தோர்/ முதியோர் மட்டும் வாழ நேர்ந்த நிலையும் இணைந்து கேரளாவை தனது உடலுழைப்பாளர் தேவைக்கு வெளிமாநிலத்தவரை சார்ந்திருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளியது. அதேபோல் கேரளத்தினரின் வெளிநாட்டு வருமானத்தைக் கொண்டு கேரளாவில் உருவாக்கப்படும் கட்டுமானங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான உழைப்புச் சக்தி தேவையானது மேலும் கூடுதல் வெளிமாநில உடலுழைப்பாளர்த் தேவையை உருவாக்கியது.

கேரளாவில் ஏற்பட்ட உள்ளூர் உடலுழைப்பாளர் எண்ணிக்கை குறைந்ததும், உடலுழைப்பாளர் தேவை அதிகமானதும் கேரளாவிற்கு வெளிமாநிலத் தொழிலாளர்கள் வருவதற்கு காரணமாக அமைந்துள்ளது.

கேரளாவில் தமிழ்நாட்டு தொழிலாளர்கள் விவரம்

கேரளாவிற்கு இடம்பெயரும் வெளிமாநிலத் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது.

 • 2001-ன் போது தமிழ்நாட்டிலிருந்து, கேரளாவிற்குச் சென்ற புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை 2,82,200 ஆகும்;
 • 2011ல் இவர்களது எண்ணிக்கை 3,11,200 ஆக உயர்ந்துள்ளது.
 • கேரளாவிற்கு இடம்பெயரும் தமிழ்நாட்டுத் தொழிலாளர்களின் வளர்ச்சி விகிதம் ஆண்டொன்றுக்கு 1.0 சதவீதம் என்றளவில் உள்ளது.

1990 மற்றும் 2000ம் ஆண்டுகளில் கேரளாவிற்கு இடம்பெயர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களில் கேரளாவின் அண்டை மாநிலத்தவர்களான தமிழர்கள், கன்னடர்கள், தெலுங்கர்கள் மற்றும் மராட்டியர்களே அதிகளவு இருந்தனர். இந்நிலை தற்போது முற்றிலுமாக மாறி வட மாநில மற்றும் வட கிழக்கு மாநிலத் தொழிலாளர்கள் கேரளாவிற்கு இடம்பெயருவது அதிகரித்துள்ளது.

வட மாநிலத் தொழிலாளர் வருகையின் அதிகரிப்பு

கேரளாவிற்கு இடம்பெயரும் பீகார், உத்திரப்பிரதேசம், அஸ்ஸாம், மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் மத்திய பிரதேசத்தினரின் இடம்பெயருதல் வளர்ச்சி விகிதம் ஆண்டொன்றுக்கு முறையே 20.3%, 11.4%, 37.8%, 47.4%, 20.5% மற்றும் 10.2% ஆக உள்ளது. கேரளாவில் இவர்களது ஒட்டுமொத்த இடம்பெயருதல் வளர்ச்சி விகிதம் 20 சதவீதமாக அதிகரித்துக் கொண்டே உள்ளது.

தற்போது கேரளாவிலுள்ள ஒட்டுமொத்த பிற மாநிலத் தொழிலாளர்களில் மேற்கு வங்காளம், அஸ்ஸாம், உத்திரப் பிரதேசம், பீகார் மற்றும் ஒடிசாவினை சேர்தவர்கள் மட்டும் 70 சதவீதத்தினர் உள்ளனர்.

வெளி மாநிலங்களிலிருந்து வந்து தங்கி கேரளாவில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் சராசரியாக மாதமொன்றுக்கு 16 ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டுகின்றனர். இதில் அவர்களது மாதாந்திர செலவுப் போக சராசரியாக 4 ஆயிரம் ரூபாய் மீதமாக, சேமிப்பாக அவர்களிடம் மிஞ்சுகிறது. கிடைத்த தகவல் அடிப்படையில் மட்டும், வருடம் 750 கோடி ரூபாய் புலம்பெயர் தொழிலாளர்களின் வருமானத்தின் வழியாக கேரளாவிலிருந்து வெளிமாநிலங்களுக்கு செல்கிறது” என கண்டறிந்துள்ளது.

கேரளாவில் பிறமாநிலத் தொழிலாளர்களின் வருகைக்கு, ’மற்ற மாநிலங்களை விட கேரளாவில் வழங்கப்படும் கூடுதல் தினக்கூலி காரணமாக உள்ளதென’ இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.

நகரங்களின் பெருக்கமும் புலம்பெயர் தொழிலாளர்களும்

கேரளாவின் வளர்ச்சியில் இவர்களது பங்களிப்பை நகரங்களின் பெருக்கம், வளர்ச்சியின் அடிப்படையில் இந்த ஆய்வு மதிப்பிட்டுள்ளது. 1971-1991 காலக்கட்டங்களில் கேரளாவில் நகரங்களின் எண்ணிக்கை 88லிருந்து 197 ஆக உயர்ந்தது. வளர்ச்சி விகிதம் 6.2 சதவீதம் ஆகும். 1991க்குப் பிறகு நகரங்களின் எண்ணிகை வளர்ச்சி விகிதம் ஆண்டொன்றுக்கு 8.2 ஆக உயர்ந்து, தற்போது கேரளாவில் 520 நகரங்கள் உள்ளன.

 • 1971ல் ஒட்டுமொத்த கேரள மக்கள் தொகையில், நகர மக்கள் தொகையின் பங்கு 16 சதவீதமாக இருந்துள்ளது;
 • 1981ல் இது 19 சதவீதமாக உயர்ந்துள்ளது;
 • 1991ல் 26 சதவீதமாக உயர்ந்த நகர மக்கள் தொகை, 2001 வரை பெரியளவு மாற்றமின்றி அதே அளவிலே நீடிக்கிறது (26%).   
 • 2001க்குப் பிறகு நகர மக்கள் தொகை மிக அதிகமாக வளர்ந்து 2011ன் போது கேரள மக்கள் தொகையில் நகர மக்களின் பங்கு 48 சதவீதத்தை எட்டியிருக்கிறது.

வெளிநாடுகளில் வேலை செய்து கேரளாவிற்கு பணம் அனுப்பிய மலையாளிகளின் பணம் மேற்குறிப்பிட்ட நகர வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்திருக்கிறது. கேரளாவின் எந்த மாவட்டத்திலிருந்து அதிகம் பேர் வெளிநாடு சம்பாதிக்கச் சென்றார்களோ அந்த மாவட்டத்தில் நகர வளர்ச்சி விகிதம் மற்றும் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அதேபோல் அந்த மாவட்டத்திற்கு புலம்பெயர் தொழிலாளர்களின் இடப்பெயர்வும் அதிகமாக நடந்துள்ளது.

2007-08 காலக்கட்டத்தில் ஒட்டுமொத்த கேரள நகர மக்கள் தொகையில், வெளிமாநிலத்தவர்கள் 2 சதவீதம் பேர் உள்ளனர். நகர உழைப்பாளர் தரப்பில் (Urban Work Force) இவர்களது பங்கு 5 சதவீதமாக உள்ளது.

கேரள ஆய்வு பரிந்துரைக்கும் முடிவுகள்

இப்படியாக கேரள வளர்ச்சியில் புலம்பெயர் தொழிலாளர்களின் பங்கு இன்றியமையாததாக உள்ளதை இந்த ஆய்வு எடுத்துரைக்கிறது. மேலும் கேரளா வளர்ச்சியடைய தேவையான உழைப்புச் சக்திக்கு புலம்பெயர் தொழிலாளர்களை சார்ந்திருக்க வேண்டியது அவசியம் என இந்த ஆய்வு சுட்டுகிறது.

எனவே புலம்பெயர் தொழிலாளர்களை கேரளா நோக்கி ஈர்ப்பதற்கு அவர்களது சொந்த மாநிலங்களில் வழங்கப்படுவதை விட, கேரளாவில் கூடுதல் தினக்கூலியை பெறுவதற்கு வழிசெய்ய இந்த ஆய்வு முடிவு பரிந்துரைக்கிறது. மேலும் தற்போது கேரளாவில் புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்நிலையானது உரிய பாதுகாப்பின்மை மற்றும் சுகாதாரயின்மையுடன் விளங்குவதாகக் குறிப்பிட்டு, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு போதிய சமூக பாதுகாப்பு மற்றும் சமூகநலத் திட்டங்களை வழங்கும்படி இந்த ஆய்வு பரிந்துரைக்கிறது.

ஆவாஸ் மருத்துவ காப்பீடு திட்டம்

புலம்பெயர் தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக நலத்திட்ட உதவிகளுக்காக கேரள அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கும் ஆவாஸ் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் பற்றி இந்த ஆய்வு குறிப்பிடுகிறது. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஒன்றிய அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை (ராஷ்டிரிய ஸ்வஸ்திய பீமா யோஜனா) விட, கேரள அரசின் ஆவாஸ் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை புலம்பெயர் தொழிலாளர்கள் பெரிதும் சார்ந்திருக்கின்றனர். கேரளாவிலுள்ள புலம்பெயர் தொழிலாளர்களில் 13 சதவீதத்தினர் மட்டுமே ஒன்றிய அரசின் மருத்துவக் காப்பீட்டு திட்ட பயனாளிகளாக உள்ளனர். கேரள அரசின் ஆவாஸ் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான மருத்துவ செலவினங்களுக்கு ரூ.15,000 ஆயிரத்திற்கும், விபத்தில் இறந்தால் ரூ. 2 லட்சத்திற்குமான காப்பீட்டை வழங்குகிறது. இந்தியளவில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான இத்தகைய திட்டம் வேறெந்த மாநிலத்திலும் செயல்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆவாஸ் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் அம்சங்களை மேலும் மேம்படுத்த இந்த ஆய்வு பரிந்துரைக்கிறது.

நடைமுறையில் ஆவாஸ் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என்பது கேரள அரசால் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சமூகநலத் திட்டமாக இருந்தாலும், கேரளாவில் வசிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களின் தகவலைத் திரட்டி நிர்வகிப்பதற்கு இது கூடுதல் வழியமைத்துத் தந்திருக்கிறது.

கேரள அரசு மேற்கொண்ட கேரளாவில் வெளிமாநிலத்தவர், அமைப்புசாரா வேலைவாய்ப்பு மற்றும் நகரமயம் பற்றிய ஆய்வானது (A Study on In- Migration, Informal Employment and urbanisation in Kerala) புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான பல்வேறு பரிமாணங்களை, மதிப்பீடுகளை நாம் கணக்கிடுவதற்கு உதவியாக இருக்கிறது.

தேசிய இன அரசியல் விழிப்பின் அவசியத்தை உணர்த்தும் முடிவு

இந்த ஆய்வு கண்டறிந்துள்ள புலம்பெயர் தொழிலாளர்களின் வளர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் 2030-ம் ஆண்டின் போது கேரளாவில் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை 60 லட்சமாக இருக்கும்; அப்போதைய கேரள மக்களின் மக்கள் தொகையானது 3.6 கோடியை எட்டியிருக்கும்; இந்த எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால் 2030-ல் கேரள மக்கள் தொகையில் ஆறு பேரில் ஒருவர் (6:1) புலம்பெயர் தொழிலாளர்களாக இருப்பர். 

நிலவும் இந்தியத் துணைக்கண்ட அரசியல் சூழலானது தேசிய இன பன்மயத்தை அழிக்கும் நோக்கில் பல்வேறு ’ஒரே நாடு, X’ திட்டங்களை அறிவிக்கிறது. இத்தகைய அரசியல் சூழலுக்கு நடுவில் மலையாள மொழிவழித் தேசியமாக அமைந்த கேரளத்தின் மக்கள் தொகையில் ஆறு பேரில் ஒருவராக பிற மொழியினர் இடம்பெறுவது பற்றிய அரசியல் விழிப்பின் (Awarness) அவசியத்தை மேற்குறிப்பிட்ட ஆய்வின் பரிமாணமொன்று உணர்த்துகிறது.   

தமிழ்நாடு அரசின் ஒரு ட்ரில்லியன் டாலர் முழக்கம்

ஒப்பீட்டளவில் கேரளா மற்றும் தமிழ்நாட்டின் அரசியல் பொருளாதார நிலைமைகள் ஒன்றுபோல இல்லை. சொல்லப் போனால் சுற்றுலாத்துறையை பிரதானமாகக் கொண்டு இயங்குகின்ற கேரளாவைவிட, உற்பத்தித் துறைகளை பிரதானமாகக் கொண்டு இயங்குகின்ற தமிழ்நாடு அதிக புலம்பெயர் தொழிலாளர்களின் தேவைகளைக் கொண்டிருக்கிறது.

2022-23ம் நிதியாண்டில் கேரளாவினுடைய மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு ரூ. 9,99,643 கோடி ஆகும்; இக்காலக்கட்டத்தில் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு ரூ. 24,84,807 கோடி.  2030-ம் ஆண்டு ஒரு ட்ரில்லியன் டாலர் (தோராயமாக, ரூ. 82 லட்சம் கோடி) உற்பத்தியை இலக்காக வைத்து தமிழ்நாடு அரசு இயங்கிக் கொண்டிருக்கிறது.

2011ம் ஆண்டைய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் 34.8 லட்சம் பிறமாநிலத் தொழிலாளர்கள் இருந்துள்ளனர்; தற்போதைய நிலவரப்படி, தமிழ்நாட்டிலுள்ள தொழிற் நிறுவனங்களில் பணியாற்றுகின்ற தொழிலாளர்களில் 40 சதவீதம் பிற மாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் ’ஒரு ட்ரில்லியன் டாலர்’ பொருளாதார உற்பத்திக்கு கிட்டதட்ட 1.3 கோடி தொழிலாளர்கள் தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தளவிற்கான தொழிலாளர் தேவையில் 50 லட்சம் தொழிலாளர் தேவையை, வடமாநில தொழிலாளர்களைக் கொண்டே ஈடுசெய்ய வாய்ப்புள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 

திருப்பூர் பின்னலாடை உற்பத்தியின் பொருளாதார மதிப்பு 75,000 கோடி. இதில் 6 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்; இவர்களில் 50 சதவீதத்தினர் வெளிமாநிலத் தொழிலாளிகளாவர். 2030ல் மேலும் பத்து லட்சம் தொழிலாளர்கள் பின்னலாடை உற்பத்திக்கு தேவைப்படுவர். அப்போது வெளிமாநிலத் தொழிலாளர்களின் பங்கு என்பது 60 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

வடமாநிலத் தொழிலாளர்களை பிரதானமாகக் கொண்டு இயங்குகின்ற கட்டுமானத் தொழிலுக்கு எதிர்வரும் காலங்களில் 15 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் தேவைப்படுவர் என்கின்றனர்.

தமிழ்நாட்டின் சொந்த உழைப்பாளர் தரப்பு (Local Labour Force) தமிழ்நாட்டின் வேலைவாய்ப்பில் பங்கெடுப்பது குறைந்து வருவதாக இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் (Center for Monitoring Indian Economy) மதிப்பிட்டுள்ளது. 2016ம் ஆண்டின் போது தமிழ்நாட்டு வேலைவாய்ப்புகளில் பங்கெடுத்து கொண்ட தமிழ்நாட்டினரின் பங்கு என்பது 56 சதவீதமாக இருந்தது. அது 2022ம் ஆண்டில் 20 சதவீதம் குறைந்து 36 சதவீதத்திற்கு சரிந்திருக்கிறது.

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு புலம்பெயர் தொழிலாளர்களின் தேவை இன்றியமையாததாக உள்ளதை மேற்கூறிய தகவல்கள் நமக்கு உணர்த்துகின்றன. ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியின் தேவையை தமிழ்நாட்டு மக்கள் உணரும் பொழுது, ஏற்றுக் கொள்ளும் பொழுதே, அதற்கு தேவைப்படுகின்ற புலம்பெயர் தொழிலாளர்களின் இன்றியமையாமையையும் அவர்கள் விளங்கிக் கொள்வர்.

இடம்பெயர்வு நடப்பதற்கான காரணங்கள்

தொழிலாளர் ’தேவையே’ ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தை நோக்கிய தொழிலாளர்களின் இடப்பெயர்வுக்கு காரணமாக அமைகிறது. தங்களது உழைப்பை தங்களின் பிறப்பிட மற்றும் அதன் அருகாமை பிராந்தியத்தில் விற்க வழியில்லாத சூழலில் தொழிலாளர்களின் இடப்பெயர்வு நடக்கிறது. அதேபோல்  ஒப்பீட்டளவில்  பிறந்த, அருகாமை பிராந்தியங்களைவிட மற்றொரு பிராந்தியத்தில் தங்களின் உழைப்பை கூடுதல் விலைக்கு விற்க வாய்ப்புள்ள பொழுதும் தொழிலாளர்களின் இடப்பெயர்வு நிகழ்கிறது.  

தொழிலாளர்கள் தங்களின் பிறப்பிட பிரந்தியத்திலிருந்து, அதிக சம்பளம் (அதிக விலைக் கொடுத்து தொழிலாளரினுடைய உழைப்பை வாங்குகின்ற) மற்றொரு பிராந்தியத்திற்கு இடம்பெயருவது இயல்பானது.

தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலிருந்து தொழிற் நகரங்களான சென்னை, கோவை, திருப்பூர் நோக்கி மக்கள் இடம்பெயருவது இதன் காரணமாகவே; தமிழ்நாட்டைவிட வெளிநாடுகளில் தங்களது உழைப்புக்கு அதிக சம்பளம் கிடைப்பதாலேயே தமிழர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயருகின்றனர்.

தொழிலாளர்களது தேவையும் (Demand) மற்றும் தொழிலாளர்கள் கிடைப்பதுமான (Supply) நிலை மற்றும் தொழிலாளர்களது உழைப்பை விற்கும், வாங்கும் தொழிலாளர் உழைப்புச் சந்தையைப் பொறுத்து தொழிலாளர்களது இடம்பெயருதல் என்பது தவிர்க்க முடியாத, இயல்பான சமூக விதி மற்றும் விளைவு ஆகும்.

தேசிய இன இறையாண்மை நோக்கில் இடம்பெயர்வு குறித்த பார்வை

ஆனால் இத்தகைய சமூக விளைவுகள், தேசிய இனங்களின் மொழிவழியில் கட்டமைக்கப்பட்ட இந்தியா போன்ற தேசிய இனங்களின் கூட்டாட்சி அரசியலமைப்பிற்குள் நிகழும் பொழுது பிற மொழி தேசிய இனத் தொழிலாளர்கள், இடம்பெயருகிற மொழிவழித் தேசத்தில் ’தேசிய இன இறையாண்மை நோக்கில் பாதுகாப்பின்மை (Ethnic in-secureness) உணர்வு’ எழுவதும் இயல்பானதாகும். இந்திய துணைகண்டமானது மொழிவழி தேசிய இன அரசுகளாக (மாநில அரசுகளாக) உருவாக்கப்பட்டிருந்தாலும் மாநிலங்களுக்கு குடியுரிமை வழங்குகின்ற அதிகாரம் இல்லாத சூழலில் இத்தகைய நியாயமான பாதுகாப்பின்மை உணர்வும், அதனடிப்படையில் மேலெழும்புகிற அச்சமும் தவிர்க்க முடியாததாகும்.

பிற கூட்டாட்சி நாடுகளை ஒப்பிடும் பொழுது, இந்திய துணைக்கண்டத்தின் 2000 ஆண்டு கால சமூக-அரசியல் சூழலானது, பிற நாடுகளை விடவும் இந்தியாவில்,  சமூக முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி நோக்கில் தனது பிரேத்யேக மொழி, பண்பாட்டு, சமூக கூறுகளைக் கொண்டு தேசிய இனங்கள் மொழிவழித் தேசியமாக நிலவ வேண்டிய அவசியத்தைக் கொண்டிருக்கிறது.

தனது பிரேத்யேக மொழி, பண்பாட்டுக் கூறுகளின் தளத்திலிருந்து நவீன சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்டதனால் தான் தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்கள் ஒப்பீட்டளவில் வடமாநிலங்களை விட முன்னேறிய மாநிலங்களாக உள்ளன.

இந்நிலையில் பிற மொழித் தொழிலாளர்களின் வருகையால், தமிழ்நாட்டின் வளர்ச்சிக் காரனிகளில் ஒன்றாக இருக்கின்ற அதன் பிரேத்யேக தேசிய இனக் கூறுகள் நீர்த்துப் போகின்ற வாய்ப்புகள் உள்ளது.  எனவே வடமாநில தொழிலாளர்களை தவிர்ப்பதற்கு வாய்ப்பில்லாத தமிழ்நாட்டின் உற்பத்தி பொருளாதார சூழலில், தமிழ்நாட்டின் பிரேத்யேக தேசிய இன கூறுகளை, அதன் இறையாண்மையைப் பாதுகாப்பதற்குரிய பொறிமுறைகளை உருவாக்க வேண்டியதும் அவசியமாகும்.

தமிழ்நாட்டிலும் தேவை கேரள மாதிரி ஆய்வு

இதற்கான தொடக்க நிலை முயற்சியாக தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றிய ஆய்வும், கணக்கெடுப்பும் தேவையாக உள்ளது. கேரளாவில் அம்மாநில அரசே அதனை மேற்கொண்டது போல, தமிழ்நாடு அரசும் உடனடியாக அத்தகைய ஆய்வொன்றை மேற்கொள்ள வேண்டும்.

இத்தகைய முயற்சிதான் வடமாநில தொழிலாளர்கள் தொடர்பான அரசியல் வதந்திகளுக்கும், அதற்கு காரணமாக தமிழ்நாட்டு மக்களிடத்தில் நிலவும் அச்ச உணர்வுக்கும் தீர்வைத் தருகின்ற தொடக்கப் புள்ளியாக அமையும்; அதுவே தமிழ்நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கக்கூடிய அரசியல் கோரிக்கைகளின் நியாயத்தைப் பறைசாற்றும்.

– பாலாஜி தியாகராஜன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *