சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில் உள்ள ரானிபூர் கிராமத்தில் பசு தொழுவம் கட்டுவதற்காக, பல காலமாக அங்கு வாழ்ந்து வரும் 50 பழங்குடியின மக்களின் வீடுகளை இடித்திருப்பது கடுமையான எதிர்ப்பினை சந்தித்து வருகிறது.
இந்தியா முழுவதும் பழங்குடியின மக்களின் துயரங்களை அதிகரிக்கும் வகையில் வன பாதுகாப்புச் சட்டம் மற்றும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) சட்டம் உள்ளிட்டவற்றில் ஒன்றிய அரசு திருத்தங்களை மேற்கொண்டது கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து மக்கள் தங்கள் உரிமைகள் மற்றும் வாழ்வாதாரத்தைக் காக்க போராடி வரும் சூழலில் சத்தீஸ்கரில் இச்சம்பவம் நடந்தேறியுள்ளது.
சத்தீஸ்கரைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பழங்குடியின தலைவர்கள் கூறுகையில் தற்போதைய காங்கிரஸ் அரசு மற்றும் முந்தைய பாஜக தலைமையிலான அரசு ஆகிய இரண்டும் வன உரிமைகள் சட்டத்தினை (FRA) நீர்த்துப் போகச் செய்யும் வேலைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்ததாகவும், பழங்குடியினர்கள் பல தலைமுறைகளாக தங்கள் வாரிசுகளுடன் வாழ்ந்து வரும் நிலத்திற்கான உரிமை கோருவது தற்போது கடினமாகி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் அதிகாரிகளிடம் நிராகரிக்கப்பட்ட நில உரிமை கோரல்களுக்கான விண்ணப்பங்களுடன் கோர்பா மாவட்ட கிராம மக்கள் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்துள்ளனர்.
கிட்டத்தட்ட 50 குடும்பங்களின் வீடுகளை புல்டோசர்களைக் கொண்டு இடித்ததைத் தொடர்ந்து உடனடியாக அங்கே போராட்டம் வெடித்தது. பின்னர் இரவும் பகலுமாக நடைபெற்ற போராட்டத்தைத் தொடர்ந்து இடிக்கப்பட்ட 50 குடும்பங்களின் நில உரிமைக்கான ரசீது அவர்களிடம் கொடுக்கப்பட்டது.
தற்போது இடிக்கப்பட்ட வீடுகள் பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டதாகவும், இந்த 50 வீடுகளை இடிப்பதற்கான காரணமாக அங்கு மாட்டுத் தொழுவம் கட்டப்பட உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 50 குடும்பங்களை வீடற்றவர்களாக ஆக்கிவிட்டு, இடிக்கப்பட்ட இடத்தில் மாட்டுத் தொழுவம் கட்டப்படுவதை எதிர்த்து கிராம மக்கள் போராடியுள்ளனர்.
இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களில் ஒருவரான சந்தர் சிங் என்பவர் நியூஸ் கிளிக் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “என் வீடு முற்றிலுமாக சிதைக்கப்பட்டுள்ளது; எங்களுக்கு எந்த எச்சரிக்கையும் வழங்கப்படவில்லை. நான் அதிர்ச்சியடைந்தேன், என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. எனது குடும்பம் நான்கு தலைமுறைகளாக இந்த நிலத்தில் வசித்து வந்தது, எங்களிடம் இன்னும் பட்டா இல்லை, பட்டா பெறுவதற்கு நாங்கள் மூன்று முதல் நான்கு முறை விண்ணப்பித்தோம். இருப்பினும் விண்ணப்பித்ததற்கான ரசீதோ அல்லது அந்த மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தோ எந்த தகவல்களும் தெரிவிக்கப்படவில்லை. மாறாக,எங்கள் நிலத்திலிருந்து எங்களை வெளியேற்றும் முயற்சியில் எங்கள் வீடுகளில் புல்டோசர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன”. என்று தெரிவித்துள்ளார்.
இன்னொரு பாதிக்கப்பட்டவரான சஞ்சய் பரட்டே என்பவர் அளித்த பேட்டியில், “வன உரிமைகள் சட்டம் அரசினால் முற்றிலுமாக நீர்த்து வருகிறது, இதனால் பழங்குடியினருக்கு நிலத்தில் தங்கள் உரிமை கோரல்களை பதிவு செய்வது கடினமாகி உள்ளது. பல நிகழ்வுகளில் விண்ணப்பங்களை நகராட்சி அதிகாரிகள் ஏற்பதில்லை. அவை ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் கூட, எந்தவொரு ரசீதுகளும் வழங்கப்படாததால் அரசின் தரப்பில் பொறுப்புணர்வு அற்று உள்ளதாக தெரிவித்தார். மேலும் அவர் நில உரிமை கோரல்களின் விண்ணப்பங்கள் பெரும்பாலானவை அரசு அலுவலகங்களின் குப்பைத் தொட்டிகளுக்கே செல்கின்றன, பழங்குடியினர்கள் பெயரில் எந்த நிலமும் இல்லாமல் ஆபத்திற்கு உள்ளாகக் கூடியவர்களாக மாறி வருவதாக தெரிவித்தார்.
தற்போது மாட்டுத் தொழுவம் மற்றொரு இடத்தில் கட்டப்படவிருப்பதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும் நிலம் அகற்றப்பட்டு, பழங்குடிகள் இடமாற்றம் செய்யப்படுவதை உறுதி செய்வதற்கான முயற்சிகள் தற்போதும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.