மானாவாரி விவசாயம்

மானாவாரி விவசாயமும் புரட்டாசி மழையும்

பருவ மழையை நம்பி வேளாண்மை செய்யும் பகுதிகள் தமிழகத்தில் நிறைய உள்ளன. இன்னும் நிறைய மாவட்டங்களில் மழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்கின்றனர். கிணற்று நீர், ஏரி அல்லது ஆறு போன்ற நீராதாரங்கள் இல்லாத பகுதிகளில் மழை மட்டுமே முக்கிய நீராதாரம் ஆகும். 

சூழலியலில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக அண்மைக் காலங்களில் விவசாயிகள் எதிர்பார்க்கும் நேரங்களில் மழை வருவதில்லை. வெப்பச் சுழற்சியால் ஏற்படும் மழை அல்லது புயல்களால் பெறக் கூடிய மழையைத் தான் பெற முடிகிறது. இவற்றின் மழைப்பொழிவை நாம் சரியாகக் கணிக்க இயலாது. 

புரட்டாசிப் பட்டம் குறித்த நம் தமிழர்களின் இயல்பறிவு

”ஆடிப் பட்டம் தேடி விதை” என்ற பழமொழியைப் போன்று புரட்டாசிப் பட்டம் கூட விதைப்பிற்கு ஏற்றதே. ஆடி மாதம் மழை பெய்யும் என்று நம்பி விவசாயிகள் மானாவாரியாக மக்காச் சோளம் நடவு செய்துள்ளனர். இது சந்தைக்கு உற்பத்தி செய்வதே. நாற்பது ஆண்டுகள் முன்பு ஆடியில் அல்லது ஆவணியில் மழை பெய்ததும் உழவு செய்து சிறுதானியப் பயிர்களான வரகு, தினை, சாமை, கேழ்வரகு போன்றவற்றை விதைப்பர். இவற்றோடு கொள்ளு, நரிப்பயறு, துவரை, காராமணி போன்ற இருவித்திலைத் தாவரப் பயிர்களையும் சேர்த்தே விதைப்பர். நம் முன்னோர்களின் இயல்பறிவு அவ்வாறு இருந்தது.

சோற்றுக்கு சிறுதானியங்கள் மற்றும் குழம்புக்கு பயறு வகைகள் என பயன்தந்தன. இருவித்திலைத் தாவரங்கள் நிறைய இலைகளை பூமிக்குக் கொடுத்து பூமியை வளமாக்கின. வளிமண்டலக் காற்றில் உள்ள 78% நைட்ரஜனைத் தங்கள் வேர் முடிச்சுகள் மூலம் மண்ணில் நிலைபெறச் செய்தன. மனிதர்கள் விதைப்பு, அறுவடை என்று இரண்டே வேலைகளைச் செய்தனர். இப்பயிர்கள்  முளைத்து வளர்ந்து வரும் வேளையில் புரட்டாசி மாதம் மேலும் மழை பெய்து நன்றாக வளரும். கிணற்றுப் பாசனம் உள்ள பகுதிகளில் வெங்காயம்,மிளகாய், தக்காளி என்று பல்வேறு தோட்டப் பயிர்கள் சாகுபடி செய்தனர். புரட்டாசி மழை பொய்த்ததால் இந்த உழைப்பு அத்தனையும் வீணே. 

பருவநிலை மாற்றத்தால் பொய்த்துப் போன புரட்டாசி மழை

பருவநிலை மாற்றம் காரணமாக இந்த ஆண்டு புரட்டாசியில் மழை சுத்தமாக இல்லை. தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மழை பெய்தது. இதனால் அந்தந்தப் பகுதி மானாவாரிப் பயிரான மக்காச் சோளம், அர்ஜுனா ரகப் பூசணி போன்றவை செழிப்பாக வளர்ந்துள்ளன. ஆனால் நிறைய இடங்களில் புரட்டாசி மழை பொய்த்துள்ளது. இதனால் நடவு செய்து முளைத்து வளர்ந்த மக்காச்சோளம் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் ஆடி அல்லது ஆவணியில் விதைத்த பயறு வகைகள் புரட்டாசி மாதம் மழை கிடைக்காமல் வாடி பூப்பிடித்தாலும், பிஞ்சு பிடித்தாலும் பதர்கள் அல்லது பாளை நிறைய வர வாய்ப்பு உள்ளது. ஐப்பசி மாதம் மழை ஆரம்பித்தால் புதிதாகத் தண்ணீர் கிடைத்த உற்சாகத்தில் செடிகள் முரட்டுத்தனமாக வளரும். ஆனால் விளைச்சல் குறைவாகவே இருக்கும்.

சாத்தியமில்லாமல் போன மானவாரி சிறுதானிய மற்றும் தோட்டப்பயிர் விவசாயம்

புரட்டாசி மழை பொய்த்த இடங்களில் இனி புதிதாக சிறுதானிய விதைப்பு சாத்தியமில்லை. தோட்டப் பயிர்களான வெங்காயம் போன்றவை நடவு செய்வதும் கேள்விக்குறியே! ஏனென்றால் தொண்ணூறு நாள் பயிர்கள் நிறைய உள்ளன. எடுத்துக் காட்டாக புரட்டாசியின் ஆரம்பத்தில் வெங்காயம் நடவு செய்தால் பனிக் காலத்திற்கு முன்பாக அறுவடை செய்து விடலாம். நிறையப் பயிர்களுக்குப் பனி எதிரி. வெங்காயம் போன்ற பயிர்கள் பனிவிழ ஆரம்பித்ததும் கருகி அதன் வளர்ச்சி பாதிக்கப்படும். நோய்த்தாக்குதலும் அதிகமாக இருக்கும். 

இந்த ஆண்டு புன்செய் நில விவசாயிகள் பெருமளவு நாற்றங்கால் பாவுதலில் கவனம் செலுத்த இயலவில்லை. மிளகாய் அல்லது கேழ்வரகு போன்ற பயிர்களுக்கு ஆடி மாதம் நாற்றங்கால் தயாரித்து விதைத்து நாற்றுகள் தயார் நிலையில் இருக்கும். புரட்டாசி மாதம் மழை ஆரம்பித்ததும் உற்சாகமாக நடவு ஆரம்பிக்கும். நடவு செய்து வீட்டுக்கு வந்தால் மழைப் பொழிவு இருக்கும். நடவு செய்த நாற்றுக்கு உயிர் நீர் கிடைத்த உற்சாகத்தில் விவசாயிகள் மகிழ்ந்திருப்பர். பல ஆண்டுகளாகத் தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் இந்தக் காட்சிகளைக் காண முடிவதில்லை. 

இந்த ஆண்டைப் பொறுத்தவரை, புரட்டாசி மட்டுமின்றி பின்னால் வரும் மாதங்களும் போதிய மழையின்றிக் கடந்து சென்றால், விவசாயிகள் தயாரித்து வைத்திருக்கும் செழித்து வளர்ந்த மிள்காய் நாற்றுகள் நாற்றங்காலில் வீணாகும் அவலம் நடந்தேறும்.

மருத்துவ குணமுள்ள வேலிப்பயிர்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு

புரட்டாசி மழை பெய்யாததால் தானாகவே விளையக்கூடிய பிரண்டை, வேலிப்பருத்தி, சுக்கங்காய், சுண்டைக்காய், அதலைக்காய் போன்ற மருத்துவ குணமுள்ள உணவுகள் சரிவரக் கிடைக்கவில்லை. பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் இந்த மாதத்தில் கிராமங்களில் பிரண்டைத் துவையல் செய்யாத வீடே இருக்காது என்று சொல்லலாம். ஆனால் இந்த ஆண்டு இன்னும் யார் வீட்டிலும் பிரண்டைத் துவையல் செய்து உண்ணவில்லை. 

உயிர் வேலிகளில் கொவ்வைப் பழங்கள் இரத்தச் சிவப்பில் பழுத்து, “வா என்னை உண்” என்று நம்மை அழைக்கும். ஆனால் புரட்டாசி முப்பது நாட்கள் மழை இன்றிக் கழிந்ததால் நாம் கடந்து செல்லும் பாதைகளில் வெயிலில் வெம்பிய காய்கள் அல்லது சரியாகப் பழுக்காத ஆரஞ்சு வண்ணக் கொவ்வைப் பழங்களாக தொங்கிக் கொண்டிருப்பதை பார்க்கிறோம். மாதுளை போன்ற எத்தனையோ கனி தரும் மரங்கள் பூப்பிடித்த பின் மழை இல்லாத காரணத்தால் பூக்கள் அல்லது பிஞ்சுகளை உதிர்த்து விட்டுத் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வழி தேடித் தவிக்கின்றன.

பறவைகள் உணவின்றித் தவிக்கின்றன. தேனீ போன்ற உயிரினங்கள் மலர்கள் இல்லாத காரணத்தால் தேனும் மகரந்தமும் இன்றித் தவிக்கின்றன.

இந்த மாற்றங்கள் ஐப்பசியில் நீடிக்குமா! ஒரு வேளை ஐப்பசி மாதம் மழைப் பொழிவு இருந்தால் கருகியது போக மீதி உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு காத்திருந்த மக்காச்சோளம் போன்ற பயிர்கள் அதே அளவு விளைச்சல் தருமா என்பது கேள்விக்குறியே! இளமையில் வறுமை கொடிது என்பது மானாவாரிப் பயிர்களுக்கும் பொருந்தும் தானே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *