கோவில்களை அரசு நிர்வகிப்பதால்தான் கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகிறது என்று ஒரு பெரும் வதந்தியை பரப்பிக் கொண்டிருக்கும் ஜக்கி வாசுதேவ், அவர் வைத்திருக்கும் ஆதியோகி சிலையையே பழங்குடி மக்களுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்துத்தான் எழுப்பியிருக்கிறார் எனும் தகவல் முக்கியமானது.
யானைகளின் வழித்தடத்தை மறித்து எழுப்பப்பட்ட மின்வேலி
கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி பகுதியில் சாடிவயலுக்கும் தானிக்கண்டிக்கும் இடையேயான யானைகள் வழித்தடத்தில்தான் ஈஷா மையம் அமைந்துள்ளது. யானைகளின் வழித்தடத்தை மறித்தது மட்டுமல்லாமல் மின்வேலி அமைத்து யானைகளின் மரணங்களுக்கும் காரணமானவர் தான் ஜக்கி வாசுதேவ்.
இதுகுறித்து கடந்த 2012-ம் ஆண்டு, கோவை மாவட்ட வனச்சரக அலுவலர் எம்.எஸ்.பார்த்திபன் மாவட்ட வன அலுவலருக்கு ஒரு புகார் தெரிவித்தார். அந்த புகாரில் “ஈஷா மையத்தில் மின்வேலி அமைக்கப்பட்டிருப்பதால், மின் அதிர்வுகளால் தாக்கப்படும் யானைகள் பாதை குழம்பி வயல்களுக்குள் புகுந்துவிடுகின்றன. இதனால் பயிர்கள் நாசமாகின்றன. உடமைகளுக்கும் மனித உயிர்களுக்கும் இழப்புகள் ஏற்படுகின்றன” என்றும் அந்த புகாரில் தெரிவித்திருக்கிறார்.
சட்டவிரோதமாக எழுப்பப்பட்ட கட்டிடங்கள்
“தமிழகத்தில் உள்ள எந்த ஒரு மலைப்பகுதியிலோ அல்லது மலையடிவாரப் பகுதியிலோ எந்த ஒரு கட்டுமானப் பணியைச் செய்தாலும், ஹாக்கா (Hill Area Conservation Authority (HACA)) என்ற மலைப்பகுதி பாதுகாப்புக் குழுவிடம் அனுமதி வாங்க வேண்டும். சுமார் 4,27,700 சதுர மீட்டர் அளவில் வனப்பகுதியில் கட்டிடங்களைக் கட்டியுள்ள ஈஷா மையம், இதுவரை “ஹாக்கா” அமைப்பிடம் அனுமதி வாங்கவில்லை!”
இதையடுத்து, கோவையின் உள்ளூர் திட்டக் குழுமம் (Town and Country Planning) ஈஷா மையத்துக்கு 5.11.2012 அன்று நோட்டீஸ் அனுப்பியது. அதில், “முறையான அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டிடங்களின் கட்டுமானப் பணிகளை நிறுத்துங்கள்” என்று உத்தரவிட்டது.
கோவை நகர திட்டக் கழகம், ஈஷா யோகா மையத்தின் சட்டவிரோத கட்டிடங்களை இடிப்பதற்கான ஆணையை கொடுத்தபோதும் அது இடிக்கப்படவில்லை. இந்த ஆணையை அமல்படுத்த வேண்டும்; ஈஷா மையம் அனுமதியின்றி கட்டியுள்ள கட்டிடங்கள் இடிக்கப்பட வேண்டும்” என்று 2014-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் சார்பாக பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அது இன்னும் நிலுவையில் உள்ளது.
சட்டவிரோத கட்டிடங்களில் வேதபாட சாலை
இன்னொரு சட்டமீறலும் ஈஷா மையத்தில் நடக்கிறது. இந்த வெள்ளியங்கிரி ஈஷா மையத்தில், சமஸ்கிரிதி என்னும் வேத பாடசாலை செயல்படுகிறது. அனுமதி இல்லாத கட்டிடங்களில் இத்தகைய பள்ளிகள் செயல்படுவதும் தவறுதான். இது குறித்தும் பூலகின் நண்பர்கள் அமைப்பு பொதுநல வழக்கு தொடுத்துள்ளது.
இதையும் படிக்க: காமராஜரின் கனவை சிதைக்க நினைக்கும் கார்ப்பரேட் சாமியார் ஜக்கி வாசுதேவ்!
ஈஷாவிற்கு 24 மணி நேர தடையில்லா மின்சாரம் வழங்கும் தமிழக அரசு
இப்படி அனுமதியில்லாமல் இயங்கும் ஈஷா மையத்திற்கு 24 மணிநேரமும் தடையில்லா மின்சாரம் வழங்க தனி அரசாணையே வெளியிடப்பட்டுள்ளது. இதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
ஜக்கி வாசுதேவிற்கு பத்மஸ்ரீ வழங்கியதை எதிர்த்து வழக்கு
ஜக்கி வாசுதேவிற்கு பத்மஸ்ரீ வழங்கப்பட்டதை எதிர்த்தும் பூவுலகின் நண்பர்கள் சார்பில் வழக்கு பதிவு செய்யபட்டது. இப்படி ஈஷாவிற்கு எதிராக ஐந்து வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.
வனப்பகுதிக்குள் பிரம்மாண்ட நிகழ்வுகள் நடத்துவதை எதிர்த்து வழக்கு
அதேபோல வனப்பகுதிக்கு அருகில் பெரும் நிகழ்வுகள் நடத்துவதற்கு எதிராக ஈஷா மையத்தின் மீது ஒரு வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கினை விசாரித்த உயர்நீதிமன்றம் எந்த நிகழ்வை நடத்துவதற்கும் மாவட்ட வன அதிகாரி, சுற்றுச்சூழல் அதிகாரி உள்ளிட்டவர்களிடம் முறையான அனுமதி வாங்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
காவேரி கூக்குரல் 10 ஆயிரம் கோடி ஊழல்
காவேரி கூக்குரல் என்ற பெயரில் ஜக்கி வாசுதேவ் பல தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்களை வைத்து துவங்கிய திட்டத்தில் 10,626 கோடி ருபாய் ஊழல் நடந்தது தொடர்பாக இன்னும் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஏ.வி.அமர்நாதன் என்பவர் ’காவிரி கூக்குரல்’ திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக கர்நாடக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணையின்போது நீதிபதிகள், ஜக்கி வாசுதேவ் மக்களிடம் பணம் வசூல் செய்ய மாநில அரசிடமோ அல்லது மத்திய அரசிடமோ அங்கீகாரம் பெறவில்லை என்றும், இந்த திட்டத்திற்கான ஆய்வறிக்கை கூட மாநில அரசிடம் தாக்கல் செய்யப்படவில்லை என்றும், இத்தனை விதிமீறலையும் மிறி இதனை மாநில அரசு தடுக்காதது குறித்து கர்நாடக பாஜக அரசையும் கண்டித்தனர். இந்த வழக்கும் இன்னும் நிலுவையில் உள்ளது.
இதையும் படிக்க: கார்ப்பரேட் கோவில்; கார்ப்பரேட் கல்வி; கார்ப்பரேட் விவசாயம் – தமிழ்நாட்டை விற்கும் ஜக்கியின் திட்டம்
பழங்குடி மக்களுக்கு சொந்தமான 44 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு
மடக்காடு, முட்டத்துவயல், கரும்புக்காடு, முள்ளாங்காடு, பட்டியார்பதி, செம்மேடு, பச்சாம்வயல் என்று பல பழங்குடி கிராமங்கள் ஈஷா மையத்தைச் சுற்றி இருக்கிறது. இந்த கிராமங்களில் தற்போது கிட்டத்தட்ட 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கிறது. இவர்களுக்கு சொந்தமாக தற்போது நிலங்கள் இல்லை. ஒரு வீட்டிற்குள் ஐந்து முதல் ஆறு குடும்பங்கள் வாழ்கிறது. இவர்களுக்கு அரசு வீடு கட்டிக் கொடுக்க மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தபோது உங்கள் பகுதியில் புறம்போக்கு நிலம் இருந்தால் கண்டறிந்து சொல்லுங்கள் என்று பதில் வந்திருக்கிறது.
இந்த பகுதியில் பெரும் நில உடமையாளர்களிடம் இருந்து நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் கையகப்படுத்திய 44 ஏக்கர் நிலம் வருவாய் துறையிடம் உள்ளது. நில உச்சவரம்பு சட்டத்தில் பறிக்கப்பட்ட நிலம் அந்த நிலத்தில் உழைத்த பழங்குடி மக்களுக்கு சொந்தமானதுதான்.
2014-ம் ஆம் ஆண்டு வரை இப்படி ஒன்று இருப்பது அந்த மக்களுக்கு தெரியாது. அவர்கள் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடைபெற்ற போதுதான், பழங்குடிகளுக்கு சொந்தமான 44 ஏக்கரும் ஈஷா மையத்திற்குள் இருக்கும் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களின் பெயர்களில் சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.
2016-ம் ஆண்டு நடந்த வருவாய் கோட்டாட்சியர் விசாரணை முடியும் வரை அந்த இடத்தினை இருவரும் பயன்படுத்தக் கூடாது என்று முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் மோடியை வைத்து அதே நிலத்தில் ஆதியோகி சிலையைத் திறந்தார் ஜக்கி வாசுதேவ். அந்த நிலத்தை மீட்பதற்காக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிக் கொண்டிருக்கிறார் பழங்குடி சங்கத் தலைவர் முத்தம்மா.
ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள ஜக்கி அறநிலையத்துறைக்கு எதிராக பிரச்சாரம்
காவிரியின் பெயரில் வசூல் செய்த பணத்திற்கு இன்றுவரை முழுமையான கணக்கு காட்டாத ஜக்கி வாசுதேவ்தான் கோயில் சொத்துகள் குறித்து அக்கறைப்படுகிறார். நாளை கோவில்களின் பெயரில் இதேபோல வசூல் செய்யலாம் என்பதுதான் ஜக்கி வாசுதேவின் கணக்கு.
பழங்குடிகளுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பது, அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டுவது, யானையின் வழித்தடத்தை மின் வேலிகள் போட்டு மறிப்பது என்று சட்டவிரோத மற்றும் இயற்கை விரோத செயல்பாடுகளை செய்யும் ஜக்கி வேசுதேவிற்கு, கோவில்களின் நிர்வாகத்தில் அரசு தலையிடுவது தொந்தரவாகத் தான் தெரியும்.
ஆர்.எஸ்.எஸ்-க்கு ஜக்கி செய்யும் சேவகம்
கோவை மாவட்ட வன அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், கோவை நகர திட்டக் கழகம் உள்ளிட்ட அரசுத் துறைகளின் உத்தரவுகளிலிருந்து ஆர்.எஸ்.எஸ், பாஜக வட்டங்களில் உள்ள செல்வாக்கின் மூலம் தப்பித்துக் கொண்டவர் ஜக்கி வாசுதேவ். அதனால்தான் ஆர்.எஸ்.எஸ்-ன் கோரிக்கையை ஜக்கி வாசுதேவ் பேசுகிறார்.
பழங்குடி மக்களுக்கு சொந்தமான 44 ஏக்கர் நிலங்களை ஆக்கிரமித்திருக்கும் ஜக்கி வாசுதேவ், தமிழ்நாடு முழுவதும் உள்ள 5 லட்சம் ஏக்கர் நிலங்களை ஆக்கிரமிக்க அறநிலையத்துறை தடையாக இருக்கிறது. அதனால்தான் ஜக்கி வாசுதேவ் அறநிலையைத் துறையை ஒழிப்பதற்கு அணி திரட்டுகிறார்.
இன்றுவரை ஈஷாவினால் அனுமதி பெறாமல் கட்டப்பட்டு இடிக்க நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்ட கட்டிடங்களை சட்டவிரோதமாக இயக்கிக் கொண்டிருக்கும் ஜக்கி வாசுதேவ், கோவில்களை அரசிடமிருந்து மீட்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறார்.
ஜக்கி வாசுதேவ் பற்றிய கட்டுரைகளைப் படிக்க