சக மனிதன் கழித்துப் போட்ட மலத்தை ஒருவர் தனது கைகளால் அள்ளி அப்புறப்படுத்துவதே Manual Scavenging என்று ஆங்கிலத்தில் கூறப்படும் மனிதக் கழிவை மனிதர் அகற்றும் வேலைக்கான விளக்கம்.
பொதுவாக இந்த வேலைகள் இருவழிகளில் மேற்கொள்ளப்படுகிறது.
- முதலாவது உலர் கழிப்பிடங்களை சுத்தம் செய்தல். அதாவது ஒரு துப்புரவுத் தொழிலாளி கழிப்பிடங்களில் சேர்ந்திருக்கும் மலத்தை வாரி எடுத்து வாளியில் நிரப்பி ஒதுக்குப்புறத்தில் கொண்டுபோய் கொட்டுவது.
- இரண்டாவது தனிநபர் வீடுகளில் உள்ள கழிப்பிடங்கள், அரசு கழிப்பிடம், தனியார் கழிப்பிடம் மற்றும் அரசுசாரா அமைப்புகள் நடத்தும் பொது கழிப்பிடங்களில் மலம் தேங்கியிருக்கும் தொட்டிகளை அல்லது சாக்கடை குழிகளை சுத்தம் செய்தல். இந்த பணியில் ஆண், பெண் என இருபாலரும் செயல்படுகின்றனர்.
மலம் அள்ளும் தொழிலாளர்கள் வரலாற்றில் ஒடுக்கப்பட்ட விதம்
இந்தியா முழுவதும் மனிதக் கழிவை அகற்றும் போக்கு பல்வேறு முறைகளில் நடத்தப்பட்டாலும், மனிதக் கழிவை அகற்றும் மக்கள் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டாலும் பல்வேறு வேறுபாடுகள் இருந்தாலும் அவர்களை ஒன்றிணைப்பது மலமும் அதைவிட துர்நாற்றம் வீசக்கூடிய சாதியும்தான்.
இந்திய சாதிய சமூகத்தில் மிகவும் அடித்தட்டு நிலையில் உள்ள அந்த மனிதர்கள் மிக மோசமாக அவமதிப்பிற்கும், வெறுப்பிற்கும் ஆளாகியுள்ளனர். அவர்கள் நிழல் பட்டால்கூட தீட்டு என்று ஒதுக்கி வைத்திருந்தனர். முந்தைய காலத்தில் மலம் அள்ளுபவர்களுக்கு தனி வழி ஒதுக்கி வைத்திருந்தனர். அவர்கள் நடந்து வரும்போது தாங்கள் வருவது குறித்து உரத்து கத்திக்கொண்டே செல்ல வேண்டும். மேலும் சில இடங்களில் அவர்கள் தெருவில் நடக்கும் போது முதுகில் ஒரு நீண்ட துடைப்பத்தைக் கட்டிக்கொண்டு தங்கள் நடந்துவந்த பாதையை சுத்தப்படுத்திக்கொண்டே போகவேண்டும். இதுபோன்ற மிக மோசமான வாழ்க்கையை இன்றுவரை வாழ்ந்து வருகின்றனர். ஒரு விலங்கை விட மிக இழிவாக நடத்தப்பட்ட இந்த மக்கள் தங்களுடைய இழிவை உடைத்தெரிய தொடர்ந்து பெரும்பாடுபட்டு வருகின்றனர்.

2013-ம் ஆண்டு திருத்த சட்டம்
கையால் மலத்தை அள்ளி கழிப்பறைகளைச் சுத்தம் செய்யும் இழிதொழிலை ஒழித்துக்கட்டக் கோரும் போராட்டங்கள் ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு மேலாக நடந்தது. அந்த நெடிய போராட்டத்தின் விளைவாக 1993-ம் ஆண்டு ஜூன் 5-ம் தேதி உலர் கழிப்பறைகளில் மனிதக் கழிவுகளை கையால் அள்ளும் பணி மற்றும் உலர் கழிப்பறை தடைச் சட்டம் (The Employment of Manual Scavengers and Construction of dry latrines(prohibition)Act, 1993) கொண்டுவரப்பட்டது.
அந்த சட்டம் முறையாக நடைமுறைபடுத்தப்படாத சூழ்நிலையில் அதில் சில மாற்றங்களைக் கோரி, தொடர்ந்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். பின் 2013-ம் ஆண்டு கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவதைத் தடை செய்தல் மற்றும் அவர்களது மறுவாழ்வுக்கான திருத்த சட்டம் இயற்றப்பட்டது. ”தனிநபரோ, உள்ளூர் அதிகாரியோ அல்லது முகவரோ பாதாள சாக்கடை, மலத்தொட்டி போன்ற ஆபத்தான பணிகளைச் செய்ய ஆட்களை வேலைக்கு அமர்த்தக்கூடாது. அப்படி செய்தால் அது தண்டனைக்கு உரிய குற்றம்” என்று இந்த சட்டம் ஆணையிடுகிறது. ஆனால் இந்த சட்டத்தையும் அரசு முறையாக நடைமுறைபடுத்தாததால் உயிர்பலிகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
எங்களைக் கொல்லாதீர்கள்

சட்டத்தை முறையாகவும் கண்டிப்புடனும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தூய்மைப் பணியாளர்கள் “எங்களைக் கொல்லாதீர்கள்” என்ற பிரச்சாரத்தில் நாடு தழுவிய பேரணி நடத்தினார்கள். அந்த பேரணி டிசம்பர் 10, 2015 அன்று அசாமில் துவங்கி 13 ஏப்ரல் 2016 அன்று டெல்லியில் முடிவடைந்தது. நாடு தழுவிய அளவில் இந்த பேரணி பெரும் கவனத்தைப் பெற்றது. இருந்தும் இன்றுவரை இந்த சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.
”1993-ம் ஆண்டு தடைச்சட்டம் நடைமுறைக்கு வந்தபிறகு இதுவரை கையால் மலம் அள்ளும் தொழில் செய்பவர்களின் எண்ணிக்கை குறித்து ஒரு அறிக்கை நான்கு வாரத்திற்குள் சமர்ப்பிக்குமாறு உச்சநீதிமன்றம் 2019 பிப்ரவரி 8 அன்று, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு கோரிக்கை வைத்தது. மேலும் மரணம் குறித்து விசாரித்து ஐபிசி பிரிவு 304-ன் கீழ் குற்றவியல் நடவடிக்கைகளை உடனடியாகத் துவங்கவும் கோரிக்கை வைத்தது.
ஒரு ஆண்டுக்குப் பிறகு இந்த விடயம் குறித்து கேள்வி எழுப்பிய மனுதாரருக்கு உச்சநீதிமன்றம் பின்வருமாறு பதில் அளித்தது. ”2019-ம் ஆண்டு இந்த விவகாரம் குறித்து 40-க்கும் மேற்பட்டவர்களுக்கு அறிவிப்பாணை கொடுக்கப்பட்டது. இதுவரை 13 பேர் மட்டும்தான் தங்கள் அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர். மீதம் உள்ளவர்களை கட்டாயப்படுத்த எங்களால் முடியாது” என்று உச்சநிதீமன்றம் கைவிரித்தது.
மத்திய அரசின் குழப்பமான நடைமுறை
2013-ம் ஆண்டு சட்டத்தைப் பலப்படுத்த மத்திய அரசாங்கம் கடந்த 2020-ம் ஆண்டு ஒரு புதிய மசோதாவை அறிமுகப்படுத்தியது. மனிதக் கழிவுகளை கையால் அள்ளும் பணிக்கு தடை மற்றும் அவர்களின் மறுவாழ்வு (திருத்த) 2020 மசோதா மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்காக காத்திருந்தது. இதுகுறித்து 2020 செப்டம்பர் மாதம் ஊடகங்களில் பரவலாக தகவல் வெளியானது. ஆனால் மத்திய அரசிடம் இருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவரவில்லை.
தலித் ஆதிவாசி சக்தி அதிகார மஞ்ச் என்ற அமைப்பு ”இந்த மசோதா குறித்து தொழிலாளர்களிடமோ அவர்களின் பிரதிநிதிகளிடம் எந்த உரையாடலும் நிகழ்த்தப்படவில்லை. புதிய மசோதா குறித்து பொதுவெளியில் எந்த விவாதமும் நிகழ்த்தப்படவில்லை. எங்களுக்கு அரசிடம் இருந்து 2013-ம் ஆண்டு சட்டத்தை உள்ளடக்கிய ஒரு வரைவு மட்டும்தான் மீண்டும் மீண்டும் அனுப்பப்பட்டது என்று கருத்து தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு கடந்த ஐந்து ஆண்டுகளாக கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களின் வழக்குகளை கண்காணித்து வருகிறது.

கடந்த மார்ச் 23-ம் தேதி மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே 2013-ம் ஆண்டு சட்டத்தை திருத்துவதற்கான எந்த திட்டமும் எங்களுக்கு இல்லை என்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 2020-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மசோதா என்ன ஆனது என்று எந்த தகவலும் இதுவரை வெளிவரவில்லை.
”மத்திய அரசு, மாநில அரசு அல்லது உள்ளாட்சி அமைப்புகள் போன்ற எந்த ஒரு அமைப்பிற்கும் கையால் மலம் அள்ளும் தொழிலாளர் குறித்து தங்களுக்கு என்ன பொறுப்புகள் உள்ளது என்பது குறித்து ஒரு திட்டவட்டமான பொறுப்புமுறை இல்லை” என்று இந்திய தேசிய சட்டப் பள்ளியில் சமூகவியல் ஆய்வு மையத்தின் உதவி பேராசிரியர் ஆர்.வி.சந்திரசேகர் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில்தான் அதிகமாக உயிர்பலிகள்
இந்தியா முழுவதும் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடும்போது விஷவாயு தாக்கி பலியானவர்களின் எண்ணிக்கை கூடிக்கோண்டே போகிறது. தமிழ்நாட்டில் அதிகமாக உயிர்பலி நிகழ்கிறது என்ற மத்திய அரசின் செய்தி அதிர்ச்சியாக உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 43 என்று அரசு தரப்பு புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் Safai Karamchari Andolan என்ற அமைப்பு 69 பேர் உயிர் பலியானதாக தெரிவிக்கிறது. கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை குறித்து அரசிடம் எந்த முறையான தகவல்களும் இல்லாததன் வெளிப்பாடுதான் இது.
இதனால் மாநில அரசு தங்கள் பொறுப்பிலிருந்து கைகழுவிக் கொள்ளும் போக்குதான் இது. அரசு கொடுக்கும் தகவல் அத்துடன் பல தொண்டு நிறுவனங்களில் கணக்குகளை ஒப்பிட்டுப் பார்த்தால் முரணாக உள்ளது. இத்துடன் ஊடகத்தில் வரும் புள்ளிவிபரங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் குழுப்பமாக இருக்கும் என்று சில ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
“சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மாநில அரசுக்கு முக்கியப் பங்கு உண்டு. ஏதாவது ஒரு நகராட்சியின் எல்லைக்குள் கையால் மலம் அள்ளும் பணியாளர்கள் ஈடுபடுகிறார்கள் என்று தெரிந்தால் அந்த நகராட்சி அதன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் எத்தனை பேர் இதுபோன்ற பணிகளில் ஈடுபடுகிறார்கள் என்று ஆய்வு செய்ய வேண்டும்” என்று 2013 திருத்த சட்டம் வலியுறுத்துகிறது. ஆனால் கையால் மலம் அள்ளும் பணியாளர்கள் குறித்த உண்மையான எண்ணிக்கையைப் பெறுவதற்கு மாநில அரசு இன்னும் ஒரு கணக்கெடுப்புகூட மேற்கொள்ளவில்லை.
தமிழகத்தில் உள்ள எட்டு மாவட்டங்களில் இருக்கும் எட்டு நகரங்களில் இந்த பணியில் ஈடுபடுபவர்கள் குறித்த ஆய்வு செய்ததில் 3,000 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் சென்னையில் மட்டும் 700 பேர் உள்ளதாக Safai Karmachari Andolan அமைப்பு தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் கையால் மலம் அள்ளும் தொழிலுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்க அழைப்பு விடுத்தது. உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்தீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி கூறுகையில் நகராட்சி மற்றும் மாநகராட்சிகள் தான் இந்த இறப்பிற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று கடந்த மார்ச் 16-ம் தேதி கருத்து தெரிவித்தனர்.
மத்திய சமூகநீதி அமைச்சகத்தின் தகவல்

மத்திய சமூக நீதி அமைச்சகத்தின் தகவல் படி கடந்த 27 ஆண்டுகளாக பணியின்போது 1,013 பேர் பலியாகியுள்ளனர். இதில் 462 வழக்குகளுக்கு மட்டும்தான் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. மேலும் 418 வழக்குகள் இந்திய தண்டனைச் சட்டம் 304 (அலட்சியம் காரணமாக மரணம்) மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. 44 வழக்குகள் விபத்து என்று பதியப்பட்டுள்ளது. வெறும் 37 வழக்குகள் மட்டும்தான் 2013-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்துவதைத் தடை செய்தல் மற்றும் அவர்களது மறுவாழ்வுக்கான திருத்த சட்டத்தின் அடிப்படையில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
2013-ம் ஆண்டு கையால் மலம் அள்ளும் தொழில் சட்டவிரோதமானது என்று சட்டத்திருத்தம் கொண்டுவந்த பிறகு ஏறத்தாழ 400-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். இதில் தொடர்புடைய ஒருவர் கூட தண்டனை வழங்கப்படவில்லை என்பது கவலையளிக்கிறது.
இந்த தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களில் 98% சதவீதத்தினர் தலித் மக்கள் என்ற தகவல் மட்டும் உறுதிப்படுகிறது. இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட மொத்தம் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களில் 6% பேருக்கு மட்டுமே திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்பட்டு மாதத்திற்கு ரூபாய் 3,000 உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ளவர்களின் நிலை என்ன என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
சுதந்திரத்தை மறுக்கும் சாதி
மிகக் குறைவான கட்டணத்திற்காக தனது உயிரை பணயம் வைத்து சிறு துளைக்குள் இறங்கி மலக் கழிவுகளை சுத்தம் செய்யும் அந்த முகமற்ற மனிதர்கள் இந்த நிலைக்கு தள்ளப்பட்டதற்கு காரணம் இந்து சனாதன கட்டமைப்பின் கொடூரமான சாதிய வடிவம்தான். இந்த சமூக அமைப்பு குறித்து அண்ணல் அம்பேத்கர் பின்வருமாறு கூறுகிறார்.
”இந்து சமூக அமைப்பு சகோதரத்துவத்திற்கு எதிரானது. சமத்துவத்தை அது அங்கீகரிப்பதில்லை. சமத்துவத்தை அங்கீகரிக்காதது மட்டுமல்ல, சமமின்மையை அதிகாரப்பூர்வக் கோட்பாடாக்குகிறது. சுதந்திரம் பற்றிய நிலை என்ன? தொழிலும் எற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்தொழிலை மேற்கொண்டு நடப்பதே ஏற்புடையது. பேச்சு சுதந்திரம் இருக்கிறது. சமூக அமைப்பில் மேல்மட்டத்துக்கே அந்த பேச்சு சுதந்திரம் இருக்கிறது. ஆனால் அது தாராளமான பெருந்தன்மையுடன் கூடிய சுதந்திரம் அன்று”
– சத்தியராஜ் குப்புசாமி, Madras Review