ஜக்கி வாசுதேவ் காமராஜர்

காமராஜரின் கனவை சிதைக்க நினைக்கும் கார்ப்பரேட் சாமியார் ஜக்கி வாசுதேவ்!

கோழிப்பண்ணை வைத்து வயிற்றுப் பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த ஜெகதீஷ் என்கிற ஜக்கி, தற்போது ”சத்குரு” ஜக்கி வாசுதேவாக மாறி பல்லாயிரம் கோடிகளில் ஆனந்தக் குளியல் நடத்திக் கொண்டிருக்கிறார். ஈஷா மையத்தின் சூழலியல் அழிப்புகளை மையப்படுத்தி எத்தனையே புகார்கள், வழக்குகள் என ஜக்கிக்கு எதிராக சமூக ஆர்வலர்களும், மக்களும் எழுப்பிய குரல்கள் எதற்கும் நீதி கிடைக்கவில்லை. ஜக்கியின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஜக்கியின் பணபலமும், அரசியல் பலமும்

பணபலம், அரசியல் பலம் என்று அனைவரின் கண்ணிலும் கையை விட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறார் இந்த கார்ப்பரேட் சாமியார். கடந்த வருடம் உலகம் முழுதும் கொரோனா வைரஸ் பரவிக் கொண்டிருந்த போது, ஜக்கி மட்டும் ஏராளமான வெளிநாட்டினரை பிரம்மாண்டமாய் கூட்டி சிவராத்திரி நடனத்தை கோவையில் நிகழ்த்திக் கொண்டிருந்தார். இந்தியாவில் கொரோனா பரவியதற்கு எவையெல்லாம் காரணமாக இருக்கும் என்று விவாதித்த போது, தப்பித்தவறி கூட ஜக்கியின் சிவராத்திரி நிகழ்ச்சியை ஒருவரும் சுட்டிக் காட்டவில்லை.

2020-ம் ஆண்டு கொரோனா பரவிக் கொண்டிருந்த போது ஏராளமான வெளிநாட்டுக்காரர்களும் பங்கேற்ற ஜக்கியின் சிவராத்திரி நிகழ்ச்சி

ஏனென்றால் ஆர்.எஸ்.எஸ் அமைப்புடனான ஜக்கியின் வலுவான உறவு அத்தகையது. அதனால்தான் கஜா புயலுக்கோ,வர்தா புயலுக்கோ, சென்னை பெருவெள்ளத்திற்கோ தமிழ்நாட்டை எட்டிப் பார்க்காத பிரதமர் மோடி, ஜக்கியின் சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு மறுப்பு சொல்லாமல் வந்து சென்றார். 

சிவராத்திரி நிகழ்ச்சியில் ஜக்கி செய்திருக்கும் மோசமான அரசியல்

இந்த ஆண்டு நடைபெற்ற சிவராத்திரி நிகழ்ச்சியில் ஜக்கி ஒரு மோசமான அரசியலை செய்திருக்கிறார். தமிழ்நாட்டில் பொதுவாக அரசியல் நிகழ்ச்சிகளுக்கு இரவு 10 மணிக்கு மேல் எங்கும் காவல்துறை அனுமதி அளிப்பது கிடையாது. ஆனால் ஜக்கியோ ஆன்மிக நிகழ்ச்சி என்ற பெயரில் அனுமதி பெற்று ஒரு அரசியல் நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார். சிவராத்திரிக்காக வந்திருந்தோர் அனைவரின் கையிலும் #கோவில்அடிமைநிறுத்து #FreeTNTemples என்ற முழக்க அட்டைகளைக் கொடுத்து இந்து அறநிலையத்துறைக்கும், தமிழ்நாடு அரசுக்கும் எதிரான ஒரு செயலினை மேற்கொண்டிருக்கிறார். மக்களை தமிழ்நாடு அரசுக்கும், அரசின் ஒரு துறைக்கும் எதிராகத் தூண்டிவிடும் ஜக்கியின் மீது வழக்குகள் எதுவும் பதியப்படவில்லை.

சிவராத்திரி நிகழ்ச்சியில் #FreeTNTemples என்று விநியோகிக்கப்பட்ட இந்து அறநிலையத் துறைக்கு எதிரான அரசியல் முழக்க அட்டைகள்
இந்து அறநிலையத் துறைக்கு எதிராக மக்களை தூண்டிவிடும் ஜக்கியின் பிரச்சார பேனர்

ஆர்.எஸ்.எஸ்-சின் கனவை நிறைவேற்றத் துடிக்கும் ஜக்கி

இந்து அறநிலையைத் துறையை ஒழிக்க வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ் மதவாத அமைப்பின் நீண்டநாள் கனவு. தமிழ்நாட்டின் பெருங்கோவில்களில் பார்ப்பனர் அல்லாதோர் அதிகாரம் பெறுவதைத் தடுப்பதே அக்கனவின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. ”அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு” என்று ஹெச்.ராஜா, அர்ஜூன் சம்பத், இராமகோபாலன் எனப் பலரும் எவ்வளவோ முண்டியடித்துப் பார்த்தும் தமிழ்நாட்டு மக்கள் அவர்களை சிறிதும் கூட மதிக்கவில்லை. எனவே தற்போது கார்ப்பரேட் சாமியாரான ஜக்கி வாசுதேவை வைத்து அந்த பிராஜக்டில் இறங்கியிருக்கிறது பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்.-சும். அதுதான் நேற்று ஜக்கியின் சிவராத்திரி நிகழ்ச்சியில் ஜக்கி நடத்தியுள்ள அரசியல். 

இந்து அறநிலையத் துறையின் மேல் கார்ப்பரேட் சாமியார்களுக்கு ஏன் இத்தனை கோபம்?

பல நூற்றாண்டு காலமாக மன்னராட்சி காலங்களில் துவங்கி கோவில்கள் ஒரு அதிகார மையமாகவே இருந்திருக்கின்றன. ஊரின் நிலங்களில் ஏராளமானவை கோவிலின் பெயரிலேயே இருந்திருக்கின்றன. கோவில்களை மையப்படுத்தி ஏராளமான வரிகளும் விதிக்கப்பட்டன. கோவில்களை மையப்படுத்திய சொத்துக்கள் என்பவை மிகப் பெரியவை. அக்கோயில்களில் சாதியை மையப்படுத்தி உயர்சாதியினரான பார்ப்பனர்கள் பெரும் கட்டுப்பாட்டை செலுத்தி வந்தனர். சூத்திரர்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் அக்கோயில்களில் நுழைவதற்குக் கூட அனுமதி மறுக்கப்பட்டது. 

அனைத்து சாதி மக்களுக்கும் கோயில்கள் மீதான உரிமைகளைக் கோரி வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு கிளர்ச்சிகள் நடைபெற்றுள்ளன. ஆனாலும் கோயில்கள் பார்ப்பன சமூகத்தவரின் கட்டுப்பாட்டிலிருந்து முழுமையாக எப்போதும் மீள முடிந்ததில்லை. ஆங்கிலேயர் ஆட்சியிலும் கூட இதே நிலையே தொடர்ந்தது. ஆங்கிலேயர்கள் மதம் சம்மந்தப்பட்ட விவகாரங்களில் நேரடி தலையீட்டினை மேற்கொள்ளாததால் அக்காலக்கட்டங்களில் கோவில் சொத்துகள் கணக்கில்லாமல் கொள்ளையடிக்கப்பட்டன. 

மேலும் கோவில் நிர்வாகத்தில் கோலோச்சிய பார்ப்பனர்கள் அதிக வருமானம் வரக்கூடிய பெருங்கோயில்களை மட்டுமே நிர்வகித்தனர். ஏராளமான கோயில்கள் ஊழல்களாலும், நிர்வாக சீர்கேடுகளாலும் சீரழிக்கப்பட்டன.  இக்கோவில்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை பக்தர்களிடமும், மக்களிடமும் எழுந்தது. இந்த சீர்கேடுகளை தடுக்கத் தான் இந்து அறநிலையத்துறை உருவாக்கப்பட்டது. இந்து அறநிலையத் துறையின் அதிகாரிகளாக இடஒதுக்கீட்டின் அடிப்படையில் அனைத்து சாதியினரும் நியமிக்கப்படுகிறார்கள். அதனால்தான் அவர்களுக்கு இந்து அறநிலையத் துறையின் மேல் அத்தனை கோபம்.

இந்து அறநிலையத் துறையின் வரலாறு

1926-ம் ஆண்டு நீதிக் கட்சி ஆட்சியில் இருந்தபோது மெட்ராஸ் இந்து சமய அறநிலையத் துறை சட்டம் இயற்றப்பட்டது. அந்த சட்டத்தின் அடிப்படையில் இந்து சமய அறநிலைய வாரியம் அமைக்கப்பட்டது. இந்த சட்டம் வந்தபோது பார்ப்பனர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். அரசு மதத்தில் தலையிடுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர். சுதேசமித்திரன் போன்ற பத்திரிக்கைகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலையங்கம் எழுதின. காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தியும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் நீதிக்கட்சி இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உறுதியாக இருந்து நடைமுறைப்படுத்தியது. 

பெரியாரின் பெருந்தொண்டராய் காமராசர் கொண்டுவந்த சட்டம்

காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும், பெரியாரின் பெருந்தொண்டராய் விளங்கிய பெருந்தலைவர் காமராசரின் ஆட்சியில் 1959-ம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை சட்டம் இயற்றப்பட்டது. சாதிய வேறுபாடுகள் கோவில் எனும் அதிகார மையத்திற்குள் சிக்கியிருப்பதை அகற்றும் பெருங்கனவு பெரியாருக்கும், காமராசருக்கும் இருந்தது. பெரியாரின் பெருங்கனவை காமராசர் நிறைவேற்றினார். 

காமராசர் மற்றும் பெரியார்

இந்த சட்டத்தின்படி இந்து அறநிலையத்துறை ஆணையர் தன் கட்டுப்பாட்டில் உள்ள எந்தவொரு கோவிலின் துணை உதவி ஆணையர்களையோ, செயல் அலுவலர்களையோ பரம்பரை அறங்காவலர்களையோ அழைத்து கணக்கு வழக்குகளை கேட்க முடியும். 

கோவில்களுக்கு, மத நிறுவனங்களுக்கு சொந்தமான சொத்தை ஐந்து வருடங்களுக்கு மேல் குத்தகைக்கு விடவும், விற்கவும் ஆணையரின் அனுமதி அறங்காவலர் தேவை என்றும் சட்டம் இயற்றப்பட்டது.   

கோவிலின் அதிகார மையத்தினை அனைத்து சாதியினருக்கும் வழங்கியதாலும், கோவில் சொத்துக்களை விருப்பப்படி கொள்ளையடிப்பதில் கிடுக்குப்பிடியைப் போட்டதாலும் தான் பார்ப்பனியம் இந்து அறநிலையத் துறையை அழித்துவிட கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது. எப்படியாவது அத்துறையினை ஒழித்துவிட வேண்டும் என்று துடியாய் துடிக்கிறார்கள். பெரியார் மற்றும் காமராசரின் கனவுச் சட்டத்தினை நீக்கிவிட வேண்டும் என்று கார்ப்பரேட் சாமியாரின் ஜக்கியின் மூலமாக பிரச்சாரம் செய்கிறார்கள்.

இந்துக்கள் கோவிலை இந்துக்கள் நிர்வகிக்கக் கூடாதா?

மசூதிகளை இசுலாமியர்களும், தேவாலயங்களை கிறித்தவர்களும் நிர்வகிக்கும் போது, இந்துக்களின் கோயில்களை மட்டும் ஏன் அரசு நிர்வகிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். இது மேலோட்டமாக பார்த்தால் நியாயமான கேள்வி போல் தோன்றும். ஆனால் இந்த கேள்வியின் பின்னால் பெரும் பொய்யும், சூழ்ச்சியும் அடங்கியிருக்கிறது. 

புதிதாக தனிநபர்களாகவோ, பக்தர்கள் குழுக்களாக இணைந்தோ கட்டப்படுகிற கோயிகள் எதையும் இந்து அறநிலையத் துறை நிர்வகிப்பதில்லை. பழங்கால கோயில்களையும், சாதியை மையப்படுத்தி சிக்கல்கள் எழுந்த கோயில்களையும் தான் இந்து அறநிலையத் துறை நிர்வகிக்கிறது.  பழங்கால மசூதிகளையும் கூட வக்பு வாரியங்கள் தான் நிர்வகிக்கின்றன. வக்பு வாரியம் என்பது அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது தான். 

இந்து சமய அறநிலையத் துறையைப் பொறுத்தவரை அமைச்சர், ஆணையர் முதல் கூட்டுபவர் வரை அனைவரும் இந்துக்களே. விதி 10 ஆணையர் முதலானோர் இந்துக்களாக இருத்தல் வேண்டும் என்பது. 

ஆணையர் மற்றும் இணை அல்லது துணை அல்லது உதவி ஆணையர் என ஒவ்வொருவரும் இந்து சமயத்தைப் பின்பற்றி வருகின்ற நபராகவே இருத்தல் வேண்டும். மேலும் இந்த சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள பிற அலுவலர் அல்லது பணியாளர் ஒவ்வொருவரும் இந்து சமயத்தைப் பின்பற்றி வருகின்ற நபர் ஒருவராகவே இருத்தல் வேண்டும். அவர் அந்த சமயத்தை பின்பற்றாது போகும்போது அத்தகையவர் பதவி விலக வேண்டும் என்றே சட்டம் கூறுகிறது. 

அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோவில்கள்

  • தமிழகத்தில் உள்ள 17 சமணக் கோயில்கள், 1910 அறக்கட்டளைகள், 56 திருமடங்கள், மடங்களுடன் இணைந்த 57 கோயில்கள் உட்பட 38,635 கோவில்கள் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 
  • இவற்றில் 331 கோயில்களில் ஆண்டுக்கு ரூ 10 லட்சத்துக்கும் அதிகமாக வருவாய் கிடைக்கிறது. 
  • ஒரு கோடிக்கு மேல் வருமானம் உள்ள கோயில்கள் ஆறுபடை வீடுகள், மதுரை மீனாட்சியம்மன் கோவில், திருவரங்கம் கோவில் உள்ளிட்டவை மட்டுமே ஆகும்.
  • 672 கோயில்களில் ரூ 2 லட்சம் முதல் ரூ 10 லட்சம் வரையும், 3550 கோவில்களில் ரூ.10,000 முதல் ரூ. 2 லட்சம் வரையும் ஆண்டு வருவாய் உள்ளது. 
  • 34,082 கோவில்களில் ஆண்டுக்கு ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவாகவே வருவாய் கிடைப்பதாக 2016-ம் ஆண்டு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட இந்து சமய அறநிலையத் துறை கொள்கை விளக்கக் குறிப்பு தெரிவிக்கிறது. 

வருமானம் இல்லாத இந்த 34,082 கோவிகளுக்கான திருப்பணிகளும் திருவிழாக்களும் குடமுழுக்கு உள்ளிட்ட பணிகளும் மேலே அதிக வருமானம் வரும் சிறு கோவில்களில் இருந்துதான் செலவு செய்ய முடியும்.

கோயில்களை இந்துக்கள் கையில் ஒப்படைக்க வேண்டும் என்று சொல்பவர்களின் வாதம் எப்போதும் இந்த பெருங்கோயில்களையும், அதன் சொத்துக்களையும், அதுதரும் வருமானத்தையும் மையப்படுத்தியதாகவே இருக்கிறது. 

கோவில்களின் சொத்துக்களை குறிவைக்கும் கூட்டம்

அதேபோல கோயில்களுக்கு சொந்தமாக 4 லட்சத்து 78 ஆயிரத்து 252 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இதில் 22600 கட்டிடங்கள், 33665 வீட்டு மனைகள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. மீதம் உள்ள விவசாய நிலங்கள் 1,23,729 விவசாயிகளிடம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. 

ஜக்கி வாசுதேவ் போன்ற கார்ப்பரேட் சாமியார்களின் கண்ணை உறுத்துவது 4,78,252 ஏக்கர் நிலங்கள் தான். காட்டை அழித்துவிட்டு காவேரி கூக்குரல் என்று பேசியது போல, இந்து கோவில்களை விட்டு அரசு வெளியேறினால் பக்தியின் பெயரில் இந்த இடங்களை ஆக்கிரமிக்கப் பார்க்கிறார்கள். 

கோவில் நிலத்தில் குத்தகை விவசாயம் செய்பவர்கள் கிட்டத்தட்ட 99 சதவீதம் இந்துக்கள் தான். 

ஆனால் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் இஸ்லாமியர் கடைகளை மையப்படுத்தி வெறுப்பு பிரச்சாரத்தை செய்கிறார்கள். இதன்வழியாக பல்வேறு சாதிகளைச் சேர்ந்த 1,23,729 இந்து விவசாயிகள் விவசாயம் செய்யும் நிலங்களை ஒரு சில கார்ப்பரேட் சாமியார்களின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்ல முயற்சி செய்கிறார்கள்.

கோவில் சொத்துகளின் மூலம் கிடைத்த 838 கோடி வருவாய்

இந்த சொத்துகள் மூலம் கடந்த ஆறு ஆண்டுகளில் ரூபாய் 838 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கோயில்களுக்கு சொந்தமான 2359 குளங்கள், 989 மரத்தேர்கள், 57 தங்க ரதங்கள், 45 வெள்ளி ரதங்கள் உள்ளன. கடந்த ஆறு ஆண்டுகளில் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு பட்டா மாற்றம் செய்யப்பட்ட 5650 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவை 789 கோவில்களுக்கு சொந்தமானவை. மீட்கப்பட்ட நிலங்கள் அந்தந்த கோவில்களின் பெயரில் மீண்டும் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த பெரும்பணியை செய்தது அறநிலையத்துறை தான். 

கோவில் சொத்துகளையும், சிலைகளையும், நகைகளையும் பாதுகாக்க அறநிலையத் துறை அவசியம்

கோயில் நிர்வாகத்துடன் இவ்வளவு சொத்துகளையும் நிர்வாகம் செய்ய இந்து சமய அறநிலையத் துறையில் ஆணையர் தலைமையில் கூடுதல் இணை/துணை/உதவி ஆணையர்கள், ஆய்வர்கள், செயல் அலுவலர்கள் என 628 அதிகாரிகள் உள்ளனர். பல்லாயிரம் ஊழியர்களும் பல ஆயிரம்  பணியாளரும் இருக்கிறார்கள்.

அறநிலையத்துறை என்ற தனி நிர்வாக அமைப்பு இல்லாவிட்டால் கோயில் சொத்துகளும், விலைமதிப்பற்ற சிலைகளும் இருக்கும் இடம் தெரியாமல் போயிருக்கும். தொன்மை வாய்ந்த பல கோயில்கள் அழிந்திருக்கக் கூடும். ஆக்கிரமிக்கப்பட்ட பல கோவில் சொத்துக்களை மீட்பதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இவற்றையெல்லாம் களைய வேண்டுமே தவிர அறநிலையத்துறைக்கு மாற்றாக வேறு வழியை யோசிப்பது அழிவுக்கு வழிவகுக்கும்.

ஜக்கியின் தாக்குதலிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டிய காமராசரின் கனவு

தந்தை பெரியார் மற்றும் பெருந்தலைவர் காமராசரின் பெருங்கனவாகிய கோவில்களை ஜனநாயகப்படுத்தும் முயற்சியை உடைப்பதே ஜக்கி போன்ற சாமியார்களின் நோக்கமாக இருக்கிறது. இந்து கோவில்களை இந்துக்களிடம் கொடுக்க வேண்டும் என்று சொல்பவர்கள் BC, MBC, SC/ST இந்துக்களிடம் கொடுங்கள் என்று சொல்வார்களா? கோவில்களுக்கும், கோவில் சொத்துக்களுக்கும் பாதுகாப்பு அரணாக விளங்கக் கூடிய இந்து அறநிலையத் துறையை ஜக்கி போன்ற கார்ப்பரேட் சாமியார்களின் தாக்குதலிலிருந்து பாதுகாப்பது அனைவரின் கடமை. 

2 Replies to “காமராஜரின் கனவை சிதைக்க நினைக்கும் கார்ப்பரேட் சாமியார் ஜக்கி வாசுதேவ்!”

  1. ஜக்கியை வளர்த்துவிட்ட திமுக மறுபடியும் ஆட்சிக்கட்டிலில் ஏறிய உடனாது அவர் தொடர்புகளை துண்டித்து கடுமைகாட்ட வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *