வாரணாசி உத்திரப்பிரதேசம்

எரியூட்டுவதற்கு வந்து குவியும் உடல்கள்; பாதிக்கும் மேலாக குறைத்துக் காட்டப்படும் மரணங்கள் – அதிர்ச்சி தகவல்

உத்திரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கையில் 50%க்கும் மேல் அரசால் கணக்கு காட்டப்படுவதில்லை என்ற அதிர்ச்சி தகவலை தி வயர் மற்றும் என்.டி.டி.வி ஊடகங்கள் வெளிக்கொண்டு வந்துள்ளன. 

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மயானங்களில் எரியூட்டப்பட்ட உடல்களின் எண்ணிக்கை, அரசாங்கம் வெளியிட்ட இறப்பு கணக்கைக் காட்டிலும் மிக அதிகமாக இருக்கிறது. 

ஒரு வாரத்தில் உத்திரப் பிரதேசத்தில் நிகழ்ந்த மரணங்கள்; கணக்கு காட்டப்பட்டதும், எரிக்கப்பட்டதும்

கடந்த 7 நாட்களில் 124 பேர் இறந்திருப்பதாக உத்திரப்பிரதேச அரசாங்கம் வெளியிட்ட கணக்குகள் தெரிவிக்கின்றன. ஆனால் மாநகர மயானங்களால் குறிக்கப்படும் கணக்குகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 400 பேருக்கும் மேற்பட்டோரின் எரியூட்டப்பட்டதாக இருக்கிறது. 276 பேரின் இறப்பு அரசாங்கத்தின் கணக்கிலிருந்து மறைக்கப்பட்டிருக்கிறது. 

  • ஏப்ரல் 13-ம் தேதி அரசாங்கம் சொன்ன இறப்பு எண்ணிக்கை 18. ஆனால் மயானங்களில் எரியூட்டப்பட்ட உடல்கள் 86. 
  • ஏப்ரல் 12-ம் தேதி அரசாங்கம் வெளியிட்ட இறப்பு எண்ணிக்கை 21. ஆனால் எரிக்கப்பட்ட உடல்கள் 86.
  • ஏப்ரல் 11-ம் தேதி அரசாங்கம் வெளியிட்ட இறப்பு எண்ணிக்கை 31. ஆனால் எரிக்கப்பட்ட உடல்கள் 57.
  • ஏப்ரல் 10 அன்று அரசாங்கம் வெளியிட்ட இறப்பு எண்ணிக்கை 23. ஆனால் எரிக்கப்பட்ட உடல்கள் 59.

இந்த எண்ணிக்கை வேறுபாட்டினை என்.டி.டி.வி நிறுவனம் அம்பலப்படுத்தி செய்தி வெளிக்கொண்டு வந்துள்ளது. 

மோடியின் வாரணாசியில் 50%க்கும் அதிகமாக மரணங்கள் குறைத்து காட்டப்படுகிறது

பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்ற தொகுதியான வாரணாசியில் உள்ள ஹரிச்சந்திரா மயானம் மற்றும் மணிகர்னிகா மயானம் ஆகிய இரண்டு பிண எரிப்பு / தகனம் செய்யும் இடங்களில் தி வயர் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் 50% க்கும் அதிகமான இறப்புகளின் எண்ணிக்கை உத்திரப் பிரதேச மாநில அரசின் அதிகாரப்பூர்வ கணக்குகளில் காட்டப்படுவதில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. 

ஹரிச்சந்திரா மின்மயானம் வாரணாசி

ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கி உத்திரப்பிரதேசத்தில் கொரோனா தொற்றுப் பரவலின் எண்ணிக்கை தொடர்ந்து பலமடங்கு அதிகரித்து வருகிறது. தற்போது உத்திரப்பிரதேசத்தில் 1.5 லட்சம் பேர் நோய் தொற்றுக்கு உள்ளானவர்கள் இருக்கிறார்கள்.  மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பிய சூழல் நிலவுகிறது. அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் மருந்தகங்களில் தீர்ந்துபோய் விட்டன. மருந்துகளின் விலை கருப்புச் சந்தையில் பல மடங்கு அதிகரித்துள்ளது. 

ஒரு வார காலத்தில் வாரணாசியில் நிகழ்ந்த கொரோனா மரணங்கள்: கணக்கு காட்டப்பட்டதும், எரிக்கப்பட்டதும்

  • ஏப்ரல் 14-ம் தேதி வாரணாசியில் கொரோனாவால் மூன்று பேர் இறந்ததாக அரசு கணக்குகள் தெரிவிக்கிறது. ஆனால் ஹரிச்சந்திரா மயானத்தில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளைப் பயன்படுத்தி 6 உடல்கள் எரிக்கப்பட்டுள்ளன. 
  • ஏப்ரல் 13-ம் தேதி 3 இறப்புகள் என்று அதிகாரப்பூர்வ கணக்குகள் சொல்கின்றன. ஆனால் நகராட்சியால் நிர்வகிக்கும் கணக்குகளின்படி கொரோனாவால் பாதிக்கப்பட்ட 9 உடல்கள் ஹரிச்சந்திரா மயானத்தில் எரிக்கப்பட்டுள்ளன.
  • ஏப்ரல் 12-ம் தேதி இறந்தவர் ஒரே ஒருவர் என்று அரசின் கணக்கு சொல்கிறது. ஆனால் நகராட்சி நிர்வாக எண்ணிக்கையின்படி 10 உடல்கள் எரிக்கப்பட்டுள்ளன.
  • ஏப்ரல் 11-ம் தேதி இறந்தவர் ஒருவர் என்று சொல்லப்பட்டு, 7 உடல்கள் எரிக்கப்பட்டுள்ளன. 
  • ஏப்ரல் 10-ம் தேதி இரண்டு பேர் இறந்தார்கள் என்று சொல்லி, 7 உடல்கள் எரிக்கப்பட்டுள்ளன. 

வாரணாசியில் உள்ள மின்சார மயானங்களில் நிர்வகிக்கப்பட்டும் நகராட்சி தரவுகளையும், உத்திரப்பிரதேச மாநில அரசாங்கத்தால் ஊடகங்களுக்கு அளிக்கப்பட்ட தரவுகளையும் ஒப்பிடும்போது 50%க்கும் அதிகமான வித்தியாசம் இருப்பதாக தி வயர் இணையதளம் தெரிவித்துள்ளது. 

மணிகர்னிகா மயானத்தில் விறகுகள் மூலம் கணக்கில்லாமல் எரிக்கப்பட்ட உடல்கள்

மணிகர்னிகா மயானம் – File Photo

கடந்த ஒரு வார காலமாக வாரணாசியில் உள்ள மணிகர்னிகா மயானத்தில் தினந்தோறும் 150 உடல்கள் எரிக்கப்பட்டு வருகின்றன. அவை அனைத்தும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்கள் என்று சொல்லிவிட முடியாதுதான். ஆனால் கடந்த காலங்களை விட எண்ணிக்கை மிகவும் உயர்ந்திருப்பதாகவும், பல உடல்கள் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களாக இருக்கக் கூடும் என்று உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர். 

நூற்றுக்கணக்கானவர்கள் தங்கள் உறவினர்களின் உடல்களை எரியூட்டுவதற்கு வரிசையில் காத்துக் கிடக்கின்றனர். எப்போதுமே மணிகர்னிகாவில் உடல்களை எரியூட்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் இருக்கும் என்றாலும் இந்த முறை மிக மோசமாக 8 முதல் 9 மணிநேரம் வரை உடலை எரியூட்டுவதற்கு காத்திருக்க வேண்டியிருக்கிறது. 

மணிகர்னிகா இப்படி எண்ணிக்கை அதிகரித்தது ஏன் என்ற கேள்விக்கு மயானத்தின் அலுவலர்களிடம் பதில் ஏதும் இல்லை. மின்சார தகனத்திற்கு வருகிற உடல்களின் எண்ணிக்கை மட்டும்தான் பதிவு செய்யப்படுவதாகவும், அதே பகுதியில் விறகுகளைக் கொண்டு எரியூட்டப்படும் உடல்களின் எண்ணிக்கை தங்களால் பதிவு செய்யப்படுவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர். 

பரிசோதனையே செய்ய முடியாமல் வீட்டிலேயே இறக்கும் மக்கள்

பல ஆண்டுகளாக தாங்கள் ஹரிச்சந்திரா மலைத்தொடர் பகுதியில் வசிப்பதாகவும், இதுவரை இவ்வளவு அதிகமான உடல்கள் வருவதை தாங்கள் பார்த்ததில்லை என்றும் அப்பகுதியில் உள்ளோர் தெரிவிக்கிறார்கள். வழக்கமாக இந்தியா முழுதுமிருந்தும் 300 உடல்கள் வரை அப்பகுதிக்கு கொண்டுவரப்படும் என்றும், இப்போது அந்த எண்ணிக்கை 800-ஐத் தாண்டி விட்டதாகவும் அப்பகுதியினர் தி வயர் ஊடகத்தில் தெரிவித்துள்ளனர். 

ஏராளமான மக்கள் கொரோனா அறிகுறிகள் வந்த பிறகும், பரிசோதனை செய்வதற்கு வழியின்றி, மருத்துவமனைக்கும் செல்ல முடியாமல் வீட்டிலேயே இறந்து விடுவதாகவும், ஒவ்வொரு நாளும் அப்படிப்பட்ட 20 பேரின் உடல்கள் அப்பகுதிக்கு கொண்டுவரப்படுவதாகவும் தெரிவிக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு 1500 உடல்கள் அப்பகுதிக்கு கொண்டுவரப்பட்டதாகவும், அவ்வளவு உடல்களை எரிப்பதற்கு விறகுகள் இல்லாமல் போனதையும் தெரிவிக்கிறார்கள். 

கொரோனா முதல் அலையைக் காட்டிலும் இரண்டாவது அலையில் தொற்று மிக வேகமாக பரவிக் கொண்டிருக்கும் சூழலில், இறப்பு எண்ணிக்கையின் விகிதமும் அதிகரித்துள்ளது. லக்னோவின் மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல், மருத்துவ உபகரணங்களின் வசதிகள் இல்லாமல் மக்கள் அல்லாடி வருவது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது. இந்நிலையில் கொரோனா தொற்று மரணங்களின் எண்ணிக்கையை உத்திரப்பிரதேச யோகி ஆதித்யநாத் அரசு பாதிக்கும் மேலாக குறைத்துக் காட்டுவதாக வெளிவந்திருக்கும் தகவல் நாட்டையே அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

-Madras Review

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *